March

March

“லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம்” – ஐக்கிய நாடுகள் சபை கவலை !

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குத்தரேஸ் பேசும்போது,

“ உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம்  உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறினால் தீவிர பசி மற்றும் மரணத்தின் விளிம்பை அடைவார்கள்.

கரோனா மற்றும் கால நிலை மாற்றத்தால்வறுமையை தீவிரப்படுத்தியுள்ளது. நீங்கள் மக்களுக்கு உணவளிக்கவில்லை என்றால் மோதலை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம். பஞ்சமும், பசியும் உணவு இல்லாததால் ஏற்படவில்லை. அவை மனிதனால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

“ஆயுதத்தையும் நம்மையும் பிரிக்கமுடியாது” – பிள்ளையான்

“ஆயுதத்தையும் நம்மையும் பிரிக்கமுடியாது” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது,

“ஆயுதத்தையும் நம்மையும் பிரிக்கமுடியாது. ஆயுதக்குழு என்பது விடுதலைப்புலிகளும் ஆயுதக் குழுதான், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ஆயுதக்குழுதான். ஆயுதக்குழு என்பது நமது தேவைக்காக நிகழ்ந்த சம்பவத்தினூடாக நம்மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட விடயமாகும்.

தற்போது அந்தத் தேவை மாறி அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரு சமூகம் மாறுவதற்குரிய பிரதான பங்கு ஒரு அரசியல் இயக்கத்தினுடையதாகும். அந்த இயக்கம் தான் நாங்களாவோம். எங்களுக்கும் திட்டங்கள் இருக்கின்றன.

நாங்கள் பல வயல்களையும் வைத்துக்கொண்டு உன்னிசைக் குளத்தினையும் வைத்துக்கொண்டு தண்ணீர் இல்லை என்று சொல்வது பிழையான விடயமாகும். காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லா இருந்தார், அவர் அங்கு தண்ணீரை கொண்டு சென்றார். உங்களுக்கென்று யாருமிருக்கவில்லை.

மகிழவெட்டுவான் ஒரு பாரம்பரிய கிராமமாகும். ஐந்து வருடம் நல்லாட்சியில் இருந்தவர்கள் அங்கு இரண்டு வீதிகளையும் புனரமைக்கவில்லை. அங்கு பாடசாலையின் நிலையும் மோசமாகவுள்ளது. யோகேஸ்வரனின் சொந்த ஊரிலே இம்முறை முதலாம் தரத்திற்கு இரண்டு பிள்ளைகள் மட்டுமே. சமூகத்தில் வந்து வாக்கு கேட்டு வென்ற தலைவர்கள் தங்களுடைய கிராமத்தையே கட்டியெழுப்பவில்லை என்றால் அவர்களின் அரசியல் தோல்வியடைந்த ஒன்றாகும்” என அவர் குறிப்பிட்டள்ளார்.

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியை கடந்தது – அமெரிக்காவில் 03 கோடி !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.65 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.08 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89 ஆயிரத்து 350-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.45 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.20 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மியான்மரில் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் – மேலும் நால்வர் பலி !

தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் இராணுவம். ஆனால் மியான்மர் மக்கள் இராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் எனக்கோரி ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் சர்வதேச நாடுகளை மியான்மர் இராணுவத்துக்கு எதிராக தூண்டுவதால் இது ராணுவ ஆட்சியாளர்களுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. எனவே மக்களின் போராட்டங்களை இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.‌
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை கொன்று குவித்து வருகிறது. ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிப்ரவரி 1 முதல் இப்போது வரை ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 70-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர்.ஆனாலும் இராணுவத்தின் இந்த அடக்குமுறையை மீறியும் மியான்மரில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்தலையில்,  இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் அதே வேளையில், போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. நேற்று மியான்மரின் 2-வது மிகப்பெரிய நகரமான மாண்டலேவில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

வஹாபிசம் மற்றும் ஜிகாத்தினை ஊக்குவித்த சந்தேகத்தில் ஒருவர் கைது !

இலங்கையில் ஜிகாத் கொள்கையை பரப்பி ஊக்குவித்தார் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜமாத் -இ- இஸ்லாமி என்ற அமைப்பின் தலைவரான மாவன்னலயை சேர்ந்த ரசீத் அக்தர் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெமட்டகொடையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவரை கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர் ஜமாத் – இ- இஸ்லாமி அமைப்பின் வெளியீடுகளில் வஹாபிசம் மற்றும் ஜிகாத்தினை ஊக்குவிக்கும் கட்டுரைகளை எழுதியுள்ளார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் வீடியோக்களை ஆராய்ந்துவருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது அரசியல்மயப்படுத்தக்கூடிய விடயமில்லை. அது தேசிய பிரச்சினை” – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது அரசியல்மயப்படுத்தக்கூடிய விடயமில்லை. அது தேசிய பிரச்சினை” என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹிக்கடுவையில் நேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ச, பசில் ராஜபக்ச அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆகியோர் உயிர்த்த ஞாயிறுதாக்குதலுக்கான காரணம் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஏதாவது விபரங்கள் இருந்தால் சி.ஐ.டியினரை அவரிடமிருந்து அந்த விபரங்களை பெறுமாறு நான் கேட்டுக்கொண்டேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி விபரங்களை மறைப்பது குற்றம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் சி.ஐ.டியினர் அவரை விசாரணை செய்தவேளை அவர் தன்னால் எதனையும் நினைவுபடுத்தி பார்க்க முடியவில்லை தான் அவ்வாறு தெரிவித்தது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியினர் மக்களுக்கு வழங்கும் தகவல்கள் இவை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்கட்சியினர் எப்போதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது அரசியல்மயப்படுத்தக்கூடிய விடயமில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி இது தேசிய பிரச்சினை என குறிப்பிட்டுள்ளார்.

“மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க அழுத்தம் தெரிவிக்க வேண்டும்” – இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் சாணக்கியன் !

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான நேற்றைய (13.03.2021)  சந்திப்பில் காணி அபகரிப்பு தொல்பொருள் மற்றும் மாகவலி திட்டம் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சந்திப்பு குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நேற்றைய தினம் இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கிய உறுப்பினர்களையும் திருகோணமலையில் சந்தித்த வேளை,  வடகிழக்கு மற்றும் எமது மாவட்டம் சம்பந்தமான பல விடயங்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அதில் முக்கியமாக எமது காணி அபகரிப்பு தொல்பொருள் மற்றும் மகாவலி திட்டம் சம்பந்தமான பிரச்னைகள் சம்பந்தமாகவும். அத்துடன் தகவல் தொழில்நுட்ப துறையை வட-கிழக்கில் நிறுவுவதற்கான பரிந்துரை செய்திருந்தேன்.
இதன் மூலம் பல இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்பதனையும் சுட்டிக் காட்டியிருந்தேன். அத்துடன் துறைமுகங்களை மென்மேலும் அபிவிருத்தி செய்து மென்மேலும் அவசியமான இடங்களில் மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் மற்றும் காங்கேசன்துறை போன்ற இடங்களில் உருவாக்குவதன் மூலம் இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்குள்ள உள்ளூர் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியினை அதிகரிக்கலாம் என்பதனையும் பற்றி எடுத்துக்கூறி இருந்தேன்.
அத்துடன் மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க அழுத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் உள்ளூர் பயண சேவைகளை இதன் மூலம் உருவாக்குவதோடு சென்னைக்குமான பயண கட்டமைப்புக்களை இங்கிருந்து ஏற்படுத்துவதன் மூலம் உல்லாச பிரயாண துறையினை மென்மேலும் அபிவிருத்தி செய்வதோடு இதன் மூலம் பல தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கலாம் என்பதனையும் எடுத்துரைத்திருந்தேன். அத்துடன் சமகால அரசியல் விடயங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. இச்சந்திப்பு எமது மக்களுக்கான எதிர்கால மாற்றத்தின் முதல் படி.” எனவும் இந்திய தூதுவரிடம் சாணக்கியன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது .

“மியன்மார் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க தயார்” – அமெரிக்கா அறிவிப்பு !

மியன்மார் நாட்டில் இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியது. இந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிசூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஆட்சியை கைப்பற்றிய மியன்மார் இராணுவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் மியன்மார் ராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. மேலும் நேற்று மியான்மர் ராணுவ தளபதியின் 2 குடும்ப உறுப்பினர்கள் மீது பொருளாதார தடையை விதித்துள்ளது.

இந்த நிலையில் இராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியன்மார் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் மயோர்காஸ் கூறும்போது, ‘தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை என்ற முடிவின் கீழ் மியான்மர் நாட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவிலேயே தங்கி இருக்க முடியும்’ என்றார்.

ஐ.நாவில் திரையிடப்பட்ட “கண்ணீர் நிறைந்த பாதை” ஆவணப்படம் !

இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளடங்கிய ஆவணப்படமொன்று ஜெனிவாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும்வகையில் “கண்ணீர் நிறைந்த பாதை” (The Tearful Trail) என்ற 40 நிமிட ஆவணப்படமாக இது  உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவைத் தளமாக் கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமை சபையின் (Universal Human Rights Council) தலைவர் முயீஸ் வஹாப்தீன் இந்த ஆவணப்படத்தினை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் ஐ.நாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் தூதுவருமான நசீமா பக்லி மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிட இணைப்பாளர் டேவிட் வலி ஆகியோரிடம் நேரடியாகக் கையளித்ததுடன் மனித உரிமையுடன் சம்பந்தப்பட்ட ஏனையவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கூறும் ஆவணப்பட்ம் சமர்பிக்கப்பட்டது வரலாற்றின் இதுவே முதல் தடவையாகும்.

அத்துடன், இலங்கைச் சிறுபான்மையினர் எதிர்கொண்ட சவால்களை உள்ளடக்கிய “Declared and Undeclared Wars Against Minorities” என்ற சுமார் 360 பக்கங்களைக் கொண்ட அறிக்கையும் இவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக கோஷங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதே நேரம் பல நாடுகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளுக்கு விரைவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. மேலும் இதில் 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் வாக்குகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும்” – இந்திய தூதுவருடனான சந்திப்பில் கஜேந்திரகுமார் !

“தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும்” என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயயுடனான இன்றைய சந்திப்பின்போது வலியுறுத்ததப்பட்டதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் ,
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கிறோம். ஆனால் அதன்வழியான 13 ம் திருத்தச்சட்டமூலத்தை தீர்வாக ஏற்க முடியாது . தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வை தொடர்ந்தும் வலியுறுத்துவோம். இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு தமிழர் தேசம் ஒரு கவசமாகவே இருக்கும்.
நாம் இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பூகோள் அரசியல் போட்டியின் பகடைகளாக இலங்கையின் வடகிழக்கு பகுதியை இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வழங்குவதை நாம் எதிர்க்கிறோம். இதனால் பாதிக்கப்படப்போவது எமது மக்களே .
தமிழர் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புகூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்கை வகிக்க வேண்டும்.
சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும்”  போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.