12

12

“நான் முட்டாள் போல் காட்சி அளித்தேன்” – அஷ்வினிடம் மன்னிப்பு கேட்டார் அவுஸ்திரேலிய அணி தலைவர் டிம்பெய்ன்!

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின்-விகாரி ஜோடியை வீழ்த்த முடியாததால் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் விரக்தி அடைந்தனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன், லபுசேன், மேத்யூ வாடே ஆகியோர் “சிலெட்ஜிங்”கில் ஈடுபட்ட னர். அஸ்வின் களத்தில் இருந்த போது டிம்பெய்ன் வார்த்தைகளால் உசுப்பேற்றி சீண்டினார். மோசமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் அஸ்வினிடம் மன்னிப்பு கேட்டார்

4-வது டெஸ்ட் நடைபெறும் பிரிஸ்பன் மைதானத்துக்கு வா, பார்ப்போம் என்று சீண்டினார். இதற்கு அஸ்வின், “நீ இந்தியா வா பார்ப்போம். அதுதான் உனக்கு கடைசி தொடராக இருக்கும்” என்று பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து பெய்ன் சீண்டியதால், அஸ்வின் நடுவரிடம் புகார் அளித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே விகாரி அடித்த கேட்சை பெய்ன் கோட்டை விட்டார்.

இந்தநிலையில் ஆடுகளத்தில் சீண்டியதற்காக அஸ்வினிடம், டிம்பெய்ன் மன்னிப்பு கேட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“நான் செயல்பட்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் என்னுடைய அணியை நன்றாக வழிநடத்த விரும்பினேன். ஆனால் நேற்று கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. நெருக்கடி காரணமாகவே நான் தவறாக செயல்பட்டு விட்டேன். என்னுடைய அணியின் தரத்தை விட நான் குறைவாக நடந்து கொண்டேன். நேற்றைய ஆட்டம் எங்களது மதிப்பில் சரிவை ஏற்படுத்தி விட்டது. போட்டி முடிந்த பிறகு அஸ்வினுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டேன்.

நான் முட்டாள் போல் காட்சி அளித்தேன். அடிக்கடி பேசினேன். ஆனால் கேட்சை விட்டு விட்டேன் என்று கூறி எனது தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

பின்னர் நாங்கள் சிரித்துக் கொண்டோம். அதன்பின் எல்லாம் சரியாகி விட்டது. அடுத்த டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனிதர்களிடமிருந்து கொரில்லாக்குரங்குகளுக்கும் பரவிய கொரோனா – அடுத்த பரவலின் ஆரம்பம் !

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்ககானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான்டிகோவில் உள்ள விலங்குகளுக்கான பூங்காவில் பொது மக்கள் செல்ல கடந்த டிசம்பர் 6-ந் திகதி தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கடந்த வாரம் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து கொரில்லா குரங்குகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு குரங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அறிகுறி இல்லாத பூங்கா ஊழியர்களிடம் இருந்து கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்முறையாக கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தல் தோல்வியை தொடர்ந்து சர்வாதிகாரியாக மாறியது போன்ற நிலை கோட்டாபாயராஜபக்ஸவுக்கு ஏற்படும்” – ராஜித சேனாரட்ண

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தல் தோல்வியை தொடர்ந்து சர்வாதிகாரியாக மாறியது போன்ற நிலை கோட்டாபாயராஜபக்ஸவுக்கு ஏற்படும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டிலேயே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தனது முதல்பெயரை பயன்படுத்தியதால் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் விடுதலைப்புலிகளின் தலைவரிற்கு நிகழ்ந்தது குறித்து ஹரீன்பெர்ணான்டோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு இரண்டு குணாதியசங்கள் உள்ளன என அவரே தெரிவித்துள்ளார் . ஒன்று பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய வேளை வெளிப்பட்ட குணாதிசயம் மற்றையது தற்போது காணப்படுவது. ஜனாதிபதி இரட்டை வேடமிடுகின்றார்.
ஜனாதிபதி கதாநாயகனாக அரசியலுக்கு வந்தவர் இன்று வில்லனாக மாறியுள்ளார் ஜனாதிபதி குறித்த அதிருப்தி மக்கள் மத்தியில் அதிகரிக்கின்றது.

