25
25
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் வரலாறு, கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அடிப்படைகள் பற்றிய தங்களின் அறிவையும் புரிதலையும் நிரூபிக்க இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை குறைக்க குடியுரிமை தேர்வு முறைகளை கடுமையாக்கியது. 2008-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகளை மாற்றியது. அதாவது தேர்வில் 100 கேள்விகள் என்று இருந்ததை 128 கேள்விகளாக உயர்த்தியது. இந்த கேள்விகள் பெரும்பாலும் அரசியல் ரீதியிலானதாகவும் கடுமையாகவும் இருந்தன.இந்த விதிமுறைகள் 2020 டிசம்பர் 1-க்கு பிறகு குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார். அந்தவகையில் குடியுரிமை தேர்வில் முந்தைய நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அதன்படி இனி 2008-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்வு முறைகள் மீண்டும் தொடரும் எனவும் இது மார்ச் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக அளவில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அங்கு 2,153 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது அந்த மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்தவர்களை விட அதிகம் ஆகும். ஜப்பானைப் பொறுத்தவரையில் தனிமையாக உணருபவர்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்வதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களே அதிகமாக தனிமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் அரசு மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் மக்களின் தனிமையைப் போக்குவதற்காக தனிமை எனும் அமைச்சகத்தை அமைத்து அதன் மந்திரியாக டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை பிரதமர் யோஷிஹைட் சுகா நியமித்துள்ளார். தனிமை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், குடிமக்களின் தனிமையையும், சமூகத்தில் தனித்திருக்கும் நிலையையும் குறைக்க நடவடிக்கை எடுப்பார். டெட்சுஷி சாகாமோட்டோ, ஏற்கனவே ஜப்பானில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டெட்சுஷி சாகாமோட்டோ கூறுகையில், “சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
2017-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில், 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தாங்கள் எப்போதும் தனிமையை உணர்வதாக கூறியதையடுத்து, 2018-ம் ஆண்டில் தனிமை மந்திரியை இங்கிலாந்து அரசு முதல் முறையாக நியமித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் தனிமை மந்திரியை நியமிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி, அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் பங்கெடுப்போரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையிலேயே, ஜெனீவா அமர்வு நடத்தப்பட்டு வருகிறது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் இலங்கை யுத்த விவகாரம், ஜெனீவா அமர்வில் முக்கிய விவாதமாகியிருக்கிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை மத்திய அரசாங்க தரப்போ தமிழர் தரப்போ இம்முறை செல்லவில்லை. எனினும், காணொளி காட்சி வழியாக ஜெனீவா அமர்வுகளில் இந்த இரண்டு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் தமது குரலை மௌனிக்க செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.
இதன் ஒரு கட்டமாக தான் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் புதன்கிழமை (பிப்ரவரி 24) முதல் முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வைத்து, கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலக அதிகாரிகளால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தனது வங்கிக் கணக்கு விவரங்கள், போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்களா என்ற கோணத்திலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் கூறினார்.
தன்னைப்பற்றிய அனைத்து தகவல்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து தனது வங்கிக் கணக்குக்கு வரும் பணம் தொடர்பிலும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய அவர், அந்த பணம், பிரித்தானியாவிலுள்ள தனது மகனால் அனுப்பப்படும் பணம் என தான் பதிலளித்ததாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.
போராட்டம் நடத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைக்கிறதா என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் வினவியதற்கு, தான் “இல்லை” என பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.
இலங்கை ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடுகளை செய்தீர்களா என தன்னிடம் ஒரு அதிகாரி விசாரணை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யவில்லை எனவும், அரசாங்கத்தின் மீதே தாம் கோபம் கொண்டுள்ளதாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.
