February

February

“உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது” – அனுரகுமாரதிசாநாயக்க

“உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது” என தெரிவித்துள்ள ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமாரதிசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இரு விடயங்களை தெரிந்துகொள்ள விரும்புகின்றனர் என தெரிவித்துள்ள அவர் எச்சரிக்கை கிடைத்த நிலையிலும் தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியது யார் என்பதை முதலாவதாக மக்கள் அறிய விரும்புகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை குண்டுதாரிகளின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர் என குறிப்பிட்டுள்ள இந்த கேள்விக்கு அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கமும் ஜனாதிபதியும் மறைக்கமுயல்வதாக தெரிவித்துள்ள அனுரகுமார திசாநாயக்க கிராமத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தும் முறை குறித்து தெரிவித்துள்ளார்.

Lo

காட்டில் விலங்குகளை பிடிப்பதற்காக பொறிவைப்பவர்களை பிடிப்பதற்காக காவல்த்துறையினர் கொல்லப்பட்ட விலங்கினை தனது தோளில் சுமந்து சென்ற நபரை தேடுவார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஒரு வேட்டை என கருதினால் தாக்குதல் இடம்பெற்று ஒன்றரை வருடங்களின் பின்னரும் வேட்டையாடப்பட்ட விலங்கை தூக்கி சுமப்பவர்கள் யார் என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு யார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தினார்கள் நாட்டின் அரசியலை மாற்றுவதற்கு யார் பயன்படுத்தினார்கள் எனவும் நாங்கள் சிந்திக்கவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் என்னவென்பது குறித்து அறிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்குள்ளது அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ போன்றவர்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளசில விடயங்கள் காணாமல்போகச்செய்வதில் வல்லவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சமிந்தவாஸின் இராஜினாமா தொடர்பாக நான் அதிருப்தியடைகிறேன்” – விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்

சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் சமிந்த வாஸிற்கு ஏதேனும் நெருக்கடிகள் இருப்பின் அதனை கேட்கும் முறையொன்று உள்ளது. இலங்கை கிரிக்கெட் தேசிய அணி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க நான்கு மணி நேரத்திற்கு முன்னர் வாஸ் இராஜினாமா செய்தமை குறித்து நான் அதிருப்தியடைகிறேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அப்பால், சுற்றுப்பயண கொடுப்பனவுகளையும் விட மேலதிகமாக இந்த சுற்றுப்பயணத்திற்காக மாத்திரம் ஏழரை இலட்சம் ரூபா வழங்க தீர்மானித்தும் அவர் நாளாந்தம் 200 டொலர்களை கேட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் சமிந்த வாசின் திடீர் இராஜினாமா குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

சமிந்த வாஸின் செயற்பாடுகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் நான் கவலையடைகின்றேன். அவர் மிகச்சிறந்த வீரர், அதேபோல் சிறந்த பயிற்சிவிப்பாளர். அவ்வாறான ஒருவர் தேசிய அணிக்கு கிடைக்காமல் போனமைக்காக நான் வருத்தப்படுகின்றேன். மறுபக்கம் அவர் வீரராக இருக்க முடியும் அல்லது பயிற்சிவிப்பாளராக இருக்க முடியும் ஆனால் அவரது ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு முறைமை உள்ளது.

பயிற்சிவிப்பாளராக அவருக்கென்ற சம்பளம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுப்பயணம் ஒன்று செல்லும் வேளையில் ஒப்பந்தத்திற்கு மேலதிகமான கொடுப்பனவுகளும் வழங்கப்படும். இவை உள்ளடக்கிய ஒப்பந்தமொன்றை அவர் செய்திருந்த போதிலும் இறுதி நேரத்தில் அவருக்கான கொடுப்பனவுகளை அதிகரித்து தரக்கோரியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒரு சுற்றுப்பயணம் செல்லும் வேளையில் ஒப்பந்தத்திற்கு அப்பால் சுற்றுப்பயண கொடுப்பனவுகளும் வழங்கப்படும். அதற்கும் மேலதிகமாக இந்த சுற்றுப்பயணத்திற்காக மாத்திரம் ஏழரை இலட்சம் ரூபா அவருக்கு வழங்க ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கிரிக்கெட் நிருவாக சபையும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அவரது தீர்மானம் குறித்து நான் எதனையும் கூற முடியாது, ஆனால் தேசிய அணி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க நான்கு மணி நேரத்திற்கு முன்னர் அவர் இராஜினாமா செய்தமை குறித்து நான் அதிருப்தியடைகிறேன் என்றார்.

