06

06

ஆங் சான் சூகியை விடுவிக்க கோரி மியன்மாரில் மக்கள் போராட்டம் – இணையத்தை முடக்கியது இராணுவம் !

மியன்மாரில் நடந்த பொதுத்தேர்தலில், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டிய ராணுவம், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் மியன்மார் அரசுக்கும் அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இராணுவ ஆட்சியை கண்டித்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியை விடுவிக்க வலியுறுத்தியும் யாங்கோனில் இன்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவத்தை கண்டித்து ஊர்வலமாக சென்றனர்.
இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் வீதிக்கு வந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்ததால் பதற்றம் உருவானது.
போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர், சூகியின் கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சியின் நிறமான சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்திருந்தனர். சாலையில் அமர்ந்து இராணுவத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். போராட்டக்கார்களுக்கு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உணவு மற்றும் தண்ணீரை வழங்கினர்.
போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பிற்பகலில் கலைந்து சென்றனர். இதனால் போராட்டத்தின் வலு குறையத் தொடங்கியது. எனவே, போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி மக்களுக்கு தொடர்ந்து ஆர்வலர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் இணையதளம் ஸ்தம்பித்தது. பின்னர் சிறிது நேரத்தில் இணையதளம் முற்றிலும் முடக்கப்பட்டது. போராட்டத்தை ஒடுக்கும்வகையில் இணையதளத்தை இராணுவம் முடக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுபற்றி இராணுவம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
வரும் நாட்களில் ஆங் சான் சூகியின் ஆதரவாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழர்களின் உரிமைப்போராட்டம் தமக்கான நீதியைப் பெறும்வரை ஒருநாளும் ஓயப்போவதில்லை என்பதை பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரணி எடுத்துக்காட்டுகின்றது” – நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்

“தமிழர்களின் உரிமைப்போராட்டம் தமக்கான நீதியைப் பெறும்வரை ஒருநாளும் ஓயப்போவதில்லை என்பதை பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரணி எடுத்துக்காட்டுகின்றது” என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசினுடைய அடக்குமுறைகளை எதிர்த்தல் என்னும் தொனிப்பாருளில் பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரணி தமிழரின் பூர்வீக பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

“ஈழத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கேட்டு கிளிநொச்சி, கந்தசுவாமி கோயில் முற்றத்தில் நடைபெற்றுவரும் பட்டினிப் போராட்டமும், பொத்துவில் தொடங்கியிருக்கும் நடை பயணமும் நம்பிக்கையைத் தருகிறது.

பேரினவாத ஆட்சியாளர்களின் கோர அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுரத்தோடு போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் ஈழச் சொந்தங்களைப் பெரிதும் போற்றுகிறேன்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாயக விடுதலைக்காகவும், தங்களது மண்ணுரிமைக்காகவும் போராடிய தமிழ் மக்கள் மீது, இனவெறியும், இனத்துவேசமும் கொண்டு, பல்வேறு அடக்குமுறைகளை ஏவி, அரச பயங்கரவாதத்தின் மூலமும் உள்நாட்டுப்போர் மூலமும் இரண்டு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இனப் படுகொலை நிகழ்ந்து பத்தாண்டுகளாகியும் அதுகுறித்து எவ்விதப் பன்னாட்டு விசாரணையும் நடத்தப்படாத நிலையில் அதற்கான நீதியைக் கேட்டு நிற்கிறோம். அனைத்துலக நாடுகளும் கைவிட்ட கையறு நிலையிலும் சர்வதேசச் சமூகத்திடம் மன்றாடி வருகிறோம்.

தமிழர்களின் போராட்டங்களுக்குச் செவிசாய்க்காத இலங்கை அரசு இனவழிப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளதை அண்மைக்காலமாக ஈழத்தில் நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை முழுக்க இராணுவ மயமாக்குவது, தமிழர் காணிகளை ஆக்கிரமிப்பது, புதிய சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி, பூர்வக்குடிகளான தமிழர்களின் இருப்பைக் குறைப்பது, இருநூறுக்கும் மேற்பட்ட தமிழர் வழிபாட்டுத் தலங்களைச் சிதைத்தழிக்க முயல்வது, புத்த விகார்களைப் புதிதாக நிறுவுவது, தமிழ் மக்களின் இன, மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கான வரலாற்று அடையாளங்களை முற்றலுமாக அழிப்பது என மறைமுகமாகவும், நேரடியாகவும் இனவழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மேலும், இசுலாமிய மக்களின் பாரம்பரிய சமயச் சடங்கான இறந்தவர்களைப் புதைக்கும் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்து, உடல்களை எரியூட்டி வருவதுடன், அதற்கு எதிராகப் போராடும் இசுலாமியர்களை அடக்கி ஒடுக்குவது, விசாரணை ஏதுமின்றி அரசியல் கைதிகளாகச் சிறைகளிலுள்ள தமிழர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்க மறுத்து சிங்களக் கைதிகளை மட்டும் விடுவிப்பது, மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமையைப் பறிப்பதெனப் பல்வேறு தொடர் இனவெறித் தாக்குதல்களை ஒவ்வொரு நாளும் நடத்திக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

இந்நிலையில், எத்தகைய அடக்குமுறைகளை ஏவினாலும், இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தமிழர்களின் உரிமைப்போராட்டம் தமக்கான நீதியைப் பெறும்வரை ஒருநாளும் ஓயப்போவதில்லை என்பதை உணர்த்தும்விதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதையப் போராட்டங்கள் சிங்கள ஆட்சியாளர்களைக் கலக்கத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது.

