10

10

நாடாளுமன்றில் இராணுவத்தினர் வசமுள்ள காணி தொடர்பில் கேள்வியெழுப்பிய சாணக்கியன் – பதிலளிக்க முடியாது என்ற பிரதமர் !

இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் குற்றச்சாட்டுகளின் கீழ் எந்தவொரு கைதியும் தடுத்து வைக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவைக்கு அமைவாகவோ அல்லது நாட்டின் வேறு சட்டங்களுக்கு அமையவோ தண்டனை வழங்கப்பட்டுள்ள மற்றும் சந்தேகத்தில் தடுத்து வைக்ககப்பட்டுள்ள கைதிகளிடையே அரசியல் குற்றச்சாட்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் இல்லை.

மேலும், வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும் சாணக்கியனால் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பில் குறிப்பிட்ட பிரதமர், “இந்தக் கேள்வி தேசியப் பாதுகாப்புக்கு பாதிப்பானது என்பதால் அது தொடர்பாகப் பதிலளிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

“கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை புதைக்க அனுமதி” – பிரதமர் அறிவிப்பு !

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எதிர்காலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றையதினம் (10.02.2021) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போது, நேற்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய கொவிட் தடுப்பு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே உடல்களை புதைப்பதால் நீரின்மூலம் கொரோனா வைரஸ் பரவாது எனத் தெரிவித்திருந்தார்.

அவ்வாறெனில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை புதைக்க ஏன் அனுமதி வழங்க முடியாது என கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே மகிந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் பயன்படுத்திய இனப்படுகொலை என்னும் வார்த்தபை்பிரயோகம்” – பெரும் சர்ச்சையாகிப்போன நேற்றைய பாராளுமன்ற அமர்வு !

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயன்படுத்திய ‘இனப்படுகொலை’ என்ற சொல்லுக்கு ஆளும், எதிர்க்கட்சிகள் ‘அர்த்தம்’ கேட்டதுடன் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது எனவே அதனை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்திய போதிலும் ”இனப்படுகொலை” என்று தான் கூறிய வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜேந்திரகுமார் கூறியதுடன் “இனப்படுகொலை” என்பதன் அர்த்தம் என்னவென சபையில் கூறியதால் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று (09.02.2021) இடம்பெற்ற தொழில் அமைச்சின் கீழுள்ள ஊழியர் சகாய நிதியியல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும், இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான தமிழர் எழுர்ச்சிப் பேரணி இடம்பெற்றது எனக் கூறியபோது எழுந்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி.சில்வா ‘genocide’ [இனப்படுகொலை] என்ற சொல்லை நீங்கள் இங்கு பொருத்தமில்லாத இடத்தில் பயன்படுத்துகின்றீர்கள் . இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், இன்றும் இடம்பெற்று வருவதாகவும் கஜேந்திரகுமார் கூறுகின்றார். அவர் எதனை கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகின்றார் எனத் தெளிவில்லை என்றார்.

இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார் , “இனப்படுகொலை என்பது வெறுமனே இனத்தை அழிப்பது மட்டுமல்ல, ஒரு சமூகத்தை இலக்கு வைத்து அவர்களின் அடையாளத்தை அழிப்பதும் இனப்படுகொலைதான். 2009 ஆம் ஆண்டு வரையில் தமிழர்களின் உயிர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டதைப் போலவே இப்போதும் திட்டமிட்டு வடக்கு, கிழக்கு தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, தொல்பொருள் திணைக்களம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிலங்களை ஆக்கிரமிக்கின்றது.

இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்கள் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதும் இனப்படுகொலை தான் என்றார்.

எனினும் மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹர்ஷ டி சில்வா , நீங்கள்தான் அப்படிக் கூறுகின்றீர்கள். ஆனால் எமக்கு தெரிந்தவரையில் இனப்படுகொலை என்பது அதிகளவான மக்களை கொன்று குவிப்பதாகும் என்றார்.

