17

17

“இந்தியாவுக்கு எதிராக இலங்கை செயற்பட்டால் இலங்கை இரண்டாக உடைக்கப்பட்டு அனைவரும் டெல்லி பாராளுமன்றம் செல்ல வேண்டியேற்படும்” – எம்.கே.சிவாஜிலிங்கம்

“இந்தியா எதிராக இலங்கை செயற்பட்டால் இலங்கை இரண்டாக உடைக்கப்பட்டு அனைவரும் டெல்லி பாராளுமன்றம் செல்ல வேண்டியேற்படும்” என முன்னாள் வடமாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையினுடைய முக்கியமான பல பகுதிகள் சீனாவுக்கு  வழங்கப்படுவதுடன் மேலும் இந்தியாவை இலங்கை புறக்கணிப்பது தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது,

“கொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் பல பகுதிகள் சீனாவுக்கு வழங்கப்படும் போது தூங்கிக் கொண்டிருந்த தென்னிலங்கை தொழிற்சங்கவாதிகளும், ஜே.வி.பி போன்ற இனவாத சக்திகளும், கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவிற்கு கொடுக்கப்பட போகிறது என்றதும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்துகிறார்கள்.

இதையடுத்து அந்த திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடுகிறது. யப்பான், இந்தியாவுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தங்களையும் இலங்கை கைவிட்டுள்ளது.

இதேபோல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுத்து விட்டார்கள். மேலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்கப்படவுள்ளது. இந்த சூழலின் பின்னணியில்தான் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த சீன நிறுவனத்திற்கு வழங்கினார்கள். இந்தியாவிற்கு அதை வழங்கப் போவதாக கூறிவந்த நிலையில் தற்பொழுது சீனாவிற்குத்தான் வழங்கப் போவதாக நேற்று சொல்லியுள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் கபளீகரம் செய்யப்படுவதற்கு வல்லாதிக்க சக்திகளின் ஆதரவும் பெறப்படுகிறது. குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் முதலாவது அத்தியாயத்தில், தமிழ் மக்களிற்கு அதிகார பகிர்வை வழங்குவதற்காக மாகாண முறைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டது.

இதனால்தான் 13வது திருத்தம் உருவாகி, மாகாணசபைகள் உருவாகின. ஆனால் மாகாணசபையில் உள்ள காணி, காவல்துறை அதிகாரங்கள் பகிரப்படவில்லை.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, இலங்கைத்தீவில் எந்த இடத்தையும் இந்தியாவிற்கு தெரியாமல் வெளிநாடுகளிற்கு வழங்கக்கூடாது என்ற விடயத்தை இந்தியா ஏன் இறுக்கமாக பின்பற்ற தவறுகிறது என்ற கேள்வி எழுகிறது.

உங்களிற்கு ஆபத்தென்றால் ஒப்பந்தத்தை தூக்கிப் பிடியுங்கள். மற்றவர்கள் வந்து ஏதாவது செய்வார்கள் என எதிர்பார்க்கிறீர்கள். உங்களுடைய பாதுகாப்பை நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும். அதற்கு ஈழத்தமிழர்கள் பக்கபலமாக இருப்போம்.

வடக்கு கிழக்கில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் திருப்பி அனுப்பப்படும்வரை போராட்டங்கள் நடக்கும். நீங்கள் இங்கே வந்தால், இந்தியா கோபமடைந்து போர் தொடுத்தால், 40 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள்தான். ஆகவே, எந்த நிறுவனமென்றாலும், இந்தியாவிற்கு விரோதமான சக்திகள் இங்கு வந்தால் மோதல் பிராந்தியமாகி பாதிக்கப்படுவது ஈழத்தமிழர்கள்தான் எனவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, சீனாவிற்கு இந்த திட்டங்களை வழங்கும் முடிவை மீளப்பெறுமாறு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அல்லது, ஈழத்தமிழர்கள் சில விடயங்களை கையில் எடுப்பதை உங்களால் தடுக்க முடியாது. இப்பொழுது பாரதிய ஜனதா கட்சி இங்கு வரப் போகிறது என அலறி துடிக்கிறீர்கள். அந்த சட்டம் இந்த சட்டம் என கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.

