February

February

குழந்தையின் படத்தை வெளியிட்டு பெயரையும் அறிவித்த விராட் கோலி!

இந்திய அணி கேப்டன் விராட் கோலி – பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த மாதம் 11ம் திகதி பெண் குழந்தை பிறந்தது.
அவர்கள் பிறந்த உடன் குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டவில்லை. தனிமனித உரிமை கடைபிடிக்கப்பட வேண்டும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மீடியாக்கள் அவர்கள் பின்தொடரவில்லை.
இந்த இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி, குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, மகளின் பெயர் “வாமிகா’’  எனவும் தெரிவித்துள்ளார்.

மியன்மார் நாட்டில் இராணுவப் புரட்சி – பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கண்டனம் !

மியன்மார் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதற்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

“இராணுவப் புரட்சிக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டவிரோதமாக பொது மக்களையும், ஆங் சான் சூசி போன்ற தலைவர்களையும் சிறைபிடித்து வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேர்தலில், மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தலைவர்களை விடுவிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, மியான்மரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூசியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

S'poreans in Myanmar advised to remain vigilant amid military coup: MFA -  Mothership.SG - News from Singapore, Asia and around the world

இந்தநிலையில் ஆங் சான் சூச்சி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராணுவ ஆட்சி வரலாறு:

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூசி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது.

அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூசி பொறுப்பேற்றார்.

ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆங் சான் சூசிக்கு இருந்த ஜனநாயகப் பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் சிதைந்துபோனது.

“அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்கிறேன்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்கிறேன்” என  கடற்தொழில் நீரியல் வழங்கல்துறை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்றைதினம் (31.01.2021) பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக புதிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை நன்மையான விடயமே. ஆட்சி மாறியுள்ளமையால் நடந்த உண்மைகளை அறிவதற்காக அவ்வாறான குழுக்களை அமைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளவதுண்டு. அந்தவகையில் அது வரவேற்கக்கூடிய விடயமே.

அத்துடன் இந்தியாவுடனும் நாங்கள் நட்புறவை பேணவேண்டும். அந்தவகையில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளமையும் நல்ல விடயமே.

சட்டரீதியான பிரச்சனைகள் இருப்பதால் 51 வீதத்தை இலங்கை அரசும் வேறு முதலீட்டாளர்களிற்கு 49 வீதத்தையும் வழங்கினாலேயே அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றவகையில் அது செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்காகவே அதனை வழங்குவதாக கூறுகின்றமை எதிர்கட்சி அரசியல்வாதிகள் வழமையாக கதைக்கும் விடயமே” எனக்குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, பிரதிபொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன, பிரதேச செயலாளர் நா.கமலதாசன், உதவிபொலிஸ் அத்தியட்சகர் மல்வளகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

எமது நாட்டின் மீதான அசைக்கமுடியாத விசுவாசத்தை வெளிப்படுத்துவதில் ஏனைய சகோதர சமூகங்களுடன் கைகோர்க்குமாறு முஸ்லீம்களுக்கு அழைப்பு !

சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் அனைவரும் தேசிய கொடியை ஏற்றுமாறும் எமது நாட்டின் மீதான அசைக்கமுடியாத விசுவாசத்தை வெளிப்படுத்துவதில் ஏனைய சகோதர சமூகங்களுடன் கைகோர்க்குமாறும் உலமா சபை உள்ளிட்ட நாட்டிலுள்ள சகல முஸ்லிம் அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இதில் தரீக்கா உயர்பீடம், ஜமாஅத்தே இஸ்லாமி, சூரா கவுன்ஸில், மலே மாநாடு, தாவூத் போரா அமைப்பு உட்பட பல அமைப்புகள் உள்ளடங்குகின்றன.

இந்த கூட்டறிக்கையில் மேலும் கோரப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது இந்த நாட்டில் வாழும் சகல பிரஜைகளுக்கும் வரலாற்றுபூர்வமான மற்றும் மகிழ்ச்சிகரமான தருணமாகும். எங்கள் தாய்நாடு சிங்கள,தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ,மலாய்,பறங்கி மற்றும் பிற சமூகங்களை உள்ளடக்கியது. சுதந்திர தினத்தை அது நிகழ்ந்த தினத்தில் காணப்பட்ட சாதனை உணர்வுடன் நோக்க வேண்டும்.

