March

March

“மியன்மார் வரலாற்றில் இது மிகவும் இருண்ட காலமாகும். ஆனால், விரைவில் விடியல் வரவிருக்கிறது” – தலைமறைவாகவுள்ள மியன்மார் துணைஜனாதிபதி !

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஜனநாயகப் புரட்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக, அந்த நாட்டின் துணை ஜனாதிபதி மான்வின் காயிங் தான் சூளுரைத்துள்ளார்.

ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதில் இருந்து தலைமறைவாக இருந்து வரும் அவர், இணையதளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் உரையில்,

‘மியன்மார் வரலாற்றில் இது மிகவும் இருண்ட காலமாகும். ஆனால், விரைவில் விடியல் வரவிருக்கிறது. நீண்ட கால இராணுவ ஆட்சியினால் அடக்குமுறைக்கு ஆளாகி அல்லலுற்று வரும் பல்வேறு இனத்தினரும் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்கு, அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் இந்தப் புரட்சி மட்டுமே கைகொடுக்கும்.

இந்தப் புரட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். இராணுவத்தின் அடக்குமுறைக்கு அடிபணிந்து நமது புரட்சியைக் கைவிட மாட்டோம். ஒற்றுமையின் பலத்தால் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம் என கூறினார்.

மியான்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்த்தது.

அத்துடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“வௌவாலின் உடலில் இருந்த கொரோனா நுண்கிருமி மனிதர்களிடம் பரவுவதற்கு ஏற்ப மிக சிறிய அளவில் தன்னை உருமாற்றிக் கொண்டது” – கிளஸ்கோ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி !

2019 ஆம் ஆண்டு இறுதி முதல் பரவி வரும் கொரோனா வைரஸினுடைய தாக்கம் இன்று வரை குறைந்ததாக தெரியவில்லை . இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் கொரோனா உருமாறி அடுத்த கட்ட பரவலும் ஆரம்பித்துள்ளது. உருமாறிய கொரோனா மக்களிடம் வேகமாக பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே உள்ள கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள், மக்களிடம் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு ஆகியவற்றால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியதால் மீண்டும் சிக்கல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் வௌவாலின் உடலில் இருந்து வந்த கொரோனா நுண்கிருமி மனிதர்களிடம் பரவுவதற்கு ஏற்ப மிக சிறிய அளவில் தன்னை உருமாற்றிக் கொண்டது சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினத்தின் உடலில் வாழ்வதற்கு ஒரு நுண்ணுயிர் தன்னை உருமாற்றம் செய்து கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால், வௌவாலில் இருந்து உருமாற்றம் பெற்ற கொரோனா நுண்ணுயிர் மனிதர்களிடம் வேகமாக பரவும் வகையில் விரைவில் உருமாற்றம் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா நுண்கிருமி உருமாற்றம் குறித்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளஸ்கோ பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. நுண்கிருமி ஆய்வாளர் ஆஸ்கா மேக் லீன் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அதில், வவ்வாலின் உடலில் இருந்து வந்த கொரோனா நுண்கிருமி தன்னை பெரிய அளவில் உருமாற்றம் செய்யாமலேயே சிறிய அளவில் தன்னை மாற்றிக் கொண்டு மனிதர்களின் உடலில் புகுந்து பரவுவதற்கான திறனைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது கிளிநொச்சி காவல்துறையினர் தாக்குதல் !

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அண்மையில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது கிளிநொச்சி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் அருளம்பலம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 5 பேர் கிளிநொச்சி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் உயிரிழந்த நபரின் வீட்டிலிருந்த பொருட்களை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உறவினர்கள் காவல்துறையினரின் உதவியுடன் இன்று காலை எடுத்துச் செல்ல முற்பட்டனர்.

இதன்போது அங்கு ஒன்று கூடிய கிராம மக்கள், கத்திக்குத்துக்கு பலியானவரின் மனைவி மற்றும் உறவினர்கள் , காவல்துறையினர் சந்தேக நபர்களுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தினர்.

இதனையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டபோது கத்தியால் குத்திய நபரின் வீட்டில் தீ பரவல் ஏற்பட்டது. வீட்டில் ஏற்பட்ட தீ பரவலை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு தீ விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முடிவுக்கு வருகிறது அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரத போராட்டம் !

பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி 17 வது நாளாக அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என தெரிவித்து கடந்த 17 நாட்களாக அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவரின் கோரிக்கைகளில் ஒன்று முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே உண்ணாவிரதத்தை வெற்றியுடன் முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பிகை செல்வக்குமாரின் போராட்டம் இன்று பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 3.00 முதல் 5.00 மணியளவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“இலங்கையில் புர்காவைத் தடை செய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும்” – முஜிபுர் ரஹ்மான்

“இலங்கையில் புர்காவைத் தடை செய்வதால் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இலங்கையில் புர்கா விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

“மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசு முயற்சிக்கிறது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும். அரசின் தீர்மானங்கள் நாட்டிலுள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கு வழிசெய்யும் என்று எமக்குத் தோன்றவில்லை.

அதேவேளை, புர்கா என்பது மத ரீதியான தீவிரவாதப்போக்கின் அடையாளமாக இருக்கின்றது என அமைச்சர் சரத் வீரசேகர கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், அது குறித்து சரத் வீரசேகர தீர்மானம் எடுக்க முடியாது. என்னுடைய பார்வையில் அவர்தான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகின்றது.

அத்துடன் அவர் விரும்பும் ஆடையையே நாட்டுமக்கள் அணியவேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் தமது மத ரீதியான நம்பிக்கையின்படி அணியும் ஆடைகளைத் தடைசெய்வதே தீவிரவாதப் போக்குடைய சிந்தனையாகும்” – என்றார்.

“நிகாப் மற்றும் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஒரு சம்பவம்.” – இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர்

“இலங்கையில் நிகாப் மற்றும் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஒரு சம்பவம்.” என இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக் தெரிவித்தார்.

தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கையில் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும், இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும் காயத்தை ஏற்படுத்தும். சர்வதேச அரங்குகளில் நாடு எதிர்கொள்ளும் தொற்றுநோய் மற்றும் பிற சவால்களால் பொருளாதாரம் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சிக்கல்களை அதிகரிப்பதைத் தவிர, அடிப்படை மனித உரிமைகள் குறித்த பரந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும்” – என்றுள்ளது.

“தமது கடமைகளை சரிவர நிறைவேற்றத் தவறியதால் சூறையாடப்படும் இனமாக வடக்கு பெண்கள் வாழ்கின்றனர்” – சுரேன் ராகவன் கவலை !

“தமது கடமைகளை சரிவர நிறைவேற்றத் தவறியதால் சூறையாடப்படும் இனமாக வடக்கு பெண்கள் வாழ்கின்றனர்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களைப் பாதுகாக்காத சமுதாயம் நாகரிகமற்ற சமுதாயம் எனவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதுக்குடியிருப்பு பெண் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்று (14.03.2021) இடம்பெற்றது.

யுத்தத்தினால் அதிகளவு பாதிப்புக்கு உட்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுவதோடு அதிகளவு பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள மாவட்டமாகவும் காணப்படுகின்றமையால் இம்மாவட்டத்தின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழனென்ற ரீதியில் தமக்கு இருப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் இதன்போது குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தாம் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளால் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

சுயதொழிலில் ஈடுபட்டு தமது பொருளாதாரத்தை முன்னெடுத்து வரும் பெண்களை பலப்படுத்துவதன் ஊடாகவே உண்மையான தேசிய பொருளாதாரத்தை இலங்கையில் கட்டியெழுப்ப முடியுமென்றும் வன்னி மாவட்டத்தில் அதனை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அரசியல் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் அப்பகுதிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பமாக அமைந்திருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.