உலகம் முழுவதும் கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அப்படியென்றால் பாரதிய ஜனதா கட்சியென்ற பெயரில் இலங்கையில் ஏன் கட்சி ஆரம்பிக்க முடியாது?நீங்கள் அதே சின்னத்தை வழங்காமல் விடலாம். பொதுஜன பெரமுன தாமரை பூ சின்னம் கேட்டபோது, தாமரை புத்தருக்கு படைக்கப்படும் மலரென, தாமரை மொட்டை கொடுத்தீர்கள். மொட்டு புத்தருக்கு படைக்கப்படுவதில்லையா?

உலகத்தில் பல நாடுகள் உடைத்து துண்டுதுண்டாடப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் இலங்கை இரண்டாக உடைக்கப்பட்டு, தமிழீழ மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சரும், சிறிலங்கா மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சரும் தெரிவு செய்யப்பட்டு எல்லோரும் டெல்லி பாராளுமன்றத்திற்கும், மேற்சபைக்கும், ராஜ்ஜிய சபைக்கும் செல்ல வேண்டுமென்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அத்துடன் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்குமான பிரச்சனையில், உக்ரேனின் கிரேமியா பகுதி ரஷ்யாவினால் உடைக்கப்பட்டு, சுயாட்சி பிரதேசமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு சிவாஜிலிங்கம், இந்தியா, அமெரிக்காவிற்கு எதிராக இலங்கை செயற்பட்டால், அந்த நாட்டு படைகள் இங்கு வரும் நிலைமை ஏற்படும் எனவும் கூறினார்.

தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு !

எதிர்வரும் 20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து 20ம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் குறித்த தினத்தன்று தீச்சட்டி போராட்டமாக முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி மேலும் தெரிவிக்கையில்,

உண்மைக்கும் நீதிக்குமான குறித்த போராட்டம் சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்காக குறித்த தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்கும்வரையும், அவர்களிற்கான நீதி கிடைக்கும்வரையிலும் குறித்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை.

வருகின்ற 20ம் திகதி வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளும் எமக்கு பலம் சேர்க்க வேண்டும். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், அரசியல் பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் அன்றைய தினம் நடைபெறவுள்ள தீச்சட்டி பேரணியில் கலந்துகொண்டு எங்களிற்கான நீதி கிடைக்க வலு சேர்க்குமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தீச்சட்டி பேரணியானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலினை சென்றடையும். இந்த போராட்டமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இடம்பெறவுள்ள நிலையில் எமக்கான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும். எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களும், எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவரும் 20ம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பேரணியில் கலந்து கொண்டு எமக்கு வலுச் சேர்க்க வேண்டும் என அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

“தேவையற்ற ஆட்டம் போடும் அலி சப்ரி குறித்து, உடனடியாகத் தீர்மானம் எடுத்து, காதைப்பிடித்து ஜனாதிபதி வெளியே தள்ள வேண்டும்” – ஞானசாரதேரர்

“தேவையற்ற ஆட்டம் போடும் அலி சப்ரி குறித்து, உடனடியாகத் தீர்மானம் எடுத்து, காதைப்பிடித்து ஜனாதிபதி வெளியே தள்ள வேண்டும்” என பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸர்களின் வழக்குகளை விசாரித்ததற்காக, இவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டுமா, அதை விடத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா தலைமையகத்தில் நேற்று (16.02.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, எங்களைக் குற்றவாளியாக்கும் என மக்கள் நினைத்துப் பார்க்கவில்லை. எம்மைப் குற்றவாளியாக்க, நாம் என்ன தவறிழைத்தோம். அத்துடன், விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இவ்வாறு மோசமாக இருக்குமெனத் தான் நினைக்கவில்லை. அதனால், எதையும் எளிதாக விட்டுவிடமாட்டோம் .

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், இப்போது நிறைய வீரர்கள் உருவாகியுள்ளனர். இந்த அரசியல் தலைவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், நடந்த விடயங்கள் குறித்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வரவிருக்கும் பேரழிவிலிருந்து முழுநாட்டையும் பாதுகாக்க பொதுபலசேனா பல திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளது. ஆனால், இப்போது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது. எதற்கும் முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். எந்ததெந்த ஒழுங்குப்பத்திரங்களை மனதில் வைத்துக்கொண்டு, தமது எதிர்கால அரசியல் தேவைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் திருடர்கள், ஆணைக்குழுவுக்குள் நுழைந்துவிட்டனரா? என்று எமக்கு தெரியவில்லை. பொது பலசேனாவைத் தடைசெய்யவோ, எம்மீது குற்றம் சுமத்தவோ வருவார்களானால், அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

தேசத்தின் தலைவிதியைக் காப்பாற்ற, சிறைக்குச் சென்றவர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுவென்றால், இந்த அறிவியலற்ற முறை குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஜனாதிபதிக்கு மாத்திரமே, இப்போது கையளிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் உள்ளவை, ஓரிரண்டு ஊடகங்களில் எவ்வாறு வெளிவருகின்றன ?

