04

04

“குவைத்தில் உள்ள கணவனிடம் பணம் பெறுவதற்காக 08 மாத குழந்தையை தாக்கி காணொளியாக்கிய தாய்” – மூவர் கைது !

குவைத்தில் பணியாற்றிவரும் தனது கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக 8 மாத ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரித்த பெண் உட்பட மூவரை யாழ். பொலிஸார் கைது செய்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் குவைத் நாட்டில் தங்கியிருந்த போது இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதன்போது குவைத்தில் குழந்தை பிறந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பி தற்போது யாழ். மணியந்தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

தனக்கு கணவர் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் இருந்த குறித்த பெண், குழந்தையைத் தாக்கும் காணொளி எடுத்து கணவருக்கு அனுப்பும் நோக்கில் அவர் குழந்தையைத் தாக்கும் சமயம் அவரின் உடன் பிறந்த சகோதரன் அதை ஒளிப்பதிவு செய்துள்ளார். இதேநேரம் மற்றுமொருவர் அருகில் இருந்துள்ளார்.

இந்த விடயம் நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து பிரதேச செயலாளரின் உத்தரவின் பெயரில் சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தினர், சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் கிராம சேவகர் ஆகியோர் சகிதம் நேரில் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் குழந்தையை மீட்டதுடன் குழந்தையைத் தாக்கிய தாயார், அதனை ஒளிப்பதிவு செய்து பணம் ஈட்ட உதவியவர் மற்றும் அந்தச் செயலுக்கு உதவியவர் என மூவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராறின் எதிரொலி – மூன்று பிள்ளைகளை கிணற்றுக்குள் வீசி தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் !

இரணைமடுக் குளத்தின் வலது கரை வாய்க்கால் ஓரம் உள்ள ஒற்றைக்கை பிள்ளையார் ஆலயம் அருகில் இருந்த கிணற்றுக்குள் தனது பிள்ளைகளைப் போட்ட தாயார் தானும் கிணற்றில் குதித்துள்ளார்.

தாயார் கிணற்றில் குதிப்பதை அவதானித்த சிலர் உடன் கிணற்றில் பாய்ந்து காப்பாற்ற முயன்றதில் தாயார் உயிருடன் மீட்கப்பட்டார். குழந்தைகள் மூவரில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய இரு பிள்ளைகளையும் தேடும் பணி இடம்பெறுகின்றது.

மற்றைய இரு குழந்தைகளும் கிணற்றில் தான் என தாயார் கூறியதை அடுத்து கிணறு இறைக்கும் பணி இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

வட்டக்கச்சி – 5 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் இந்தத் தாயார் குடும்பத் தகராறின் காரணமாகவே இந்த முடிவுக்குச் சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. வட்டக்கச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்ணின் சடலம் தொடர்பான விசேட விசாரணை ஆரம்பம்! 

“டேம் வீதியில் பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது” என  ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

காவல்துறை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக மரபணு பரிசோதனையினை மேற்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலைப்பகுதி இதுவரை கண்டுபிடிக்காமையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி சடலம் மற்றும் அவரது தாய் என கருதப்படும் பெண்ணிடம் இருந்தும் மரபணு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இந்த மாதிரிகள் ஒத்திசையுமானால் சடலம் குறித்த பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு, டேம் வீதியில் பயணப் பொதியொன்றில் பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அந்த பயணப்பொதியினை விட்டுச்செல்லும் நபர் தொடர்பில் சீ.சி.ரீ.வி காணொளியின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண், குருவிட்ட – தெப்பனாவை பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என கண்டறியப்பட்டது.

குறித்த பெண்ணும், அவரை கொலை செய்து பயண பொதியில் கொண்டு வந்து டேம் வீதியில் கைவிட்டு சென்றவரும் கடந்த 28 ஆம் திகதி ஹங்வெல்லை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடுதி ஒன்றிற்கு செல்லும் காட்சி சீ.சி.ரி.வியில் பதிவாகியிருந்ததாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

மறுநாள் அந்த விடுதியில் இருந்து பயண பொதியொன்றுடன் சந்தேகநபர் மாத்திரம் வெளியேறும் காட்சியும், சந்தேகநபர் ஹங்வெல்லையில் இருந்து புறக்கோட்டைக்கு பயணிக்கும் பேருந்து ஒன்றில் ஏறும் காணொளியும் கிடைக்கப்பெற்றன.

