22

22

“தொலைபேசி சிக்னலுக்காக இராட்டினத்தில் ஏறி பேசிய மத்திய பிரதேச சுகாதாரத் துறை மந்திரி !

மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பொது சுகாதாரத் துறை மந்திரியாக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். அசோக்நகர் மாவட்டம் அம்கோ கிராமத்தில் ஒரு பொருட்காட்சி நடந்து வருகிறது. அதில், ‘பாகவத கதா’ என்ற பாராயண நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் நடத்தி வருகிறார். அதற்காக அந்த கிராமத்திலேயே 9 நாட்களாக தங்கி இருக்கிறார்.

இதற்கிடையே, அந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பிரஜேந்திர சிங் யாதவ் செல்போனில் பேசும் காட்சி பத்திரிகைகளில் வெளியானது. அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வைரலாகப் பரவியது.

பின்னரான தகவல்களின் போதே செல்போன் சிக்னலுக்காக அவர் அந்த ராட்டினத்தில் ஏறியுள்ளது தெரிய வந்துள்ளது. இதை அறிந்த நெட்டிசன்கள், ‘இதுதான் டிஜிட்டல் இந்தியா லட்சணமா?’ என்று கேலி செய்துள்ளனர். மீம்ஸ்களும் உலா வந்தன.

இதுதொடர்பாக, பிரஜேந்திர சிங் யாதவ் கூறுகையில், ‘‘அந்த கிராமத்தில் 9 நாட்களாக தங்கி இருப்பதால், அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கிராம மக்கள் என்னிடம் முறையிட்டனர். அதிகாரிகளிடம் பேசி இதற்கான உத்தரவை பிறப்பிக்க நினைத்தேன். ஆனால், மலைகளால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் செல்போன் சிக்னலே கிடைக்கவில்லை. எனவே ராட்டினத்தில் ஏறி பேசினேன்’’ என தெரிவித்தார்.

இந்தியா-மாலைத்தீவு இடையே ரூ.375 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து !

இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக மாலைத்தீவுக்கு சென்றுள்ளார். நேற்று மாலைத்தீவு ராணுவ மந்திரி மரியா திதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, இந்தியா-மாலைத்தீவு இடையே இந்திய ரூபாய் .375 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மாலைத்தீவின் கடலோர காவல்படை திறனை வலுப்படுத்துவதற்காக இத்தொகையை இந்தியா கடனாக வழங்குகிறது.

இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘மாலைத்தீவு இராணுவ மந்திரியுடனான சந்திப்பு சுமுகமாக அமைந்தது. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பயனுள்ள முறையில் கருத்து பரிமாற்றம் செய்தோம். மாலத்தீவின் நம்பகமான கூட்டாளியாக இந்தியா நீடிக்கும். மரியா திதியுடன் துறைமுக திட்ட ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது” என்று கூறியுள்ளார்.

மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலியை ஜெய்சங்கர் சந்தித்தார். அவரிடம் பிரதமர் மோடியின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கொரோனா காலத்திலும், அதற்கு பிறகும் மாலைத்தீவின் விரிவான வளர்ச்சி கூட்டாளியாக இந்தியா நீடிக்கும் என்று உறுதி அளித்தார்.

“இந்திய அணியில் இடம் பிடித்தது கனவு போன்று உணர்கிறேன்” – இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களம் காண்கிறார் காண்கிறார் சூர்யகுமார் யாதவ் !

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இத்தொடர் முடிந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் தெவாட்டியா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டவில்லை. ஆஸ்திரேலியா தொடரின்போது அணியில் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்த்தார். அப்போது நிராகரிக்க மிகவும் விரக்தியானார்.
இந்த நிலையில்தான் தற்போது முதன்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளானர். நீண்ட நாட்களாக இருந்த பொறுமையின் காரணமாக தற்போது அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணியில் இடம் பிடித்தது கனவு போன்று உணர்கிறேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
‘‘இறுதியாக சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைத்திருப்பது சிறந்தது. குட் லக்’’ என ஹர்பஜன் சிங் தெரிவித்துதுள்ளார்.
‘‘இறுதியாக சூர்யகுமார் யாதவ் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. வாழ்த்துகள், இஷான் கிஷன், ராகுல் தெவாட்டியா ஆகியோர் அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு குட்லக்’’ என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் பெண்களை இராணுவத்தில் இணைக்கும் பணி ஆரம்பம் !

