January

January

“ஜனவரி 20-ம் திகதிக்கு பின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் பாடுபடுவோம்” – கமலா ஹாரிஸ் நம்பிக்கை !

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20-ம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும், ஜனவரி 20-ம் திகதிக்கு பின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் பாடுபடுவோம் எனவும் துணைஜனாதிபதியாகவுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
2020-ம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம் முதல் காட்டுத்தீ மற்றும் சூறாவளி, இனப்பாகுபாடுவரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது சவாலான பணிகளை மேற்கொண்ட முதல் நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். 2021-ம் ஆண்டு எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும். சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம். உங்களுக்கும் உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை” – அமைச்சர் ரமேஷ் பத்திரன

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை” என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் தீர்வு எட்டப்படவில்லை. இம்மாதத்துக்குள் முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படுமென்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தது.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபாய் வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி அரச தரப்பில் இருந்தோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க தரப்புகளிலிருந்தோ இன்னும் உரிய விளக்கம் வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாம் உயிர்களை கொன்றொழித்த இராணுவோ அல்லது போர்க்குற்றங்களை செய்த இராணுவுமோ அல்ல. மனித உயிர்களை காப்பாற்றிய இராணுவம்” – ஜெனரல் கமால் குணரட்ண பெருமிதம் !

“நாம் உயிர்களை கொன்றொழித்த இராணுவோ அல்லது போர்க்குற்றங்களை செய்த இராணுவுமோ அல்ல. மனித உயிர்களை காப்பாற்றிய இராணுவம்” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

“போதைப்பொருள் கடத்தல் நாட்டில் குறைந்துள்ளது. என்றாலும் சில சில இடங்களில் அவை பரிமாற்றப்படுகின்றன. போதைப்பொருளை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம். புத்தாண்டில் இதற்கும் மேலதிகமான நடவடிக்கைகளை நாம் எடுக்கவுள்ளோம்.

அடிப்படைவாதிகளும், தீவிரவாதிகளும், பிரிவினைவாதிகளும் மீண்டும் இந்த நாட்டில் தலைத்தூக்க முடியாது. அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. இளைஞர்கள் ஆயுதங்களை மீண்டும் தூக்குவார்களென அண்மையக்காலமாக கருத்துகள் வெளியிட்டு வருகின்றன. அவ்வாறானதொரு நிலை ஏற்பட நாம் இடமளிக்க மாட்டோம்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று ஒருவர் இருந்தார். அவர் ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு நாட்டை துண்டாட முற்பட்டார். என்றாலும் அவரின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் ஒருதுளி பாதிப்பேணும் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.

மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் 2009ஆம் ஆண்டுமுதல் எமது இராணுவத்தின்மீது சுமத்தப்பட்டன. நாம் உயிர்களை கொன்றொழித்த இராணுவோ அல்லது போர்க்குற்றங்களை செய்த இராணுவுமோ அல்ல. மனித உயிர்களை காப்பாற்றிய இராணுவம் என்பதால் மனிதவுரிமைகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட போவதில்லை என்றார்.

தேசிய மருந்து அதிகார சபையில் பதிவு செய்யப்படாத சானிடைசர் நிறுனங்களுக்கு தடை !

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்படாத சானிடைசர் நிறுனங்கள், மொத்தமாக சேமித்து வைத்திருத்தல் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுதலை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கொத்து பிரியர்களுக்கு எச்சரிக்கை – உடலில் கொரோனாவை எதிர்க்கும் சக்தி குறைவடையும்” – பேராசிரியர் நிலிகா மலவிகே

“கொத்து மற்றும் சிற்றுண்டி உணவுகளால் உடலில் கொரோனாவை எதிர்க்கும் சக்தி குறைவடையும்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலவிகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இவர் கொத்து மற்றும் சிற்றுண்டி உணவுகளை உண்பதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான உணவுகளை உண்பதனால், உடலில் கொரோனாவை எதிர்க்கும் சக்தி குறைவடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.நாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சத்தை குறைப்பதற்கு மக்கள் தமது பங்களிப்பினை முழுமையாக வழங்க வேண்டும் ” அவர் மேலும் கூறியுள்ளார்.

“எமது நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு இவ்வருடத்தின் முதல் காலாண்டில் கொவிட்19 தடுப்பூசி கிடைக்கும்” – வைத்திய நிபுணர் சுதத் சமரவீர நம்பிக்கை !

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கப்பெறுமென தொற்று நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(01.01.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உலகில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 522 கொரோனா தொற்றாளர்கள் கடந்த 2020ஆம் ஆண்டில் இனங்காணப்பட்டுள்ளனர். தெற்காசியாவில் இது மிகவும் அதிகமாகும். ஒவ்வொரு மில்லியனுக்கும் 5,809 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். எமது நாட்டில் மில்லியனுக்கு 1,886 பேர் கொவிட்19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மில்லியன் சனத்தொகைக்கும் 09 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். தெற்காசியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் எமது நாட்டில் ஒவ்வொரு மில்லியன் சனத்தொகைக்கும் 09 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து கொவிட்19 தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க பணியாற்றிவரும் நிலையில் எமது நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு இவ்வருடத்தின் முதல் காலாண்டில் கொவிட்19 தடுப்பூசி கிடைக்குமென உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வளைவு பாதை திறப்பு !

