March

March

“அமேசன் இணைய அங்காடியால் விற்கப்பட்ட, “ஸ்ரீலங்கா சிங்க வாசல் விரிப்பு” , ஒரு சீன தயாரிப்பு. ஆகவே “மூடிக்கொண்டு” இருக்கிறார்கள்.” – மனோகணேசன் நகைப்பு !

அமேசன் இணையத்தளத்தில் இலங்கையின் தேசிய கொடி கால்துடைப்பானாக விற்பனைக்கு வந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்த நிலையில் அது இடைநிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் அந்த விற்பனை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை- மனோ கணேசன் எதிர்ப்பு - தமிழ்க் குரல்

நல்லவேளை.., அமேசன் இணைய அங்காடியால் விற்கப்பட்ட, “ஸ்ரீலங்கா சிங்க வாசல் விரிப்பு” , ஒரு சீன தயாரிப்பு. ஆகவே “மூடிக்கொண்டு” இருக்கிறார்கள். தற்செயலாக இதொரு “இந்திய” நிறுவனமாக இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும் என கற்பனை செய்தால்.?

 

 

ஆமதுரு தேசிய வீரர்கள் இந்திய தூதகத்தை நோக்கி ஊர்வலம்.

நாடாளுமன்றில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, காட்டுக்கூச்சல்

இந்திய மற்றும் தமிழ் தந்தை-தாய்மார்களை பற்றி இராவண பல, சிங்கலே, காவியுடை பயங்கரவாதி கும்பல்கள் நாடெங்கும் சந்திக்கு சந்தி ஆர்ப்பாட்டம்.

தலையில் சுகமில்லாத ஏதாவது ஒரு ஜந்து சி.ஐ.டிக்கு சென்று இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக புகார்.

இந்தியாவை விரும்பும் போது தாங்கள் “வடஇந்திய பரம்பரை” , வெறுக்கும் போது அது “தமிழ் எதிர்ப்பு” என்ற இவர்களது வழமைக்கு இணங்க, தமிழ் எதிர்ப்பு கோஷம்.

வேறு என்ன? என பதிவிட்டுள்ளார்.

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை” – அமைச்சர் சரத் வீரசேகர

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு வருகின்றது. எனவே, புதிய அரசமைப்பின் பிரகாரம் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி அதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே சிறப்பாக இருக்கும் எனவும் சரத்வீரசேகர  தெரிவித்துள்ளார்.

இதே நேரம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் இது தொடர்பில் கூறும்போது “கடந்த அரசு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. அது சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, சட்டத்தில் மாற்றம் செய்யாமல் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனினும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கது.

“அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை” – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் !

“அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை” என்று பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள அவர் அந்தக்காணொளியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களை மிக உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டு செல்லத் தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தான் பெருமை அடைகின்றார் எனவும், இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் தன்னுடன் அடிக்கடி கதைக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை என்றும் பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிரான தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு உத்தரவு !

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் பிரித்தானியாவின் உட்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு இந்த உத்தரவை விடுத்துள்ளதாகவும் இதனால் விடுதலைப் புலிக்ள அமைப்பு மீதான தடை நீக்கப்படலாம் எனவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1978ஆம் ஆண்டு இலங்கையில் தோற்றம் பெற்ற இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலைக் குண்டுதாரிகளை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை 2001இல் பிரித்தானியா தடை செய்தது. எனினும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த தடைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், பிரித்தானியாவில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டுப் பயங்கரவாத ஆய்வு நிலையம், விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உட்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டுமென சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தடையை நீக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், “நாங்கள் சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். மேன்முறையீட்டாளரின் இறுதிப் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். அதுவரை விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும்” என உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“அம்பிகை செல்வகுமாரின் உடல் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனையளிக்கின்றது” – சிவசக்தி ஆனந்தன்

“அம்பிகை செல்வகுமாரின் உடல் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனையளிக்கின்றது” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தலைமையில் கொண்டுவரப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல் எனும் தலைப்பிலான பிரேரணையில் தமிழனத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் உள்ளிட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 15 நாட்களாக அஹிம்சை வழியில் போராட்டத்தினை நடத்தி வருகின்றார்.

