February

February

இராணுவ வாகனத்தில் ஹெரோயின் கடத்திய இராணுவ சிப்பாய் கைது! 

இராணுவ வாகனமொன்றில் 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது ஹொரன பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றும் இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற சிப்பாய் ஆகியோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இராணுவத்தின் நிர்வாக நோக்கங்களுக்காக குத்தகை அடிப்படையில் பயன்படுத்தப்படும் இந்த வாகனம் தம்புளை இயந்திரவியல் காலாட்படை பிரிவுக்கு சொந்தமானது என்பதுடன் நிரந்தர வாகன ஓட்டுனர் விடுமுறையில் சென்றிருந்தமையால் அவருக்கு மாறாக நியமிக்கப்பட்ட சாரதியால் இந்த வாகனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல் கிடைத்தவுடன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேற்படி இராணுவ சிப்பாய் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சட்ட விதிகளின் படி அவருக்கு எடுக்ககூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இராணுவ பொலிஸ் பிரிவின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

“இலங்கை தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்று இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம்” – ஜெனீவா கூட்டத்தொடரில் இந்தியா!

“இலங்கை தமிழர்களின் உரிமைகளை மதிக்கப்பட வேண்டும்” என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் இந்தியா இதனை தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை கருத்தில் எடுத்துள்ளதாக ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மனிபான்டே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏழு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இந்த தீர்மானங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஆர்வமாக பங்கெடுத்துள்ளது இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் நண்பராகவும் நெருங்கிய அயல்நாடாகவும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடு இரண்டு விடயங்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அவர் ஒன்று இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டை ஆதரிப்பது மற்றையது தமிழ் மக்களின் நீதி சமத்துவம் கௌரவம் சமாதானம் ஆகியவற்றிற்கான அபிலாசைகளின் மீதான நிலையான அர்ப்பணிப்பு என குறிப்பிட்டள்ளார்.

அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என நாங்கள் கருதுகின்றோம் என குறிப்பிட்டுள்ள இந்திய பிரதிநிதி இதன் காரணமாக தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்று இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு நல்லிணக்கம் மற்றும் 13வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் 12 வருடங்கள் முடிந்த பின்னர் காணப்படும் நிலை குறித்த மனித உரிமை ஆணையாளரின் மதிப்பீடுகள் மிகவும் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது” – ஜெனீவா கலந்துரையாடலில் தினேஸ் குணவணவர்த்தன !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

அத்தோடு, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன எனவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்று வருகிறது.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதுடன், குறித்த அறிக்கையை நேற்று இரவு இடம்பெற்ற அமர்வில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான அறிக்கை மீதான ஊடாடும் உரையாடலில், காணொளி மூலம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உரிய நீதிமன்றத்தினால் அல்லது வேறு பொறிமுறையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிலரை இலக்கு வைத்து தடை விதிப்பதற்கும், பயணத் தடை விதிப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளமை இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என என அவர் இதன்போது தெரிவித்தார்.

அது நாட்டின் உரிமையை மீறும் செயல் என்பதுடன், இறையாண்மைக்கான அடிப்படை விடயங்களை மீறும் செயற்பாடு எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் அமைதி காக்கும் படையின் செயற்பாடுகளை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கும் யோசனையை நிராகரித்துள்ள அவர், தொழில் ரீதியாக செயற்படும் இறைமையுள்ள ஒரு நாட்டின் இராணுவம் மீது சுமத்தப்படும் அழுத்தம், ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறுவதாகவும் தெரிவித்தார்.

20ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக நீதிமன்றத்தின் கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கு அழுத்தம் ஏற்படுவதாக மிச்சேல் பச்சலட் தனது அறிக்கையில் சுமத்தும் குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை போன்ற ஒரு தனி நாட்டை, எவ்வித சாட்சியங்களும் இன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அபாயகரமானது என்பதால் இது குறித்து ஏனைய நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

அறிக்கையின் உள்ளடக்கங்கள், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சபை மற்றும் அனைத்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுடனான தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடுகள் இருந்தபோதிலும் வெளிப்புறமாக இயக்கப்படும் சக்திகளை தொடர்ந்தும் வலியுறுத்துவதானது பல சவால்களை ஏற்படுத்துவதாக அமைவதுடன், இதுபோன்ற செயன்முறைகள் ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக தாங்கள் வருந்துவதாக தெரிவித்த தினேஸ் குணவர்த்தன,  இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

“வடக்கின் தீவுகளை சீனாவுக்கு வழங்கும் இறுதிதீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை”- அரசாங்கம் 

வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல வினாக்கான நேரத்தில் வடக்கின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கின் மூன்று தீவுகள் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தவறான கருத்தாகும்.

