06

06

நியூசிலாந்து அசத்தலான ஆட்டம் – தொடரை இழந்தது பாகிஸ்தான் !

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 297  ஓட்டங்களை எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 இலக்குகள் இழப்புக்கு 659 ஓட்டங்களை  குவித்து தன்னுடைய ஆட்டத்தை இடைநிறுத்தியது. நியூசிலாந்து சார்பில் தலைவர் வில்லியம்சன் இரட்டை சதமும் ( 238 ), ஹென்றி நிக்கோல்ஸ் 157 ஓட்டங்களும், மிச்சேல் 102 ஓட்டங“களும் பெற்றனர்.
362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 இலக்கு இழப்புக்கு 8 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது. நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் இலக்குகள் சரிந்தன. அந்த அணி 186 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அசார் அலி அதிகபட்சமாக தலா 37 ஓட்டங்களை  எடுத்தார். கெய்ல் ஜேமிசன் 48 ஓட்டங்களை கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். போல்ட் 3 இலக்குகளையும், வில்லியம்சன் 1 இலக்கையும்  எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் அந்த அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஏற்கனவே 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. பாகிஸ்தான் அணி 2 தொடரை இழந்து ஏமாற்றம் அடைந்தது.
பாகிஸ்தானை இன்னிங்ஸ் கணக்கில் வீழ்த்தி நம்பர் ஒன் இடத்தை பிடித்து நியூசிலாந்து புதிய சாதனை
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தர வரிசையில் முதலாம்  இடத்தை பிடித்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அந்த அணி முதல் இடத்தை பிடித்தது. நியூசிலாந்து அணி 118 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
மேலும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பையும் நியூசிலாந்து பெறுகிறது.

சஜித் பிரேமதாசவை பாராளுமன்றில் பைத்தியம் என அழைத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ !

இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பைத்தியம் என அழைத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பின்னர் அதனை மீள பெற்றார்.

பாடசாலை மாணவர்களிற்கு சீருடையை விநியோகிப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியவேளையே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சஜித் பிரேமதாசவை பைத்தியம் எனக் குறிப்பிட்டார்.

UPDATE : Johnston Fernando acquitted

குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதிலளித்த பின்னரும் எதிர்க்கட்சித் தலைவர் அது குறித்து தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

தன்னை அமைச்சர் அவ்வாறு அழைத்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது கருத்தினை வாபஸ் பெற்ற அதேவேளை ரணில் விக்கிரமசிங்க ஒரு முறை சஜித் பிரேமதாசவை முட்டாள் எனத் தெரிவித்தார் எனக் குறிப்பிட்டார்.

எனினும் அதற்கு பதிலளிக்காத சஜித் பிரேமதாச அரசாங்கம் பாடசாலை சீருடை விடயத்தில் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகின்றது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கும் அமேசான் மழைக்காடு – ஜமைக்கா நாட்டின் பரப்பளவுக்கு இணையான காடுகள் அழிவு !

2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜமைக்கா நாட்டின் பரப்பளவுக்கு இணையான அமேசான் மழைக்காட்டை பிரேசில் இழந்திருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேசில் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு முதல் ஜூலை 2020 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜமைக்கா நாட்டின் பரப்பளவுக்கு இணையான அமேசான் மழைக்காட்டை பிரேசில் இழந்திருக்கிறது . சுமார் 11,088 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அமேசானில் காடழிப்பு நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரேசிலில் மழைக்காடுகள் அழிவதை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்கு எதிராக பிரேசில் பூர்வ பழங்குடிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஜெய்ர் போல்சோனரோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார், முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசானடகாடுகள்  தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவ தயார் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை பிரேசில்ஜனாதிபதி நிராகரித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூமியின் நிலப்பரப்பில் 6 சதவீதத்தை கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அம்சான் காடுகள் உள்ளன .

“ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – இலங்கை வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் !

