28

28

“வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிக்கின்றது ” – எம்.ஏ.சுமந்திரன்

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனஈர்ப்பு போராட்டத்திற்கு வடகிழக்கு சிவில் சமூகம் விடுத்துள்ள அமைப்புகள் அழைப்பு  விடுத்துள்ளன.

இந்நிலையில் பல அமைப்புக்களும் அதற்கான ஆதரவை வழங்கியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை மேற்கொள்ளவுள்ள இந்தப் போராட்டம் தொடர்பில் சிவில் சமூகம் விடுத்துள்ள அழைப்புத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் திணைக்களங்கள் ரீதியிலான ஆக்கிரமிப்பும் தொடர்வதனை வெளிக்கொணரும் வகையில் வடக்கு கிழக்கில் செயல்படும் சிவில் அமைப்புக்கள் பல இணைந்து விடுத்துள்ள அழைப்பிற்கு வலுச் சேர்க்கும் வகையில் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிக்கின்றது.

இதேநேரம் குறித்த போராட்டத்தில் அனைவரும் பங்குகொண்டு வடக்கு கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப் படுத்துவதற்கான முயற்சிகள், மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள், போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றமை உள்ளிட்ட செயல்பாட்டாளர்களின் பேச்சுரிமை மீறல் ஆகியவற்றோடு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை போன்ற செயல்களைக் கண்டித்து இடம்பெறும் இப்போராட்டத்திற்கு எமது ஆதரவோடு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பினையும் விடுகின்றோம்” என்றார்.

“தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக, அடிமைகளாக நடத்தப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக நாம் போராடினோம்” – கோவிந்தன் கருணாகரம்

ஜே.வி.பி அமைப்பின் தலைவர்கள், போராளிகள் இலங்கையின் தலைநகரிலே நினைவு கூரப்படும்போது தங்களது உறவுகளை இழந்த உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கு இந்த அரசு தடை விதித்திருக்கின்றதென்பது உலகத்தில் ஒரு அவமானமான அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பொலிஸாரினால் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும் நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பிற்றிய நிலையில் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன், வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தி.தீபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவேந்தலை  தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கோவிந்தன் கருணாகரம்,

“இங்கு அப்பாவி பொதுமக்கள் கொத்தணியாக கொல்லப்பட்ட வரலாறு இருக்கின்றது. உலகத்தின் பல நாடுகளில் தங்களது உரிமைகளைப்பெறுவதற்காக பல விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக, அடிமைகளாக நடத்தப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக நாம் போராடினோம்.

அந்தப் போராட்டத்தில் இறந்த எமது உறவுகளை நினைவு கூருவதற்குக்கூட இந்த அரசாங்கம் தடை விதிக்கின்றதென்றால் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது என்பதை உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

உலகின் எந்தவொரு நாட்டிலுமே இறந்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதித்ததாக வரலாறுகள் இல்லை. இலங்கையில்கூட 1771, 1989ஆம் ஆண்டு காலகட்டங்களில் ஜே.வி.பி எனும் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக போராடிக்கொண்டிருந்தார்கள்.

இன்றும் அவர்களது தலைவர்கள், போராளிகள்கூட இலங்கையின் தலைநகரிலே நினைவு கூரப்படும்போது தங்களது உறவுகளை இழந்த உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கு இந்த அரசு தடை விதித்திருக்கின்றதென்பது உலகத்தில் ஒரு அவமானமான அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கின்றது.

2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் காலகட்டத்திலே எந்தவித தடையுமில்லாமல் இந்த நாட்டிலே அனைத்து நினைவுகூரல்களும் நடத்தப்பட்டன.

2020ஆம் ஆண்டிற்குப் பின்பு ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் நினைவிடங்களை அழிப்பதும் நினைவுகூரல்களை தடுப்பதும் அவமானமான செயலாக இருக்கின்றது. இலங்கையில் வடக்கு கிழக்கில் அழிந்த எமது உறவுகளுக்கு ஒரு நீதி வேண்டி தற்போது நாங்கள் இராஜதந்திர ரீதியாக போராடிக்கொண்டிருக்கின்றோம்.