இதேவேளை, 2010ஆம் ஆண்டில் ஜெனீவா அமர்வுகளில் கலந்து கொண்டீர்களா என பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தன்னிடம் கேட்டதற்கு, 2010ஆம் ஆண்டில் நடந்த ஜெனீவா அமர்வுகளுக்கு செல்லவில்லை எனவும், 2018ம் ஆண்டு ஜெனீவா அமர்வுகளிலேயே தான் முதல் முறையாக கலந்து கொண்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக லீலாதேசி ஆனந்த நடராஜா கூறினார்.
ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படும் விஷயங்கள் குறித்தும் அவரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளதாக தெரிகிறது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்களை தமது சங்கத்தில் உள்ளவர்கள் மேற்கொள்வதாக லீலாதேசி கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் ஜெனீவா அமர்வுகளில் தான் கலந்து கொள்ளாதிருப்பதற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே அதிகாரிகளின் விசாரணையை நடவடிக்கையை கருதுவதாக லீலாதேசி ஆனந்த நடராஜா மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சூழற்சி முறையிலான இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 1,468 நாட்கள் கடந்துள்ளது. இவ்வாறான நிலையில், ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறன்றமையும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஒன்பதாயிரத்து 938பேர் பாதிக்கப்பட்டதோடு 442பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 41இலட்சத்து 44ஆயிரத்து 577பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 21ஆயிரத்து 747பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 56ஆயிரத்து 364பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 273பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 26இலட்சத்து 66ஆயிரத்து 466பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த வருடம் பாடசாலைகளுக்கு தரம் 1 மாணவர்களுக்கான அனுமதியில் வடக்கு-கிழக்கில் இணைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் முன்னைய ஆண்டுகளைக்காட்டிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது அபாயகரமானது என எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கை வருமாறு,
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்துக்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமை அபாயகரமானது.
உலக மக்கள் தொகை வருடம்தோறும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இலங்கையிலும் அதே நிலைதான்.
ஆனால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாணவர் தொகை குறைவடைந்துள்ளமை கவலையான விடயம் என்பதற்கு அப்பால் அபாயகரமானது.
நாட்டில் நடைபெற்ற யுத்தம் நான்கு தசாப்தங்களைக் கடந்தது. அந்தக்காலங்களில்கூட பாடசாலைக்கு முதலாம்தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை வருடம்தோறும் அதிகரித்தே சென்றது.
ஆனால் இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் மாணவர் எண்ணிக்கை குறைவடைந்தமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கான காரணங்களில் பிறப்பு வீதம் குறைவடைந்தது என தனியாகக் கூறிவிட முடியாது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் முக்கியமானது.
இதைவிட கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் நகர்ப் புறத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். அதற்கு தொழில் வாய்ப்பு ஒரு காரணம் என்பதற்கு அப்பால் பாரம்பரிய தொழில்கள் பல அழிவடைந்துள்ளன. இதனால் வருமானமின்றி பிள்ளைகளை வளர்க்க முடியாத அளவுக்கு பலர்தள்ளப்பட்டுள்ளனர். அரச சேவையில் உள்ள பலர் வங்கிகளில் பெருமளவு பணம் கடனாகப்பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர் என்றார்.
“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்” என சுவிட்ஸர்லாந்து இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் முன்னைய தீர்மானங்களின் உள்ளடக்கங்களையும் நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமை பேரவை இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சுவிட்ஸர்லாந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் தீர்மானத்திலிருந்து விலகுவது குறித்து இலங்கை அறிவித்தவேளை தேசிய அளவில் உருவாக்கப்பட்ட நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறையை தொடரவுள்ளதாக இலங்கை தெரிவித்திருந்தது.