ஹர்ஷ டி சில்வா ஆதரவாக ஆளும் தரப்பில் இருந்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இனப்படுகொலை என்பது எமக்குத் தெரிந்த வரையில் திட்டமிட்ட கொலையாகும். அதிகளவான மக்களை அல்லது ஓர் இனக்குழுவை அழிப்பது இனப்படுகொலை என அர்த்தப்படும். ஆனால் நீங்கள் கூறும் காரணிகளுக்கு இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறு .எனவே அதனை திருத்திக்கொள்ளுங்கள் என்றார்.

இதற்கு கஜேந்திரகுமார். பதிலளிக்கையில், இனப்படுகொலைக்கான வரைவிலக்கணம் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. எந்த விதத்திலும் இதற்கான வரைவிலக்கணத்தை முன்வைக்க முடியும். ரோமானிய பிரகடனத்தின் ஐந்தாம் உறுப்புரையை வாசியுங்கள் என்றார்.

அப்போது மீண்டும் எழுந்த ஹர்ஷ டி சில்வா இனப்படுகொலை என்ற வார்த்தையை நீங்கள் சரளமான விடயங்களுக்குப் பயன்படுத்த முடியாது என்றார்.
நான் ஒரு தகுதியான சட்டத்தரணி, எனக்கு எவ்வாறு வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்பது தெரியும். இனப்படுகொலை நடந்தது. அதற்கான நியாயத்தைக் கேட்கிறோம். இதற்கான சாட்சியில் நானும் ஒருவன், அதேபோல் இன்றும் எமது அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனையே நான் அவ்வாறு கூறுகின்றேன் என்றார் கஜேந்திரகுமார்.

மீண்டும் எழுந்த இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால், நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது. நீங்கள் கூறும் காரணிகளுக்கு பொருத்தமான வார்த்தை இதுவல்ல என்றார்.

நான் சட்ட முறைமைக்கு அமையவே பேசுகிறேன். நீங்கள் ரோமானிய பிரகடனத்தைப் பாருங்கள். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறும் குற்றச்சாட்டை ஏன் உங்களால் விசாரிக்க முடியாதுள்ளது. முதலில் அதனைச் செய்யுங்கள் என்றார் கஜேந்திரகுமார்.

நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம்.அது பாரதூரமான வார்த்தை என ஹர்ஷ டி சில்வா மீண்டும் கூறினார்.
இனப்படுகொலை என்ற வார்த்தையை நான் மிகவும் பொறுப்புடன் இந்த இடத்தில பயன்படுத்துகிறேன். உங்களிடம் நான் கேட்பது ஒன்றுதான், எதிர்க்கட்சித் தலைவரும் ஆளும் கட்சித் தலைவரும் வாருங்கள் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவோம். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதா? இல்லையா? என விவாதிக்கலாம். அதற்கு ஏன் அஞ்சுகிறீர்கள் என கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.

இன்றைய விவாதத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத காரணிகளைப் பேச வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் வலியுறுத்தினார்.
நீங்கள் எனது உரையைத் தடுக்க வேண்டாம் என்றார் கஜேந்திரகுமார்.

இதன்போது சபையை வழிநடத்திய அஜித் ராஜபக்ஷ எம்.பி, நீங்கள் விடயத்திற்கு பொருத்தமாகப் பேசுங்கள் அப்போது இந்தக் குழப்பங்கள் எதுவும் எழாது. நீங்கள் பொருத்தமில்லாத விடயங்களைப் பேசுவதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்காக அதிக நேரத்தை வழங்க முடியாது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அரச தரப்பு எம்.பி.யான சாந்த பண்டார, கஜேந்திரகுமார் எம்.பி.யின் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தைப் பிரயோகம் பொருத்தமானதல்ல, இலங்கையில் அவ்வாறான ஓர் இனப்படுகொலை இடம்பெறவில்லை, இனியும் இடம்பெறாது. எனவே அவரது வார்த்தையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக சபையை வழிநடத்திய அஜித் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

ஆனால் சாந்த பண்டாரவின் கூற்றை எதிர்த்த ஹர்ஷ டி சில்வா எம்.பி., பாராளுமன்றத்தில் உரையாற்றும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தாம் பேசும் வார்த்தைகள் என்ன என்பதை தெரிந்து பேச வேண்டும். ஒருவர் பேசியதை நீக்க வேண்டுமென இன்னொருவர் கூற முடியாது. ஆனால் இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா? தவறா? என்பதை வார்த்தைகளை பயன்படுத்தும் உறுப்பினர் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே அடுத்த தடவை நீங்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்றார்.

