18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்ற கருத்தை வரவேற்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக வினவப்பட்ட வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வைஸ் அட்மிரல் கௌரவ சரத் வீரசேகர அவர்கள் இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
வட கிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில் நான் அந்தக் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால் 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். அவர்களுக்கு தமிழ்ப் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும். ஆணைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். போதிய தமிழ்ப் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லை என்றால் முன்னாள் தமிழ் போராளிகளுக்கு இந்தப் பணியை செய்யச் சொல்லி அவர்களுக்கு ஊதியமும் வழங்கலாம். எந்த விதத்திலும் சிங்களம் பேசுவோரோ? சிங்கள மொழியிலோ? எமது மாணவ மாணவியருக்குப் பயிற்சி அளிக்கப்படக் கூடாது.
பயிற்சியாளர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தால் தென்னிந்தியாவில் இருந்து தமிழ்ப் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம். எங்களுக்கு சிரேஷ்ட பள்ளி மாணவ இராணுவப் பயிற்சி 1950களில் றோயல் கல்லூரியில் வழங்கும் போது பயிற்சிகளும் ஆணைகளும் ஆங்கிலத்தில் இருந்தன. பல் இன மாணவர்களை ஆங்கில மொழி ஒன்று சேர்த்தது. எம்முள் சிங்களவர், தமிழர், பறங்கியர், முஸ்லீம்கள், மலாயர், என பலதரப்பட்ட மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் எப்பொழுது சிங்களத்தை நாடு முழுவதும் திணிக்க அரசியல்வாதிகள் முடிவெடுத்தார்களோ அப்பொழுதே எமது ஒற்றுமை, ஒன்றிணைந்த செயற்பாடு, நாட்டின் பற்றுதல் ஆகியன ஆட்டம் கண்டன.
காலாதி காலமாகத் தமிழ் மொழியைப் பேசி வந்த வடக்குக் கிழக்கும் தமது தனித்துவத்தை இழந்தன. 1958ம் ஆண்டில் றோயல் கல்லூரியின் இராணுவப் பயிற்சி பெற்ற மாணவப் படையின் அங்கத்தவராக காலி மைதானத்தில் சுதந்திர தின அணி வகுப்பில் பங்குபற்றியதன் பின்னர் சுதந்திர தின வைபவங்களைப் புறக்கணித்தே வருகின்றேன். காரணம் 1956ம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது.
எமக்கு சிங்கள அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை கிடைத்து நாட்டு மக்கள் சம உரிமையுடன் ஒன்று சேர்ந்து வாழ வாய்ப்பளித்தால்த்தான் தமிழர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம். கௌரவ சரத் வீரசேகர அவர்கள் தமிழ் மாணவ மாணவியர் தமிழர்கள் மூலமாகத் தமிழ் இராணுவப் பயிற்சி பெற இணங்குவாரானால் நான் அவரின் கருத்தை வரவேற்பேன். சிங்கள மொழி பேசும் அலுவலர்களை அனுப்ப நினைத்தால் எமது மாணவ மாணவியர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பயிற்சிகளைப் புறக்கணிப்பார்கள் .
இராணுவப் பயிற்சி சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இவ்வாறு பயிற்சி பெற்ற இலங்கையின் போர்ப் படையினரே கட்டுப்பாட்டை இழந்து ஒழுக்கத்தை மீறி மனித உரிமை மீறல்களிலும் இனப்படுகொலைகளிலும் ஈடுபட்டனர் என்பது உலகம் அறிந்த விடயம். கௌரவ சரத் வீரசேகர அவர்கள் எமது இளைஞர்கள் யுவதிகளைத் தமது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவே இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதை நான் அறிவேன்.
சிங்கள அரசியல்வாதிகளும் படையினரும் இணைந்து எவ்வாறு வடகிழக்கைத் தம்முடைய முற்றும் முழுதுமான கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரவேண்டும், இங்குள்ள குடிப்பரம்பலை எப்படி மாற்ற வேண்டும். பிரச்சினைகளை ஏற்படுத்தி எமது இளைஞர் யுவதிகளை நாட்டிலிருந்து எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்பது சம்பந்தமாக ஆழ ஆராய்ந்து, முடிவுக்கு வந்து தமது முடிவுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அதன் ஒரு அம்சமே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துரை.
சிங்கள புத்திஜீவிகள் மற்றும் படையினரின் ஆழ்ந்த இன ரீதியான முடிவுகளை முறியடிக்க எமது புத்திஜீவிகள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தாவது எமது மக்கட் தலைவர்களை வரப்போகும் ஆபத்து பற்றி சிந்திக்கத் தூண்டுவதாக அமையும் என தெரிவித்துள்ளார்.