09

09

‘யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் நினைவுத்தூபியை அகற்றுவதற்கு நேற்றிரவு தீர்மானித்தார்” – பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ள பல்கலை மானியங்கள் ஆணைகுழு நினைவுத்தூபி நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக காணப்பட்டது என தெரிவித்துள்ளது
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

2018இல் உருவாக்கப்பட்ட நினைவுத்தூபி பின்னர் மெருகூட்டப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் நினைவுத்தூபியை அகற்றுவதற்கு நேற்றிரவு தீர்மானித்தார் என சம்பத் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்பல்கலைகழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களமாணவர்கள் கல்வி கற்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் வடபகுதியை சேர்ந்த பல்கலைகழக மாணவர்கள் தெற்கில் கல்விகற்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படவில்லை என்பதே முக்கியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியம் நிலவுவதை உறுதி செய்ய அதிகாரிகள் விரும்புகின்றனர் நாட்டிற்கு யுத்தநினைவுச்சின்னங்கள் அவசியமில்லை சமாதான நினைவுச்சின்னங்களே அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாலேயே தான் இடித்தழித்ததாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன” – இம்ரான் மஹ்ரூப்

“கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன” என திருகோணமலை மாவட்ட பாராளுமன்றளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இந்த நினைவு தூபி அழிக்கப்பட்டமை தொடர்பாக அவர் இன்று (09.01.2021) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பலியான சகோதர சிவில் தமிழ் உறவுகளை நினைவூட்டும் ஆத்மார்த்த மனிதாபிமான சின்னம். அது பயங்கரவாதம் சார்ந்த அல்லது படையினரை சாடுகின்ற குறியீடு அல்ல. தென் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் கூட கடந்த கால அரச எதிர்ப்பு கிளர்ச்சிகளில் பலியானவர்களுக்கான நினைவுத்தூபிகள் உள்ளன.

ஆகவே யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது. இத்தகைய அரசின் இனவாதம் சார் செயற்பாடுகள் ஒருபோதும் நாட்டில் அமைதியை, அபிவிருத்தியை ஏற்படுத்த வழிசமைக்க மாட்டாது. கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற இனவாதம் சார் அரச செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அரசின் பொறுப்பற்ற, இனங்களுக்கிடையே பிரிவினையை வளர்க்கும் செயற்பாடுகளை ஒரு பொறுப்புள்ள அரசியல் பிரதிநிதி என்றவகையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

“எமது உரிமைகள், உணர்வுகளை அழிக்க முடியாது” – இரா.சாணக்கியன் கண்டனம் !

“எமது உரிமைகள், உணர்வுகளை அழிக்க முடியாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்கள்!

போர் வெற்றியைக் கொண்டாடும், பறைசாற்றும் தூபிகள் மற்றும் சின்னங்கள் வட மாகாணத்தில் பல இடங்களில் காணப்படும் நிலையில், இறுதி யுத்தத்தில் இறந்த எமது உறவுகளை நினைவுகூரும் தூபிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

இதன்மூலம், அவர்கள் எதனை வலியுறுத்த முயல்கின்றனர்? இதில்கூட எமது மக்களுக்கான உரிமை இல்லையா? ஆட்சி மாற்றமும் அடிப்படை உரிமையில்லா அபிவிருத்திக்கான மாற்றமுமே இதற்கான காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதன் எதிரொலி – வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு !

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை(11.01.2021) வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கிளிநொச்சியில் வைத்து இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாகவே இந்த தூபி அமைக்கப்பட்டது. எனவே இதனை துணைவேந்தர் அழித்தமை கவலையளிப்பதாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியாவிலிருந்து கூட தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்வரும் 11 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும் இதற்கு ஆதரவாக வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வழங்க வேண்டுமெனவும் முஸ்லிம்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுவான நினைவு தூபி வேண்டும்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“ யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுவான நினைவு தூபி வேண்டும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்று (08.01.2021) இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதா? யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும்  வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும் என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பிரதிநிதிகளின்  போதிய ஒத்துழைப்பு இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன், எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று பல்கலைகழக நிர்வாகம் காரணம் கூற முடியாது” – சி.வி.விக்னேஸ்வரன் காட்டம் !

“ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று பல்கலைகழக நிர்வாகம் காரணம் கூற முடியாது” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கும் போது,

இப்போது இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி. யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் அவர்களின் உறவுகளுக்காக அமைக்கப்பட்டது.

மாணவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரும் இணைந்தே இதனை அமைத்தார்கள். இதனை நிர்மூலமாக்க வேண்டும் என்ற அரசின் உயர் தரப்பினரின் அழுத்தங்களையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், இராணுவப் பாதுகாப்புடன் இதனை அகற்றியிருக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவர்கள் மீதான படுகொலைகள் போன்றவற்றின் நினைவுகளை முழுமையாக அகற்றிவிட வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் மிகவும் ஆபத்தான வேலைத் திட்டங்களில் இதுவும் ஒன்று. இது போன்ற பல திட்டங்கள் இந்த அரசிடம் இருப்பதாகத் தெரிகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் தமது உணர்வுகளின் வெளிப்பாடாக, தமது அன்புக்குரிய உறவுகளை நினைவுகூர்வதற்காக அமைத்த நினைவுத் தூபியை ஒரே இரவில் அராஜகமாகத் தகர்த்தெறிவது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டி நசுக்குவதற்கு ஒப்பானது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஒருபோதும் நல்லெண்ணத்தை ஏற்படுத்திவிட முடியாது. இது இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது. அத்துடன் எம்மவரின் பயத்தின் உச்சகட்டமாகவும் காணப்படுகின்றது.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் இராணுவம், அதிரப்படையினரைக் குவித்து துப்பாக்கி முனையில் மாணவர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்திப் பணியவைப்பது இராணுவ அடக்குமுறையின் அசிங்க முகத்தையே வெளிப்படுத்துகின்றது. இந்தப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. உடனடியாக இராணுவம் அங்கிருந்து திரும்ப வேண்டும். இப்பொழுது இங்கு நடப்பது வெகுவிரைவில் சிங்களப் பகுதிகளிலும் ஏதோ ஒரு விதத்தில் நடைபெறப் போகின்றது என்பதை எமது சிங்கள சகோதர சகோதரிகள் உணர்வார்களாக!

