23
23
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொவிட்-19 நிலைமைகளுக்கு ஏற்ப புதிய ஒழுங்குடன் இடம்பெறவுள்ளது.
வழமையாக 1,500 மாணவர்கள் வரையில் தான் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவார்கள். ஆனால் இம்முறை அதற்கு முற்றிலும் மாறாக 2,500 மாணவர்கள் வரையில் பட்டம் பெறவுள்ளனர். கொரோனாப் பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிப்பது மிகவும் சிரமமானது.
எனினும் மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு அமையவே புதிய ஒழுங்கு நடைமுறை களுடன் இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.
வழமையாகப் பட்டமளிப்பு விழா இடம்பெறும் கைலாசபதி அரங்கில் இத்தடவை இடம்பெறாது. மாறாக, புதிதாக அமைக் கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்கில் தான் 35ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் கொரோனா தொற்று நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வழமையாக மூன்று நாள்கள் இடம்பெறுகின்ற பட்டமளிப்பு விழா, இம்முறை 02 நாள்களில் நாள் ஒன்றுக்கு 03அமர்வுகள் வீதம் 06 அமர்வுகளில் நடத்தி முடிக்கப்படவுள்ளது.
மேலும் பட்டமளிப்பு விழா மண்டபம் மாற்றப்பட்டுள்
ளமையால், மண்டபத்துக்கான நுழைவாயிலாக மருத்துவப் பீடத்தின் நுழைவாயில் பயன்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து புதன்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அஸ்டிரா ஜெனேகாவின் மருந்துகளையே இலங்கை பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதே நேரம் கொரோனா வைரஸ் தடுப்பூசி இறக்குமதி செய்த பின்னர் தடுப்பூசி போடுவது எப்படி என்பது குறித்து இன்றைய தினம் விசேட ஒத்திகை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், பிலியந்தல சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம், பிலியந்தல பிரதேச வைத்தியசாலை மற்றும் ராகம போதனா வைத்தியசாலை ஆகிய இடங் களில் இன்றைய தினம் ஒத்திகை இடம்பெறவுள்ளதாகச் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
“வடக்கு மாகாணத்தில் முறையற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மூலம் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழ வைக்காதீர்கள்” என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டார்.
இராஜாங்க அமைச்சருக்கும் மாவை சோ.சேனாதிராஜாவுக்கும் இடையில் நேற்று தொலைபேசி ஊடாக நீண்ட நேரம் பேச்சு நடைபெற்றதாக அறிய முடிகிறது.
இதன்போது, யாழ். நிலாவரைப் பகுதியில் திடீரென தொல்லியல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் வருகை தந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்தியமை தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு மாவை கொண்டு வந்தார்.
அத்துடன், இந்தச் செயற்பாடானது தமிழ் மக்கள் மத்தியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துகின்றது எனவும், பதற்றமான சூழல்களை உருவாக்குகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவு – குருந்தூர் மலை விடயம் தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சருடன் மாவை பேசினார்.
மேலும், யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல்துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இருக்கும்போது பெரும்பான்மை சமூகத்தினரை மட்டும் பயன்படுத்தி நிலங்களை ஆக்கிரமிக்கும் வகையிலான செயற்பாடுகளை உடன் நிறுத்தும்படியும் அவர் கோரினார்.
இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, எதிர்வரும் காலத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகளின்போது யாழ்.பல்கலைக்கழகத் தரப்பினரையும் உள்ளீர்ப்போம் என்றும், இனம், மதத்தின் பெயரால் தொல்லியல்துறை செயற்படவில்லை என்றும் உறுதியளித்தார்.
“இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும்” என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும். மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே எமது கட்சியானது ஆளும் தரப்பிலேயே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
நமது பாரம்பரியத்தை, நமது மூதாதையர்களது எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்காக நாம் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
குறித்த காலப்பகுதி வரும்போது அரசியலும் நிர்வாகமும் மக்களும் ஒன்றித்து பயணிக்க முடியும். இப்போதும் நாங்கள் ஆளும் தரப்பிலேயே இருக்கின்றோம். அந்த அடிப்படையில் கூட இந்த மண்ணுக்கு செய்யக்கூடிய அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் நாம் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு புறம்பாக செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும்” என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(22.01.2021) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
காதி நீதிமன்றம் நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள வேளையில் காதி நீதிமன்றுக்கான தொழில் நியமனங்களுக்கான வெற்றிடத்திற்கு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை தவறான செயற்பாடாகும்.
காதி நீதிமன்றம்,மதரஸா பாடசாலை , முஸ்லிம் விவாக சட்டம் குறித்து பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகள் வெறும் தேர்தல் பிரசாரமாகவே காணப்படுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணாக காதி நீதிமன்றம் செயற்படுகிறது. ஒரு இனத்திற்கு மாத்திரம் நீதிமன்றம் செயற்படுவது பொதுச்சட்டம் அவசியமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் வாழும் ஏனைய மக்களும் மதத்தை அடிப்படையாக கொண்டு நீதிமன்றங்களை உருவாக்கிக் கொண்டால் பொதுச்சட்டத்துக்கு யார் அடிபணிவது? காதி நீதிமன்றம், மத்ரஸா பாடசாலை குறித்து கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுவடைவதற்கான சூழலையே கடந்த அரசாங்கம் ஏற்படுத்தியது.இதன் தாக்கம் ஏப்ரல்21 குண்டுத்தாக்குதலுடன் வெளிப்பட்டது.