எம்மை நாமே ஆட்சி செய்வதற்கும் சுதந்திர தேசமாக நமது சொந்த இறையாண்மையை அனுபவிக்கவும் நமக்கு அதிகாரம் உள்ளது.கிடைத்த சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

எமது சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யவோ பிழையாக பயன்படுத்தவோ கூடாது.

எமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று கலாசார,மத,இன வேறுபாடுகள் போன்ற விடயங்களில் அனைத்து பிரஜைகளினதும் ஜனநாயக உரிமைகளும் முழுமையாக மதிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் அனைத்து மக்களினதும் பொருளாதார சமத்துவ மற்றும் சமூகநீதி உறுதி செய்யப்படுவதன் மூலமுமே சுதந்திர உணர்வு பாதுகாக்கப்படுகிறது.

இம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை முஸ்லிங்கள் அனைவரும் தேசிய கொடியை ஏற்றுமாறும் நாம் வேண்டிக் கொள்கிறோம். எமது ஒருமைப்பாட்டை, ஐக்கியத்தை, எமது நாட்டின் மீதான அசைக்கமுடியாத விசுவாசத்தை வெளிப்படுத்துவதில் ஏனைய சகோதர சமூகங்களுடன் கைகோர்க்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.

“மியன்மாரில் இடம்பெற்ற விடயங்கள் இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை” – முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை !

மியன்மாரில் இடம்பெற்ற விடயங்கள் இலங்கைக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை சிவில் நிர்வாகத்தின் தாழ்வாரத்திற்குள் கொண்டுவந்தால், இராணுவம் மக்கள் ஆணையின் செல்லுபடியை தீர்மானிப்பதில் நீதித்துறையினதும் தேர்தல் ஆணைக்குழுவினதும் பங்களிப்பை தவிர்க்க விரும்புவார்கள் இது தவிர்க்க முடியாதவிடயம் என டுவிட்டரில் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

மியன்மாரிலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை இது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்” – இந்தியா வேண்டுகோள் !

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா,இலங்கை, ஜப்பான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி அளித்து ஒரு சில மணித்தியாலங்களில் இலங்கைக்கான இந்திய தூதரக பேச்சாளர் ஒருவரின் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.

2019ம் ஆண்டு மே மாதம் கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திக்காக இலங்கை,ஜப்பான்,இந்தியா ஆகியநாடுகள் கைச்சாத்திட்ட முத்தரப்பு உடன்படிக்கையை இநத மூன்று நாடுகளின் ஒத்துழைப்புடன் முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பினை நான் மீள வலியுறுத்தவிரும்புகின்றேன் என இந்திய தூதரக பேச்சாளர் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்பில் பல முறை தெரிவித்துள்ளோம் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் தெரிவித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவது என இலங்கை அமைச்சரவை மூன்று மாதத்திற்கு முன்னர் தீர்மானித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியமைக்கு ஐ.தே.க கண்டனம் !

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளமைக்கு ஐக்கியதேசிய கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

2011ம் ஆண்டின் ஜனநாயக சீர்திருத்தங்கள் 2015 தேர்தல்களுடன் மியன்மாரில் ஆரம்பித்தன என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சி 2020 நவம்பரில் இடம்பெற்ற தேர்தல் ஜனநாயக சீர்திருத்தங்களின் இரண்டாம் கட்டம் என வர்ணித்துள்ளது.

மியன்மாரில் காணப்பட்ட முன்னேற்றங்களுக்கு இராணுவத்தின் நடவடிக்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பெருமளவு மக்கள் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கிற்கு தங்கள் ஆதரவை வழங்கினார்கள் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்ற மியன்மார் நாடாளுமன்றம் பதவியேற்றிருந்தால் அது சீர்திருத்த நடவடிக்கைகளின் மற்றுமொரு கட்டமாக அமைந்திருக்கும் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ள ஐக்கியதேசிய கட்சி அவர்களை இராணுவம் விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் – வடக்கு மாகாணம் முழுமையான ஆதரவு !