அதேவேளை, இந்த நினைவுத் தூபி இடிப்பு விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் நடந்து கொண்ட முறைமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று காரணம் கூற முடியாது. ஒரு தவறான காரியத்தை செய்யுமாறு மேலிடத்து உத்தரவு வருமானால், அதனை செய்வதில் உள்ள பிழை அல்லது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றை மேலிடத்துக்கு எடுத்துக்கூறி புரிய வைப்பது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. இது இந்த விடயத்தில் எந்தளவுக்கு நடைபெற்றிருக்கிறது என்பது எனக்கு தெரியாது. எது எப்படி இருந்தாலும், இதுவரை காலமும் இந்த நினைவுத் தூபியை அகற்றுவதற்கு பல்கலைக்கழகத்தின் முன்னைய இரண்டு நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைகழக நினைவு தூபி இடிக்கப்பட்டதன் எதிரொலி – சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு வைகோ ஆயத்தம் !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் உட்பட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது:

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வரும் 11ந்திகதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக்கூடாது என்பதற்காக நினைவு முற்றத்தை சிங்கள அரசு இடித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள் பிணையில் விடுதலை !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் அவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று(08.01.2021) இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தமை மற்றும் கலகம் விளைவித்தனர் என்று இரண்டு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டன.

மாணவர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், நடந்தவற்றை மன்றுரைத்து பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.

இரு தரப்பினரது விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், மாணவர்கள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். வழக்கு தவணையிடப்பட்டது.

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக முடக்கப்பட்டது ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கு – ட்ரம்பின் செயலே காரணம் என ட்விட்டர் தளம் விளக்கம் !

அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து விடுபடவிருக்கும் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அமெரிக்க ஜனாதிபதியாக அவருக்கு வரும் 20-ம் திகதி முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. இதனையொட்டி, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்க வழிவகை செய்ய அவரது வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது.

அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால், ஏற்பட்ட கலவரம், மோதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்பட்டது. இதனால், அவரின் தனிப்பட்ட ட்விட்டர் (@realDonaldTrump)கணக்கு முடக்கப்பட்டது. உடனே, @POTUS என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ கணக்கிலிருந்து ட்ரம்ப் ட்வீட் செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் அப்பதிவுகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று (08.01இ2021) அமெரிக்க ஜனாதிபதிக்கான @POTUSஎன்ற ட்விட்டர் கணக்கும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துப் பதிவிடலாம் என்பதால் அந்தக் கணக்கை நீக்குவதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்தக் கணக்கில் பதிவிடப்பட்ட அத்தனை ட்வீட்களும் நீக்கப்பட்டன. ஏற்கெனவே, ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கை காலவரையறையின்றி முடக்குவதாக கடந்த வியாழக்கிழமையன்று அந்நிறுவனம் அறிவித்தது. ட்விட்ச், ஸ்னாப் சாட் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களும் ட்ரம்ப்பின் கணக்குகளை நீக்கியிருந்தன.

அமெரிக்க ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கு உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு, ஜனாதிபதியின் கணக்கு என அனைத்தையும் முடக்கிய ட்விட்டர் நிறுவனத்தை ட்ரம்ப் வெகுவாகச் சாடியுள்ளார். ட்விட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தைத் தடை செய்வதாகவும், தன்னைப் பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ட்விட்டர் ஊழியர்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தீவிர இடதுசாரிகளுடன் கைகோத்து அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் வெகுண்டெழுந்துள்ளார்.

எதிர்காலத்தில் தனது சொந்தக் கருத்துகளைச் சுதந்திரமாகப் பதிவு செய்யும் வகையில், சொந்த சமூக வலைதளத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். ட்ரம்ப்பின் இந்த ட்வீட்களும் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்புப் பார்வை மாறப்போவதில்லை” – வடகொரிய ஜனாதிபதி

அமெரிக்கா தான் தங்களது மிகப்பெரிய எதிரி எனக் கூறிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் “அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் வடகொரியா மீதான வெறுப்புப் பார்வை மாறப்போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான பூசல் பலகாலமாக அனைவரும் அறிந்ததே.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் திகதி ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம்மின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

வடகொரியா மீது வாஷிங்டன்னின் பார்வையில், கொள்கையில் ஒருநாளும் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. ஆகையால் எதிரிகளை சமாளிக்கும் வகையில், அணுஆயுதங்கள், ஸ்பை செயற்கைகோள்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என அனைத்தையும் அதிகளவில் தயாரித்து இருப்பில் வைக்க வேண்டும்.

நமது அரசியல் கொள்கை நம்முடைய புரட்சிகரமான வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

இவ்வாறு கிம் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2019ல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.