இதன் பின்னர் பேசிய அரச தரப்பினர் பலர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் கடுமையாக விமர்சித்தனர்.

“முஸ்லிம்கள் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தால் , அவரை கட்டாயமாக முஸ்லிமாக மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது” – நாடாளுமன்றில் அத்துரலிய ரத்தன தேரர் !

ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையில் பயணிக்கும் இலங்கையில், காதி நீதிமன்றங்கள் தொடர்பாக அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (09.02.2021) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“ஒரு நாடு ஒரு சட்டம் என்பதுதான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதானக் கொள்கையாகக் காணப்படுகிறது. அரசமைப்பிலும் ஒரு நாட்டில் ஒரு சட்டம் என்றுதான் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு திருமணச் சட்டம் காணப்படுகிறது. இந்தச் சட்டமானது நபிகள் நாயகத்தினால், கிறிஸ்துவுக்கு முன்பு வகுக்கப்பட்டதாக அல்- குர் ஆனில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளிலேயே இந்தச் சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், இலங்கையில் இது நடைமுறையில் காணப்படுகிறது.
இதுதொடர்பாக அமைச்சரும் அறிந்திருப்பார் என்று கருதுகிறோம். அத்தோடு, முஸ்லிம் மக்களுக்கு என இந்த நாட்டில் காதி நீதிமன்றங்களும் காணப்படுகின்றன.

இந்த நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் சம்பளம் உள்ளிட்ட அனைத்தும் எமது நாட்டின் நீதி அமைச்சின் ஊடாகத்தான் வழங்கப்படுகின்றன. முஸ்லிம்கள் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தால் , அவரை கட்டாயமாக முஸ்லிமாக மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. விவகாரத்து செய்வதாக இருந்தாலும், சாதாரண நீதிமன்றங்களில் மேற்கொள்ள முடியாத நிலைமைக் காணப்படுகிறது.

இது அசாதாரண விடயமாகும். நாட்டு மக்கள் ஒரு நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க வேண்டும் என்று இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. இதனை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 1000 ரூபா சம்பள உயர்வு” – சஜித் பிரேமதாஸ அதிருப்தி !

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 1000 ரூபா சம்பள உயர்வு அறிவிப்பின் பின்னணியிலுள்ள நிபந்தனைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் சம்பள நிர்ணயசபை ஊடாக தற்போது அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவும், வாழ்வாதார கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. இது பெரும் வெற்றி என ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் மார்தட்டுகின்றனர்.

இதற்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 750 ரூபா வழங்கப்பட்டது. கூட்டு ஒப்பந்தத்தில் வருடம் 300 நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும் என்ற ஏற்பாடு இருந்தது. இதன்மூலம் வருடாந்தம் 2 இலட்சத்து 25 ஆயிரத்தை தோட்டத் தொழிலாளர்கள் உழைத்தனர். ஆனால் தற்போது 13 நாட்களே வேலை வழங்கப்படவுள்ளது.

வருடத்தில் 156 நாட்கள். அப்படியானால் வருடம் 1 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாவையே அவர்களால் உழைக்க முடியும். இதன்படி 69 ஆயிரம் ரூபாவை அவர்கள் இழக்கின்றனர்.

அதுமட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களுக்கு 28 சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவையும் தற்போது இல்லாமல் போகப்போகின்றன.

ஆயிரம் ரூபா வழங்குவது நல்லது. அதேபோல் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படவேண்டும்” என்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் !