இவ்வாறான தாக்குதல் நாளையும் நடக்கலாம். ஏனெனில், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர். நேரத்துக்கு ஏற்றவாறு அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடித்தாடிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலந்தரையாடலை, வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், அலி சப்ரி நாட்டின் தலைவர் அல்லவே அவர் நீதியமைச்சர் மாத்திரமே என்றார்.

“இந்தியா இலங்கையை அச்சுறுத்தமுடியாது” – அமைச்சர் மகிந்த அமரவீர

“இந்தியா இலங்கையை அச்சுறுத்தமுடியாது” என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாரதிய ஜனநாயக கட்சி இலங்கையில் தனது கட்சியை உருவாக்க முயல்வது குறித்து அண்மையில் கருத்துகள் அதிகம் வெளியான நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவுசெய்தனர் . இன்னொரு நாட்டின் சுதந்திரத்தில் மற்றுமொரு நாடு செல்வாக்குசெலுத்துவதை அரசாங்கம் எதிர்க்கின்றது .
இலங்கை ஒரு ஜனநாயக சுதந்திர அணிசேரா நாடு என தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கை எந்த நாட்டுடனும் பிரச்சினையை உருவாக்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பல அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடனேயே இந்த கருத்துக்கள் வெளியாகியிருக்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“தமிழரும் முஸ்லீம்களும் சேர்வர். வடக்கும் கிழக்கும் இணைவன. ஆகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலே தான் எமது ஐக்கியம் தங்கியிருக்கின்றது” – சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலரிடம் சி.வி.விக்கினேஸ்வரன் !

இன்று இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலருடன் முதற் செயலாளர், அரசியல், சிடோனியா கேபிரியல் அத்துடன் நிகழ்ச்சிகள் இணைப்பாளர் சுசந்தி கோபாலகிருஷ்ணன் மூவரும் என்னை வந்து சந்தித்தார்கள்.

புதிய சுவிஸ் தூதுவரின் வடக்கை நோக்கிய முதற் பயணம் இதுவாகும். வவுனியாவில் தரித்து நின்று, இன்று மாலை இங்கு வந்து என்னைச் சந்தித்த பின்னர் நல்லூர்க் கந்தனைத் தரிசிக்கச் செல்கின்றார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய சரித்திரம் பற்றியும் தற்கால பிரச்சினைகள் பற்றியும் பல கேள்விகளை அவர் கேட்டிருந்தார். முக்கியமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்களின் எழுச்சிப் பவனி சகலரையும் ஒன்று சேர்த்தது என்று கூறி இவ்வாறான ஒற்றுமை வருங்காலத்தில் நிலைக்குமா என்று கேட்டார். அதற்குப் பதில் அளித்த நான் 2004 டிசெம்பர் மாதத்தில் சுனாமி வந்த போது உக்கிரமாகப் போரில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமான முறையில் ஒன்று சேர்ந்து, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மூன்று நாட்கள் வரையில் உதவி செய்தார்கள். அதே போன்று இன்று தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர், கத்தோலிக்கர்கள் போன்ற அனைவரும் இன்றைய ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் கொள்கைகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள்.

சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிராக சிங்கள பௌத்தம் என்ற ஆயுதத்தை ஓய்வுபெற்ற இராணுவத்தினருடனும் சேவையில் இருக்கும் படையணியினருடனும் சேர்ந்து பிரயோகிக்கும் போது பாதிப்புறும் சகல மக்களும் ஒன்றிணைகின்றார்கள். தற்போதைய ஐக்கியம் அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களின் பிழையான செயற்பாடு தொடரும் வரையில் வடக்கும் கிழக்கும் மலையகமும் சேர்வன. தமிழரும் முஸ்லீம்களும் சேர்வர். வடக்கும் கிழக்கும் இணைவன. ஆகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலே தான் எமது ஐக்கியம் தங்கியிருக்கின்றது என்றேன்.