ஜனாதிபதி இராணுவமயமாக்கலை முன்னெடுக்கின்றார்.  42 இராணுவ அதிகாரிகள் ஏற்கனவே பல பதவிகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் 25 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப் தனது நடவடிக்கைகளில் தோல்வியேற்பட்டதை தொடர்ந்து சர்வாதிகாரியாக மாறி நாடாளுமன்றத்திற்குள் கலகத்தில் ஈடுபடுமாறு மக்களை தூண்டினார். அவரின் நிலைமையே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தங்கச்சுரங்கம் – பலருடைய கவனத்தையும் திருப்பியுள்ள சேருவில சுரங்கம் !

சேருவில பகுதியில் பாரிய தங்கச் சுரங்கம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சேருவில பகுதியில் தங்கம், இரும்பு மற்றும் செப்பு குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

1970 ஆம் ஆண்டிலும் இந்த பகுதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள விதத்தில் சேருவில பகுதி நூற்றூக்கு சுமார் 90 சதவீதம் வனத்துறைக்குச் சொந்தமானது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாகப் பின்பற்றக்கூடிய ஆய்வு முறை குறித்து இன்றைய தினத்திற்குள் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணிக்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அனில் ஜசிங்க தெரிவித்தார்.

“புதிதாக நிர்மாணிக்கப்படும் தூபி சமாதானதூபியாக ஆவணங்களில் அடையாளப்படுத்தப்படும்” – யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா

“புதிதாக நிர்மாணிக்கப்படும் தூபி சமாதானதூபியாக ஆவணங்களில் அடையாளப்படுத்தப்படும்” என யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராஜா அவர்கள்அதனை அழித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கான (மோர்னிங்) செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் சமூக ஐக்கியம் தொடர்பான ஆவணமொன்றின் மூலம்  classified directive முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமானது என தனக்கு உத்தரவு வழங்கப்பட்ட பின்னரே தான் தனது உத்தியோகத்தர்களை நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவித்துள்ள அவர் அவர் எங்கிருந்து இந்த உத்தரவு கிடைத்தது என்பதை அவர் குறிப்பிட மறுத்துள்ளார்.

நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன என தெரிவித்துள்ள துணைவேந்தர் தான் அதனை எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கடும் எதிர்ப்பு எழுந்தது, அதிகாரிகள் துணைவேந்தர் என்ற அடிப்படையில் அது முற்றுமுழுதாக எனது தீர்மானம் தங்களிற்கு எந்த தொடர்புமில்லை என அறிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நான் எனது கடமையையே செய்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் நான் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன் எனவும் தெரிவித்துள்ள அவர் இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை மீண்டும் கட்டியெழுப்பி அதற்கு சமாதான தூபியென பெயரிட தீர்மானிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானபீடத்தை சேர்ந்த எனது மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் என்னால் அதனை தாங்கமுடியவில்லை இதன் காரணமாக நான் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அதனை மீள சமாதானதூபியாக கட்டியெழுப்புவதற்கும் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்கும் இணங்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர் அமைப்பின் ஆதரவு அடிக்கல் நாட்டப்பட்டது,எந்த அரசியல் சக்தியினதும் பங்களிப்பின்றி அடிக்கல் நாட்டப்பட்டது,அழிக்கப்பட்ட நினைவுத்தூபி போன்ற சமாதானதூபி யாழ்பல்கலைகழக வளாகத்திற்குள்ளேயே அமைக்கப்படும் எனது உத்தரவின் பேரில் இது அமைக்கப்படும் இது சட்டவிரோத கட்டுமானமாக காணப்படாது கட்டுமான பணிகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் பல்கலைகழகத்திற்குள்ளது எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

கட்டுமான பணிகளை முன்னெடுப்பதற்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியும், யாழ்மாநகர சபையின் அனுமதியும் அவசியம் புதிய தூபி பழைய தூபி போன்றே காணப்படும், ஆவணங்களில் சமாதான தூபி என அது அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதில் சமாதான நினைவுத்தூபியா? அல்லது யுத்தநினைவுத்தூபியா? என்பது போன்ற எழுத்துக்கள் பொறிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