எதிர் வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையகத்தில் இந்த படுகொலைகளுக்கு எதிரான ஒரு பிரேரணை வரவிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். அந்த வகையில் இலங்கையிலே நடைபெற்ற இந்த அட்டூழியங்களுக்கு நிலையானதொரு தீர்வு கிடைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். பாதிப்புகளை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று வேண்டி இன்று மிகவும் அமைதியாக இந்த நினைவுகூரலை மேற்கொண்டிருக்கின்றோம். இப்பகுதி மக்கள் தங்களது மக்களை நினைவுகூருவதைக்கூட தடுப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

“எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் அரசாங்கம் பொறியில் சிக்கியேயாக வேண்டும்” – இரா.சாணக்கியன் எச்சரிக்கை !

“எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் அரசாங்கம் பொறியில் சிக்கியேயாக வேண்டும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து 11வருடங்கள் கடந்துள்ள நிலையில் புதிய ஆணைக்குழுவினை நியமித்து எதனையும் கண்டுபிடிக்க முடியாது. இந்த நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் நடந்துள்ளன. இவையெல்லாம் உலகெங்கும் அறிந்த உண்மை. இது தொடர்பில் ஒரு குழுவினை நியமித்து ஆராயவேண்டிய அவசியம் இல்லை.

இந்த நாட்டில் ஜனாதிபதி குழுக்களை அமைப்பது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். கிழக்கில் தொல்பொருள் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது அதில் தமிழர்கள் எவரும் இல்லை.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் பெயரளவில் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஜனாதிபதி நியமிக்கும் ஆணைக்குழுக்களை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையே உள்ளது.

இம்முறை ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் வரும், அதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக இவ்வாறான ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

அத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தொடர்பாக சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை வெளியிடுவதை விடுத்து, இந்த நாட்டினை கட்டியெழுப்ப வேண்டுமானால் அங்கு நீங்கள் செய்யவேண்டிய உண்மையான செயற்பாடுகளை செய்யவேண்டும். எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் பொறியில் சிக்கியேயாக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக அழைப்பு !

வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை மேற்கொள்ளவுள்ள இந்தப் போராட்டம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் இன்று விடுத்துள்ள அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளுமாறு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு பூர்வீக குடிகளான நாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடி வருகின்றோம். ஆனால், தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை யாவரும் அறிவோம் .

போர் நிறைவடைந்து கடந்த பத்து ஆண்டுகளில் வடக்கு, கிழக்கை இராணுவ மையமாக்கி வரும் இலங்கை அரசு தமிழ் மக்களின் கலாசாரப் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு, கிழக்கு பூர்வீகக் குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காகப் பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பௌத்த மயமாக்கல் திட்டங்களை இலங்கை அரசானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

வடக்கு, கிழக்கில் குருந்தூர்மலை ஐயனார் கோயில், வெடுக்குநாறி மலை சிவன் கோயில், நிலாவரை ஆகியவற்றுடன் கிழக்கில் கன்னியா பிள்ளையார் கோயில், முருகன் ஆலயம், வேற்றுச்சேனை சித்திவிநாயகர் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் தமது பாரம்பரிய, கலாசார, சமய, வழிபாடுகளைச் செய்ய முடியாதவாறு ஆலயங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு அங்கு பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

மேலும் வடக்கு, கிழக்கில் உள்ள சுமார் 200 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான செயல்கள், செயற்பாட்டாளர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்களக் குடியேற்றங்களும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் ஒன்றை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பில் உள்ள பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக காடுகள் அழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாஸாக்களைப் புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராகப் போராடும் முஸ்லிம் சமூகத்தையும் அரச தரப்பினர் அடக்கி ஆள முனைகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பலதரப்பட்ட இஸ்லாமிய மக்களைப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தடுத்துவைத்துள்ளனர். இதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைதுசெய்து பல வருடங்களாகத் தடுத்து வைத்துள்ளனர்.

