20

20

தாய்லாந்தில்‌ மன்னராட்சி எதிர்ப்பு பற்றி பேசிய பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

தாய்லாந்தில்‌ முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். லெஸ் மஜாஸ்ட்டே எனும் இந்த சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்த கருத்தை சொன்னாலும், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் லெஸ் மஜாஸ்ட்டே சட்டத்தின் கீழ் பெண் ஒருவருக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறைமுன்னாள் அரசு ஊழியரான இந்தப்பெண், மன்னரை அவமதிக்கும் விதமாக பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் பதிவுகளை வெளியிட்டதாக கூறி கடந்த 2015 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இவர் மீதான வழக்கை விசாரித்து வந்த தாய்லாந்து ராணுவ கோர்ட்டு இந்த வழக்கை பாங்காக் குற்றவியல் கோர்ட்டுக்கு மாற்றியது. இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாங்காக் குற்றவியல் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

இந்த சிறை தண்டனை மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மாணவர் அமைப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

“நான் உங்களுக்காக எப்போழுதும் போராடுவேன்” – வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்ட் டிரம்ப் !

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ளனர்.
வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க பாராளுமன்றத்தில் நமது நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவை தொடர்ந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளைமாளிகையில் நாளை குடியேற உள்ளார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் அலுவலகம் மற்றும் வீடாக செயல்பட்டு வந்த வெள்ளைமாளிகையில் இருந்து தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வெளியேறினார்.
அதன்பின்னர் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறிய டிரம்ப் மெரிலேண்ட் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில்,

நான் உங்களுக்காக எப்போழுதும் போராடுவேன். நான் எப்போதும் பார்த்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருப்பேன். இந்த நாட்டின் எதிர்காலம் இதை விட சிறப்பாக இருக்க முடியாது.
அடுத்து வரும் நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நினைக்கிறேன்.
 மிகவும் சிறப்பாக செயல்பட அவர்களுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. துணை அதிபர் மைக் பென்ஸ், அவரது மனைவி ஹரன் பென்ஸ் ஆகியோருக்கும் காங்கிரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் மிகவும் அருமையான மக்கள். இது மிகச்சிறந்த நாடு. உங்களின் அதிபராக செயல்பட்டது எனக்கு பெருமையளிக்கிறது. என்றார்.
இந்த பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு பின்னர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் புளோரிடாவுக்கு தனி விமானம் மூலம் சென்றனர்.

“கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளில்  எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி  நான்தான்” – பிரிவு விழாவில் ட்ரம்ப் !