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 23ஆம் திகதி பிரதமர் இம்ரான் கான் இலங்கை வரவுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில், இம்ரான் கானின் நாடாளுமன்ற உரைக்கான ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 10ஆவது வெளிநாடு ஒன்றின் தலைவராக இம்ரான் கான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து சிங்கள ஊடகங்கள் கவனம் செலுத்தாதது ஏன் ? ” – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் ட்வீட் !

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஆச்சரியமளிக்கின்றது” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெறுவது முக்கியமானதும் உரிமையும் கூட அவற்றை நியாயமாக அக்கறையுடன் அணுக வேண்டும்.

இந்தப் போராட்டம் தொடர்பில் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதை பார்த்தேன்.ஆனால் கொழும்பை தளமாக கொண்ட ஊடகங்கள் ஏன் இதற்கு முக்கியத்துவத்தை வழங்கவில்லை என ஆச்சரியப்பட்டேன்.

அமைதிவழிப்போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறான அமைதிவழிப் போராட்டங்களுக்கு செவிசாய்க்க வேண்டும். அவர்களின் கவலைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எங்களுடைய உரிமை சார்ந்த கவனஈர்ப்பு போராட்டமான P2P போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றதே தவிர மக்கள் வாழ்வை முன்னேற்ற ஒரு திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை” – பாராளுமன்றில் இரா.சாணக்கியன் !

“எங்களுடைய உரிமை சார்ந்த கவனஈர்ப்பு போராட்டமான P2P போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றதே தவிர மக்கள் வாழ்வை முன்னேற்ற ஒரு திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09.02.2021) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

நவகிரி என்ற செயற்திட்டத்தில் அவசர வான்கதவு என்பதொன்று காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டிலிருந்து அவசர வான்கதவு என்பது எமக்கு கிடையாது. இவ்வாறான நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது குளத்தை அண்மித்த பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்படும். 2010ஆம் ஆண்டிலிருந்து பல கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுகின்றது. மக்கள் ஒவ்வொரு வருடமும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்கள் முறையாக புனரமைக்கப்படாமை வெள்ளப்பெருக்கிற்கான பிரதான காரணமாகும்.

அத்துடன் மட்டக்களப்பு முகத்துவாரத்தை அண்மித்த ஆறுகளையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். ஆழம் குறைந்தமையானது இதற்கான காரணம் ஆகும். குறைந்தளவு மழை பெய்தாலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வருடமும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் எம்மக்களுக்கான வெள்ள நிவாரண நிதியானது ஒவ்வெரு வருடமும் ஒதுக்கப்பட வேண்டும் நவகிரியும், குளபுணரமைப்பும் இத்திட்டத்தில் காணப்படுகிறதா? ஆறுகள், மற்றும் குளங்களை முறையாக புனரமைத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க முடியும்.

ரூகம் செயற்திட்டத்தின் MCM இனது அளவானது 58. என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அனால் இதன் தேவையான அளவானது MCM 90 ஆக செயல்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இத் திட்டத்துக்கான போதியளவு கடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறாததன் காரணமாக இச்செயற்திட்டத்தை இடைநிறுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.

உண்மையாகவே இத் திட்டமானது கைவிடப்படக் கூடாது. 90 Mcm அளவினை நாங்களும், மக்களும் கேட்கின்றோம். இடை நடுவில் இவ் திட்டத்தை நிறுத்தக் கூடாது. இத் திட்டமானது எம் மக்களுக்கான ஓர் அத்தியாவசிய தேவை ஆகும்.

இந்தத் திட்டமானது சரியான முறையில் செய்யப்படுமிடத்து 15,000 தொடக்கம் 20,000 ஏக்கர் அளவில் வருடங்களுக்கு இரண்டு முறை விவசாயம் மேற்கொள்ள முடியும். மீன் பிடி துறையையும் அபிவிருத்தி செய்ய முடியும்.