இந்தநிலையில், மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர், புத்தல காவல்நிலையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப காவல்துறை பரிசோதகர் என தெரியவந்தது.

அவரை கைது செய்வதற்கு மொனராகலை காவல்துறையினர் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த காவல்துறை பரிசோதகர் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே அடக்கம் செய்ய முடியும் அல்லவா?” – ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி! 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், அவற்றை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடக்கம் செய்ய முடியும் அல்லவா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, இந்தத் தீர்மானத்தால் பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் தற்போது காணப்படும் நிலவரங்களை மேலும் குழப்பும் வகையிலேயே அரசின் தீர்மானம் அமைந்திருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரை அடக்கம் செய்வதற்கு உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களிலும், பொதுவான ஆய்வுகளிலும் நிலத்தடி நீரினூடாக கொரோனா தொற்று பரவும் என்பது விஞ்ஞானபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.

எனினும், அது குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும்போது உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசு எதனடிப்படையில் தீர்மானம் மேற்கொண்டுள்ளது என்பது தெளிவாகவில்லை.

அத்தோடு கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மேற்குலக சக்திகள் அழுத்தம் வழங்கிவந்தன.

இதன் காரணமாகவே அரசு சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாகக் கூறியது. எனினும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்பு தென்படவில்லை.

அதுமாத்திரமன்றி சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமே அடக்கம் செய்ய முடியும் அல்லவா? அவ்வாறிருக்கையில் குறிப்பாக அப்பகுதியைத் தெரிவு செய்ததன் காரணமென்ன? இந்தத் தீர்மானத்தால் பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படக்கூடும்” – என்றார்.

மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு சார்பாக செயற்பட்டமைக்காக 06 உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 6 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பட்ட மணிவண்ணன் சார்பு அணி ரீதியான பிளவை அடுத்து மணிவண்ணனுடன் இணைந்து கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாகச் செயற்படும் உள்ளூராட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்குவதன் மூலம் உறுப்புரிமையை இழக்க வைக்கும் முயற்சியில் கட்சியின் தலைமை ஈடுபட்டுள்ளது.

இதற்கமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு மாநகர சபையில்  உறுப்பினர்களாகத் தேர்வான மணிவண்ணன் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டதன் உத்தரவுக்கு உறுப்பினர்கள் யாழ். மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில்  இடைக்காலத் தடை உத்தரவைப் பெற கட்சியானது அந்த இடைக்கால தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளது.

இதேநேரம், யாழ். மாநகர சபையில் மணிவண்ணன் சார்பாகச் செயற்படும் எஞ்சிய 6 காங்கிரஸ் உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து விலக்குவதாக கட்சியின் பொதுச்செயலாளர் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுத்தில் கடிதம் அனுப்பியதன் பெயரில் அந்த அறிவித்தலை தெரிவத்தாட்சி அலுவலர் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் இந்த 6 உறுப்பினர்களும் தம்மை நீக்கிய செயலுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

“தன்னுடைய ஜனாதிபதி கனவை நனவாக்க மகிந்த,  நாமல் ஆகியோரை ஓரங்கட்டும் நடவடிக்கைகளை பஷில் ஆரம்பித்துள்ளார்” – ஜே.வி.பி

ராஜபக்ச குடும்பத்துக்குள்ளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்துக்குள்ளும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள அதிகாரப் போட்டி தற்போது உக்கிரமடைந்துள்ளது என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் அதன் நிறுவுநர் பஸில் ராஜபக்சவே வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும், இதற்கான செயற்பாடுகளை அவர் தற்போதே ஆரம்பித்துள்ளார் எனவும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தமது ஜனாதிபதிக் கனவை நனவாக்கும் நோக்குடன் தற்போதைய பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் மூத்த புதல்வனும் அமைச்சருமான நாமல் ராஜபக்ச ஆகியோரை ஓரங்கட்டும் நடவடிக்கைகளையும் பஸில் ராஜபக்ச திரைமறைவில் அரங்கேற்றி வருகின்றார் எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டாவது தடவையாகப் போட்டியிடமாட்டார். எனவே, அவர் தனது பதவிக் காலம் முழுவதையும் அனுபவிப்பார்.

அவரையடுத்து பஸில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் வேட்பாளராகவும் களமிறங்குவார்கள்.

இதேவேளை, பஸில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கும் என நாம் நம்புகின்றோம்” – என்றார்.