சவுதி அரேபியாவில் பெண்கள் இராணுவத்தில் இணைவதற்கான சேர்க்கை நேற்று முதல் தொடங்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் தரப்பில்,

“ சவுதி அரேபியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இராணுவத்தில் பெண்கள்  சேருவதற்கான அனுமதி துவங்குகிறது. ஆண்களுக்கான சேர்க்கையும் தொடங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for Saudi Arabia opens military recruitment to women

சவுதி அரேபிய இராணுவத்தில் பெண்களை சேர்க்க முடிவு கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதற்கான சேர்க்கையை சவுதி அரேபியா இராணுவம் ஆரம்பித்துள்ளது. இதை வரவேற்று சவுதி அரேபியா பெண்கள் நல ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டில் உள்ள பெண்கள் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

பெண்கள் கார் ஓட்ட அனுமதி மற்றும் ஆண்களின் பாதுகாப்பு இல்லாமல் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி ஆகிய மாற்றங்களை கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கைகளை சவுதி அரேபியா பெண்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தடுப்பூசி தொடர்பான மக்கள் அச்சத்தை போக்க தடுப்பூசி போட்டுக்ககொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் !

அவுஸ்திரேலியாவில்  கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன.
அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளது.
இதற்கு முன்னோட்டமாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் அச்ச உணர்வை நீக்கி, நம்பிக்கையூட்டும் வகையிலும், தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இன்றே பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
ஆஸ்திரேலியா முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கும் நிலையில், அதுகுறித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன்,
‘நாளை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, முக்கியமான விஷயங்களை சொல்கிறோம். தடுப்பூசி பாதுகாப்பானது, முக்கியமானது. கொரோனாவை முன்களத்தில் எதிர்த்து நின்று போராடுபவர்களுக்கும் எளிதில் பாதிக்கப்பட கூடியவர்களுக்கும் முதலில் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம்’ என்று கூறினார்.
இதையடுத்து, 85 வயதான ஜேன் மாலிசியாக் என்ற மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் சிலருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியே அடுத்த சில வாரங்களுக்கு பொது மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. அடுத்த வாரத்திற்குள் 60000 டோஸ் மருந்து செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் சுமார் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆஸ்திரேலியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதேபோல் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கும் தற்காலிக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி கிரெக் ஹன்ட் கூறி உள்ளார்.
இதுஒருபுறமிருக்க, ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

11.19 கோடியைக் கடந்த உலக கொரோனாத் தொற்று நிலவரம் !

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடம் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.19 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.72 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.77 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.21 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93 ஆயிரத்து 900-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

“இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்ப மாட்டார்கள்” – பக்கிங்ஹாம் அரண்மனை

“இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்ப மாட்டார்கள்” என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் விலகினர்.‌

இதனை ஏற்றுக்கொண்ட அரச குடும்பம் ஓராண்டுக்குப் பிறகு நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் என அறிவித்தது.

ஹரி மேகன் தம்பதி தற்போது தங்களது ஒன்றரை வயது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இதற்கிடையே, மேகன் மீண்டும் ‌கர்ப்பமாகியுள்ளார்.

இந்நிலையில், இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்ப மாட்டார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

“திருகோனமலையில் மனைவியை 35 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன்” – சம்பவத்தை கண்ட பின்னும் தடுக்காது திரும்பிய பாதுகாப்பு துறை அதிகாரி !

திருகோணமலை கந்தளாய் பகுதியில் மனைவியை கணவன் கூரிய ஆயுதத்தினால் குத்தி காயப்படுத்திய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை சந்தியிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த தனது மனைவியை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த கணவன் வழி மறித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வாய்த்தர்க்கத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து தனது மனைவியை சரமாரியாக 35 தடவைகள் வெட்டியும், குத்தியும் படுகாயம் ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது அந்த இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபர் மனைவியை வெட்டுவதை கண்டு மீண்டும் திரும்பி சென்றுள்ளதை அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி காணொளிகள் காட்டுகின்றன.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

“இலங்கையின் பொருளாதாரத்தில் தலையிடுவதற்கு சில மேற்குலக நாடுகளும் சில அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன” – அமைச்சர் தினேஸ் குணவர்தன

“இலங்கையின் பொருளாதாரத்தில் தலையிடுவதற்கு சில மேற்குலக நாடுகளும் சில அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன” வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா உலகப் பரவல் தொற்று காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக ஜெனீவா கூட்டத்தொடர் இணையதளம் ஊடாக இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர்,