இதைத் தவிர பிற தொழில்களையும் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் தற்போதுள்ள முந்தினா ஆறு திட்டத்தினை நிறுத்தியே இதனை செய்ய வேண்டும். இப்போது இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது நிச்சயமற்றதாக காணப்படுகின்றது.

ஏனெனில் ஆற்றுப் படுக்கையில் சட்ட விரோதமாக மணல் அகழ்வதைத் தவிர வேறு செயற்பாடுகள் இத் திட்டத்திற்காக முன்னெடுக்கப்படவில்லை முன் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

எங்களுடைய உரிமை சார்ந்த கவனஈர்ப்பு போராட்டமான P2P போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றதே தவிர இவ்வாறான எமது மக்களுக்கு பயனுள்ள பொருளாதாரத்தை மற்றும் வாழ்வாதாரத்தை கட்டமைக்கும் சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்து்ளளார்.

“இலங்கையில் விளையாட்டுத்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்று தயாராகிறது” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

இலங்கையில் விளையாட்டுத்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதனை நடைமுறைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09.02.2021’) செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவித்ததாவது,

நான் அமைச்சராகி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சியடைய ஆரம்பித்து 05 வருடங்கள் ஆகிவிட்டன.

இந்தக் காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இது எவ்வாறாயினும் இறந்தகாலத்தில் நடந்தவை பற்றி பேசி அர்த்தமில்லை.

எதிர்காலத்தில் சிறந்த வேலைத்திட்டத்துடன், நாம் பயணிக்க வேண்டும். கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல்வாதிகளுக்கு கையளிக்க முடியாது. ஐ.சி.சியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் அது இயங்குகிறது”  என்றார்.

“எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்கவேண்டும்” – பாராளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

“எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்கவேண்டும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த நாடாளுமன்ற உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அநேக காலமாக இவ் 1,000 அடிப்படை சம்பள உயர்வுக்காய் கோரிக்கை முன்வைத்தபோதும் அதிகரிக்கும் வாழ்க்கை செலவுடன் நோக்குகையில் தற்போது இது 2,000 ரூபாயாக இருத்தல் வேண்டும்,

இருப்பினும் அந்த 1,000 ரூபாய் உயர்வு கூட இன்னும் வழங்கப்படாதிருக்கின்றது. கடந்த சில நாட்களாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடை பயணத்தில் நாம் 10 கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். அவற்றுள் இந்த 1,000 ரூபா சம்பள உயர்வும் ஒன்றாகும். தகவலின் திரிபுகளை தவிர்க்கவும், பதிவு செய்துகொள்ளும் நோக்கத்திற்காகவும் அந்த 10 கோரிக்கைகளையும் வாசிக்கிறேன்.

1. தொடர்ச்சியான நில அபகரிப்பு மற்றும் இந்து கோவில்களை அப்புறப்படுத்தி அதில் பௌத்த விகாரைகளை அமைத்தலின் மூலம் தமிழர்களின் வரலாற்று பகுதிகளை சிங்கள மயமாக்கல்.

2. யுத்தம் நிறைவுற்று 10 வருடங்களுக்கு மேலானாலும் இன்னமும் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்குதல் மற்றும் தமிழரின் பிரதேசங்களை பௌதீக ரீதியில் சிங்கள மயமாக்க அரச திணைக்களங்களை விசேடமாக தொல்பொருள் திணைக்களத்தினை உபயோகித்தலும் அரச அனுசரணையுடன் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்தலும்.

3. மனித உரிமை மீறல் தொடர்பாக வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை துஷ்பிரயோகம் தொடர்பாக எதிர்க்கும் சிவில் சமுக ஆர்வலர்களையும் அரசு தொடர்ந்தும் இலக்கு வைத்தல்.

4. தமிழ் பண்ணையாளர்கள் தமது பசுக்களை கொண்டு செல்லும் மேய்ச்சல் தரையினை சிங்கள பண்ணையாளர்கள் ஆக்கிரமித்தல் மற்றும் பசுக்கள் கொல்லப்படல் போன்ற பிரச்சினைகள்.

