05

05

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் – வலுவான நிலையில் இங்கிலாந்து !

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களைபெற்றுக்கொண்டது.ஜோ ரூட்

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், ரொறி பர்ன்ஸ் 33 ஓட்டங்களுடனும் டேனியல் லோரன்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த டோமினிக் சிப்ளி 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இன்றைய  ஆட்ட நேர முடிவில் ஆட்டநேர முடிவில், ஜோ ரூட் 128 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா 2 இலக்குகளையும் அஸ்வின் 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 7 இலக்குகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை, இங்கிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.

““இல்லாத விடுதலைப்புலிகளிற்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும்” – சந்தேகத்தின் பேரில் கைதானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கேள்வி !

“இல்லாத விடுதலைப்புலிகளிற்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும்”  என சந்தேகத்தின் பேரில் கைதானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் இன்று(05.02.2021)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் தெரிவித்த கருத்தின் முழு வடிவம் வருமாறு.

ஆட்சிமாற்றத்தின் பின்பு கைது செய்யப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?

இலங்கை ஜனாதிபதியாக அதிமேதகு கோட்டாபய ராஜபக்ச அவர்கள், ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் எமது உறவுகள் 14பேர் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றிய நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சார்ந்த குடும்பத்தினராகிய நாம் பெரும் நெருக்கடிக்கும் துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம்.

எமது பிள்ளைகள் எமது உறவுகள் தாம் உண்டு தமது தனிப்பட்ட வாழ்வும் தொழிலும் உண்டு என்ற நிலையில் இருந்து வந்தார்கள். அவர்களை சிறிய விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகவும் உடனே விடுவிப்பதாகவும் கூறி, அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒன்றரை வருடங்கள் கடக்கும் நிலையில் அவர்கள் பற்றி எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாத நிலையே நீடிக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு உதவ முற்பட்டதாக காரணம் கூறப்பட்ட போதும் அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஆதாரமற்ற காரணங்களை சொல்லி எமது உறவுகளை கண்ணில் காட்டாது இந்த அரசாங்கம் அவர்களை எங்கு சிறை வைத்திருக்கின்றது? அவர்கள் குற்றவாளிகள் என்றால் அதனை சட்ட ரீதியாக நிரூபிக்க வேண்டும். ஏன் நீதிமன்றங்களில் அவர்களை முற்படுத்தாமல் தடுத்து வைத்துள்ளனர்?

இந்த நாட்டில் நீதி இல்லையா? நீதிமன்றங்களுக்கு எந்த அவசியமும் இல்லையா? நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தாமல், எமது பிள்ளைகளை இரகசியமாக சிறை வைத்திருப்பது, நீதிக்குப் புறம்பானது என்பதுடன் சர்வதேச சட்ட திட்டங்களுக்கும் மனித உரிமை சட்டங்களுக்கும் எதிரானது ஆகும். இது மிகப் பெரும் மனித உரிமை மீறலாகவும் குற்றமாகவும் கொள்ளப்பட வேண்டியது.

எமது உறவுகள் எங்கே என்று தெரியாத நிலையில், இப்போது நாம், வீதியில் வந்து அடையாளமாக ஒரு தொடர் போராட்டத்தை நடாத்துகின்றோம். எமது உறவுகளுக்காக, தந்தைக்காக ஆறு மாத பச்சிளம் குழந்தை முதல் பிள்ளைக்காக தாய் தந்தையர், மனைவியர் எனப் பலரும் மழையிலும் வெயிலிலும் இருந்து போராடுகின்றோம்.

நாம் எங்கள் வாழ்க்கையை வாழ, நாம் நிம்மதியாக இருக்க, எமது உறவுகளுடன் நாம் ஒன்றாக இருக்க, உடனடியாக காரணமின்றி கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாக சிறை வைக்கப்பட்ட எமது உறவுகளை காண்பித்து, அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

ஏற்கனவே எமது மண்ணில் பலரை காணாமல் ஆக்கி, காரணங்களின்றி சிறையில் இளைஞர்களை அடைத்து வைத்துள்ள அரசாங்கம், இப்போது எமது பிள்ளைகளையும் கொண்டு சென்று அடைத்து வைத்திருப்பது எந்த அடிப்படையில் நியாயமானது?

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மற்றும் சரணடைந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய இலங்கையின் இன்றைய ஜனாதிபதி ,எமது உறவுகளையும் இப்படி கொண்டு சென்று காரணமின்றி சிறையில் அடைப்பது எந்த விதத்திலும் ஏற்க முடியாதது.