அதேபோல் இந்த மூன்று தீவுகளுக்குமான மின்சாரம் இன்றும் டீசல் மற்றும் ஜெனரேட்டர் மூலமாகவே பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

எனவே இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். எனவே மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது தேசிய தேவையாகும்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இது குறித்து சர்வதேச விலைமனுக்கோரலுக்கு விடப்பட்டது.

இது இலங்கையின் முதலாவது கலப்பு விலைமனுக்கோரலாகும். காற்று மற்றும் சூரிய சக்தியினால் மின்சாரத்தை உருவாக்கும் முதலாவது வேலைதிட்டமாகவே இது அமைந்தது.

எனவே, இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சர்வதேச விலைமனுக்கோரல் விடப்பட்ட வேளையில், அதற்காக முன்வந்த தரப்பினர் பலவீனமானவர்களாக இருந்தனர்.

எனவே 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது விலைமனுக்கோரலை அறிவித்தனர். இதற்கு நான்கு நிறுவனங்கள் முன்வந்தனர். இந்த நான்கு நிறுவனங்களில் ஒன்று சீனாவினதும் மற்றயது இந்திய நிறுவனமாகவும் இருந்தது.

இந்த விலைமனுக்கோரலில் இந்திய நிறுவனம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்தை பெற்றுக்கொண்டது.

எனவே இந்த விலைமனுக்கோரலில் எந்த தவறும் இல்லை. ஆனால் அமைச்சரவையில் இந்த திட்டம் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.

ஏனென்றால் திறைசேரி ஏற்கனவே இந்த திட்டத்தை எவ்வாறு கையாளப்போகின்றது என்ற தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை முன்வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா இந்த திட்டத்திற்காக நிதி உதவியொன்றை செய்யவும் ஆர்வமாக உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் எமக்கு அறிவித்தார்.

இந்த விடயத்தில் இப்போது வரையில் எந்தவித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை. எவருக்கும் அங்கீகாரம் கொடுக்கவும் இல்லை. எனவே இதில் எந்தவொரு நாட்டின் தலையீடுகளோ அல்லது, இராஜதந்திர நகர்வுகளோ இல்லை.

இலங்கையின் தேசிய வளங்களை வேறு எந்தவொரு நாட்டுக்கும் கொடுக்கும் நோக்கமும் எமக்கு இல்லை.

எமது நாட்டின் தேசிய கொள்கையை உலகின் எந்தவொரு பலமான நாட்டின் கொள்கைத்திட்டத்திற்கும் அடிபணிந்து தீர்மானம் எடுக்க மாட்டோம் என்பது தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.

“கண்டி எசல பெரஹெராவில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பிரதான திட்டமாக இருந்தது” – ஜனாதிபதி ஆணைக்குழு

“கண்டி எசல பெரஹெராவில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பிரதான திட்டமாக இருந்தது” என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (24.02.2021) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், மிகப் பெரிய அளவிலான வெடிபொருள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி புத்தளம் – வண்ணாத்தவில்லு பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2019 ஏப்ரல் 4ஆம் திகதி சஹ்ரான் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட தாக்குதல் பற்றிய தகவல்களை இந்திய அதிகாரிகள் புலனாய்வு சேவைகளுக்கு வழங்கியிருந்தாலும் பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர், பொலிஸ்மா அதிபர், புலனாய்வு பணிப்பாளரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த தாக்குதலை தடுக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஏப்ரல் 20ஆம் திகதி சஹ்ரான் மற்றும் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் ஈஸ்டர் தாக்குதலை நியாயப்படுத்தும் உறுதிமொழியை எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாவனெல்லயில் புத்தர் சிலைகளை இடித்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களான ஷாஹீத் மற்றும் சாதிக் ஆகியோர், க.பொ.த. சாதாரண தர தேர்வுக்கு தோற்றவிருந்த 30 மாணவர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கஞ்சி கோப்பையில் ஆரம்பித்து மூலிகை நீரை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆரம்பத்தை முன்னெடுத்தவர் வி.ஜ.மு.லொகுபண்டார” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் வி.ஜ.மு. லொகுபண்டார அவர்களின் மறைவு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய இரங்கல் உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி பிறந்த வி.ஜ.மு. லொகுபண்டார அவர்கள் யஹல பெத்த வித்தியாலயம் மற்றும் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்றார். அவர் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவராவார்.

சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற வி.ஜ.மு. லொகுபண்டார அவர்கள் ஒரு வழக்கறிஞராகவே அரசியலில் நுழைந்தார்.அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பே, சிங்கள மொழி, கலாசாரம் மற்றும் மதம் ஆகியவற்றின் மீது ஆழமான பிணைப்பை கொண்டிருந்தார்.அவர் இளம் வயதிலிருந்தே பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதினார் என்பது எங்களுக்குத் தெரியும். விவாதங்களில் ஈடுபட்டார். இவ்வாதங்கள் அப்போது நாட்டின் தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.

அதுமாத்திரமன்றி வி.ஜ.மு. லொகுபண்டார அவர்களினால் தேசத்திற்கு பங்களித்த பல சிறந்த படைப்புகளும் உள்ளன. சீகிரியா கீ சிறி போன்ற விமர்சன படைப்புகள் மொழி மற்றும் கலாசார ஆர்வலர்களிடையே அதிகம் பேசப்பட்டன.

1977ஆம் ஆண்டு ஹப்புதளை ஆசனத்தை வெற்றி கொண்டு ஐ.தே.க ஊடாக அரசியலுக்குள் நுழைந்த வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள், அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான ஆர்வத்தை கைவிடாத சிறந்த மனிதராவார்.அமைச்சு பதவி கிடைக்கும்போது சிலர் மாறிவிடுவார்கள். எனினும், வி.ஜ.மு. அவ்வாறு மாறவில்லை.

விவாதங்களின் போது கூட அவர் மொழி மற்றும் இலக்கியம் குறித்த தனது அறிவை அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்தார். எதிர்ப்பாளர்களின் மனம் நோகாதபடி கருத்துக்களை எதிர்ப்பாளர்கள் மத்தியில் பரப்பும் ஒரு தனித்துவமான திறனைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் ஒரு திறமையான பேச்சாளராக மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டார்.

அரசாங்கத்தின் சுதேசிய மருத்துவம், கல்வி, கலாசாரம் மற்றும் செய்தி போன்ற துறைகள் வி.ஜ.மு.லொகுபண்டார அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஒவ்வொரு அமைச்சகத்திலிருந்தும் மறக்கமுடியாத ஒன்றை அவரால் நாட்டிற்காக அர்ப்பணிக்க முடிந்தது.
சிங்கள-தமிழ் புத்தாண்டின் போதான எண்ணெய் வைத்து குளியல் செய்யும் சடங்கிற்கு அரச அனுசரணை வழங்கி, அச்சடங்கை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அவர் பெரும் பங்களிப்பு செலுத்தியிருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் கஞ்சி கோப்பையில் ஆரம்பித்து மூலிகை நீரை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆரம்பத்தை முன்னெடுத்தவர் வி.ஜ.மு.லொகுபண்டார ஆவார். அதுமாத்திரமன்றி தொலைபேசி அழைப்பிற்கு வணக்கம் எனக் கூறி உரையாடலை ஆரம்பித்ததும் அவரது தலையீட்டினாலேயாகும்.

நாம் சில வேளைகளில் வி.ஜ.மு.லொகுபண்டார அவர்களிடம் சில சொற்களுக்கு அர்த்தம் வினவியுள்ளமையும் எனக்கு நினைவிருக்கிறது. அதன்போது சொல்லின் அர்த்தம் மாத்திரமன்றி அதன் பாலி, சமஸ்கிருத மற்றும் ஆங்கில சொற்களை கூட கற்பிக்கும் பெரும் ஆற்றலை அவர் கொண்டிருந்தார்.