எனினும் இந்த அறிக்கையில் உள்ளுர் முயற்சிகள் எவையும் பலன்களை அளிக்கவில்லை, தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது தொடர்கின்றது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அமைப்பின மீதான நம்பிக்கை மேலும் குறைவடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இராணுவ வாகனமொன்றில் 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது ஹொரன பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றும் இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற சிப்பாய் ஆகியோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இராணுவத்தின் நிர்வாக நோக்கங்களுக்காக குத்தகை அடிப்படையில் பயன்படுத்தப்படும் இந்த வாகனம் தம்புளை இயந்திரவியல் காலாட்படை பிரிவுக்கு சொந்தமானது என்பதுடன் நிரந்தர வாகன ஓட்டுனர் விடுமுறையில் சென்றிருந்தமையால் அவருக்கு மாறாக நியமிக்கப்பட்ட சாரதியால் இந்த வாகனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல் கிடைத்தவுடன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேற்படி இராணுவ சிப்பாய் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சட்ட விதிகளின் படி அவருக்கு எடுக்ககூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இராணுவ பொலிஸ் பிரிவின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
“இலங்கை தமிழர்களின் உரிமைகளை மதிக்கப்பட வேண்டும்” என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் இந்தியா இதனை தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை கருத்தில் எடுத்துள்ளதாக ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மனிபான்டே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏழு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இந்த தீர்மானங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஆர்வமாக பங்கெடுத்துள்ளது இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் நண்பராகவும் நெருங்கிய அயல்நாடாகவும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடு இரண்டு விடயங்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அவர் ஒன்று இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டை ஆதரிப்பது மற்றையது தமிழ் மக்களின் நீதி சமத்துவம் கௌரவம் சமாதானம் ஆகியவற்றிற்கான அபிலாசைகளின் மீதான நிலையான அர்ப்பணிப்பு என குறிப்பிட்டள்ளார்.
அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என நாங்கள் கருதுகின்றோம் என குறிப்பிட்டுள்ள இந்திய பிரதிநிதி இதன் காரணமாக தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்று இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு நல்லிணக்கம் மற்றும் 13வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் 12 வருடங்கள் முடிந்த பின்னர் காணப்படும் நிலை குறித்த மனித உரிமை ஆணையாளரின் மதிப்பீடுகள் மிகவும் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
அத்தோடு, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன எனவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்று வருகிறது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதுடன், குறித்த அறிக்கையை நேற்று இரவு இடம்பெற்ற அமர்வில் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான அறிக்கை மீதான ஊடாடும் உரையாடலில், காணொளி மூலம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் உரிய நீதிமன்றத்தினால் அல்லது வேறு பொறிமுறையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிலரை இலக்கு வைத்து தடை விதிப்பதற்கும், பயணத் தடை விதிப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளமை இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என என அவர் இதன்போது தெரிவித்தார்.
அது நாட்டின் உரிமையை மீறும் செயல் என்பதுடன், இறையாண்மைக்கான அடிப்படை விடயங்களை மீறும் செயற்பாடு எனவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் அமைதி காக்கும் படையின் செயற்பாடுகளை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கும் யோசனையை நிராகரித்துள்ள அவர், தொழில் ரீதியாக செயற்படும் இறைமையுள்ள ஒரு நாட்டின் இராணுவம் மீது சுமத்தப்படும் அழுத்தம், ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறுவதாகவும் தெரிவித்தார்.
20ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக நீதிமன்றத்தின் கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கு அழுத்தம் ஏற்படுவதாக மிச்சேல் பச்சலட் தனது அறிக்கையில் சுமத்தும் குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை போன்ற ஒரு தனி நாட்டை, எவ்வித சாட்சியங்களும் இன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அபாயகரமானது என்பதால் இது குறித்து ஏனைய நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
அறிக்கையின் உள்ளடக்கங்கள், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சபை மற்றும் அனைத்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுடனான தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடுகள் இருந்தபோதிலும் வெளிப்புறமாக இயக்கப்படும் சக்திகளை தொடர்ந்தும் வலியுறுத்துவதானது பல சவால்களை ஏற்படுத்துவதாக அமைவதுடன், இதுபோன்ற செயன்முறைகள் ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக தாங்கள் வருந்துவதாக தெரிவித்த தினேஸ் குணவர்த்தன, இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.