இதேபோன்று சிறைகளில் விசாரணைகள் இன்றி தமிழ் அரசியல் கைதிகளாகப் பலர் உள்ளனர். ஆனால், பல குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசு, இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருகிறது.

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட் உறவுகளைத் தேடி வருடக்கணக்கில் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான நீதியை வழங்காது அரசு ஏமாற்றி வருகின்றது.

அத்துடன் மலையகத் தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்துக்காக ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது அரசு இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

இவ்வாறு தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு வடக்கு- கிழக்கு தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை
நிறைவேற்றக் கோரியும் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ் பேசும் மக்களாகிய எமது அவலக் குரல்கள் சர்வதேசத்தின் மனச்சாட்சிகளைத் தட்டும் அளவுக்கு எமது போராட்டத்தை அஹிம்சை வழியில் முன்னெடுக்க வேண்டியுள்ளதால் அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ள மேற்படி போராட்டத்துக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

எனவே, அரசியல் கட்சிகள் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைவரும் மேற்படி போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி கலந்துகொள்ளுமாறு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுக்கின்றோம்.

  • இங்ஙனம்
    வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகள்.

“மேய்ச்சல் தரை இன்மையால் இறந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகள்” – நேரில் சென்று பார்வையிட்ட தவராசா கலையரசன் !

மேய்ச்சல் தரை இன்மையால் இறந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகளால்  தவிக்கும் திருக்கோவில் பிரதேச பண்ணையாளர்களை  நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்.

பண்ணையாளர்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து றூபஸ் குள பகுதிக்கு இன்று (28.1.2021) நண்பகல் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

திருக்கோவில் பிரதேச மேய்ச்சல் தரை  விடையம் தொடர்பாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்கா அவர்களை சந்தித்து பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடிய போது விரைவில் தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

IMG 20210128 144518

காலாகாலமாக ஜீவனோபாய தொழிலாக கால்நடை வளர்ப்பினை  மேற்கொண்டு வரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பண்ணையாளர்கள் மனதில் எதிர்காலத்தில் இவ் இழப்பினை எவ்வாறு ஈடுகொடுக்க போகின்றோம் என்ற ஏக்கம் இவர்களது மனதில் உள்ளது.

வட்டமடு மேய்ச்சல் தரை விவகாரம் நீதிமன்ற வழக்காக உள்ள நிலையில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்கு மேய்ச்சல் தரை இன்மையால் குறுகிய பரப்பினுள்  வைத்திருப்பதால் புதிய வகை நோய் தாக்கத்தினால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து கிடக்கின்றது பல கால்நடைகள் இறக்கும் தறுவாயில் உள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில்  அவசர கூட்டமொன்றை ஏற்படுத்தி கால்நடை வைத்தியர் ,  உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து கால்நடை இறப்பிற்கான காரணம் என்னவென்பதை அறிவதோடு மேய்ச்சல் தரையை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கால்நடை பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கு ஒரு வகையான நோய் தாக்கத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளது என தெரிவித்தனர்.

1980-ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம்  தற்போது வரை   மேய்ச்சல் தரை இல்லாததால் குறுகிய பகுதிக்குள் கால்நடைகளை பராமரிப்பதால்  கால்நடைகளுக்கு  நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட திருக்கோயில் பிரதேசத்துக்கு உட்பட்ட திருக்கோயில் விநாயகபுரம் தங்க வேலாயுதம் கஞ்சிகுடிச்சாறு மற்றும் தாண்டியடி, மண்டானை குடியிருப்பு முனை காஞ்சிரங்குடா போன்ற கிராமங்களில் உள்ள  பண்ணையாளர்களின் இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையின் கிரிக்கெட் தரத்தை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் முன்னேற்ற முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது” – அர்ஜூன ரணதுங்க

“விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டால் வேறு எந்த அமைச்சராலும் எதிர்காலத்தில் முன்னேற்றததை ஏற்படுத்த முடியாது” என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