“தூபியை உடைத்த துணைவேந்தர் மீளஅத்திவாரக் கல் வைத்தது வெறுமனே “தணிப்பதற்கான” ஒரு நடவடிக்கையாக இருந்தால், அது  தூபியை உடைத்ததை விட மோசமான செயலாகும்” – எம்.ஏ.சுமந்திரன்

“தூபியை உடைத்த துணைவேந்தர் மீளஅத்திவாரக் கல் வைத்தது வெறுமனே “தணிப்பதற்கான” ஒரு நடவடிக்கையாக இருந்தால், அது  தூபியை உடைத்ததை விட மோசமான செயலாகும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கையொன்றின் மூலமாக இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த யுத்த நினைவு தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு, காட்டுமிராண்டித்தனமானதும் நியாயமாக சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதானதும் அல்ல. இது அனுமதியின்றி கட்டப்பட்டது என்றும் அதன் காரணமாக அது அகற்றப்பட வேண்டிய ஒன்று என்று கூறுவது, இந்த மிலேச்சத்தனத்தை இன்னும் மோசமாக்கும் செயலாகும்.

யுத்த நினைவு தூபிகளுக்கு ஊள்ளூராட்சி சபைகளின் கட்டட அனுமதி தேவையில்லை. அப்படி இல்லையென்றால் வட-கிழக்கு முழுவதும் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் யுத்த நினைவு தூபிகளும் உடைக்கப்பட வேண்டும். இப்படியான தூபிகள் கிளிநொச்சி, ஆனையிறவு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலும் முல்லைத்தீவில் பல இடங்களிலும் உள்ளன. இந்த யுத்தத்தில் சில ஆயிரம் இராணுவத்தினர் மரித்தது உண்மை. அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் எண்ணிலடங்காத பொது மக்களும் கொல்லப்பட்டார்களே. மற்றது எதிர்தரப்பு போராளிகள். அவர்களையும் நினைவு கூர வேண்டாமா?

யுத்தத்திலே இழந்தவர்களை ஒரு சமூகமாக கூடி நினைப்பதற்கும், துக்கப்படுவதற்கும் உதவும் வகையில் நினைவு தூபிகள் பிரத்தியேகப் படுத்தப்பட்ட பொது இடமாக அமையலாம். அந்த இடம் அவர்களுக்கு விசேடமான ஒன்றாக இருக்கும். அங்கே அவர்கள் கூடி ஒருவரை ஒருவர் விசாரித்து ஆறுதல் சொல்லலாம்.

நினைவு தூபிகள் உயிரோட்டமுள்ள சரித்திர பாடங்களாகவும் அமையும். அங்கே இளைய சமூகத்துக்கு யுத்தத்தின் காரணிகளையும் விளைவுகளையும் எடுத்துக் கூறி இனப்பிரச்சனை ஆயதப் போராட்டமாக மாறுவதற்கு முன்னர் தீர்கப்பட வேண்டியதன் அத்தியாவசியத்தை விளக்கலாம். பல்கலைக்கழக சமூகத்தினர் மரணித்ததை நினைவு கூறுவதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகம் ஒன்றில் அப்படியான தூபியை அமைப்பதன முக்கியத்துவம் இது தான்.

யுத்த நினைவு தூபமொன்று நிறுவப்படுகிற போது அது இறந்தவர்களை நினைவுகூரும் ஒரு புனித பூமியாகிறது. அதனால்தான் இந்த தூபி உடைத்தழிக்கப்பட்ட போது பெரு வெள்ளமாக உணர்வுகள் வெளிவந்தன. இந்த கொடூரச் செயலைக் கண்டித்த ஒன்டாறியோ முதல்வர் டக் போட், தென் ஆசியா மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தரீக் அஹமது, தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கையில் முஸ்லீம், சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இந்த விடயம் “தீர்க்கப்பட்டது” என்பதில் எமக்கு முழு உடன்பாடு கிடையாது. தமிழ் நாட்டு தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் இந்தப் விடயத்தை சற்று “தணிக்குமாறு” அரசாங்கம் தனக்குச் சொன்னதாக துணைவேந்தர் கூறுவதை நாம் செவிமடுத்தோம். அத்திவாரக் கல் வைத்தது, செய்த தவறுக்கு வருந்தி அதை திருத்துவதாக இல்லாமல், வெறுமனே “தணிப்பதற்கான” ஒரு நடவடிக்கையாக இருந்தால், அது ஆரம்பத்தில் தூபியை உடைத்ததை விட மோசமான செயலாகும். இந்த நினைவு தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாய் இருந்த அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி உடனடியாக அது மீள நிர்மாணிக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.

“அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி ட்ரம்ப் தான்” – ஆர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கண்டனம் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்து, சான்று அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டம் கடந்த 6-ந் திகதியன்று நடைபெற்றது. அப்போது, டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து சூறையாடினர். இது உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரும், குடியரசு கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் நாடாளுமன்ற கலவரத்தை கண்டித்து சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:-

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார். அவர் ஒரு தோல்வியடைந்த தலைவர். ஜனாதிபதி தேர்தலில் வெளியான நியாயமான முடிவுகளை அவர் தடுக்க நினைத்தார். பொய்களால் அமெரிக்க மக்களை தவறாக வழி நடத்த முயன்றார். அமெரிக்க அரசியலமைப்பை மாற்ற நினைத்தவர்கள் தற்போது ஒன்றை அறிந்திருப்பார்கள். ஒருபோதும் அவர்களால் வெற்றிபெற முடியாது என்பதுதான் அது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தாக்குதலால் நாம் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் நாம் இன்னும் பலத்துடன் முன்னேறுவோம். ஏனென்றால் நாம் எதை இழப்போம் என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளோம்.

இவ்வாறு அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கூறினார்.

ஜப்பானிலும் புதிய வகை கொரோனா வைரஸ்..!

ஓராண்டு முடிவடைந்து இரண்டாவது ஆண்டாகவும் கொரோனா வேகமாக உலகம் முழுதும் பரவி வருகின்றது. இதற்கிடையில் புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் பரவலும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளதுடன் பிரான்ஸ், இந்தியா , என பல நாடுகளில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் , பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டது. 45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடனும், பிற நாடுகளுடனும் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போதைய தடுப்பூசிகள், இந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

‘இந்தியாவிடமிருந்து நேபாளத்துக்கு சொந்தமான 3 பகுதிகள் விரைவில் மீட்கப்படும்” – நேபாளப் பிரதமர் !

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது. இந்த மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி வெளியிட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது.-

மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகள் சுகவுலி ஒப்பந்தத்தின்படி நேபாளத்துக்கு சொந்தமானது. இந்தியாவுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதிகள் மீட்கப்படும்.

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் 14-ந் தேதி இந்தியா செல்கிறார். அப்போது அவர் 3 பகுதிகளையும் இணைத்து நேபாளம் வெளியிட்ட வரைபடம் குறித்து ஆலோசனை நடத்துவார். இறையாண்மை சமத்துவத் தின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த நேபாளம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் சில விவகாரங்களில் நியாயமான கவலைகளை இந்தியாவிடம் எழுப்ப நேபாளம் தயங்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க கோரி இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கடிதம் !

பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு இந்து அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளது.

வடக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயிலை நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி சூறையாடியுள்ளனர். கோயிலை சூறையாடியது மட்டுமல்லாமல் தீயிட்டுக் கொளுத்தியுள்ளமை – சிறுபான்மை சமூக மக்களான இந்துக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்துக்கு உலகம் முழுவதும் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் 26 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இந்துக்கள் பரவலாக துன்புறுத்தப்படுவதை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்கக்கோரி பல இங்கிலாந்து இந்து அமைப்புகள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.

குறித்த கடிதத்தில் சமீப காலங்களில் பாகிஸ்தானில் இந்துக்கள் போன்ற சிறுபான்மையினரின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் இதற்கு அரச விசாரணை குழுவை அமைக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை வழியாக, இதேபோன்ற விசாரணையை நடத்த கேட்டுக்கொள்ளுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.