புதிய தலைமுறையினருக்கு உள்ளூர் கலாசாரத்தை கற்பிக்கப்பட வேண்டும் என அவர் எண்ணினார்.

அதனாலேயே தனக்கு அமைச்சின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டபோது திரிபிடகவை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து மறுபதிப்பு செய்யவும், வீர கதாபாத்திரங்கள் குறித்த ‘பூஜித ஜீவித’ நூலை அறிமுகப்படுத்தவும், சுபாஷிதய, லோகோபகாராய, அமாவதுர, வதன் கவி பொத போன்ற நூல்களை மறுபதிப்பு செய்யவும் வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள் முன்முயற்சி மேற்கொண்டார்.

உயரிய சபையான பாராளுமன்றத்தின் 16ஆவது சபாநாயகராக பதவி வகிக்கும் அளவிற்கு வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள் அதிஷ்டசாலியாக விளங்கினார். அன்று எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் சபாநாயர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அப்பதவிக்கு கௌரவமளிக்கும் வகையில் செயற்பட்டார்.

தேசிய உடையின் முக்கியத்துவம் குறித்து அவர் என்னுடன் அடிக்கடி கலந்துரையாடியுள்ளார். அரசியல்வாதிகள் தேசிய உடை அணிய வேண்டும் எனவும், அதன்மூலம் உலக மத்தியில் சுதேசவாதத்தை பிரதிபலிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் தனது மனதில் கொண்டிருந்த சுதேசவாத சிந்தனை எமது அரசியல் கொள்கையில் இணைந்திருப்பது குறித்து வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியடைந்தார்.

அதற்கு தன்னால் முடிந்த ஆதரவை வழங்கினார். அரச அதிகாரம் இல்லாத காலத்தில் அவரது புதல்வர் உதித லொகுபண்டார அவர்களை எமது அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆதரவு வழங்குவதற்காக ஈடுபடுத்தினார். அதுமாத்திரமன்றி தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் எமது குடும்பத்துடன் நெருக்கமாக செயற்பட்டார்.

இந்நாடாளுமன்றத்தின் கடந்த காலத்தைப் பற்றி நாம் சிந்தித்தால், வி.ஜ.மு.லொகுபண்டார அவர்களை புகழ்வதற்கு இன்று ஒரு நாள் போதாது. எனவே நான் அதிகம் பேசப்போவதில்லை.

வி.ஜ.மு. லொகுபண்டார அவர்கள் விரும்பிய சுதேசாபிமான சிந்தனையுடனான ஒரு சுபீட்சமான நாட்டை உருவாக்குவதே நாம் அவரது சார்பாக செய்யக்கூடிய ஒரே கடமையாகும்.

ஒரு எழுத்தாளர், விரிவுரையாளர் போன்று வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், ஆளுநர் மற்றும் சபாநாயகராக இந்நாட்டிற்காக ஆற்றிய சேவைகள் அளப்பரியவையாகும்.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது மறைவின் துயரால் வாடும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

“சீன மொழியில் காட்சிப்படுத்தப்படும் பெயர்ப்பலகைகளை அகற்ற முடியாது” – அரசாங்கம் திட்டவட்டம்! 

“சீன மொழியில் காட்சிப்படுத்தப்படும் பெயர்ப்பலகைகளை அகற்ற முடியாது” என அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவரான தர்மசேன கலன்சூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் இலங்கையில் சீன வர்த்தக நிறுவனங்களின் தாக்கமும் அதே வேளை சீன மொழியின்தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில் பலரும் சீனமொழியில் பெயர்ப்பலகைகள் பொறிப்பதை நிறுத்துமாறு கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் குறிப்பிடும் போது அரசாங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடும் போது,

தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாக அரச கரும மொழிகளை மீறினால் மாத்திரமே அதற்கெதிராக நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சீன அல்லது வேறு நாடுகளின் தனிப்பட்ட பெயர் பலகைகள் காட்சிப்படுத்துகையில் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு போர்ட் சிற்றி என்கிற துறைமுக நகரம் ஆகிய பிரதேசங்களில் சீன மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பதாதைகள் மற்றும் விளம்பரங்கள் என்பவற்றை அந்தந்த நிறுவனங்களின் தீர்மானங்களின்படி காட்சிப்படுத்த இடமிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறுநாட்டு மொழிகளை இந்த நாட்டிற்குள் பயன்படுத்துவதாயின், இலங்கை அரசியலமைப்பிற்கு அது முரணான செயற்பாடாக அமையும் என்பது அரசியலமைப்பின் 4ஆவது பிரிவில் காணப்படுகின்றது.

