“ஈழத் தமிழர்கள் விடயத்தில் தன்னுடைய பொறுப்பில் இருந்து நழுவியிருந்த நிலையில் தமிழர்கள் மீதான இனவழிப்புக்கு ஐக்கியநாடுகள் சபையும் காரணம்” என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழர்கள் விடயத்தில் ஐ.நா.வில் கொண்டுவரப்படும் பிரேரணைகள் தமிழர்களுக்கு நீதி தரவேண்டுமே தவிர, இலங்கையை செல்லமாக அணுகும் நிலைப்பாடு இருக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து நேற்று (22.02.2021) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் – ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கின்ற நிலையில், தமிழர் பிரதிநிதிகளாக இருக்கின்ற நீங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறதா? அவ்வாறு கலந்துகொள்ளாதுவிடின், இந்தப் பிரச்சினையை சர்வதேசம் எவ்வாறு அணுக வேண்டும் என நினைக்கின்றீர்கள் ?
இதற்குப் பதிலளித்த அவர், “இம்முறை கொரோனா தொற்று நிலைமை காரணமாக, விமானப் போக்குவரத்தில் இடையூறுகள் இருப்பதுடன் விமானப் பயணத்துக்கான செலவுகளும் அதிகரித்திருக்கின்றன.
ஐக்கிய நாடுகளினுடைய வேலைத் திட்டத்தைக் கடந்த காலங்களில், மாகாண சபை உறுப்பினராகவோ, மாகாண அமைச்சராகவோ இருந்த காலப்பகுதியில், ஏதோவொரு வழியில் விமானச் சீட்டுக்களை எடுப்பதற்கான வேலையைச் செய்திருந்தோம். இப்போழுது இதற்காக பொது நிதியொன்றை ஏற்பாடு செய்வதன் ஊடாகத்தான் நாங்கள் அங்கு செல்லக்கூடியதாக இருக்கும்.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு விசா எடுப்பதிலும் பிரச்சினை இல்லை, விமானச் சீட்டு எடுப்பதிலும் பிரச்சினை இல்லையென்று நான் நினைக்கின்றேன். எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்னைப் போன்றவர்கள் இந்தப் பயணத்தைச் செய்வதென்பதை நெருக்கடியான நிலையாகப் பார்க்கின்றோம்.
அதேநேரம், இப்பொழுது ஐக்கிய நாடுகளுடைய தீர்மானம் வந்துள்ள நிலையில், ஏற்கனவே கடந்த காலங்களில் வந்த தீர்மானத்தைவிட இதுவொரு மோசமான தீர்மானமாகப் பார்க்கின்றோம்.
ஏனென்றால், யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், நாங்கள் போரின் சாட்சியாகப் போய் எத்தனைமுறை பேசியும்கூட, எங்களுடைய குரல்களை இதுவரையும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. ஒரு மென்போக்காக இந்தப் பிரச்சினையைக் கையாண்டிருப்பதாக நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த இடத்தில், ஐக்கிய நாடுகள் சபையையும் குற்றஞ் சாட்டுகின்றோம். காலம் தாழ்த்தப்பட்ட நீதியென்பது ஈழத்தமிழர்களுக்கு ஒரு மறுக்கப்பட்ட நீதியாகும்.
ஏனென்றால், யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில், இலங்கை விடயத்தில் அல்லது ஈழத் தமிழர்களுடைய விடயத்தில் தலையிடவேண்டிய ஐக்கிய நாடுகள் சபையானது, தன்னுடைய பொறுப்பில் இருந்து நழுவியதுடன் தமிழர்கள் இனவழிப்புக்கு ஆளாவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் காரணமாக இருந்திருக்கின்றது.
எனவே, இப்பொழுது வந்திருக்கின்ற தீர்மானத்தைப் பார்த்தால் அதில் ஒன்றுமே இல்லை. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற வரையறைக்குள்ளும் வரவில்லை. தமிழ் மக்களுக்கு இனவழிப்பு நடந்ததும் வரவில்லை.
இன்றைக்கு பூகோள நலன் சார்ந்து, இலங்கை அரசை சீனா தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதைத் தடுப்பதற்காக, தமிழர்களைப் பயன்படுத்தி, தாங்கள் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பதுபோன்று செய்திகள் காட்டப்படுகின்றன. இதுதவிர ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மிகவும் மென்போக்காக, ஒரு செல்லமாக அணுகியிருப்பதை நாங்கள் எங்கள் மொழியில் சொல்லிக் கூடியதாக இருக்கிறது.
இதேவேளை, சூம் நிகழ்ச்சியின் ஊடாக நாங்கள் பக்க அறைக் கூட்டங்களோ அல்லது நேரடியாகவோ ஜெனீவா தரப்பினருடன் பேச முடிந்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம்.
நிச்சயமாக இம்முறையும் ஜெனீவாவுக்குப் போறதுக்குப் பார்க்கின்றோம். என்றாலும் கொரோனா பிரச்சினை தடையாக இருக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசா நடைமுறையும் சரி, பயணச் சீட்டு நடைமுறைகளும் சரி தடையில்லாமல் இருக்கும். அதேபோல இந்தக் கொவிட்-19 இற்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான சூழலும் அவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது, இந்நிலையில், அவர்கள் ஜெனீவா சென்றுவருவது பெரிய சவாலாக இருக்காது என்று நினைக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.