“பிரித்தானியாவின் தலைமையில் இலங்கை மீது கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணை தமிழ் மக்கள் எதிர் பார்க்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் காத்திரமானதாக அமைந்திருக்கவில்லை” – செல்வம் அடைக்கலநாதன்

ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரில் பிரித்தானியாவின் தலைமையில் இலங்கை மீது கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையின் மாதிரி வடிவம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தப் பிரேரணையை பிரித்தானியாவின் தலைமையில் மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தமிழ் மக்கள் எதிர் பார்க்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக காத்திரமானதாக அமைந்திருக்கவில்லை என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கடும் விசனத்தை பிரித்தானியாவின் வெளிநாட்டு அலுவல்கள் காரியாலயத்திற்கு தனது இங்கிலாந்து கிளையின் ஊடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (2102.2021) அனுப்பி வைத்துள்ளதாக ரெலோ கட்சியின் தலைவரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட மாதிரி பிரேரணை கிடைக்கப் பெற்றது. உங்கள் முயற்சிக்கும் அங்கத்துவ நாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். பிரேரணையில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் பிபி7 , ஓபி 6 சரத்துக்களை பாராட்டும் அதேவேளையில் மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட 12-01-2021 திகதியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலும், இங்கு இணைக்கப்பட்டுள்ள நாம் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் ஒருமித்து கைச்சாத்திடப்பட்டு தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலும், ஆக்க பூர்வமானதும் முடிவானதுமான சரத்துக்களை உள்ளடக்குவதில் தங்கள் கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2009 இல் நடந்து முடிந்த யுத்தத்தில் எமது மக்கள் முகம் கொடுத்த சர்வதேச ரீதியாக அட்டூழிய குற்றங்கள் என்று கருதப்படும் இனப்படுகொலை உட்பட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிற்கு எமது இனத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை கோரி நாம் தொடர்ந்தும் போராடி வருகிறோம் என்பதை நன்கு அறிவீர்கள்.

பொறுப்புக்கூறலும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான சர்வதேச பொறிமுறை அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றமோ அதற்கொப்பான பொறிமுறை அல்லது விசேட தீர்ப்பாயம்.

சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு மேற்படி நீதி வழங்கலுக்கு உதவியாக ஆதாரங்கள் திரட்டப் பட வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகப் பிரதி நிதிகள் இலங்கையில் அமர்த்தப்பட்டு இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயங்கள் அறிக்கையிடப்பட வேண்டும்.

எமது மக்களினுடைய அபிலாசைகளை உள்ளடக்கும் வகையிலான நமது சுய நிர்ணய உரிமையையும் வடக்கு கிழக்கு பூர்விக தாயகத்தையும் அங்கீகரிக்கும் நீண்ட கால கோரிக்கையான அரசியல் தீர்வினை சர்வதேச மத்தியஸ்தத் தோடு நிறைவேற்றுதல்.

மனித உரிமை ஆணையாளருடைய அறிக்கையில் பெரும் நம்பிக்கையோடு காத்திருந்த எமக்கு இந்த மாதிரி வரைவு வலிமையிழந்த நிலையிலே இருப்பதையும் அறிக்கையில் இடப்பட்ட விடயங்களில் இருந்து அதிக தூரம் விலகி செல்வதோடு கடந்த கால பிரேரணைகளான 30/1, 34/1, 40/1 ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு இருப்பதையும் அவதானிக்கின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் எங்களுடைய நீதிக்கான கோரிக்கைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளமையையம் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் உறுப்புரிமை நாடுகளின் மீதான எம்மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்வதாக இருப்பதையும் உணர்வதால், சமர்ப்பிக்கப் பட இருக்கின்ற பிரேரணை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் முகமாக அமைய வேண்டுமே தவிர குற்றவாளிகளை தப்பிக்க இடமளிப்பதாக இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு திருத்தி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவசரசிகிச்சைப்பிரிவில்!

