இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று முடிந்தது.
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்துள்ளது.
சிட்னி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 91 ஓட்டங்களையும் வில் புகோவ்ஸ்கி 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 244 ஓட்டங்களை பெற்றது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் மற்றும் புஜாரா ஆகியோர் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹெசில்வுட் 2 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 94 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் இந்தியா அணிக்கு 406 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கேமரூன் கிரின் 84 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 81 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவிச்சில், நவ்தீப் சைனி மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, போட்டியின் இறுதிநாள் வரை 334 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுகளை இழந்து களத்தில் தாக்குபிடித்தது. வெற்றி இலக்குக்கு 72 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில், இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலைப் பெற்றது.
இதன்போது இந்திய அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 97 ஓட்டங்களையும் செடீஸ்வர் புஜாரா 77 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஹனுமா விஹாரி 161 பந்துகளுக்கு 23 ஓட்டங்களுடனும், அஸ்வின் 128 பந்துகளுக்கு 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்து போட்டியின் போக்கை மாற்றியமைத்தனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 131 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அவுஸ்ரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ள நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.