February

February

மியன்மாரில் இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம் – சிறையிலடைக்கப்பட்டார் ஆங் சான் சூகி !

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சிகள் தோல்வி அடைந்தன.
இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. ஆட்சியை ராணுவம் கவிழ்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
Making war and law - Myanmar's army blocks constitutional reforms | Asia |  The Economist
இந்த நிலையில் இன்று மியான்மரில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ஆங் சான் சூகி இன்று அதிகாலையில் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார். இதேபோல் அதிபர் வின் மின்ட் மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டை ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாகவும், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்றும் ராணுவ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.
மியான்மரில் ராணுவப்புரட்சி குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. மியான்மர் ராணுவம் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.

தாயாருடன் ஏற்பட்ட முரண்பாடு – யாழில்.தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற இளைஞன் மரணம் !

தாயின் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- உரும்பிராய் ஜபகுதியை சேர்ந்த கோ.கவிதாஸ் (வயது 34) என்பவரே இவ்வாறு  உயிரிழந்தவராவர்.

கடந்த 28ஆம் திகதி வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து, தனது உடலில் மண்ணெணெய் ஊற்றி, தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதன்போது தீக்காயங்களுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவரை மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் வீட்டார் அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர், அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும்” – கிழக்கு முனைய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மஹிந்த ராஜபக்ச !

துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து முக்கிய பேச்சு ஒன்று நடைபெற்றுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் வரை போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தொழிற்சங்கங்கள் இறுக்கமான தீர்மானத்தில் உள்ளனர்.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை நிறுத்துமாறு கோரி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று தொடர்ந்த நிலையில், அது அரசுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, துறைமுகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று முக்கிய பேச்சில் ஈடுபட்டுவுள்ளனர்.

இதன்போது “கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று (01) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்தது.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே,

குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பான அறிவிப்பு நாளைய தினம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். பிரதமர் எமக்கு வழங்கிய உறுதிமொழி நாளைய தினம் நிறைவேற்றப்படும் என நம்புகின்றோம். குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரையில் நாம் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை. நாளைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வௌியான பின்னர் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்படும். குறித்த அமைச்சரவை தீர்மானத்தில் வேறு விடயங்கள் இருந்தால் எமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடமாட்டோம்´. என தெரிவித்ததுள்ளார்.

“சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும்” – இலங்கைக்கான சீனத் தூதரகம் .

“சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும்” என  இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும் ஊடகப் பேச்சாளருமான லு சொங் தெரிவித்தார்.

அந்தவகையில் மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள், இன முரண்பாடுகளுக்கான தீர்வுகள் என்பதுள்ள விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயங்களாகும். இதில் மக்கள் சீனக் குடியரசு ஒருபோதும் தலையீடு செய்யாது. ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மனித உரிமைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அதடினப்படையில் சில நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை குறித்த மீளாய்வு அறிக்கையில், இலங்கை அபாயரகமான பாதையில் பயணிக்கின்றது எனவும், அதேநேரம், ஏற்கனவே நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலைச் செய்வதற்குச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுள்ளிட்ட பல விடயங்களை குறிப்பட்ட காட்டமான உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.

இதுபற்றிய மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடு என்னவாக உள்ளது என்றும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் இணை அனுசரணை நாடுகளால் புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதன் மீதான வாக்கெடுப்பில் மக்கள் சீனக் குடியரசு எவ்விதமான பிரதிபலிப்பைப் போகின்றது என்றும் வினவியபோதே இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவருமான ஊடகப் பேச்சாளருமான மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நீங்கள் எழுப்பிய இரண்டு வினாக்கள் தொடர்பில் எமது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. முதலாவதாக, மனித உரிமைகள், இன முரண்பாடுகளுக்கான தீர்வுகள் தொடர்பான விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயமாகும். இலங்கை இறைமை உள்ள நாடு என்ற வகையில் இந்த விடயத்தில் பிற தரப்புக்கள் தலையிடுவது பொருத்தமற்றதாகும்.

எம்மைப் பொறுத்தவரையில் மக்கள் சீனக் குடியரசின் உள்ளக விடயங்களில் பிறநாடுகள் தலையீடுகளைச் செய்வதை விரும்புவதில்லை. அதற்கு இடமளிப்பதும் இல்லை. அது போன்றே உலகில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகளோ அல்லது சக்திகளோ தலையீடு செய்வதற்கு இடமளிக்கமுடியாது. இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது நிலைப்பாடு அமையும்.

அடுத்ததாக, மனித உரிமைகள் விடயமானது இறைமையுள்ள ஒவ்வொரு நாடுகளாலும் பின்பற்றப்படும் விடயமாகும். இந்த விடயம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் விடயத்தை நாடொன்றுக்கு எதிராக ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது.

இதேவேளை, இலங்கை விவகாரம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு அனுப்பப்பட்டு செயலாளர் நாயகத்தின் பரிந்துரையில் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்காக அனுப்பப்படுகின்றபோது, சீனா தனது வீட்டோவைப் பயன்படுத்துமா? என்று வினா எழுப்பியபோது, “அவ்வாறான நிலைமை ஏற்படும் என்று தெரியவில்லை. இருப்பினும் நான் மேற்குறிப்பிட்ட நிலைப்பாடே இந்த வினாவுக்கும் பொருந்தும்” என்றும் தெரிவித்தார்.

“இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும்” – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன

“இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும்” என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(01.02.2021) இடம்பெற்ற சுதந்திரதினம் தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை காரணமாக, இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அனைத்து படையினரும் பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை அறிக்கைகள் ஒழுங்காக இருந்தால் மாத்திரமே படையினர் அணிவகுப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கைக்கு எதிராக டுவிட்டரில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றார்” – அமைச்சர் தினேஷ் குணவர்தன

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கைக்கு எதிராக டுவிட்டரில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றார்” என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை கடந்த கால மனித உரிமை மீறல்களைக் கவனிக்கத் தவறியதால், மீண்டும் மனித உரிமை மீறல்கள் நிகழும் அபாயம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடும் டுவிட்டர் பதிவொன்றை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம், போர்க்கால காணொளியுடன் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டு வரும் டுவிட்டர் போராட்டத்தில் போர்க்கால காட்சிகள் உள்ளடங்கிய வீடியோக்களும் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த டுவிட்டர் செய்தி, இலங்கை விவகாரங்கள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளில் இருந்து முழுமையான விலகலாகும் என்றும், பக்கச்சார்பானது என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடம் வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.