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டிலிருந்த சிவாஜிலிங்கத்திற்கு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவசர ஆம்புலன்ஸ் வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனையடுத்து வைத்திய சாலையின் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“எமது நாடு இறைமை உள்ள நாடு என்பதை நாட்டுக்கு எதிராகத் துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கவனத்தில்கொள்ள வேண்டும்” – ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ

“நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாச் சவாலை நாம் முறியடித்தே தீருவோம். புதிய பிரேரணையையும் வலுவிழக்கச் செய்வோம்.” என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தொடர்பில் இலங்கை குறித்து விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ள நிலையில் புதிய பிரேரணை ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்தநிலையில், ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை நேற்று ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சகல உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரி கடிதங்கள் அனுப்பியுள்ளேன். எமது நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என்பதில் உறுதியான நம்பிக்கையில் இருக்கின்றோம்.

புதிய பிரேரணை ஊடாக எந்தத் தரப்பும் எமக்குச் சவால் விட முடியாது. அந்தப் பிரேரணை ஒன்றில் தோல்வியடையும் அல்லது வலுவிழந்து போகும்.

எமது நட்பு நாடுகள் இலங்கையை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது. ஆனால், எமது நாட்டிலுள்ள தமிழ்க் கட்சியினர் உள்ளிட்ட எதிரணியினர் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோக நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்த நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டாது. நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாச் சவாலை நாம் முறியடித்தே தீருவோம்.

எமது நாடு இறைமை உள்ள நாடு என்பதை நாட்டுக்கு எதிராகத் துரோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

முன்னதாக பிரதமர் மகிந்தராஜபக்ஷ அவர்களும் இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர் அச்சுறுத்தலாக அமையாது என கூறியிருந்தமையும் நோக்கத்தக்கது.

“ஜெனிவா விவகாரம் இலங்கைக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது” – பிரதமர் மஹிந்தராஜபக்ஷ

“ஜெனிவா விவகாரம் இலங்கைக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது. பல நாடுகள் இம்முறை இலங்கைக்கு ஆதரவு வழங்கும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கடந்த நல்லாட்சி அரசு, ஜெனிவாவில் இலங்கையை அடகு வைத்திருந்தது. இலங்கை மக்களின் அமோக அணியுடன் எமது புதிய ஆட்சியில் நாட்டை மீட்டெடுத்து விட்டோம்.

நாட்டின் இறைமையை மீறி – மக்களின் ஆணையை மீறி நாட்டுக்கு எதிராக எந்தப் பிரேரணைகளையும் முன்வைக்க முடியாது. அதை மீறி முன்வைக்கப்படும் பிரேரணைகள் பயனற்றவையாகவே போய்விடும்.

நாம் எவருக்கும் அஞ்சவில்லை. இந்த ஜெனிவா விவகாரமும் இலங்கைக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக அமையாது. பல நாடுகள் இம்முறை இலங்கைக்கு ஆதரவு வழங்கும்.

எமது நாட்டின் நிலைப்பாடுகளை ஜெனிவா அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தெளிவாக எடுத்துரைப்பார் என தெரிவித்துள்ளார்.