முன்னேறும் நாட்டை கட்டியெழுப்ப “சுபீட்சத்தின் நோக்கு” எனும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க புதிய ஆண்டில் கல்முனை பிரதேச செயலகத்தின் முதலாவது வேலைத்திட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வளைவு பாதை(Wheelchair ramp) திறப்பு விழா நேற்று(01) கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீரினால் திறந்து வைக்கப்பட்டது.

இவ் திறப்பு விழாவில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.ரிஸ்னி, கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்

ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.ஏ சாலீஹ்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

“மரண நிர்வாகத்துறை செயற்பாடுகளில், நீதியமைச்சர் அலி சப்ரி நேரடியாகத் தலையிடுகிறார்” – நீதிமன்ற வைத்திய நிறுவன வைத்தியர்கள் கண்டனம் !

மரண நிர்வாகத்துறை செயற்பாடுகளில், நீதியமைச்சர் அலி சப்ரி நேரடியாகத் தலையிடுவதாகவும் அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நீதிமன்ற வைத்திய நிறுவன வைத்தியர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில், எதிர்ப்பு  யோசனையையும் நிறைவேற்றி உள்ளதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் தலைவர், நீதிமன்ற வைத்தியர் அசேல மென்டிஸின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை நீதிமன்ற வைத்தியர்களால் முன்னெடுக்கப்படும் சுயாதீன மரண நிர்வாகச் செயற்பாடுகளில் தேவையற்ற  தலையீடு மற்றும், சுகாதார அமைச்சால் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை அகற்றுவது குறித்து நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் தலைவருக்கு அழுத்தம் விடுக்கும் அமைச்சரின் செயற்பாட்டை, நீதிமன்ற வைத்திய நிறுவனத்தின் வைத்தியர்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதியமைச்சர் அலி சப்ரியை அப்பதவியில் இருந்து உடனடியாகப் பதவி நீக்கி, கைதுசெய்ய வேண்டுமென உலபனே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். ‘ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடமளிக்காது விட்டால், முஸ்லிம் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களை எடுப்பர்’ என நீதியமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், இவரது இந்த அறிவிப்பானது பாரதூரமானது என்பதால், அமைச்சர் அலி சப்ரியை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்’ எனவும் சுமங்கள தேரர் கோரியுள்ளார்.

“அனைத்து இன மக்களையும் சமமான நிலையில் கருத முடியவில்லையென்றால், இலங்கையை இனவாத நாடு என்றே அடையாளப்படுத்த முடியும்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“அனைத்து இன மக்களையும் சமமான நிலையில் கருத முடியவில்லையென்றால், இலங்கையை இனவாத நாடு என்றே அடையாளப்படுத்த முடியும்” என  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது,

“பௌத்த பிக்குகள் மாகாண சபை முறைமைக்கு எதிராகக் கொண்டுள்ள நிலைப்பாடும் எனது நிலைப்பாடும் முற்றிலும் வேறுபட்டது.

மாகாண சபை முறைமையில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. மாகாண சபை முறைமைக்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கலை கொண்ட வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

எனவே மாகாண சபைக்கு அப்பால் செல்ல வேண்டுமேயன்றி மாகாண சபை முறைமையை ஒழிப்பை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே நானும் அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றேன்.

மேலும் நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையுள்ளது. அதாவது, சிங்களவர்களைத் தவிர ஏனைய இன மக்களை சமமான நிலையில் கருத முடியவில்லையென்றால், இலங்கையை இனவாத நாடு என்றே அடையாளப்படுத்த முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். “

“நுண்கடன்கள் காரணமாக கடன் பொறிகளுக்கு சிக்கியுள்ள கிராமிய மக்களை மீட்டெடுப்பதற்கு நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்” – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

“நுண்கடன்கள் காரணமாக கடன் பொறிகளுக்கு சிக்கியுள்ள கிராமிய மக்களை மீட்டெடுப்பதற்கு நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டம்  முன்னெடுக்கவுள்ளதாக”  இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டில் கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் நேற்றையதினம் (01.01.2021) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

20 இலட்சம் சமுர்த்தி பயனாளி குடும்பங்களை வலுவாக்கும் பணிகள் இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்று காலை 10 மணிக்கு சாலியபு சமுர்த்தி வங்கியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளது. அதேசமயம், அநுராதபுர மாவட்டத்தில் உள்ள 54 சமுர்த்தி வங்கிகளில் கடன்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது? குறைந்த வட்டியுடனான கடன்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது? உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் சமுர்த்தி பயனாளிகளுக்காக முன்னெடுக்கப்படவுள்ளன.

குறைந்த வருமானம் பெறும் கிராமப்புற மக்களுக்கு நுண்கடன்கள் பெரும் சிக்கலானது. சமுர்த்தி வங்கி என்பது சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வங்கி என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.

ஆனால், அது சமுர்த்தி பெறுநர்களுக்கு மட்டுமல்ல, தொழில் செய்யக்கூடிய ஒரு தொழிலை நடத்தக்கூடிய அனைவருக்கும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் அந்த வங்கி அமைப்பில் இணைய முடியும்.

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் சரியாக நிறைவேற்றுகிறோம் என்றார்.