February
February
இன்று இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலருடன் முதற் செயலாளர், அரசியல், சிடோனியா கேபிரியல் அத்துடன் நிகழ்ச்சிகள் இணைப்பாளர் சுசந்தி கோபாலகிருஷ்ணன் மூவரும் என்னை வந்து சந்தித்தார்கள்.
புதிய சுவிஸ் தூதுவரின் வடக்கை நோக்கிய முதற் பயணம் இதுவாகும். வவுனியாவில் தரித்து நின்று, இன்று மாலை இங்கு வந்து என்னைச் சந்தித்த பின்னர் நல்லூர்க் கந்தனைத் தரிசிக்கச் செல்கின்றார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எங்களுடைய சரித்திரம் பற்றியும் தற்கால பிரச்சினைகள் பற்றியும் பல கேள்விகளை அவர் கேட்டிருந்தார். முக்கியமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்களின் எழுச்சிப் பவனி சகலரையும் ஒன்று சேர்த்தது என்று கூறி இவ்வாறான ஒற்றுமை வருங்காலத்தில் நிலைக்குமா என்று கேட்டார். அதற்குப் பதில் அளித்த நான் 2004 டிசெம்பர் மாதத்தில் சுனாமி வந்த போது உக்கிரமாகப் போரில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமான முறையில் ஒன்று சேர்ந்து, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மூன்று நாட்கள் வரையில் உதவி செய்தார்கள். அதே போன்று இன்று தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர், கத்தோலிக்கர்கள் போன்ற அனைவரும் இன்றைய ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் கொள்கைகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள்.
சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிராக சிங்கள பௌத்தம் என்ற ஆயுதத்தை ஓய்வுபெற்ற இராணுவத்தினருடனும் சேவையில் இருக்கும் படையணியினருடனும் சேர்ந்து பிரயோகிக்கும் போது பாதிப்புறும் சகல மக்களும் ஒன்றிணைகின்றார்கள். தற்போதைய ஐக்கியம் அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களின் பிழையான செயற்பாடு தொடரும் வரையில் வடக்கும் கிழக்கும் மலையகமும் சேர்வன. தமிழரும் முஸ்லீம்களும் சேர்வர். வடக்கும் கிழக்கும் இணைவன. ஆகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலே தான் எமது ஐக்கியம் தங்கியிருக்கின்றது என்றேன்.
உங்கள் அரசியல் கட்சிகள் பலவாகப் பிரிந்து நிற்கும் போது அவர்கள் இடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமா என்று கேட்டார். அதற்கு நான் கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் தங்கள் தங்களது கொள்கைகள் சம்பந்தமாகப் பூரண புரிதல் ஏற்பட்டால் முடியும் என்றேன். அதன் அர்த்தம் என்ன என்று கேட்டார். தமிழ் மக்கள் வாக்களிக்கும் கட்சிகள் இரண்டு முக்கியமான பிரிவுகளாகப் பிரிந்து நிற்கின்றன. ஒரு சாரார் தமிழ் மக்களின் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் தமது கொள்கைகளை வகுத்திருக்கின்றார்கள். மறு சாரார் அரசாங்கத்திடம் இருந்து இன்று எதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையில் செயற்படுகின்றார்கள்.
பறங்கியர்களுக்கு நடந்தது போன்று அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் வருங்காலத்தில் தமிழ் மக்களின் தொகையையும் வதிவையும் குறைத்துக் குறைத்து வடக்கு கிழக்கை பௌத்த சிங்கள மயமாக்கக் கூடும் என்ற பயத்திலேயே ஒரு சாரார் தமது அரசியலை நடத்துகின்றார்கள். மறுசாரார் பின்னர் என்ன நடந்தாலும் எமக்குக் கவலையில்லை, இன்று எமது மக்கள் குனிந்து பணிந்தேனும் அரசாங்கத்திடமிருந்து எதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே அரசியல் நடத்துகின்றார்கள். பின்னையோர் வருங்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். முன்னையவர்கள் நிகழ்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அரசியல் தீர்வும் பொருளாதார அபிவிருத்தியும் தேவை என்று இருசாராரும் பயணிக்க வேண்டும். இவற்றை விட தனிப்பட்ட ரீதியிலே அரசியல் பிரமுகர்கள் இடையில் கோபதாபங்கள் மற்றும் முரண்பாடுகள் இருப்பதையும் அவதானிக்கலாம். புரிந்துணர்வு ஏற்பட்டால் எமது கட்சிகள் யாவும் ஒருமித்து செயல்பட முடியுமென்றே நான் கருதுகின்றேன்.
பொது வாக்கெடுப்பை வேண்டி உங்களுடைய கட்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தது. அவ்வாறெனின் என்னவாறான கேள்விகளை நீங்கள் பொது வாக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப் போகின்றீர்கள் என்று கேட்டார். முதலிலே பொது வாக்கெடுப்புக்கு ஐ.நா அனுமதியைத் தரட்டும் கேள்விகளைப் பின்னர் பார்க்கலாம் என்றேன். பல சிங்கள புத்திஜீவிகள் இந்தப் பொது வாக்கெடுப்பின் மூலமாக தமிழ்த் தலைவர்கள் நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றார்கள் என்றும் பிரிவினைக்கு வித்திடுவதற்கே பொது வாக்கெடுப்பை தமிழ் அரசியல்வாதிகள் கோருகின்றார்கள் என்று நினைக்கின்றார்கள் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த நான் ஒற்றையாட்சியா அல்லது சமஷ்டியா என்று கேள்விகளை நாம் முன் வைத்தால் ஒற்றையாட்சியா பிரிவினையா என்ற கேள்விக்கு இடமில்லை அல்லவா என்று நான் கேட்டேன்.
