31

31

“ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் பலத்த விளைவுகளை சந்திக்க நேரிடும்” – சுமந்திரன் எச்சரிக்கை !

“ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் பலத்த விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

சண்டே டைம்சிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

நாங்கள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கின்றோம், மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு நாங்கள் அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆணையாளரின் அறிக்கையில் காணப்படுவதை பலர் அவதானித்திருப்பார்கள். இது ஒரு தற்செயல்நிகழ்வு.

கடந்தகாலங்களில் மூன்று தடவை ஐ.நாபொறிமுறைக்கு அரசாங்கம் இணங்கியபோதிலும் அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க மறுத்தமையே அரசாங்கத்தின் தற்போதைய நிலைக்கு காரணம்.

ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் அதன் பின்னர் அதற்கான இயல்பான விளைவுகள் உருவாகும். யுத்தகால பொறுப்புக்கூறும் பொறிமுறையை பொறுத்தவரைஐக்கியநாடுகள் தீர்மானத்தின் மூலம் இலங்கை கலப்புபொறிமுறைக்கு சம்மதம் வெளியிட்டது . எனினும் பின்னர் முன்னர் ஏற்றுக்கொண்டபடி அவ்வாறான பொறிமுறைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்தது.

கடந்த பெப்ரவரியில் அரசாங்கம் ஐ.நா தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அறிவித்தது.
இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட நாட்டின் சம்மதம் அவசியம். நாடு தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்றபோது ஐ.நா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல், ஏனைய உறுப்புநாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததல், பயண போக்குவரத்து தடைகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் சமீபத்திய பேட்டிகளை பார்க்கும்போது பத்து வருடத்தின் பின்னரும் அரசாங்கம் மறுக்கும் மனோநிலையிலேயே உள்ளதை புலப்படுத்துகின்றது.

யுத்தகால பொறுப்புக்கூறலிற்கு இலங்கைக்கு பத்து வருடங்கள் வழங்கப்பட்ட பின்னரும் அது நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டியுள்ளது” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார்” – அமைச்சர் சரத்வீரசேகர

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை முற்றிலும் பிழையான குற்றச்சாட்டுகளை கொண்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடரடபில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் இறைமைக்குள் விரல்களை நீட்டுகின்றார். நான் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் எங்கள் ஜனாதிபதிக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார் இது தவறு. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியும் ஓய்வுபெற்ற இராணுவஅதிகாரிகளை முக்கிய பதவிகளிற்கு நியமித்துள்ளார்.

மனித உரிமை ஆணையாளர் என்னை குற்றம்சாட்டியுள்ளார். நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். நான் கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குகளையும் இலங்கையில் இரண்டாவது அதிக விருப்புவாக்குகளையும் பெற்றவன் மனித உரிமை ஆணையாளரை பொறுத்தவரை அது பிழையான விடயமாக காணப்படுகின்றது.

தற்போதைய நிலைமக்கு முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவையே குற்றம்சாட்டவேண்டும். முன்னைய அரசாங்கத்தின் சார்பில் அவரே அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இனண அணுசரணை வழங்கினார்.
இது துரோகமாகும்.

இலங்கைமக்கள் அச்சப்படத்தேவையில்லை ஜனாதிபதி அவர்களை நன்கு பார்த்துக்கொள்வார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் திட்டம் – நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுக்க ஜே.வி.பி தீர்மானம் !

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தீர்மானித்துள்ளது.

தமது போராட்டத்தின் ஆரம்பகட்டமாக எதிர்வரும் முதலாம் திகதி தமது தொழிற்சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளங்களையும், சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கு விற்பதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும்,  கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கும் அரசின் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுப்போம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகம் என்பது இலங்கை பொருளாதாரத்தின் இதயத்தை போன்றது. ஏற்கனவே இந்தத் துறைமுகத்தின் சில பகுதிகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் சபை நடுநிலைத்தன்மையைப் பேணவில்லை” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டு !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் இரு தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஆராய்வது அவசியமாகும். இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் சபை நடுநிலைத்தன்மையைப் பேணவில்லை” என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையுடன் இலங்கை நட்புறவுடன் செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகப் போர் முடிவடைந்த காலத்தில் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் உள்ள பொறிமுறையின் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையைக் கையாள வகுக்கப்பட்ட திட்டங்களை 2015 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நல்லாட்சி அரசு செயற்படுத்தவில்லை.

மனித உரிமைகள் சபை விவகாரம் கூட அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர்  மங்கள சமரவீர அரச தலைவருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் இணக்கம் தெரிவித்தமை தேசத்துரோக செயற்பாடாகவே கருத வேண்டும்.

30/1 தீர்மானத்தில் உள்ளடக்கபட்ட விடயங்கள் அரசமைப்பிற்கு முரணானது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரின் போது 30/1 தீர்மானத்திலிருந்து எமது அரசு உத்தியோகப்பூர்வமாக விலகியது.

இந்தத் தீர்மானத்தை அரசு சுயாதீனமான முறையில் எடுத்தது. பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர்  வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கையின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இம்முறை திருத்தியமைக்கப்படும். உள்ளகப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்குக் கொண்டு சென்று ஒரு தரப்பினர் இலாபமடைகின்றார்கள். இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப் பெறவில்லை” – என்றார்.