அந்தவகையில், கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் சுழற்சி முறையிலான பட்டினிப் போராட்டமும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்துப் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை நடைப்பயணமும் தொடங்கப் பெற்றுள்ளதை அறிந்தேன்.

இலங்கை சுதந்திர நாளினை, கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்ககளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அவர்களது உறவுகளால் தொடங்கப்பட்டுள்ள நீதிக்கான இப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.

போராட்டம் வெற்றியை நிலைநாட்டவும், கோரிக்கைகள் நிறைவேற்றம் செய்யப்படவும் எமது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு !

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர், பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புள்ளிகளை பெற்று அதன் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தரம் 10 இல் மூன்று தவணையிலும் 11 ஆம் வகுப்பில் இரு தவணைகளிலும் பெறப்பட்ட மதிப்பெண்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும் என அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும், கல்வி வலையத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாக கூறினார்.

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை அடுத்த மாதம் 1 முதல் 11 வரை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நாம் தொடர்ந்து ஜனாதிபதியின் எண்ணங்களுக்கு, செயல் வடிவம் கொடுக்கக்கூடிய ஏற்பாடுகளுடன் தொடர்ந்தும் நாம் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்போம்” – பிள்ளையான்

“நாம் தொடர்ந்து ஜனாதிபதியின் எண்ணங்களுக்கு, செயல் வடிவம் கொடுக்கக்கூடிய ஏற்பாடுகளுடன் தொடர்ந்தும் நாம் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்போம்” என  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் நம்மோடு இணைந்து பணியாற்ற வருமாறு “ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் அழைப்பு விடுத்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலிருந்து மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு கோரிவருகின்றது.

இப்போதும் நாம் இந்த தேர்தல் நடத்தப்படல் வேண்டும் என அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். அரசாங்கமும் தேர்தலை நடத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினாலும் கொவிட்- 19 காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வருட இறுத்திக்குள் மாகாணசபைத் தேர்தலை எதிர்பார்க்கலாம். அதற்கான திட்டமிடலைத்தான் நாங்களும் செய்து கொண்டு வருகின்றோம்.

கிழக்கில் நானும் முதலமைச்சராக இருந்தவர். இலங்கையைப் பொறுத்தவரையில் மாகாணசபை முறைமைதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொன்றாகும். இது சட்டமாக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் தலையீட்டால் கொண்டுவரப்பட்டது.

பலவிதமான பின்னடைவுகளும், பலவீனங்களும் இருந்தாலும், மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு இயக்கமாக செயற்பட்டால் சிங்கள மக்களுக்கும் இது ஒரு பிரிவினையாக நகராது மாகாணசபை உறுதியாக வெற்றியளிக்கும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு இணக்கப்பாட்டு அரசியலை விரும்புகின்ற கட்சி. நாம் தொடர்ந்து ஜனாதிபதியின் எண்ணங்களுக்கு, செயல் வடிவம் கொடுக்கக்கூடிய ஏற்பாடுகளுடன் தொடர்ந்தும் நாம் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்போம் என்றார்.

“பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க விசேட வேலைத் திட்டம் விரைவில்” – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண

“பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க விசேட வேலைத் திட்டத்தைச் செயற்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் துறை ஒன் றிணைந்து விசேட வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்தத் தீர்மானித்திருப்பதாகவும்  அதன் படி மிக விரைவில் இது தொடர்பான விழிப் புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக் கவுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

“நாம் தான் தமிழ்தேசியத்தை வாழவைக்கின்றோம்.நாங்கள் இல்லையேல் தமிழ்த் தேசியம் எப்போதோ அழிந்திருக்கும்” – அங்கஜன் இராமநாதன்

“நாங்கள் தான் ஓரளவிற்கு தமிழ்த் தேசியத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இல்லையேல் தமிழ்த் தேசியம் எப்போதோ அழிந்திருக்கும்” என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் யாழில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மாநாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

இன்றைக்கு ஓரளவிற்கு தமிழ்த் தேசியத்தை வாழ வைப்பவர்கள் நாங்கள் தான். எங்களைப் போன்ற சிலர் எந்த அரசாங்கம் வந்தாலும் அதனுடன் இணைந்து மக்களுடைய தேவைப்பாடுகளை உணர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை கூட்டி வருகின்றோம். ஆனால் சிலர் அரசியல் பிரச்சினைகளை மட்டுமே பேசி வருகின்றனர்.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறுகின்றனர். நாங்கள் இல்லை என்றால் எப்போதோ தமிழ்த் தேசியம் அழிந்திருக்கும். ஏதோவொரு விதத்தில் நாங்கள் தான் தமிழ்த் தேசியத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது பெருமையளிக்கின்றது என்றார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நிச்சயம் தண்டனை வழங்கப்படும்.” – அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே

‘மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நிச்சயம் தண்டனை வழங்கப்படும். அதன் மூலம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும்” என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்கப்படாமையால் நாம் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறுகின்றனர். அவ்வாறு அரசாங்கத்தின் மீது குற்றஞ்சுமத்துபவர்களுக்கு ஒரு விடயத்தை கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

கடந்த அரசாங்கத்தில் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இரு வாரங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையோருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும். அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இது நிச்சயம் நடைபெறும்.

நாம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியைப் போன்று ஓரிரு தினங்களில் விசாரணைகளை முன்னெடுத்து தண்டனை வழங்குபவர்கள் அல்ல.

சட்டம் முறையாக செயற்படுத்தப்படும்வரை பொறுமையாக இருப்போம். எனவே நாம் ஏற்கனவே வாக்குறுதியளித்தததைப் போன்று மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கும் ஓரிரு வாரங்களில் நிச்சயம் தண்டனை வழங்குவோம் என்றார்.

கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் வட மாகாண கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் !

வட மாகாண கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது.

கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கிளிநொச்சி வலயம் இரண்டு கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டமைக்கான அனுமதிக் கடித்தினையையும், கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான கொரிய நாட்டின் அன்பளிப்பான 5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களுக்குரிய காசோலையை கல்வியமைச்சர் வடமாகாண ஆளுநரிடம் கையளித்தார்.

வட மாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதாரதுறைகளில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

துறைசார் நிறுவனங்களுக்கு சென்றிருந்த போது அதனை அவதானித்ததாகவும், மேலும் சில பிரச்சினைகள் குறித்த துறைசார் திணைக்களத் தலைவர்களால் அறிக்கையிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் கல்வித்துறையில் அறிக்கையிடப்பட்ட பிரச்சினைகளை பிரதமர் ஊடாக கல்வி அமைச்சருக்கு அறிக்கை இடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அவற்றில் குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரதுறைகளில் ஆளனிபற்றாக்குறை காணப்படுவதாகவும் ஆசிரியர்களுக்கு கஷ்டப்பிரதேசங்களுக்கு சென்று வருவதற்கான பிரயாண வசதி குறைபாடுகள் காணப்படுவதாகவும், குறித்த கஷ்டப்பிரதேச பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட சலுகை ஏற்பாடுகளை பாதீட்டினுள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் சிறப்பாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மூலம் ஆளனி வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுவருவதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்

“யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரளவேண்டும்” – போராட்டத்துக்கு இரா.சாணக்கியன் அழைப்பு !

“யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரளவேண்டும்”  என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றுள்ளதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.

இதன்போது, அங்கு கருத்து வெளியிடும் போதே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னாரில் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது நகைச்சுவையான விடயம் இல்லை எனவும், மக்கள் உணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

“கடந்தகால போராட்டங்கள் ஏமாற்றத்தையும்,அழிவுகளையும் கொடுத்ததால் தற்போத போராட்டங்களில் தங்களுக்கு தயக்கம் இருக்கு என ஒருவர் கூறியிருதார். இந்த போராட்டம் ஒரு சுயலாபம் கொண்டது இதனால் எதுவும் நடக்கப்போவது இல்லை.

உங்களுக்கு தெரியும் மாகாண சபையை எதிர்த்தவர்களுக்கு ஒரு நீண்ட தூர பார்வை இருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனால் மாகாண சபையை ஏற்று நடத்தியவர்களுக்கு தூரப்பார்வை இருந்தது அவர்களிடம் கட்டுப்பாடு இல்லை இதனால் அது விடுபட்டு போனது.

நீங்கள் கூறுகின்ற இந்த விடையங்கள் எல்லாம் அவர்களுடைய சுயலாப அரசியலோடு சம்பந்தப்பட்டதே தவிர அதில் ஒன்றும் நடக்கப்போவதில்லை அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்கப்பார்க்கின்றார்கள்.

ஒரு வகையில் இந்த அரசாங்கத்திற்கு தென்னிலங்கையில் வலு சேர்க்கின்றார்கள், சர்வதேச சமூகத்திற்கு காட்டுகின்றார்கள் இந்த அரசாங்கத்தில் தாங்கள் போராட்டங்களை செய்யலாம் எனவும், மறு பக்கம் மக்களிடம் வாக்குகளை அபகரிப்பதற்கு பயன்படுத்துகின்றார்கள் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அவர்களால் எங்களுடைய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை.

இது அரசாங்கத்திற்கு சார்பான போராட்டமே தவிர எங்களுடைய மக்களுடைய விடையங்களை வலுப்படுத்த வேண்டும் என்றோ அல்லது எங்களது மக்களுக்கான போராட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.