இலங்கை கிரிக்கெட்டினை வலுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் நாமல்ராஜபக்சவினை அவதானித்த வண்ணமுள்ளனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் நாமலின் குடும்பத்தவர்கள் என தெரிவித்துள்ள, ரணதுங்க இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட்டினை முன்னேற்றகரமான நிலைக்கு நாமலால் கொண்டு செல்ல முடியாவிட்டால் வேறு எவராலும் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி காலத்தில் கிரிக்கெட்டில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை தடுப்பதற்காக பலர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆதரவை பெற்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாமல் ராஜபக்சவிற்கு விளையாட்டை பற்றி தெரியும் என்பதாலும் அவர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் யாரும் தேவையற்ற விதத்தில் செல்வாக்கு செலுத்த முடியாது என ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“ஈரான் விதிகளுக்கு ஒப்புக் கொண்டால் அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணையும்” – அமெரிக்கா

“ஈரான் விதிகளுக்கு ஒப்புக் கொண்டால் அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணையும்” என்று அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ப்ளிங்கின் கூறும்போது,

“அனைத்து விதிமுறை கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக் கொண்டால் அணுஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதில் ஜோ பைடன் தெளிவாக இருக்கிறார். இதனை ஈரானுடனான எங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனை கருதுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதை செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாக கூறி அதிலிருந்து விலகினார்.

மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் கடந்த 2015-ல் நிறுத்தப்பட்ட
யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது.

இதன் காரணமாக ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

“இந்திய வீரர்கள் ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை ” – மன்னிப்பு கேட்டது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் !

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் சீன் காரோல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள்(முகமது சிராஜ், பும்ரா) ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை தான். விரும்பத்தகாத இந்த சம்பவத்துக்காக நாங்கள் மீண்டும் இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டேடியத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகள், டிக்கெட் விவரங்கள், ரசிகர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம்.

மைதானத்தில் இருந்து சந்தேகத்தின் பேரில் வெளியேற்றப்பட்ட 6 ரசிகர்களுக்கும் இனவெறி புகாருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. நியூசவுத் வேல்ஸ் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களது விசாரணை முடியும் வரை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பலர் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது போன்ற புகைப்படம் – அமெரிக்காவில் பரபரப்பு !

அமெரிக்க ஜனாதிபதியாக பதிவேற்றதும் ஜோ பைடன் 17 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இவற்றில் ஏழு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்கு வர முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த தடை உத்தரவை தளர்த்துவதும் இடம்பெற்று இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பலர் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது போன்ற புகைப்படம் நாடு முழுக்க சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் பைடன் அமெரிக்க ஜனாதிபதியானதும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழுகையின் போது எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது செப்டம்பர் 25, 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் கேபிடல் ஹில் வளாகத்தில் இஸ்லாம் எனும் சிறப்பு தொழுகையின் போது எடுக்கப்பட்டது ஆகும். இந்த தொழுகை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கில் நடைபெற்றது.
மேலும் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட இணைய தேடல்களில் வைரல் புகைப்படத்தை அலெக்ஸ் வொங் என்பவர் எடுத்து இருக்கிறார் என முன்னணி புகைப்பட வலைதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த வகையில் வைரல் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

“இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையை நிவர்த்தி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” – சர்வதேச மன்னிப்புச் சபை

“இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையை நிவர்த்தி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த மாதம் மனித உரிமைகள் பேரவை கூடும் போது ஒரு வலுவான தீர்மானத்தை முன்வைக்க உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டைப் பின்பற்றுமாறும் பிரித்தானியாவை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் மோசமான அறிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான நீதிகான சர்வதேச உந்துதலுக்கு பிரித்தானியா தலைமை தாங்க வேண்டும் என்றும் அச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

போர் நிறைவடைந்து சுமார் 12 வருடங்கள் ஆகியும், மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை மற்றும் எதிர் காலத்தில் அதிகரிக்கூடிய ஆபத்து பற்றியும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

இந் நிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்குவதில் இலங்கையின் மோசமான நிலையையும் நாட்டில் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியிருக்கும் விளைவையும் காட்டுகிறது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை குறித்து இன்னும் கடுமையான மேற்பார்வை செய்ய அறிக்கையின் முக்கிய பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.