எமது உறவுகளை காரணம் இல்லாமல் சிறையில் வைத்துவிட்டு, எங்களை கண்ணீருடன் அலையச் செய்துவிட்டு யாருக்கு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது? இதுதான் எங்களுக்கான சுதந்திரமா? இதுதான் புதிய ஜனாதிபதி எங்களுக்கு அளித்துள்ள ஆட்சி மாற்றத்தின் பரிசா?

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே, எமது கண்ணீரையும் நாம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அனுபவிக்கும் துன்ப வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு எமது உறவுகளை விடுவியுங்கள். அதே போல எமது உறவுகளின் விடுதலைக்காக சகல அரசியல் தலைவர்களும் கட்சி மற்றும் இன பேதமின்றி குரல் கொடுக்க வேண்டும் என்றும் மன்றாட்டமாக உங்களை கேட்டுக் கொள்கிறோம்.அத்துடன் ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவுகளையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். நாம் வேறுபாடுகள் கடந்து ஓரணியில் திரண்டு எமது பிள்ளைகளின் விடுதலைக்காக குரல் கொடுத்து போராட்டத்தில் இணைவதே இன்று எம் முன்னால் உள்ள ஒரே வழியாகும்.

அத்துடன் எமது போராட்டத்தை கிண்டல் கேலி செய்யாமல், அனைத்து தமிழ் உறவுகளும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைத்து நிற்கின்றோம். காரணம் ஏதுமின்றி எமது உறவுகள் கைதாகி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்ட நிலமை நாளை யாருக்கும் ஏற்படலாம் என்பதை புரிந்து கொண்டு, எமது அகிம்சைப் போராட்டத்திற்கு தார்மீக ரீதியான ஒத்துழைப்பை அனைத்து தமிழ் மக்களும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

நியாயமான காரணத்திற்காக சாத்வீக வழியில் போராடும் எம்மை இராணுவ புலனாய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இங்கே நாம் அமர்ந்து போராடினால் அங்கே எமது உறவுகளை துன்புறுத்துவோம் என்று மிரட்டுகின்றனர். இத்தகைய மனித உரிமை மீறல்களையும் மனிதாபிமானத்திற்கு மாறான செயல்களையும் அரசும் இராணுவத் தரப்பும் நிறுத்த வேண்டும். எத்தகைய அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் கடந்தும் எமது போராட்டம் நீதிக்காக தொடரும்.

(கைதான எமது உறவுகளின் பெயர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
ஆட்சிமாற்றத்தின் பின் கைதாகி தடுத்து வைக்கப்பட்டவர்களின் உறவுகள்

கைதானவர்களின் பெயர் கைது செய்யப்பட்ட திகதி கைதுக்காக குறிப்பிடப்பட்ட காரணம்

ரமேஸ் சுயந்தன் 2020.03.02 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்ய முற்பட்டமை.

அன்ரன் சார்லஸ் 2020.03.02 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்ய முற்பட்டமை.

சபாரட்ணம் தூயவன் 2020.03.02 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

குணலிங்கம் வசந்தன் 2020.03.04 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

உதயசொருபன் உமாசுதன் 2020.03.07 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

தேவரஞ்சன் மதிவதனன் 2020.03.08 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

லிங்கேஸ்வரன் இன்பராஜ் 2020.03.17 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

செல்வநாயகம் சுசிகரன் 2020.06.17 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்ய முற்பட்டமை.

கந்தசாமி யுவன் 2000.07.11 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

பாலசுப்பிரமணியம் கஜி தருபன் 2020.06.22 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

ரட்ணசிங்கம் கமலகரன் 2020.07.11 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

தனபாலசிங்கம் ஈழவேந்தன் 2020.07.06 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

சிறினிவசகசரம் ஜெயராஜ்சர்மா 2020.07.12 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

கஜேந்திரராசா இன்பராசா 2020.07.14 எல்.டி.டி.ஈ க்கு உதவி செய்தமை.

“ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும்” – ஐ.நா வலியுறுத்தல் !

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் இராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் மியான்மார் அரசுக்கும் அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், மியான்மரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. மேலும், மியன்மாரில் நிலவும் சூழ்நிலை கவலை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

10.53 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு !

சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பசிகள் நடைமுறைக்கு வந்து விட்ட போதிலும் கூட இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.53 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.70 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.58 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.05 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்தியாவிடம் இருந்து பெற்ற 400 மில்லியன் டொலரை மீள செலுத்தியது இலங்கை !

இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பரிமாற்ற வசதி ஊடாக பெற்றுக் கொண்ட 400 மில்லியன் டொலரை மீள செலுத்தி விட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

தவனை முடிவடைவதற்குள் அதனை செலத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக வௌியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க உதவிகளை வழங்க தயார்” – ரஷ்யா அறிவிப்பு !