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் இலங்கைக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்த பயணத்தின்போது இன்று இலங்கை வெளியுறவுத்துறை  அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும், மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பின் போது அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் முக்கியத்துவத்துவம் தொடர்பில் ஜெய்சங்கர் எடுத்துரைத்துள்ளார்.

மேலும் ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அதன்போது இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஸ்குணவர்த்தன  பேசுகையில்,  “கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தை தணிக்க கடந்த பல மாதங்களாக இந்தியா அளித்த ஆதரவுக்கு, இலங்கை ஜனாதிபதி, இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பாக, இந்திய பிரதமர் மோடிக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம். மேலும், இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்த காலகட்டத்தில், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கை, சுகாதாரத் துறை மற்றும் பொருளாதாரத்தில் சாதகமான நிலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் தினேஷ் குணவர்தன பாராட்டினார்.
அவரை தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ,
கொரோனா தொற்றுநோய் இரு நாடுகளும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது. இதேபோல் கொரோனா காலத்திற்கு பிந்தைய ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை பெறுவதில் இலங்கை ஆர்வமாக உள்ளது.  வளர்ந்து வரும் கடல்சார் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையின் திறன்களை மேம்படுத்த இந்தியா தயாராக இருக்கிறது.
மீன்வளம் தொடர்பான இந்தியா- இலங்கை கூட்டு செயற்குழு சமீபத்தில் கூடி ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தின்போது, நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட எங்கள் மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறோம். அவர்கள் விரைவில் நாடு திரும்புவதை எதிர்பார்க்கிறோம்.
இந்திய தொழில் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளன. மருந்து உற்பத்தி மற்றும் சுற்றுலாவுக்கான சிறப்பு மண்டலங்களைப் பற்றியும் நாங்கள் பேசினோம்” என அவர் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது

“எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம்”  – இந்திய வெளிவிவகார அமைச்சர் வருகை தொடர்பாக பாராளுமன்றில் சுமந்திரன் !

“இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தது போல ஜனாதிபதி செயற்பட்டால் எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம்”  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் முன்வைத்துள்ள கருத்தொன்றை சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் தமது ஒத்துழைப்புகள் நீண்டகாலமாக காணப்பட்டுகின்றது.

அதேபோல் இலங்கையின் அரசியல் தளத்தில் இன ரீதியிலான ஒத்துழைப்பை தாம் எதிர்பார்க்கின்றோம் எனவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை ஐக்கிய இலங்கைக்குள் வெற்றிகரமாக இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதில் அதிகார பகிர்வு விடயத்திலும் அரசியல் அமைப்பில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் நல்லதொரு முன்னேற்றகரமான செயற்பாட்டை கையாளும் என தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

அதேபோல் ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உறுதிப்பாடு ஒன்றினை கொடுத்துள்ளார். அதாவது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என சகலரதும் நலன்களுக்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதியும் வாக்குறுதியளித்துள்ளார். அரசாங்கத்தின் உண்மையான எதிர்பார்ப்பு இதுவென்றால் அதற்காக எமது முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

களுத்துறைக்கு செல்லவிருந்த வைத்திய இயந்திர உபகரணங்கள் இரா.சாணக்கியன், சுமந்திரன் தலையீட்டினால் மீள மட்டக்களப்பிற்கு !

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit – Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவினை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயவியல் பிரிவிற்கு கொண்டுவரப்பட வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் முன்னமே தீர்மானித்தபடி எமது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவதானம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாரச்சியினை வரவழைத்து இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையளிப்பதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இவ் உபகரணம் இல்லாமையினால் பல வருடங்களாக மக்கள் உரிய நேரத்திற்கு சிகிச்சையின்றி பல சிரமங்களுக்கும் மத்தியில் வெளி மாகாணங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய பல உயிர்களை இழந்துள்ளோம்.

இப் பிரச்சினை இனி முடிவுக்கு கொண்டுவரப்படும். எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தடுப்பூசி மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால் முதலில் பிரதமரே போட்டு பரிசோதித்துக் கொள்ள வேண்டும்” – பரிசோதனை முடியாமல் அனுமதியளிக்கப்பட்ட தடுப்பூசி தொடர்பாக பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித்சர்மா அதிருப்தி !