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.
அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்.
பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும். அதுவும் கடந்த 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவின் பாதுகாப்பு திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரகசிய சேவை கையில் எடுத்துள்ளது. இதையொட்டி வாஷிங்டன் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்  வெள்ளை மாளிகை டிரம்பின் பிரிவு உபசார வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், மரியாதைக்குக் கூட ஜோ பைடனின் பெயரை உச்சரிக்கவோ, அடுத்து ஜனாதிபதியாக் பதவியேற்பதற்காக அவருக்கு வாழ்த்துச் சொல்லவோ கூட இல்லை டிரம்ப். இது வலைத்தளங்களில் பெரிய பேசுபொருளாகியுள்ளது.
அந்த பிரிவு உபசார விழாவில் ஜனாதிபதி டிரம்ப் பேசியதாவது:
“அமெரிக்காவையே மீண்டும் உயர்ந்த நாடாக நான் என் பதவிக்காலத்தில் மாற்ற முயற்சி மேற்கொண்டேன். தேர்தலில் கடினமான போராட்டங்களையும், கடினமான போரையும் சந்தித்தேன். அதன்பின் என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்.
இன்று 45-வது ஜனாதிபதியாக இருந்து எனது கடமைகளை முடித்துள்ளேன். நாம் பல்வேறு விஷயங்களை ஒன்றாக இணைந்து சாதித்துவிட்டோம் என்ற உண்மையுடன் நான் உங்கள் முன் நிற்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் இந்த இடத்துக்கு வந்தபின் ஏராளமானவற்றைச் செய்திருக்கிறேன். ஜனாதிபதி என்ற வார்த்தையின் அர்த்தத்துக்கு அப்பாற்பட்டு நான் பணியாற்றி இருக்கிறேன்.
இந்த வாரம் நாம் புதிய நிர்வாகத்தை ஏற்கப் போகிறோம். அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், மேன்மையடையச் செய்யவும் வெற்றிபெறவும் பிரார்த்திப்போம். புதிய அரசுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவும் வாழ்த்துகிறேன். அதிர்ஷ்டம் மிகவும் முக்கியமான வார்த்தை.
அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அரசியல் வன்முறை என்பது நாம் மதிக்கும் அனைத்துக்கும் எதிரான தாக்குதல். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் எப்போதும் இல்லாதவகையில், ஒன்றாக இணைந்து மதிப்புமிக்க விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு, கோபத்தை மறந்து, ஒரு தளத்தில் இணைய வேண்டும்.
ஏராளமான வரிச் சலுகைகள், சீனா மீது வரிவிதிப்பு, எரிசக்தியில் தன்னிறைவு, குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு எனப் பல்வேறு விஷயங்களைச் செய்திருக்கிறோம். அமெரிக்காவையும், வெளிநாடுகளில் அமெரிக்கத் தலைமையையும் வலிமைப்படுத்தி இருக்கிறோம். இந்த உலகத்தை நாம் மதிக்க வைத்திருக்கிறோம். இந்த மதிப்பை அடுத்துவருவோர் இழந்துவிடக் கூடாது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் பல்வேறு அமைதி ஒப்பந்தங்கள் என்னுடைய ஆட்சியில் கையொப்பம் ஆகின. இதுபோன்ற ஒப்பந்தங்கள் நடக்கும் என யாரும் நம்பவில்லை. மத்தியக் கிழக்கு நாடுகளில் வன்முறையின்றி, ரத்தமின்றி, போரை முடிவுக்குக் கொண்டுவந்து, நமது வீரர்களை நாடு திரும்பவைத்தோம்.
கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளில்  எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி  நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
உலகின் சக்தி மிக்க நாடான அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து நிலையான அச்சுறுத்தல்கள், சவால்களை எதிர்கொண்டது. ஆனால், நம் மீது நம்பிக்கை இழப்பதும், நம்முடைய தேசத்தின் மகத்துவத்தின் மீது நம்பிக்கை இழப்பதும்தான் நாம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். தேசம் என்பதில் நாம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும்.
சுதந்திரமான கருத்துரிமை, பேச்சுரிமை, வெளிப்படையான விவாதம்தான் இந்தச் செழுமையான பாரம்பரியத்தின் மையமாக நம்பப்படுகிறது. நாம் யார், எப்படி இங்கு வந்தோம் என்பதை மறந்தாலும், அமெரிக்காவில் அரசியல் தணிக்கை, தடுப்புப் பட்டியல் நடப்பதை அனுமதிக்கலாமா?
இதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வெளிப்படையான விவாதத்தை மறுப்பதும், கருத்துரிமையை மறுப்பதும் நம்முடைய பாரம்பரியத்தை மீறுவதாக அமையும். நான் ஜனாதிபதி பதவியை விட்டுச் சென்றாலும், தொடர்ந்து பொதுவாழ்க்கையில் இருப்பேன். புதன்கிழமை நண்பகலில் ஆட்சி மாற்றத்தை ஒப்படைக்கத் தயாராகிறேன்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உயர்பதவியில் திருநங்கை – வரலாற்று பெருமையை பெற்ற ரேச்சல் லெவின் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார்.
அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயாளராக டாக்டர்  ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார் டாக்டர் லெவின்.
நிலையான தலைமை மற்றும் இன்றியமையாத நிபுணத்துவத்தை லெவின் கொண்டு வருவார் என்றும், இதுபோன்ற பதவிகளுக்கு வருவதற்கு அவர்களின் ஜிப் குறியீடு, இனம், மதம், பாலின அடையாளம், உடற்திறன் குறைபாடு ஆகியவை முக்கியமல்ல என்றும் பைடன் தனது அறிக்கையில் கூறி உள்ளார். ‘அமெரிக்க நிர்வாகத்தின் சுகாதார முயற்சிகளை வழிநடத்த உதவும் தகுதி வாய்ந்த தேர்வு லெவின்’ என்றும் பைடன் கூறி உள்ளார்.
லெவின் தற்போது பென்சில்வேனியா சுகாதார செயலாளராகவும், மாநில மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மனநல பேராசிரியராகவும் உள்ளார்.

“ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் உண்மைகளைப் பேசியதால் அவர் மீதான அச்சத்திலேயே அவரைச் சிறைக்குள் தள்ளியுள்ளனர்” – கறுப்புச்சால்வையுடன் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக ஹரின் பெர்னாண்டோ !

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காகக் கறுப்புச் சால்வையை அணிந்து சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக இன்று அறிவித்த ஹரின் பெர்னாண்டோ, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும் வரையில் சபை அமர்வுகளில் இந்தச் சால்வையுடனேயே கலந்துகொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குடும்ப அதிகாரத்தைக் காட்டுவதற்காகச் சிலர் அணிந்திருக்கும் சால்வையைப் போன்றது அல்ல எனவும், நீதிக்காக அணியும் சால்வையே எனவும் இதன்போது ஹரீன் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் உண்மைகளைப் பேசியதால் அவர் மீதான அச்சத்திலேயே அவரைச் சிறைக்குள் தள்ளியுள்ளனர் எனவும் ஹரீன் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கைக்கு என ஒரு ஹிட்லரும் ஒரு சார்லிசப்ளினும் உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள் ஆனால் வேறு வேறு குணாதிசயங்கள் உள்ளவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.ஹிட்லர் உலகை அழவைத்தார் சார்லிசப்ளின் உலகை சிரிக்கவைத்தார். இலங்கையிலும் இதேபோன்றவர்கள் உள்ளனர் இதன் காரணமாக மக்கள் அச்சமடைவது இயல்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பாகிஸ்தான் மீது கொலைவெறிக் கோபம் காட்டுகின்ற இந்தியா, தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கையின் சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுக்கின்றது.” – மீனவர் பிரச்சினை தொடரடபாக வைகோ கண்டனம் !

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை மூழ்கடித்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ இந்திய மீனவர்களின் நிலை என்ன என்பதை இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 18 .01.2021 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.
இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகும் சென்றது.
1. மெசியா (30), த/பெ அந்தோணி ராஜ், தங்கச்சிமடம்,
2. நாகராஜ் (52), த/பெ வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சபுளி,
3. சாம் (28), த/பெ நேச பெருமாள், மண்டபம்,
4. செந்தில்குமார் (32), த/பெ செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம்
ஆகிய நான்கு மீனவர்களும் அந்தப்படகில் சென்றனர்.
எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கைக் கடற்படையின் இரண்டு படகுகள் சீறிப் பாய்ந்து வந்து, மேற்கண்ட படகு மீது முட்டி மோதின. படகு மூழ்கத் தொடங்கி விட்டது என்று, அந்த மீனவர்கள் வாக்கி டாக்கியில் எழுப்பிய அலறல் குரல், மற்ற படகில் இருந்த மீனவர்களுக்குக் கேட்டது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து, எந்தத் தகவலும் இல்லை.
நேற்று19.01.21 காலை 10.30 மணிக்குக் கரை திரும்ப வேண்டியவர்கள், இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. விசைப்படகைத் தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளார்கள். நம்பிக்கை அளிக்கின்ற எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் மீனவர் குடும்பங்கள் கண்ணீரில் பரிதவிக்கின்றன.
அவர்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று, இலங்கைக் கடற்படை கூறுகின்றது. அவர்களுடைய தொடர் தாக்குதல்களில் இருந்து, தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படை காப்பாற்றவில்லை. கடந்த வாரம் இலங்கைக்குச் சென்ற இந்திய அயல்உறவு அமைச்சர் ஜெய்சங்கர், அங்கே சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார். இனி அதற்குத் தேவை இல்லை; கைது செய்யப் போவது இல்லை; கடலுக்குள் மூழ்கடித்து விடுவோம் என்று இலங்கை காட்டி இருக்கின்றது.
பாகிஸ்தான் மீது கொலைவெறிக் கோபம் காட்டுகின்ற இந்தியா, தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கையின் சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுக்கின்றது. நாங்களும் தமிழர்களுக்கு எதிரிதான் என்பதைக் காட்டுகின்றது. காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன என்பதை, இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

ட்ரம்பின் கொள்கைகளுக்கான முடிவுக்கட்டளையுடன் பதவியேற்கிறார் புதிய ஜனாதிபதி ஜோபைடன் !

