13

13

“மியன்மார் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க தயார்” – அமெரிக்கா அறிவிப்பு !

மியன்மார் நாட்டில் இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியது. இந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிசூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஆட்சியை கைப்பற்றிய மியன்மார் இராணுவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் மியன்மார் ராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. மேலும் நேற்று மியான்மர் ராணுவ தளபதியின் 2 குடும்ப உறுப்பினர்கள் மீது பொருளாதார தடையை விதித்துள்ளது.

இந்த நிலையில் இராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியன்மார் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் மயோர்காஸ் கூறும்போது, ‘தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை என்ற முடிவின் கீழ் மியான்மர் நாட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவிலேயே தங்கி இருக்க முடியும்’ என்றார்.

ஐ.நாவில் திரையிடப்பட்ட “கண்ணீர் நிறைந்த பாதை” ஆவணப்படம் !

இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளடங்கிய ஆவணப்படமொன்று ஜெனிவாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அன்று தொடக்கம் இன்று வரையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும்வகையில் “கண்ணீர் நிறைந்த பாதை” (The Tearful Trail) என்ற 40 நிமிட ஆவணப்படமாக இது  உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவைத் தளமாக் கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமை சபையின் (Universal Human Rights Council) தலைவர் முயீஸ் வஹாப்தீன் இந்த ஆவணப்படத்தினை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் ஐ.நாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் தூதுவருமான நசீமா பக்லி மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிட இணைப்பாளர் டேவிட் வலி ஆகியோரிடம் நேரடியாகக் கையளித்ததுடன் மனித உரிமையுடன் சம்பந்தப்பட்ட ஏனையவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கூறும் ஆவணப்பட்ம் சமர்பிக்கப்பட்டது வரலாற்றின் இதுவே முதல் தடவையாகும்.

அத்துடன், இலங்கைச் சிறுபான்மையினர் எதிர்கொண்ட சவால்களை உள்ளடக்கிய “Declared and Undeclared Wars Against Minorities” என்ற சுமார் 360 பக்கங்களைக் கொண்ட அறிக்கையும் இவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக கோஷங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதே நேரம் பல நாடுகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளுக்கு விரைவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. மேலும் இதில் 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் வாக்குகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும்” – இந்திய தூதுவருடனான சந்திப்பில் கஜேந்திரகுமார் !

“தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும்” என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயயுடனான இன்றைய சந்திப்பின்போது வலியுறுத்ததப்பட்டதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் ,
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கிறோம். ஆனால் அதன்வழியான 13 ம் திருத்தச்சட்டமூலத்தை தீர்வாக ஏற்க முடியாது . தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வை தொடர்ந்தும் வலியுறுத்துவோம். இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு தமிழர் தேசம் ஒரு கவசமாகவே இருக்கும்.
நாம் இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பூகோள் அரசியல் போட்டியின் பகடைகளாக இலங்கையின் வடகிழக்கு பகுதியை இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வழங்குவதை நாம் எதிர்க்கிறோம். இதனால் பாதிக்கப்படப்போவது எமது மக்களே .
தமிழர் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புகூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்கை வகிக்க வேண்டும்.
சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும்”  போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியக்குடியுரிமை வழங்கப்படும்” – தேர்தல் அறிக்கையில் தி.மு.க !

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக தமிழ்நாட்டின் அரசியல் கட்சியான  தி.மு.க.வின் (திராவிட முன்னேற்றக் கழகம்) தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரதானமாகப் போட்டியிடும் தி.மு.க. கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நல்வாழ்வு என்ற தலைப்பின் கீழ் நான்கு விடயங்களைச் செயற்படுத்துவது தொடர்பாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் வடக்கு கிழக்கில் நீர்த்துப் போன அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய ஈழத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் இடையே ஐ.நா.வின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்குவதற்கு இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்த தமிழர்கள் குறித்தும் கரிசனை காட்டப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும், இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ்த்தேசத்தில்  இறந்துபோன சம உரிமைகளை பெறுவதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும்” – வவுனியாவில் சுரேன் ராகவன்