தமிழ் மக்களின் பாரம்பரியம் பற்றியும் சிங்கள பௌத்த மயமாக்குதல் பற்றியும் பல விடயங்களை நாங்கள் பேசிக்கொண்டோம். திரும்பவும் வந்து சந்திப்பதாக கூறி அவர்கள் விடைபெற்றார்கள்.
ஒரு நகைச்சுவை நிகழ்வும் நடந்தது. பழக்கத்தின் நிமித்தம் நான் தூதுவருக்கு கைலாகு கொடுத்த போது அவர் தமது இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்பொழுது நான் நீங்கள் வணக்கத்திற்காக கிழக்கு முறையைத் தற்போது பின்பற்றத் தொடங்கி விட்டீர்கள். நாங்கள் இன்னமும் மேற்கிடம் இருந்து படித்தவற்றை வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினேன். ‘கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம் இது’ என்றார்” என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
“கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு அவரின் தனிப்பட்ட விருப்பம்” என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (16.02.2021) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம், சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினாலேயே மேற்கொள்ளப்படும்.
கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமைச்சரவையால் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது .
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைய, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலம் தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
“வடக்கு-, கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புக்கள் பல உருவாகியுள்ளன நிலையில் புலனாய்வு துறையை மேலும் வலுப்படுத்தவுள்ளோம்” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் நாடு என்ற ரீதியில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் அமைப்புக்கள் மீண்டும் உருவாகியுள்ளன.
இதேவேளை நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நாட்டின் புலானாய்வு பிரிவு செயலிழந்து காணப்பட்டமையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. ஆகவேதான் தற்போது புலனாய்வு துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். அதாவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் புலனாய்வு துறை பலப்படுத்துவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்களை எடுத்துள்ளன. இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தேவைகளை கவனத்திற்கொண்டு தமிழர்களின் இருப்பு, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்காக நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
இந்நிலையில், குறித்த பத்துக் கட்சிகள் சார்பாக நடவடிக்கைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது.
இந்தக் குழுவை இணைத்துச் செயற்படுத்துவதற்கான இணைப்பாளர்களாக சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் செயற்படவுள்ளார்கள்.
அத்துடன், ஜெனீவா விடயம் தொடர்பாகவும் ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளோம். ஏற்கனவே, தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிக்கையொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடனும், இணை அனுசரணை நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜேர்மனி போன்ற நாடுகளுடனும் ஏனைய உறுப்பு நாடுகளுடனும் கலந்துரையாடி, தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம்.
சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ளோர், கூட்டாக பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் குறுகிய நாட்களுக்குள் உரையாடவுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் வரக்கூடிய நெடுந்தீவு, அனலை தீவு, நயினாதீவு, போன்ற தீவுகளில் ஒரு மாற்று எரிசக்தியை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் சீனக் கம்பனியுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளதுடன் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவ்வாறான ஒரு விடயம் நடக்குமாக இருந்தால், வடக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய வடக்குப் பகுதியில் சீனக் கம்பனியைக் கொண்டுவருவது பலத்த பாதிப்புக்களை உருவாக்கும்.
எனவே, அவ்வாறான சீனக் கம்பனிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்துக்கு பத்து தமிழ் கட்சிகளும் இணைந்து வலியுறுத்துகின்றன” என தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் கல்முனை நீதிமன்ற பிரதேசத்திற்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணை இன்று செவ்வாய்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் பொலிஸாரினால் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,
இன்று கல்முனை நீதிமன்றத்தினால் எனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவினை மீறியதாக தெரிவித்தே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே நான் எவ்வாறு நீதிமன்ற தடை உத்தரவினை மீறினேன் என எனக்கு தெரியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 26 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெற்ற மாதிரிகளிலிருந்து உருமாறிய புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் பேசிய அவர்,
இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கு முன்னரே கொவிட் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டது. அதன் ஊடாக கொவிட் அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நாட்டில் சில பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை வைரஸ் கட்டுப்பாடுகளுக்குமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
தற்போது மிகக் குறைந்தளவானோருக்கே புதிய வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஜனவரி 26 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெற்ற மாதிரிகளிலிருந்தே புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கு முன்னரும் உருமாறியதும் தன்மைகளில் வேறுபட்டதுமான 26 வகை வைரஸ் நாட்டுக்குள் கண்டறியப்பட்டுள்ளது. இவை வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தவையாகும். அவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் என்பது விஷேட அம்சமாகும்.
பொம்பைமடு , முழங்காவில் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு , குறித்த நபர்களும் 21 நாட்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.