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தே

ிகதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

அமெரிக்க ஜனதாதிபதியாக க ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் இன்று பதவியேற்க உள்ளனர். அமெரிக்க பாராளுமன்றத்தில் நமது நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதும் உடனடியாக முதல்நாளே டொனால்டு டிரம்ப் எடுத்த சில முடிவுகளை மாற்றியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்ற முதல்நாளே ஜோ பைடன் மாற்றியமைக்கும் முடிவுகளாக ,

* டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியது. ஜோ பைடன் அதிபரான உடன் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைய உள்ளது.

* டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்காவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. ஜோ பைடன் அதிபரான உடன் அமெரிக்காவில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட உள்ளது. அமெரிக்கர்கள் 100 நாட்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற திட்டத்தை ஜோ பைடன் தொடங்கி வைக்கிறார்.

* கல்வி கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

* டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகியது. ஜோ பைடன் ஜனாதிபதியானவுடன்  பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் அமெரிக்கா சேர உள்ளது.

* அமெரிக்கா-கனடா இடையேயான எரிவாயு இணைப்பு திட்டத்திற்க்கு டிரம்ப் அனுமதி அளித்திருந்தார். இந்த எரிவாயு இணைப்பு திட்டத்தை ஜோ பைடன் ரத்து செய்ய உள்ளார்.

* பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சில இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய பயணத்தடையை டிரம்ப் விதித்திருந்தார். இந்த தடையை ஜோ பைடன் நீக்குகிறார்.

“கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

“கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது” என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹோமாகம-மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் 10ஆவது வருட நிறைவு விழா நிகழ்வில் காணொளி ஊடாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர், இலவச கல்வி சேவையினை மேம்படுத்த அரசாங்கம்  உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள பாடசாலைகள் அனைத்தையும் தரமுயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என குறிப்பிட்ட பிரதமர் தற்போது கல்வித் துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாணவர்களை பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

“முல்லைத்தீவு – குருந்தூர் மலையைப் பெளத்தமயமாக்க தொல்லியல் திணைக்களம் எடுக்கும் முயற்சி உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்” – நாடாளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் !

“முல்லைத்தீவு – குருந்தூர் மலையைப் பெளத்தமயமாக்க தொல்லியல் திணைக்களம் எடுக்கும் முயற்சி உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(19.01.2021)  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எமது தாயகத்தில் மிக மோசமான ஆக்கிரமிப்புகள் இடம்பெறுகின்றன. இதனால் தமிழ் மக்கள் மிகவும் கொதித்துப்போயுள்ளதுடன் அவர்களின் நிம்மதியும் கெட்டுப்போயுள்ளது. இந்த நிலைமையில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அவசரமாகக் காணப்பட வேண்டும்.

குருந்தூர் மலையில் காட்டு மரங்கள் வெட்டப்பட்டு இராணுவத்தின் 51ஆம் படையணியின் கொடிகள் பறக்கவிடப்பட்டன எனவும், அதன் பின்னர் அங்கு தொல்லியல் ஆய்வுகள் இடம்பெறுகின்றன எனவும் கூறப்பட்ட நிலையில் தற்போது அங்கு ஒரு புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலம் தமிழர்களுக்கானதே. இங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு தமிழர்கள் வழிபாடுகளில் ஈடுபட எந்தத் தடையும் இல்லை என்ற நீதிமன்றக் கட்டளை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு தற்போது பெளத்த ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது.

எவ்வாறாயினும் எல்லை மீள் நிர்ணயம் செய்து இந்தப் பகுதியை பெளத்த மயமாக்க எடுக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும்” என தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணி ஆரம்பம் !

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி கடந்த 8 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிருவாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்டுத்திருந்தனர்.

பின்னர் சில மாணவர்களால் போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் போராட்டத்திற்கு உலகின் பல இடங்களில் இருந்தும் ஆதரவு பெருகியதால் கடந்த 11 ஆம் திகதி, தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபி அமைப்பற்கு மாணவர்களின் பங்குபற்றலோடு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுத் தூபி, அனைவருடைய பங்களிப்புடனும் மீண்டு அமைப்பதற்கு நிதி உதவியினை வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய இன்றையதினம் தூபி அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.