“இலங்கையின் பொருளாதாரத்தில் தலையிடுவதற்கு சில மேற்குலக நாடுகளும் சில அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், அவற்றிற்கு தெரியாத யதார்த்தங்களையும் காரணிகளையும் முன்வைப்பதற்கு இலங்கை அரசிற்கும் இயலுமாக உள்ளது” எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

“இலங்கை தொடர்பாக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் வரைபையிட்டு, பிரித்தானியா, கனடா அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன்

“இலங்கை தொடர்பாக ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் வரைபையிட்டு, பிரித்தானியா, கனடா அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வார கேள்வி பதிலில், ஜெனீவா தூதுக் குழுக்களிடையே இலங்கை சம்பந்தமாக கையளிக்கப்பட்ட ‘சீரோ’ வரைபு குறித்து ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில்,

“குறித்த முதல் வரைபானது குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது. அதுவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் காரியாலயத்தினதும் உயர்ஸ்தானிகர் பச்சலெட் அவர்களினதும் சிபாரிசுகளுக்குக் குறைவாகக் குறித்த வரைவு காணப்படுவது மிகவும் மன வேதனை அளிக்கின்றது.

குறித்த வரைவு 30/1 தீர்மானத்தின் படிநிலைக்குக்கூட குறைவாக இருக்கின்றது. அந்தத் தீர்மானமும் அதனுடைய குறைபாடுகளால்தான் தோல்வியடைந்தது.

தமிழ் மக்களுக்குத் தேவையானதும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதுமான குறிக்கோள்கள் சம்பந்தமாகப் பார்க்கும்போது இவ்வாறான ஒரு வரைபு இலங்கை அரசாங்கத்திற்கு முரணான ஒரு கருத்தைக் கொண்டு செல்வதாக அமைகின்றது. தாமதம் அடையும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். ஏற்கனவே, ஆறு வருடங்கள் சென்றுவிட்டன. இலங்கை அரசாங்கம், தான் செய்வதாகக் கூறியவற்றில் எதனையும் மனமுவந்து செய்யவில்லை.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உள்ளகக் குழுவானது வெகுஜன கொலையாளிகளையும் கற்பழிப்பாளர்களையும் பாதுகாக்கும் வண்ணம் இவ்வாறான ஒரு வரைபைத் தயாரித்தமை மன வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. இலங்கை அரசாங்கத் தலைவர்கள் இதுகண்டு விருந்துகளிலும் களியாட்டங்களிலும் ஈடுபடுவார்கள்.

இவ்வாறான வரைபானது போர்க் குற்றங்களையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும் இனப் படுகொலைகளையும் எந்தவிதப் பயமும் இன்றி இயற்றலாம் என்ற ஒரு கருத்தை உலகளாவிய அரசாங்கங்களுக்குக் கொடுப்பதாக அமையும். மனித உரிமைகள் சம்பந்தமாகவும் அடிப்படை நன்னடத்தை சம்பந்தமாகவும் கவனம் செலுத்தும் யாவருக்கும் இவ்வாறான ஒரு வரைபு மன வேதனையை அளிக்கும்.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொன்டிநீக்குறோ, மசிடோனியா வடக்கு ஆகிய உள்ளகக் குழு அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இவ்வாறான வரைவுகள் ஐக்கிய நாடுகளின் வருங்காலத்திற்கு நன்மை பயக்காது என்பதை நாம் உணர வேண்டும்.

அதேநேரம், இலங்கையின் வடக்கு – கிழக்கில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் நடைபெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி, தமிழ் மக்களிடையே மதிப்பு மிக்க அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதில் புது வேகத்தையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்தியுள்ளதைக் காண்கிறோம்.

புதியதொரு தீர்மானமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் அவர்களுடைய பாதுகாப்பையும் நலவுரித்துக்களையும் அவர்களின் வருங்கால எதிர்பார்ப்புக்களையும் காப்பாற்றுவதாக அமைய வேண்டும். தமிழ் தலைவர்கள் என்று கூறுவோர் சிலர் உறுப்பு நாடுகளிடம் சென்று எங்கள் பிரச்சினைகளைக் குறைத்துக் கூறினார்களோ தெரியவில்லை.

இலங்கை பற்றிய நடவடிக்கையானது இன்று ஐ.நா. பேரவையை ஒரு தராசில் தடுமாறிக் கொண்டிருக்க வைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.