இவருடைய போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாகவும், அவருடைய நான்கு அம்சக்கோரிக்கைகளுக்கு மேலும் ஆதரவளித்தும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி கோரி தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதும் அரசாங்கமும், சர்வதேசமும் அமைதியாகவே இருக்கின்றமை துரதிஷ்டவசமானது. விசேடமாக அம்பிகை செல்வகுமார், உலகிற்கு ஜனநாயக விழுமியக் கற்பிதங்களை வழங்கும் பிரித்தானியாவில் தனது அறப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். தற்போது வரையில் ஓரிரு பாராளுமன்ற உறுப்பினர்களே தற்துணிவின் அடிப்படையில் ஆதரவுக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாக மௌனித்த நிலையிலேயே இருக்கின்றது. இவ்விதமான நிலையில் பிரித்தானிய அரசாங்கம் இருப்பதானது அதிர்ச்சியையும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. இலங்கையில் நடைபெற்ற போரின் போது நிகழ்த்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிரித்தானியா அறியாமலில்லை. அதுபற்றி ஆவணங்களையும் பிரித்தானியா கொண்டிருக்காமல் இல்லை. அதே நேரம் நீதியை எதிர்பார்த்திருக்கும் தமிழ்  மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களையும், கோரிக்கைகளையும் பிரித்தானியா உணரமலில்லை.

அவ்வாறான நிலையில் நியாயமான நீதியொன்றை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும் வகையில் அம்பிகை செல்வகுமார் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் உள்ளீத்து நிறைவேற்றப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் பிரேரணையை மேலும் வலுப்படுத்த வேண்டும். அவ்விதமான செயற்பாடே ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்தினை உறுதிப்படுத்துவாக இருக்கும் என்றுள்ளது.

“பிரித்தானியா தலைமையிலான அனுசரணை வழங்கும் நாடுகளால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையை வெற்றி கொள்வது கடினம் ” – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான அனுசரணை வழங்கும் நாடுகளால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையை வெற்றி கொள்வது கடினம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சம்பந்தப்பட்ட நாட்டின் இணக்கத்தினைப் பெறாது எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் எவ்விதமான பலனுமில்லை என்று வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்றதாக ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களும் பிரித்தானிய தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் உள்ள விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவை தவறான தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக குறிப்பிட்ட விடயங்கள் ஆதாரமற்றவை என்பதோடு ஜனாதிபதி கோட்டாபய அவ்விதமாக கூறவில்லை என்றும் கொலம்பகே கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய சரணடைந்தவர்கள் தொடர்பில் அவ்வாறு தெரிவித்திருந்தால், ஸ்டீபன் ராப் ஏன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை என்றும் இத்தனை காலம் மௌனமாக இருந்தமைக்கான காரணம் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேநேரம், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கே ஜனாதிபதி கோத்தாபய விரும்புகின்றார். அதற்காக அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதோடு அவர்களுடன் விரைவில் சந்திப்புக்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு பயணத்தடைகளை விதிக்குமாறு கோரப்படுகின்றபோதும் ஐ.நா.பாதுகாப்புச் சபையிலேயே அது சம்பந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் எனினும் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டால் சீனாவும், ரஷ்யாவும் எமக்கு ஆதரவளிக்கும் என்றார்.

“ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பிரிவுகளை ஏற்படுத்த யாராலும் முடியாது” – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச

ராஜபக்ச குடும்பத்திற்குள் மோதல்களை உருவாக்குவதற்கு பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும் அந்த குடும்பத்தை அரசியல் மூலம் பிரிக்க முடியாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆசியா முழுவதிலுமே மிகச்சிறந்த தலைவர் மகிந்த ராஜபக்ச என தெரிவித்துள்ள ஜனாதிபதி அவரது அரசியல் பரிச்சயம் முதிர்ச்சி அறிவு தலைமைத்துவம் போன்றதை  எவருடனும் ஒப்பிடமுடியாதவை என நான் கருதுகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவர் கட்சிக்கு தலைமை தாங்கும்போது நான் நாட்டிற்கு தலைமை தாங்குவது எனக்கு பெரும் ஆறுதலாகயிருக்கும் என நான் கருதுகின்றேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எங்களது வெற்றிக்கான பயணத்தில் முக்கிய காரணி மகிந்த ராஜபக்சவே என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியொன்றை உருவாக்கி வெற்றியொன்றை சாத்தியமாக்கியவர் பசில் ராஜபக்சவே என்பதை எந்த வித விவாதங்களுமின்றி நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த தலைவர்களுடன் அரசாங்கமொன்றை தொடர்வதே எனக்கு சாதகமான விடயம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை” – தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஈழத் தமிழர்கள் குறித்த விடயங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் அறிக்கையை, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