“உலகம் முழுவதும் சிறுபான்மையினங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன” – ஐ.நா பொதுச்செயலாளர் குட்ரெஸ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் முதல்நாள் அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மனித நல்வாழ்வுக்கு பல்லுயிர் அடிப்படை என்பது போல, சமூகங்களின் பன்முகத்தன்மையும் மனிதகுலத்திற்கு அடிப்படை என்பதை சுட்டிக்காட்டிய அவர், அனைத்து சமூகங்களினதும் மத மற்றும் பாரம்பரிய ரீதியான தனித்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும் ஏற்றவகையிலான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இருப்பினும், சிறுபான்மை சமூகங்களின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தை அழிக்க முற்படும் செயற்பாடுகளையும் தாம் அவதானிப்பதாக அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்தார்.சிறுபான்மை சமூகத்தின் கலாச்சாரம், மொழி அல்லது நம்பிக்கை தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் பாதுகாப்பு என்ற போர்வையில் அவர்களை சந்தேகத்துடன் நோக்கும்போதும் அனைவரும் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் பின்னடைவுக்கு வித்திடுவதாக சுட்டிக்காட்டிய அன்டோனியோ குட்ரெஸ், மனித உரிமைகள், மத, கலாச்சார மற்றும் தனித்துவமான மனித அடையாளத்தை முழுமையாக மதிக்கும் கொள்கைகளுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

“தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம்” – விநாயகமூர்த்தி முரளிதரன்

“தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம்” என மஹிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு அம்பாறை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர், இரவு கல்முனை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம். அந்த வகையில் திருக்கோவில் பாலக்குடா பகுதியில் நீண்டகாலமாக பேருந்து சேவை இல்லாமல் இருந்தது. தற்போது பேருந்து ஒன்றினை வழங்கி அச்சேவையை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

600 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு பனம் பொருள் உற்பத்தி தொடர்பில் ஒரு வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். குறிப்பாக தம்பட்டை திருக்கோவில் தாண்டியடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள நிலையங்களைச் சென்று பார்வையிட்டோம்.

அங்கு சிறந்த முறையில் இவ்வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பனம் உற்பத்தி பொருட்களை பெண்கள் மிக சிறப்பாக உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு குடும்ப பெண்களுக்கும் மாதாந்தம் ரூபா 3000 நிதி வழங்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.

இது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த திட்டமாக ஆரம்பித்து வைத்துள்ளோம். வெளிநாடுகளில் இந்தப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தற்போது ஏற்படுத்தியுள்ளோம். இதனூடாக கணவனை இழந்த பெண்கள் கூடுதலான பலன்களை அடைவார்கள்.

இது தவிர தலைநகரில் இரு வாரங்களாக, அனைத்து அமைச்சுக்களுக்கும் சென்று அவர்களை சந்தித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் எடுத்து கூறி பல வேலைத்திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம். அதில் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமாக அமைச்சர் சமல் ராஜபக்சவினை சந்தித்துள்ளோம்.

இச்சந்திப்பு சிறந்த சந்திப்பாக அமைந்திருந்தது. இச்சந்திப்பில் பிரதேச செயலக விடயம் தொடர்பான திட்டங்கள் அனைத்தும் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவருடம் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அதற்கான செயலணியையும் உடனடியாக ஏற்படுத்தி தருவதாக கூறி இருக்கின்றார். ஆகவே இங்கு ஒன்றினை கூற விரும்புகின்றோம். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தை எந்தவிதத்திலும் விட்டுகொடுக்க மாட்டோம். தொடர்ந்தும் இத்திட்டத்தில் எமது முயற்சி தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

மிக விரைவில் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளேன். அந்த சந்திப்பில் கூட கல்முனை விடயத்தை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கான ஆவணங்களை தயார்படுத்தி வைத்துள்ளேன். கிட்டங்கி பாலம் அமைப்பது தொடர்பாக வீதி நெடுஞ்சாலை அமைச்சு செயலாளரை சந்தித்து திட்டவரைவு கையளிக்கப்பட்டுள்ளது. விரைவாக இப்பால நிர்மாணத்திற்கான தொழிநுட்ப ஆய்வுக்குழுவினை அனுப்புவதாக அவர் கூறியுள்ளார்.

இது தவிர குடிநீர் பிரச்சினை வேலைவாய்ப்பு தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக மாதம் ஒன்றிற்கு இரு குழுக்களை அனுப்பி வைக்குமாறு என்னிடம் பிரதமர் கேட்டிருக்கின்றார்.