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும் மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க மாகாண, மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இன்று (01.02.2021) இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை மறுதினம் மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரை நான்கு நாட்கள் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்துவதற்கு அறிக்கை வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை விடுதலை செய்யக்கோரி மக்கள் போராட்டம் – 5000 க்கும் மேற்பட்டோர் கைது !

ரஷ்யாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி , கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நச்சு தாக்குதல் காரணமாக நவால்னி கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந் திகதி நவால்னி ரஷ்யா திரும்பினார். மாஸ்கோ விமான நிலையம் வந்த அவரை மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் போலீசார் கைது செய்தனர். நவால்னி கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் நவால்னியை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வார இறுதியில் ரஷ்யாவில் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் பரோல் விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நவால்னியை விடுவிக்க கோரியும் ஜனாதிபதி புதின் பதவி விலகக்கோரியும் கடந்த 2 நாட்களாக ரஷ்யாவில் எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி ரஷ்யா முழுவதும் ஆதரவாளர்கள் போராட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் இருக்கும் மாஸ்கோவின் லுபியங்கா சதுக்கத்தில் முதலில் போராட்டம் நடத்த நேற்று நவால்னி ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் போராட்டம் அருகில் உள்ள தெருக்களுக்கு மாற்றப்பட்டது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆயிரக்கணக்கானோர் புதின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர். இது சம்பந்தமான வீடியோவும் வெளியானது. ரஷ்யாவின் மற்றொரு பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்துக்கு அணி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டங்களை ஒடுக்குவதற்காக தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த நகரங்களை பாதுகாப்பு படையினர் முடக்கினார்கள். மேலும் அங்கு போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ரஷ்யாவில் அமைதியாக போராடும் போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ரஷ்ய அதிகாரிகள் செயல்படுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அவரது கருத்தை ரஷ்யா நிராகரித்தது. ரஷ்யாவில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் நிலைமையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும், ரஷ்யாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும் ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.

“பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று எனக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன” – இரா.சாணக்கியன்

“பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று எனக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன” என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வற்கு தடை உத்தரவுகள் வருகின்ற என்று குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஆனால், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே தடை உத்தரவுகள் போடப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களைத் தூண்டிவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாகத் தெரிவித்து பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அத்துடன், இது குறித்த அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இரா.சாணக்கியன் மேலும் கருத்து தெரிவித்த போது,

“இன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவினால் எனக்கு மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதனைத் தடை செய்யுமாறு களுவாஞ்சிக்கொடி பொலிஸாரினால் நீதிமன்றங்களை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில், மிகவும் வேடிக்கையான விடயம், கொரோனாவினைக் காரணம் காட்டி நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.

ஆனால், கொழும்பில் கிழக்கு முனையம் துறைமுகத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸாரினால் தடை உத்தரவு வழங்க முடியாது. ஏனென்றால் அது அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயம்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை விடுதலை செய்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு பொலிஸாரினால் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு இனங்களுக்களுகு எதிராக, மதங்களுக்கு எதிராக பிரச்சினைகளைத் தூண்டும் விவமாக நாங்கள் செயற்படுவோம் எனக்கூறி இந்த தடை உத்தரவினை எடுத்திருந்தாலும் கூட, அப்படியிருந்தால் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு எடுக்கப்பட வேண்டும்.

இனங்களுக்கு எதிரான குழப்பங்களை அவர்களே செய்கின்றனர். அதாவது, எங்களுடைய தமிழ் ஆலயங்களில் மத வழிபாடுகள் செய்வதைத் தடை செய்து, அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து இந்த அரசாங்கம், இந்த ஜனாதிபதி, ஆளுநர் போன்று தொல்பொருள் அதிகாரிகளே இனங்களுக்கெதிரான பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றனரே தவிர நாங்கள் செய்யவில்லை.

இந்தப் போராட்டம் கூட அமைதியான போராட்டம். மூன்றதம் திகதி முதல் ஆறாம் திகதி வரை பல்வேறு விடயங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிலும் குறிப்பாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாசா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை, தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் விவகாரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” என்று குறிப்பிட்டார்.