அதில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையிலுள்ள ஏழு தமிழர்கள் விடுதலைக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்க வழிகாணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது அல்லது குடியிருப்பு அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற விடயங்கள் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

“தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவியை சுமந்திரன் பெறுவதற்காக சாணக்கியன் போன்றவர்களை பயன்படுத்துகிறார்” – பிள்ளையான்

“தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவியை சுமந்திரன் பெறுவதற்காக சாணக்கியன் போன்றவர்களை பயன்படுத்துகிறார்” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடும் போது ,

“எந்த வேலைத்திட்டத்தினையும் செய்யாமல், வீதிகளை அமைத்து குளங்களை அமைத்து நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து அவன் வருகின்றான், இவன் வருகின்றான், விகாரைகளை அமைக்கின்றான் என்று கூறினால் என்ன மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள்.

நாம் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களையே சொல்கின்றோம். நாங்கள் முதலில் மாற வேண்டும். வேறு எவரதும் கால்களைப் பிடிக்கத் தேவையில்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, மக்களை முன்னேற்றுகின்ற பலப்படுத்துகின்ற கட்சியாகும். எங்கள் வேலைத்திட்டம் மிகத் தெளிவானது.

அடுத்தமுறை எமது மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருவாரானால் தொழில் வாய்ப்பை பெருக்குவதற்கு, தொழிற்பேட்டைகளை அமைக்கலாமா? இங்கேயே 20ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கலாமா? என்பது குறித்து கலந்துரையாடுவோம்.

நாங்கள் முதலில் வவுனதீவு, கரடியனாறு போன்ற பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்வோம். இதற்காக 400மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

புதிய அரசாங்கத்தின் கொள்கையினால் மட்டக்களப்பு மாவட்டம் நன்மையடைகின்றது. நாங்கள் இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் பிறரை எதிர்பார்த்திருந்து பின்தங்கிவிட்டோம். இப்போது நாம் தான் அனைத்தையும் செய்யப்போகின்றோம். நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளை கேட்டு துப்பாக்கி ஏந்தி போராடினோம். எமது மாவட்டத்தின் இளைஞர்கள் பலர் மரணித்திருக்கின்றனர். அவர்களின் நோக்கம் இங்கு வாக்குகளை பெறுவதாகும். சாணக்கியன் போன்றவர்களை பயன்படுத்தி சுமந்திரன் வாக்குகளை பெறவேண்டும். தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவியை சுமந்திரன் பெறுவதற்காக அவரை பயன்படுத்துவார்.கட்சிக்குள் பலத்தினை கூட்டுவதற்கே பார்க்கின்றனர்.

இன்று மேய்ச்சல் தரைப்பிரச்சினை பற்றி கதைக்கின்றனர். அதுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கினை தாக்கல் செய்யுங்கள், சென்று போராடுங்கள். அதுதான் உங்கள் வேலை. நாங்கள் மக்களின் தேவையினை நிறைவேற்றுவோம். ஆனால் அவர்கள் அதனை செய்வதில்லை எங்களை தாக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பொலிஸாரின் நிறவெறித்தாக்குதலில் இறந்த ஜோர்ஜ் ப்ளைட்டின் குடும்பத்துக்கு 27 மில்லியன் டொலர் நிவாரணம் !

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட்.  இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார்.‌ அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர்  கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 போலீசார் அங்கு விரைந்தனர்.‌ பின்னர் அவர்கள் புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்தபோது பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.
ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது.
இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதில் டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் கடந்த வாரம் தொடங்கியது.‌ அப்போது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த டெரிக் சாவின் தனது போலீஸ் பயிற்சியை முறையாக பின்பற்றியதாக கூறினார். அதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.‌
இந்த வழக்கில் டெரிக் சாவின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 65 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்ட் கொலைவழக்கில் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு 27 மில்லியன் டொலர் நிவாரணமாக வழங்க மினியாபோலீஸ் நகர அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தின் வக்கீல் பெஞ்சமீன் கிரம்ப் கூறுகையில், “அமெரிக்க வரலாற்றில் ஒரு தவறான மரணத்துக்கான வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒதுக்கப்படும் மிகப்பெரிய நிவாரணம் இது” என்றார்.
ஜார்ஜ் பிளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் பிளாய்ட் கூறுகையில், “எனது சகோதரர் ஜார்ஜ் பிளாய்டின் நீதிக்கான பயணத்தின் இந்தப் பகுதி சுமுகமாக தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.