தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் தொடர்பாக இன்று (08.02.2021) பிற்பகல் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அடிப்படை சம்பளத்தை 900 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாயினை பெற்றுக் கொடுக்க சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட முதலாளிமார் சம்மேளத்தின் சார்பில் 08 பேரும், தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 08 பேரும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 03 பேரும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக பிரதமர் வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழிவை மேற்கொண்டார்.
இதற்கமைய தோட்ட நிர்வாக கம்பனிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை தொழில் அமைச்சர் நடத்திய போதும் சுமுகமான தீர்வை எட்ட முடியாமல் போனது.
இதன் காரணமாக அமைச்சரவை மூலம் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயத்தை சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் தேயிலை, இறப்பர் தொடர்பான சம்பள நிர்ணய சபை கூடியது.
நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு தோட்ட நிர்வாக கம்பனிகள் முன்னதாக உடன்பாடு தெரிவித்திருந்த போதும் அதற்காக அவை முன்வைத்த நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.