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்க முடியும் என ரஷ்யா, இலங்கையிடம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா தூதவர் அந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக கொரோனா ஒழிப்பு, ஆரம்ப சுகாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய ஔடத கூட்டுத்தாபனம் தற்போது ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2 மில்லியன் பைஸர் பயோ என்டெக் கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் – தடை உத்தரவை நீக்கியது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் !

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளைவரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கம் செய்தது.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஒருமுக விளக்கத்தில் வழங்கிய கட்டளையை பிரதிவாதிகள் முன்வைத்த ஆட்சேபனையை அடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நீக்கியது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு நேற்றுமுன்தினம்(03.02.2021) புதன்கிழமை தடை உத்தரவு வழங்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

அதனடிப்படையில் பிரதிவாதிகள் முன்னிலையாகாத நிலையில் தடை உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. இன்று இந்த தடை உத்தரவு வழங்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன் வி.திருக்குமரன் உள்ளிட்டோர் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர்.

அதனால் ஒருமுக கட்டளையாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம் கோவிட் -19 நோய்த்தொற்று சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டால் அதன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடவடிக்கை என்று எடுக்க பொலிஸாரை அறிவுறுத்தியது.

“தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன. சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம்.” – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

“தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன. சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற கடையடைப்புப் போராட்டம் ஆகியன தொடர்பாக ஹற்றனில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தொழிலாளர்களுக்கான ஊதிய உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். அந்தவகையில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு சர்வமதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள், சிவில் அமைப்புகள், ஆசிரியர்கள், தோட்டத்தொழிலில் அல்லாமல் ஏனைய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என பல தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்பார்த்ததைவிடவும் பேராதரவு கிட்டியது.

இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் உணர்வுபூர்வமாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கொழும்பிலுள்ள வர்த்தகர்களும் ஆதரவை நல்கியுள்ளனர். எட்டு சர்வதேச நாடுகளும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தன.

மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்ற நினைப்பிலேயே கம்பனிகள் செயற்பட்டுவந்தன. இன்று தொழிலாளர்களின் ஒற்றுமை, பலம் என்பன காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுவான விடயம், நியாயமாக இருந்தால் இணைந்து போராடுவதற்குத் தயார் என்ற தகவலையும் மக்கள் வழங்கியுள்ளனர்.

இதனிடையே வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. தொழிலாளர்களின் பலத்தைக்கண்டு கம்பனிகளும் நடுங்கியுள்ளன. சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம். சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்பது தொடர்பாக அறிவித்தால் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேவேளை, இது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலத்தைக் காட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. கம்பனிகளுக்கு எதிரானது. மக்கள் தமது பலத்தைக் காட்டியுள்ளனர். முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. இதன்படி பாரிய போராட்டத்தை நடத்தி மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளோம்” என்றார்.

தடையுத்தரவையும் மீறி முல்லைத்தீவினுள் நுழைந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி !

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பமான நிலையில் தற்போது முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது.

தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதர், முன்னாள் நாடாளுமன்ற சிவமோகன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் இந்தப் பேரணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதரன் மற்றும் இரா.சாணக்கியன் உள்ளிட்டோர் தொடர்ந்தும் பேரணியில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு எல்லையில் பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைக் காண்பிக்க முற்பட்டபோதும் அதனை மீறி குறித்த பேரணி முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோயிலை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் தரிசனத்தைத் தொடர்ந்து பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கிச் செல்கின்றது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி – புல்மோட்டை வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டு வாகனங்களுக்கு இடையூறு !

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் மூன்றாம் நாள் திருகோணமலை நகரில் ஆரம்பித்து புல்மோட்டை இராணுவ சோதனைச்சாவடி உள்ள பகுதியை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியிலேயே யான் ஓயா பாலத்திற்கு அருகே வீதியில் வாகனங்களை காற்றுப் போக செய்ய பெருமளவு ஆணிகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த ஆணிகளில் சிக்கி சில வாகனங்கள் காற்றுப்போன நிலையில் பேரணியை தொடர்வதில் தடையேற்பட்டுள்ளது

குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில  வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சில வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் முல்லைத்தீவிலுள்ள இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்களை குறித்த பகுதிக்கு  விரையுமாறு  பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

அத்துடன், இவ்வாறான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் திட்டமிட்டவாறு பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டுள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றிருந்தாக அவர் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.