அதனடிப்படையில் கிராம தலைவர்கள் புத்திஜீவிகளை அங்கு அனுப்பவதற்கு திட்டமிட்டுள்ளோம். பிரதமரிடம் எமது பிரதேச குறைபாடுகள் குறித்து நேரடியாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இது போன்று பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் படித்த வேலையற்ற இளைஞர் யுவதிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து சகல அமைச்சுக்களையும் சந்தித்துள்ளேன். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இதற்கான வாய்ப்புக்கள் வருகின்றன. கட்டங் கட்டமாக இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

அது மாத்திரமன்றி இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தோம். இச்சந்திப்பில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கவுள்ளதாக குறிப்பிட்டனர். இதனூடாக காரைதீவு திருக்கோவில் வைத்தியசாலையை நவீன தொழிநுட்பத்துடன் புனரமைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் 300 மில்லியன் நிதி வரவுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தொலைபேசி சிக்னலுக்காக இராட்டினத்தில் ஏறி பேசிய மத்திய பிரதேச சுகாதாரத் துறை மந்திரி !

மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பொது சுகாதாரத் துறை மந்திரியாக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். அசோக்நகர் மாவட்டம் அம்கோ கிராமத்தில் ஒரு பொருட்காட்சி நடந்து வருகிறது. அதில், ‘பாகவத கதா’ என்ற பாராயண நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் நடத்தி வருகிறார். அதற்காக அந்த கிராமத்திலேயே 9 நாட்களாக தங்கி இருக்கிறார்.

இதற்கிடையே, அந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பிரஜேந்திர சிங் யாதவ் செல்போனில் பேசும் காட்சி பத்திரிகைகளில் வெளியானது. அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வைரலாகப் பரவியது.

பின்னரான தகவல்களின் போதே செல்போன் சிக்னலுக்காக அவர் அந்த ராட்டினத்தில் ஏறியுள்ளது தெரிய வந்துள்ளது. இதை அறிந்த நெட்டிசன்கள், ‘இதுதான் டிஜிட்டல் இந்தியா லட்சணமா?’ என்று கேலி செய்துள்ளனர். மீம்ஸ்களும் உலா வந்தன.

இதுதொடர்பாக, பிரஜேந்திர சிங் யாதவ் கூறுகையில், ‘‘அந்த கிராமத்தில் 9 நாட்களாக தங்கி இருப்பதால், அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கிராம மக்கள் என்னிடம் முறையிட்டனர். அதிகாரிகளிடம் பேசி இதற்கான உத்தரவை பிறப்பிக்க நினைத்தேன். ஆனால், மலைகளால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் செல்போன் சிக்னலே கிடைக்கவில்லை. எனவே ராட்டினத்தில் ஏறி பேசினேன்’’ என தெரிவித்தார்.

இந்தியா-மாலைத்தீவு இடையே ரூ.375 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து !

இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக மாலைத்தீவுக்கு சென்றுள்ளார். நேற்று மாலைத்தீவு ராணுவ மந்திரி மரியா திதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, இந்தியா-மாலைத்தீவு இடையே இந்திய ரூபாய் .375 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மாலைத்தீவின் கடலோர காவல்படை திறனை வலுப்படுத்துவதற்காக இத்தொகையை இந்தியா கடனாக வழங்குகிறது.

இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘மாலைத்தீவு இராணுவ மந்திரியுடனான சந்திப்பு சுமுகமாக அமைந்தது. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பயனுள்ள முறையில் கருத்து பரிமாற்றம் செய்தோம். மாலத்தீவின் நம்பகமான கூட்டாளியாக இந்தியா நீடிக்கும். மரியா திதியுடன் துறைமுக திட்ட ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது” என்று கூறியுள்ளார்.

மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலியை ஜெய்சங்கர் சந்தித்தார். அவரிடம் பிரதமர் மோடியின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கொரோனா காலத்திலும், அதற்கு பிறகும் மாலைத்தீவின் விரிவான வளர்ச்சி கூட்டாளியாக இந்தியா நீடிக்கும் என்று உறுதி அளித்தார்.