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. வரும் 13ம் திகதி தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக  காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கேவும் தடுப்பூசி மருந்து அனுமதி குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
அவசரகால பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால் முதலில் பிரதமரே போட்டு பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏன் மக்கள் மீது அதை சோதித்துப் பார்க்க வேண்டும்? என கார்கே கூறி உள்ளார்.
பிரதமர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மாவும் கூறி உள்ளார்.
புத்தாண்டில் இரண்டு தடுப்பூசிகள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இது குறித்து மக்களிடையே சந்தேகம் உள்ளது. ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் தடுப்பூசி மீதான சந்தேகத்தை போக்க, தலைவர்கள் தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டனர். அதேபோல் பிரதமர் மோடியும், பாஜக மூத்த தலைவரும் முதல் தடுப்பூசியை போட்டு, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என அஜித் சர்மா கூறி உள்ளார்.

“டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார்” – ஜோ பைடன் காட்டம் !

“டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார்” என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார்.

எந்தவித ஆதாரங்களையும் வழங்காமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வருகிறார்.‌ இதற்கிடையில் ஜோர்ஜியா மாகாணத்தில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை தயார் செய்ய மாகாண உள்துறை மந்திரியை டிரம்ப் மிரட்டும் காணொளி பதிவு வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில் ஜோர்ஜியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு போட்டியிடும் 2 ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜோ பைடன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் ஜனாதிபதி டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுவதாக காட்டமாக கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், டிரம்ப் ஏன் இன்னும் ஜனாதிபதி பதவியை விரும்புகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் வேலை செய்ய விரும்பவில்லை. ஏதாவது ஒரு பிரச்சினை குறித்து புலம்புவதிலும், புகார் கூறுவதிலும் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்றார்.

இதற்கிடையில் ஜனாதிபதி பதவியை தக்கவைக்க நரகத்தை போல போராடுவேன் என கூறியுள்ள டிரம்ப், ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்வில் சபை உறுப்பினர்களின் வாக்கெடுப்பை உறுதிப்படுத்த இந்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது, குடியரசு கட்சி எம்.பி.க்கள் அதனை நிராகரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா, 25 நாட்கள் வேலை ” போன்ற சுலோகங்களை முன்வைத்து மஸ்கெலியாவில் மக்கள் போராட்டம் !

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும், 25 நாட்கள் வேலை அவசியம் என வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (06.01.2021)  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்துக்கு மலையக சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தன.

தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை பின்பற்றி நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள், கருப்புபட்டி அணிந்திருந்ததுடன், தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றுவதற்கு முற்பட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என்ற கோரிக்கை 2014 இல் முன்வைக்கப்பட்டது. தற்போது 6 வருடங்கள் கடந்துள்ளன. இக்காலப்பகுதியில் பொருட்களின் விலை அதிகரித்து, வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. எனவே, எவ்வித நிபந்தனையுமின்றி அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.

அதேபோல 25 நாட்கள் வேலை வழங்கப்படுவதையும் தோட்டக் கம்பனிகள் உறுதிசெய்யவேண்டும். இது விடயத்தில் அரசாங்கத்தின் காத்திரமான தலையீடுகள் அவசியம் என்று போராட்டக்காரர்கள் கருத்துரைத்தனர்.

“கொரோனா தோற்றம் தொடர்பாக ஆய்வு செய்யயும் உலக சுகாதார அமைப்பின் குழுவுக்கு சீனா அனுமதி மறுப்பு !

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று சீனாவின் வுகான் நகரில் பரவ தொடங்கியதாக கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்க முடிவு செய்தது.
இந்த சிறப்புக்குழு வுகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் என தெரிவித்தது.
இந்நிலையில், சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெட்ரோஸ் அதனோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வுசெய்ய அங்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவுசெய்தோம். ஆனால் நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்காமல் சீன அரசு தாமதித்து வருவது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.