உங்கள் அரசியல் கட்சிகள் பலவாகப் பிரிந்து நிற்கும் போது அவர்கள் இடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமா என்று கேட்டார். அதற்கு நான் கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் தங்கள் தங்களது கொள்கைகள் சம்பந்தமாகப் பூரண புரிதல் ஏற்பட்டால் முடியும் என்றேன். அதன் அர்த்தம் என்ன என்று கேட்டார். தமிழ் மக்கள் வாக்களிக்கும் கட்சிகள் இரண்டு முக்கியமான பிரிவுகளாகப் பிரிந்து நிற்கின்றன. ஒரு சாரார் தமிழ் மக்களின் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் தமது கொள்கைகளை வகுத்திருக்கின்றார்கள். மறு சாரார் அரசாங்கத்திடம் இருந்து இன்று எதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையில் செயற்படுகின்றார்கள்.

பறங்கியர்களுக்கு நடந்தது போன்று அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் வருங்காலத்தில் தமிழ் மக்களின் தொகையையும் வதிவையும் குறைத்துக் குறைத்து வடக்கு கிழக்கை பௌத்த சிங்கள மயமாக்கக் கூடும் என்ற பயத்திலேயே ஒரு சாரார் தமது அரசியலை நடத்துகின்றார்கள். மறுசாரார் பின்னர் என்ன நடந்தாலும் எமக்குக் கவலையில்லை, இன்று எமது மக்கள் குனிந்து பணிந்தேனும் அரசாங்கத்திடமிருந்து எதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே அரசியல் நடத்துகின்றார்கள். பின்னையோர் வருங்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். முன்னையவர்கள் நிகழ்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அரசியல் தீர்வும் பொருளாதார அபிவிருத்தியும் தேவை என்று இருசாராரும் பயணிக்க வேண்டும். இவற்றை விட தனிப்பட்ட ரீதியிலே அரசியல் பிரமுகர்கள் இடையில் கோபதாபங்கள் மற்றும் முரண்பாடுகள் இருப்பதையும் அவதானிக்கலாம். புரிந்துணர்வு ஏற்பட்டால் எமது கட்சிகள் யாவும் ஒருமித்து செயல்பட முடியுமென்றே நான் கருதுகின்றேன்.

பொது வாக்கெடுப்பை வேண்டி உங்களுடைய கட்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தது. அவ்வாறெனின் என்னவாறான கேள்விகளை நீங்கள் பொது வாக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப் போகின்றீர்கள் என்று கேட்டார். முதலிலே பொது வாக்கெடுப்புக்கு ஐ.நா அனுமதியைத் தரட்டும் கேள்விகளைப் பின்னர் பார்க்கலாம் என்றேன். பல சிங்கள புத்திஜீவிகள் இந்தப் பொது வாக்கெடுப்பின் மூலமாக தமிழ்த் தலைவர்கள் நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றார்கள் என்றும் பிரிவினைக்கு வித்திடுவதற்கே பொது வாக்கெடுப்பை தமிழ் அரசியல்வாதிகள் கோருகின்றார்கள் என்று நினைக்கின்றார்கள் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த நான் ஒற்றையாட்சியா அல்லது சமஷ்டியா என்று கேள்விகளை நாம் முன் வைத்தால் ஒற்றையாட்சியா பிரிவினையா என்ற கேள்விக்கு இடமில்லை அல்லவா என்று நான் கேட்டேன்.

தமிழ் மக்களின் பாரம்பரியம் பற்றியும் சிங்கள பௌத்த மயமாக்குதல் பற்றியும் பல விடயங்களை நாங்கள் பேசிக்கொண்டோம். திரும்பவும் வந்து சந்திப்பதாக கூறி அவர்கள் விடைபெற்றார்கள்.

ஒரு நகைச்சுவை நிகழ்வும் நடந்தது. பழக்கத்தின் நிமித்தம் நான் தூதுவருக்கு கைலாகு கொடுத்த போது அவர் தமது இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்பொழுது நான் நீங்கள் வணக்கத்திற்காக கிழக்கு முறையைத் தற்போது பின்பற்றத் தொடங்கி விட்டீர்கள். நாங்கள் இன்னமும் மேற்கிடம் இருந்து படித்தவற்றை வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினேன். ‘கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம் இது’ என்றார்” என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.