“சீனி வரி முறைக்கேட்டில் இருந்து மக்களை திருப்புவதற்காகவே தற்போது புர்காவை தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் பேசுகின்றது” – ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“சீனி வரி முறைக்கேட்டில் இருந்து மக்களை திருப்புவதற்காகவே தற்போது புர்காவை தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் பேசுகின்றது” என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பெலவத்தயிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத்  மேலும் கூறியுள்ளதாவது,

“அரசாங்கம் பிரச்சினைகளை சிறந்த முறையில் உருவாக்குகின்றது. உதாரணமாக மரண தண்டனை குற்றவாளி பிரேமலால் ஜெயசேகரவை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிப்பது குறித்து பொதுமக்கள் கோபமடைந்தபோது, ​​கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்தது.

இதன்போது மக்கள், ஜெயசேகர விவகாரத்தை மறந்து, கால்நடை படுகொலைகளின் நன்மைகள், தீமைகள் பற்றி பேசத் தொடங்கினர். அதேபோன்று தற்போதும் அரசாங்கம், சீனி  ஊழலில் இருந்து பொதுமக்களை திசை திருப்ப நாட்டில் புர்காவை தடை செய்யும் பிரச்சினையை எழுப்பியுள்ளது.

சீனி மோசடியால் 156 பில்லியன் ரூபாய் வரி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.  இந்தச் சூழலில்தான் புர்காவை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் புர்காவை தடை செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றில் அதற்கு பொறுப்பான அமைச்சரொருவர் கையொப்பமிட்டுள்ளார். ஆனால்  ஒப்புதலுக்காக கூட அந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இது மக்கள் கவனத்தை திசை திருப்பும் மற்றுறொரு முயற்சியாகவே நாங்கள் நினைக்கிறோம். இதுபோன்ற கொள்கை முடிவுகளை அரசாங்கம் எடுக்க விரும்பினால், அது சமூகங்களிடமும் மதம் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் பேச வேண்டும். அதன்பின்னர் அந்த முடிவை எடுக்க முடியும். அதுவே சரியான  செயற்பாடு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படாது” – செஹான் சேமசிங்க

“மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படாது” என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் பொதுஜன பெரமுன பிரதான கட்சியாகவுள்ளது. நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கூட்டணியாகவே போட்டியிட தீர்மானித்துள்ளோம். மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சுதந்திர கட்சியினர் தனித்து செல்ல முன் உள்ளூராட்சி மன்ற பெறுபேற்றை மீட்டிப்பார்க்க வேண்டும்.

மாகாண சபை தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களின் ஜனநாயக உரிமையை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. கூட்டணியாகவே மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.இத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே அதிக மாகாண சபைகளை கைப்பற்றும்.

கூட்டணியில் இருந்து கொண்டு சுதந்திர கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளன.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னரே இவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள். மாகாண சபை தேர்தல் இதுவரை காலமும் பிற்போடப்பட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சியினரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் பொறுப்பு கூற வேண்டும்.

குண்டுத்தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என எதிர்க்கட்சியினராக செயற்பட்ட காலத்தில் இருந்து குறிப்பிடுகிறோம். கூட்டணியமைத்து ஆட்சியமைத்துள்ளதால் உண்மையை பொய்யென குறிப்பிட முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படாது எனத் தெரிவித்தார்.

“அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழக்கும் வகையில் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் செயற்படக் கூடாது” – அமைச்சர் தினேஷ் குணவர்தன

“அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழக்கும் வகையில் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் செயற்படக் கூடாது” என வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் பேசிய அவர்,

அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழக்கும் வகையில் வடக்கு – கிழக்கில் உள்ள மக்கள் செயற்படக் கூடாது என்று குறிப்பிட்ட அமைச்சர், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பிராந்தியத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பெரும்பாலான மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்தினையும் அதன் திட்டங்களையும் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஒற்றையாட்சி நிலையை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.