05

05

எரியுண்ட நிலையில் மீட்கப்பட்ட பௌத்த மதகுருவின் சடலம் – நால்வர் கைது !

ஹன்வெலவில் பௌத்தமதகுரு ஒருவரை கடத்திக்கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி இரண்டாம் திகதி உடுவில தர்மசிறி தேரர் கடத்தப்பட்டுள்ளார் என  முறைப்பாடு கிடைத்தது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கொட்டதெனியாவ நாவன்ன மயானத்தில் பௌத்த மதகுருவின் எரியுண்ட நிலையில் காணப்பட்ட உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேப்பரிசோதனையின் போது அது காணாமல்போன மதகுருவின் உடல் என்பது உறுதியாகியுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவருக்கும் பௌத்தமதகுருவிற்கும் இடையிலான தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – 3 ஆம் கட்ட பரிசோதனை முடியாது நடைமுறைக்கு வந்ததாக பலரும் குற்றச்சாட்டு !

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவி‌ஷீல்டு மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம்(03.01.2021) ஒப்புதல் அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றன.
இதில் கோவி‌ஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம், தற்போது கோவி‌ஷீல்டு தடுப்பூசியின் விலையை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா கூறுகையில், ‘தடுப்பூசியின் விலை மலிவாகவும், அனைவரும் வாங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எனவே இந்திய அரசு 3 முதல் 4 அமெரிக்க டாலர் (இந்திய ரூ.219-292) என்ற மலிவு விலைக்கு தடுப்பூசியை பெறும். மிக அதிக அளவில் வாங்குவதால் இந்த விலைக்கு கொடுக்கப்படும்’ என்று கூறினார்.
இந்த தடுப்பூசியை பொறுத்தவரை இந்தியாவுக்கு முதலிலும், அடுத்ததாக தடுப்பூசி சர்வதேச கூட்டணி நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று கூறிய பூனவல்லா, அதைத் தொடர்ந்தே தனியார் சந்தைக்கு அனுப்பப்படும் எனவும், அங்கு இரு மடங்கு விலையில் விற்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்துக்குள் 10 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் எனவும், ஏப்ரலுக்குள் இது இரட்டிப்பாகும் எனவும் பூனவல்லா தெரிவித்தார். அதேநேரம் மத்திய அரசு ஜூலை மாதத்துக்குள் 30 கோடி டோஸ்கள் கேட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் “கோவேக்சின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. எனவே, முன்கூட்டியே அனுமதி கொடுத்திருப்பது ஆபத்தானது.

3 ஆம் கட்ட பரிசோதனை முடியும் வரை கோவேக்சின் தடுப்பூசியை  தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனை  வலியுறுத்துகிறேன். அதுவரை,கோவிஷீல்டு தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சித்துள்ளார்.

“இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மஹிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது” – மங்கள சமரவீர காட்டம் !

“இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மஹிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது” முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்’ என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்த பான் கீ – மூனிடம் இணைந்து ஆவணங்களில் மஹிந்த கைச்சாத்திட்டும் இருந்தார். போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரத்துக்கு மஹிந்தவே முழுப்பொறுப்பு. இறுதிப்போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையெனில் ஐ.நாவின் கூட்டு உடன்படிக்கையில் அன்று மஹிந்த கையெழுத்திட்டிருக்கக்கூடாது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. ஏனெனில், அவரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய நபராவர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஒவ்வொரு தடவையும் வாய்க்கு வந்த மாதிரி பேசுகின்றார். போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு அவருக்கும் எந்த அருகதையும் கிடையாது. அவரின் பொறுப்பற்ற கருத்துக்கள் சர்வதேச அரங்கில் இலங்கையைத் தலைகுனிய வைக்கும் .

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையைத் தவிர்க்கும் வகையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நல்லாட்சி அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், இராணுவ அதிகாரிகளையும் மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றினோம்.

கோட்டாபய அரசு தற்போது கூறுவது போல் ஜெனிவாவில் இராணுவத்தினரையும் ராஜபக்ச குடும்பத்தினரையும் நல்லாட்சி அரசு காட்டிக்கொடுக்கவில்லை. அன்று பான் கீ – மூனுடன் இணைந்து மஹிந்த ராஜபக்சவே நாட்டைக் காட்டிக் கொடுத்தார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து கோட்டாபய அரசு விலகிக்கொண்டமை முற்றிலும் தவறானதாகும். இதனால் பாரிய விளைவுகளை இம்முறை ஜெனிவாவில் இந்த அரசு சந்திக்கப் போகின்றது.

இது பொருளாதார ரீதியில் மோசமான நிலைமையையும் இலங்கைக்குத் தோற்றுவிக்கக்கூடும். சர்வதேச மட்டத்தில் இலங்கை தனிப்படுத்தப்படுத்தப்படவும் கூடும். இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இன்று அரசு சர்வதேச அரங்கில் ஊதிப்பெருப்பித்துள்ளது – என்றார்.

இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ்.பல்கலைக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் !

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி முன்னெடுக்கும் உணவு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்று காலை போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை, துறைத்தலைவர் ஜீவசுதன் மாணவர்களையும், ஊடகவியாளர்களையும் எச்சரிக்கும் தொணியில் கதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.