5. மரித்த தமது உறவுகளை தமிழர்கள் நினைவு கூறும் உரிமை மறுக்கப்படுத்தல் மேலும், கல்லறைகள் மற்றும் நினைவு தூபிகள் என்பன அழிக்கப்படல்.

6. கோவிட் – 19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லீம்களின் ஜனாஸா அவர்களது குடும்பத்தின் விருப்புக்கும் சமய நம்பிக்கைக்கு எதிராகவும் வலுக்கட்டாயமாக எரிக்கப்படல்.

7. தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்குகளும் பதியப்படாது 40 வருடங்களுக்கு அதிகமாக தடுப்பில் இருக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் இன்று முஸ்லீம் இளைஞருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றமை.

8. அரசாங்கம் சிங்கள கைதிகளை கிராமமான முறையில் விடுதலை செய்து வருகின்ற போதும் எந்த ஒரு தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படாமலும், வழக்குகள் விசாரணைகளின்றியும் இருத்தல்.

9. காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் தொடர்ச்சியாக தமது உறவுகளுக்கான தீர்வினை வேண்டியும் அரசாங்கம் அவர்களுக்கான பதிலினை வழங்காதுள்ளமை.

10. மலையக தோட்ட தொழிலாளர் 1000 ரூபா சம்பள உயர்வினை கோரினாலும் அரசாங்கம் அதற்கு பதில் வழங்காதுள்ளமை.

இவையே 01.02.2021 திகதியிடப்பட்ட வட-கிழக்கு சிவில் சமூகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கைகளாகும். இந்நடை பயணமானது சிவில் சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு எமது கட்சியினாலும் ஆதரிக்கப்பட்டது. இவை நியாயமான கோரிக்கைகளாகவும் நீதிக்கான விடயங்களாகவும் காணப்பட்டதோடு, ஜனநாயக முறையில் எமது எதிர்ப்பினை நாம் தெரிவித்திருந்தோம்.

இப்பேரணி சமாதானமான முறையில் நடைபெற்றதோடு அநேகர் திரண்டு வந்து தமது ஆதரவினை தெரிவித்து இதனை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். எனவே இவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து வடக்கு கிழக்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழ்வு நிறைவுற்ற மறுகணமே எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது. எந்த சந்தர்ப்பத்திலும் எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நான் எங்கும் முறையிடாத போதும், அரசாங்கமே எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் HC 242 /2018 எனும் வழக்கு பதியப்பட்டு நால்வர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர் இவ்வாறான ஏராளமான வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்னிடமுள்ளன.

மேலும் 15 தெற்கின் சிங்கள பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 30 பேரை தடுப்பில் வைக்கும் வரை இவை தொடர்பாக நான் எதனையும் அறிந்திருக்கவில்லை. எனவே எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எனக்கு தெரிவிக்காது அல்லது நான் முறையிடாத போது அரசாங்கம் அநேகமானோரை தடுப்பில் வைக்குமானால் தற்போது அதை மீளப்பெறுவதேன்? பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் உண்மையாக இருக்குமாயின், நான் பேரணியில் பங்குபற்றியமைக்காக அரசாங்கம் என்மீது எரிச்சலடைந்து இத் திடீர் நீக்கத்தை செய்திருக்கலாம்; அல்லாவிடின், பொய்யாக எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதென்று காட்டிக்கொண்டு, அரசு அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருப்பதாகத் தான் கருத நேரிடும்.

இவையிரண்டும் இல்லாவிடின், மிகவும் வஞ்சனையான காரணமாக நான் கருதுவது, எனது பாதுகாப்பினை அகற்றுவதன் மூலம் எனக்கு தீங்கு விளைவிக்க காத்திருப்போருக்கு இது அவர்களுக்கான ஓர் சமிக்ஞையாக இருக்கலாம். ஆகவே எனக்கேதேனும் பாதகம் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” என சுமந“திரன் கூறியுள்ளார்.