“அரசாங்கம் ஏற்கனவே பெரும்பான்மை மக்களுக்கான ஒரு அரசியல் யாப்பு வரைவை தயார் செய்து விட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்கிறது” என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்
புதிய அரசியல் யாப்பு பற்றிய தமிழ் மக்கள் கூட்டணியின் கருத்துக்களை அனுப்பிய போது, இதனையும் தெரிவித்துள்ளார்.
அந்தக்கடிதத்தில் க.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அண்மையில் நீதி அமைச்சினால் பொது மக்களிடம் இருந்து அரசியல் யாப்பு பற்றிய கருத்துக்களைக் கோரியது சம்பந்தமானது இக்கடிதம். மேன்மைமிகு மற்றும் படித்த பெரியோர்கள் உங்கள் நிபுணத்துவ குழுவை அலங்கரித்துக் கொண்டிருப்பினும் எங்களுடைய அதுவும் முக்கியமாக தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவினால் பரிசீலிக்கப்பட மாட்டாது என்பது எமது பார்வை பாற்பட்ட கருத்தாகும்.
எமது சந்தேகப்படி பெரும்பான்மை சமூகத்தவருக்கு சார்பான ஒரு அரசியல் யாப்பு வரைவை நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து ஈற்றில் ஏற்கனவே தயாரித்த குறித்த வரைவை வெளிவிடுவதே உங்கள் எண்ணம் என்று நாம் கருதுகின்றோம்.
எம்மிடம் கருத்துக்கள் கோரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தமைக்கு காரணம் எல்லோரினதும் கருத்துக்களையும் கேட்டறிந்தோம் என்று உலகத்திற்குப் பறைசாற்றவே என்று நாம் எண்ணுகின்றோம்.
இவ்வாறான எமது கருத்துக்கு வலுச் சேர்ப்பது என்னவென்றால் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிற்கு எம்மிடம் இருந்து தமிழ்ப் பெயர்களைப் பெற்றபின் முதலில் முற்றிலும் சிங்கள மக்களைக் கொண்ட ஆணைக்குழுவையே நீங்கள் நியமித்தீர்கள். அதுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இவ்வாறான பெரும்பான்மையினரை மட்டுமே நியமித்தீர்கள். பொதுமக்கள் தமது ஏமாற்றத்தை வெளியிடப் போய் பின்னர் ஒரு தமிழரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
ஆகவே பெரும்பான்மையினருக்கு மட்டுமே சார்பான ஒரு அரசியல் யாப்பையே இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. நாட்டின் பல்வேறு வகைபாடுகளையும் பன்மைத்துவத்தையும் கருத்தில் எடுத்து அதற்கேற்ப ஒரு அரசியல் யாப்பு வரைவு கொண்டுவரப்படும் என்று நாங்கள் நம்பவில்லை.
ஏழு மாகாணபெரும்பான்மையினர் தமக்கு இயைபான சட்டத்தை இயற்றி மற்றைய இரு மாகாண பெரும்பான்மையினரின் உரிமைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பாதிக்கும் வண்ணம் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக நாம் கணிக்கின்றோம். கடந்த 3000 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பேசும் பெரும்பான்மையிரே இவ்விரு மாகாணங்களிலும் இருந்து வந்துள்ளார்கள் என்பதே உண்மை.
ஆனால் புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் செயற்பாட்டில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்ற அவச்சொல் வராதிருக்கவே நாம் எமது கருத்துக்களை பிறிதொரு ஆவணத்தில் உள்ளடக்கி இத்துடன் இணைத்துள்ளோம்.
11 விடயங்கள் பற்றி எமது கருத்துக்களைக் கோரி 12வதாக மேற்படி 11ல் உள்ளடங்காதவற்றைப் பற்றி குறிப்பிடலாம் என்று கூறியுள்ளீர்கள்.
ஆனால் நாம் முன்னுரையாக சில விடயங்களைக் கட்டாயமாக எடுத்துக்கூற வேண்டியுள்ளது. இதில் நாம் கடந்தகால உண்மைகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம். அரசாங்கம் வேண்டுமெனில் முன்னர் செய்த அதே தவறுகளை இம்முறையும் இழைக்காது இந்தப் புதிய முயற்சியின் போது இந் நாட்டின் சகல இன மக்களினதும் எதிர்பார்ப்புக்களையும் அரசியல் அபிலாஷைகளையும் நிறைவுசெய்யும் விதத்தில் ஒரு தகுந்த அரசியல் யாப்பை வரைந்துநாடாளுமன்றத்தில் பதிந்து நிறைவேற்றலாம்.” என குறிப்பிட்டுள்ளார் விக்கினேஸ்வரன் .