இருந்த போதிலும் இந்த சட்டமானது, வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ள முடியாது என்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பிற்கு அமைவான ஏதாவதொரு அறிவிப்பு பலகையை காட்சிப்படுத்துவதாயின் அது சிங்களம், தமிழ் ஆகிய அரச கரும மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழி கூட்டு சேர்க்கப்பட்ட மொழியாக இணைத்துக் கொள்ளவும் முடியும் என்று தெரிவித்துள்ள அந்த திணைக்களம், அந்த சட்டமானது அரச மற்றும் அங்கீகாரம்பெற்ற நிறுவனங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

கொழும்பில் கொள்ளுபிட்டி,கொழும்பு 07,பம்பலப்பிட்டி,வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களில் சீன அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெறும் இடங்களிலும் சீன உணவகங்களிலும் சீன மொழி பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாட்டின் இதரபகுதிகளில் சீன நிறுவனங்களின் ஒப்பந்தம் நடைபெறும் இடங்களிலும் சீன பெயர்ப்பலகைகள் பெருமளவில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

“பேரினவாத பூமராங்” வளையம், அதை எறிந்த பேரினவாத மொட்டுகாரர்களை நோக்கி இப்போது திரும்பி வருகிறது.” – ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் மனோகணேசன்.

“சஹ்ரானுடைய ஏப்ரல் குண்டு தாக்குதல் ராஜபக்ஷக்கள் ஆட்சியமைக்க மறைமுகமாக பாரிய உதவியாக அமைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பேசிய அவர்,

“இன்று, குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் பட்டியலை, ஆணைக்குழு அறிக்கை தந்துள்ளது. அதில் முதலிடம் மைத்திரிபால சிறிசேன என்ற முன்னாள் ஜனாதிபதி மட்டுமல்ல, இந்நாள் ஆளுங்கூட்டணி தவிசாளர் மற்றும் மொட்டு கட்சியின் பொலன்னறுவை மாவட்ட எம்பியும், சபையில் ஆளும் தரப்பின் முதல் வரிசையில் அமர்ந்துள்ள முதல் எம்பியும் ஆகும்.

குண்டு வெடிப்பு நடைபெற சில மாதங்களுக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியை தடாலடியாக கலைத்து, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, ஒரு “அரசாங்கத்தை” 2018ம் வருடம் நியமிக்க முயன்றார் என்பதையும் மறக்க முடியாது.

ஆகவே, குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் யார் என்பதை அடையாளம் காண்பதை விட, அதன் பின்னணியில் யார் இருந்தார்கள், அதன் மூலம் யார் பயன் பெற்றார்கள் என்ற கோணங்களிலும் ஆராய வேண்டும்.

“பேரினவாத பூமராங்” வளையம், அதை எறிந்த பேரினவாத மொட்டுகாரர்களை நோக்கி இப்போது திரும்பி வருகிறது. உயிர்த்த ஞாயிறு உதிர்த்த அப்பாவி உயிர்கள், எனது கொழும்பு மாவட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும், மட்டக்களப்பபு மாவட்ட சீயோன் தேவாலயத்திலும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்திலும் ஆராதனையில் ஈடுபட்டிருந்த தமிழ், சிங்கள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் ஆவர். இதனுடன் நட்சத்திர விடுதிகளிலும் வெளிநாட்டு உள்நாட்டு மக்கள் கொல்லப்பட்டார்கள்.

இப்படி உயிரிழந்த அப்பாவி மனிதர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டி, “வினை விதைத்தோர், வினை அறுக்கும்” படலம் இப்போது ஆரம்பமாகிறது என நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏனையவர்களை விட சஹ்ரானைப் பற்றி நன்கு தெரியும். அவரை ஜனாபதி புலனாய்வுக்காக பயன்படுத்தினார்” – நிரோஷா அதுகோரல குற்றச்சாட்டு !