நாட்டில் இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படகூடாது என்பதற்காகவே இஸ்லாமிய அடிப்படையாவாதத்தின் கொள்கைகள் வேறூன்றும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம். காதி நீதிமன்றம் குறித்து எதிர்வரும் பாராளுமன்றில் உரையாற்றவுள்ளேன். மத்ரஸா பாடசாலைகள் குறித்து அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை அரச தலைவர்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்துவது அவசியமாகும்.
நாட்டின் பொதுச்சட்டத்துக்கு அனைத்து இன மக்களும் அடிபணிய வேண்டும்.காதி நீதிமன்றத்துக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளன. ஒரு நாடு-ஒரு சட்டம் என்ற கொள்கையினை செயற்படுத்துவதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.ஜனாதிபதி தேர்தலிலும்,பொதுதேர்தலிலும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய மக்களின் எதிர்ப்பார்ப்பும் அதுவாகவே உள்ளது.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு புறம்பாக செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்றார்.
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளது.
இதன்படி, வர்த்தக சங்கம், ஏனைய சங்கங்கள், அரசியல்வாதிகள் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தினர் உள்ளிட்டோர் தமக்கு ஆதரவு தரவேண்டும் என கடற்றொழிலாளர்கள் சமாசத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் ஆதரவு கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வட கடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்யும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்பதுடன் இது தொடர வேண்டும் என்பது எமது தொடர்சியான கோரிக்கையாகும்.
இலங்கை கடற்பரப்பில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற தமிழக மீனவர்களின் உயிரிழப்பு கவலையை ஏற்படுத்துகின்றதுடன் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதேவேளை எமது கடற்பரப்பிற்குள் நுளைய வேண்டாம் என மீண்டும் மீண்டும் கோருகின்றோம்.
அத்துடன், கருப்புக் கொடிகளைப் படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளதை அனுமதிக்க முடியாது” என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற சம்பவத்தில் தகர்ந்தது. இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த நால்வரும் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் தற்போது வரையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உள்ளன. இதனால் ஏற்பட்ட சர்ச்சையும் பதற்றமும் தமிழகத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றன.
இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தினக் கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“இலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு, பயங்கரவாத குற்றச்சாட்டு தொடர்பான விடயத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக இலங்கையில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பு, பயங்கரவாத குற்றச்சாட்டு தொடர்பான விடயத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகவே குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பின்வரும் பிரச்சினைகளையும் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் முதலில் சட்டம், பயங்கரவாதத்தின் வரையறை மற்றும் வழக்குகளின் பின்னிணைப்பை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணை மற்றும் உரிய செயன்முறையை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரின் மீதும் பாகுபாடு காட்டுவது மற்றும் களங்கம் விளைவிப்பது போன்ற விடயங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வை வழங்குவதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“முஸ்லீம் வணிகர்களின் பிரதேசங்கள் திட்டமிட்டு முடக்கப்படுவது இனவாதத்தின் உச்சமாக இருக்குமோ என அச்சம் எழுகிறது ? ” என பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் சீனி இறக்குமதி மோசடி தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பல வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக பொருட்களின் விலை உயர்ந்து மக்களால் வாழ முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது.
வர்த்தமானியின் பிரகாரம் பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 60ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கூறினர். ஆனால், அனைத்து தகுதிகளை பெற்றிருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நிமயனங்களை பெற முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கொவிட் தாக்கம் காரணமாக அட்டுலுகம பிரதேசம் 56 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. வெயங்கல பிரதேசம் 40நாட்களாகவும் காத்தான்குடி 17நாட்களாகவும் முடக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் வர்த்தர்களின் தாபனங்கள் இருக்கும் பல பிரதேசங்கள், திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் பகிரப்படுகின்றன. அரசாங்கத்தின் இனவாதத்தின் உச்சமாக இது இருக்குமா? என்ற அச்சமும் எமக்குள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்கள், இந்த நாட்டில் வாழ்ந்துவரும் முஸ்லிம் சமூகம் மிகவும் வேதனையில் உள்ளது. நாட்டின் இறைமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் எமது சமூகம் பாடுபட்டுள்ள நிலையில், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடங்லகள் எமது கண்ணுக்கு முன்னால் எரிக்கப்படுகின்றன.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யவும் எரிக்கவும் முடியுமென பல நிபுணர்கள் கூறியுள்ள போதிலும், இந்த அரசாங்கம் திட்டமிட்டு சதிசெய்து நாடகமாடுகிறது. கடந்த சனிக்கிழமை இரண்டு மாத குழந்தையை எரித்துள்ளனர். 20 நாள் குழந்தையையும் எரித்துள்ளனர். இதனால், முஸ்லிம் சமூகம் வேதனையின் உச்சத்தில் இருக்கிறது. வைத்தியசாலைக்கு செல்லவும் இவர்கள் அச்சமுற்றுள்ளனர் என்றார்.
இலங்கைக்கு கூடியவிரைவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கொவிசீல்ட் மருந்தினை பயன்படுத்துவதற்கு தனக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளதை இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது என இந்திய தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கூடிய விரைவில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையில் இந்தியா செயற்பட்டாலும் கொரோனா தடுப்பூசியை நட்பு நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தில் முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லாமை கவலையளிக்கிறது” என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.