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏனையவர்களை விட சஹ்ரானைப் பற்றி நன்கு தெரியும். அவரை ஜனாபதி புலனாய்வுக்காக பயன்படுத்தினார்” என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நிரோஷா அதுகோரல குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

250ற்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொள்ள வழிவகுத்த மொஹமட் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பில் இலங்கையின், முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச, நன்கு அறிவார் என மகளிர் அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனெனில் அந்த நேரத்தில் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கப்படுவதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. சஹ்ரான் புலனாய்வுத் தகவல்களை வழங்கினார். அவ்வாறெனினும் சஹ்ரான் தொடர்பில் இவர்கள் நன்கு அறிவார்கள். என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், நீதிக்கான மகளிர் அமைப்பின் உறுப்பினருமான நிரோஷா அதுகோரல, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த, ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழு, மைத்திரி மற்றும் பலருக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் பொருத்தமான விதிகளின் கீழ் குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு சட்டமா அதிபருக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள், சில விடயங்களை மூடிமறைக்கிறார்களா என்ற சந்தேகங்கள் எழுவதாக தெரிவித்துள்ள, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷா அதுகோரல, தாக்குதல் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச, ஆட்சியின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, மொஹமட் சஹ்ரானை உளவாளியாகப் பயன்படுத்திய விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள நிரோஷா, அவரை புலனாய்வுத்துறைக்கு அறிமுகப்படுத்தியது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சஹ்ரானிடமிருந்து உங்களுக்கு எவ்வாறானா புலனாய்வுத்துறை தகவல் கிடைத்தது? 2015ற்குப் பின்னர், சஹ்ரானுக்கு என்ன நடந்தது? தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏனையவர்களை விட சஹ்ரானைப் பற்றி நன்கு தெரியும் என நான் நினைக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு, தற்போதைய ஜனாதிபதியை கேள்வி கேட்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புகள் காணப்படுவதாகவும், தற்போது இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படும், சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனை கண்டுபிடிப்பது குறித்து இலங்கை அரசு இந்தியாவிடம் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை குறிவைத்து, ஏப்ரல் 21, 2019 அன்று தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தற்கொலை மற்றும் குண்டுத் தாக்குதல்களில், 250ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்ய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 2019 செப்டம்பர் 21ஆம் திகதி ஐந்து பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, தேசிய புலனாய்வுத் துறை முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ், முன்னாள் காவல்த்துறைமா அதிபர், பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்த்துறைமா அதிபர், நந்தன முனசிங்க ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய குறித்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையில், பௌத்த மற்றும் பிற மத அமைப்புகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்விற்கு அமைய, பொது பல சேனா அமைப்பு தடை செய்யப்பட வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. மேலும், வஹாபிசம் மற்றும் வஹாபி அறிஞர்களின் போதனைகள் மற்றும் வெளியீடுகளைத் தடைசெய்தல் மற்றும் அனைத்து தவ்ஹீத் அமைப்புகளும் வஹாபி அமைப்புகளாக இருப்பதால் அவற்றையும் தடைசெய்ய வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“உங்கள் மகனையோ அல்லது கணவரையோ இழப்பது குறித்து சிந்தித்துப்பாருங்கள்” – அமெரிக்கத் தூதுவர் டுவீட்! 

“உங்கள் மகனையோ அல்லது கணவரையோ இழப்பது குறித்து சிந்தித்துப்பாருங்கள்” என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் தான் நடத்திய சந்திப்பு குறித்து தனது ருவிட்டர் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துள்ள அமெரிக்க தூதுவர் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளை கண்டுபிடிப்பதற்கான அவர்களின் பேராட்டம் குறித்து தனது டுவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் மகனை அல்லது கணவரை இழப்பது குறித்து சிந்தித்துப் பாருங்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியாமலிருப்பது குறித்து கற்பனை செய்து பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

அதுவே காணாமல்போனவர்களின உறவினர்களின் மனதை மிகவும் வேதனைப்படுத்தும் அனுபவம் என டுவிட்டரில் அலைனா டெப்பிளிட்ஸ் பதிவிட்டுள்ளார்.

பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை மதிக்கவேண்டும்,காயங்களை ஆற்றுவதற்காக தனது சொந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மதிக்கவேண்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.