“தமிழ்த்தேசத்தில்  இறந்துபோன சம உரிமைகளை பெறுவதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினரும், சுதந்திர கட்சியின் வன்னி மாவட்ட தலைவருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு இன்று (13.03.2021) விஜயம் மேற்கொண்ட அவர் விசேட பூஜை நிகழ்வுகளில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நான் வடமாகாண ஆளுனராக பதவி வகித்த 10 மாதங்களில் பத்தாயிரம் குடும்பங்களிற்கு அரச காணிகளை வழங்கியிருந்தேன். இராணுவத்திடம் இருந்த ஆயிரம் ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் கையளித்திருந்தேன்.
இதேவேளை கொழும்பில் இருக்கும் காணி ஆணையாளரிடமிருந்து கிடைக்கவேண்டிய ஒழுங்கான ஒத்துழைப்புக்கள் வலுவாக கிடைக்கவேண்டும் என்பதற்காகவே வடமாகாண காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதே தவிர வடமாகாணத்தை சேர்ந்த எந்த அதிகாரங்களும் பறிக்கப்படவில்லை பறிக்கப்படக்கூடாது, பறிக்கப்படமுடியாது.

தற்போது வன்னிக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழ் தேசத்திற்காக நான் செய்யவேண்டிய பணியை திரும்பவும் என்னிடம் இறைவன் வழங்கியதாகவே நினைக்கிறேன். வடமாகாணத்திலேயே குறிப்பாக விழுத்தப்பட்ட சமூகங்கள் வாழ்கின்ற வன்னியை முழுமையாக மாற்றியமைக்க என்னுடைய முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டம் காலம் காலமாக பின்தங்கிய பகுதியாக இருக்கிறது. அந்த நிலை மாறவேண்டும்.
நாட்டின் ஆழமான ஒரு ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்.

விசேடமாக தமிழ்தேசத்தில் இழந்து போன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உரிமைகளையும் பெறுவதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும். அதனை நான் ஆளுனராக இருந்து ஏற்கனவே செய்திருக்கின்றேன். எமது மக்களை ஜனநாயகத்தின் பாதையிலே நடாத்திச்செல்வதற்கான வழிமுறைகளை கூட்டுமுயற்சியாக செய்யவேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை” என்றார்.

“இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வருவது நகைப்புக்குரியது.” – எஸ்.பி திஸாநாயக்க

ஜெனீவா விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் ஒரு போதும் இராணுவத்தை காட்டிக் கொடுக்காது. அதேநேரம் இலங்கையின் மனித உரிமை தொடர்பாக கருத்துரைக்கும் தார்மீக உரிமை மேற்குலக நாடுகளுக்கு இல்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் மனித உரிமை தொடர்பில் கருத்துரைப்பதற்கு மேற்குலக நாடுகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் எவ்வித மனித உரிமை மீறல் குற்றங்களும் நடைபெறவில்லை. 30 வருட யுத்தம் முடிவுக்குகொண்டு வரப்பட்டதன் பின்னர் 12 ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளுக்கு அரசாங்கம் புனர்வாழ்வளித்தது. இது உலகிற்கே சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக கருதப்பட்டது.

குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மனித உரிமை பேரவையின் சுயாதீனத்தன்மை கூட விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவையை கடுமையாக விமர்சித்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா பேரவையிலிருந்து வெளியேறியது. இவ்வாறான நிலையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வருவது நகைப்புக்குரியது. ஜெனீவா விவகாரத்தில் தீர்வு காண அரசாங்கம் இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது.

இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை வகுக்கப்படும். சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டும் என்பது அவசியம். அதற்காக நாட்டின் இறையான்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது” என்றார்.

“நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர-

நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என புலனாய்வு பிரிவினர் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
இப்ராஹிம் சகோதரர்களும் பல அமைப்புகளும் தாக்குதலை மேற்கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி வழங்கியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டாரை தளமாக கொண்ட நவ்பர் மௌவலி ஜஹ்ரான் ஹாசிமை தாக்குதலை மேற்கொள்ளுமாறு தூண்டினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய பிரஜைகளான லுக்மான் தலிப் லுக்மான் தலிப் அஹமட் என்ற இரு சகோதரர்கள் ஜஹ்ரான் ஹாசிம் மாலைதீவை சேர்ந்த நால்வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
2016 முதல் தாக்குதல் இடம்பெறும்வரை இவர்கள் ஜஹ்ரான் ஹாசிமை அடிக்கடி சந்தித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சேவ் த பேர்ல் என்ற அமைப்பு ஜஹ்ரான் ஹாசிமிற்கு சட்டரீதியான உதவிகளை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும்” – பிரிட்டனின் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை கடுமையாக சாடியுள்ள பிரிட்டனின் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் எட் டேவி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவம் மிகவும் தெளிவற்றது. சர்வதேச பொறுப்புக்கூறல் குறித்த வலுவான அர்ப்பணிப்பை கொண்டிராதது என லிபரல் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“1.ஆதாரங்களை சேகரித்து எதிர்கால விசாரணைகளிற்காக ஆவணங்களை தயாரிப்பதற்கா இலங்கை குறித்த உரிய சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்கவேண்டும்.
2.இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும்.
3.ஜனவரி 2012 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகளை தீர்மானத்த்தில் சேர்க்கவேண்டும்.” போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக நகல்வடிவில் மீண்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் படையினருக்கு எதிராக சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தவேண்டும் என்ற அவரது வேண்டுகோளை உள்ளடக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பயன்படுத்த பிரித்தானியா மறுப்பது பெரிதும் வருத்ததிற்குரியது ” – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பயன்படுத்த பிரித்தானியா மறுப்பது பெரிதும் வருத்ததிற்குரியது ” என  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியாவின் காரணத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புப் சபையில் இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முன்மொழிவு வந்தால், உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தடுப்பதிகாரத்தைக் கொண்டு தடுக்க வாய்ப்புள்ளது என பிரித்தானியா அரசாங்கத்தின்  தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, உரோம் உடன்படிக்கையில் இலங்கை ஒப்பமிட்டவில்லை என்பதால், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் மேலுரிமைக்கு இலங்கை உட்படாது என்றும், இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு போதுமான ஆதரவு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இல்லை என்பதும் பிரித்தானியாவின் நிலைப்பாடாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்துக் கேள்வியெழுப்பியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், “இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் இரையானவர்களுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பயன்படுத்த பிரித்தானியா மறுப்பது பெரிதும் வருத்ததிற்குரியது எனவும் தெரிவித்துள்ளது.

உரோம் உடன்படிக்கையில் இலங்கை ஒப்பமிட்டு ஒரு தரப்பாக இருந்திருந்தால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமே நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுப்பரிடம் சான்றியத்தை அளித்திருக்கும். மனித உரிமைப் பேரவையோ பிரித்தானிய அரசாங்கமோ இதில் தலையிட வேண்டி ஏற்பட்டிருக்காது.

எனவே, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் போதிய ஆதரவு இல்லையென்று பிரித்தானிய அரசாங்கம் கூறியிருப்பதானது, முற்றுமுழுதாக ஏற்கக்கூடியது அல்லவெனவும், ஒரு அவசரப் போக்கு.

அத்துடன், இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு, ஐ.நா. பாதுகாப்புச் சபைக்குள் எதிர்ப்பேதும் இருப்பதாக பிரித்தானியாவுக்குத் தகவல் கிடைத்திருந்தால், அதன் விவரங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும். ஐ.நா. பாதுகாப்புப் சபையில் தடுப்பதிகாரம் படைத்த உறுப்பு நாடு என்ற முறையில் பிரித்தானியாவுக்குள்ள நம்பகத்தன்மையைக் காக்க இது பெரிதும் பயன்படும்.

மேலும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் வேண்டுகோள் என்பது, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தடுப்பதிகாரம் கொண்டு தடுக்கப்பட்டாலும்கூட, அது, இலங்கையின் வடக்குக் – கிழக்குப் பகுதியில் மனிதவுரிமை உயராணையாளர் அலுவலகம் ஒன்றைத் திறப்பது போன்ற பிற தீர்மானப் பொருட்பாடுகள் மீதான உயராணையாளர் அலுவலகத்தின் மேலுரிமையை இல்லாமற்செய்து விடாது.

இதேவேளை, தற்போதைய வரைவுத் தீர்மானத்தில் உள்ளகூறுகள், இலங்கை அரசாங்கம் உள்ளகச் செயல்வழியைக் கடைப்பிடிக்கும் படி கோருகிறது. இதைவிட, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி, ஒருவேளை தடுப்பதிகாரத்தினால் தடுக்கப்பட்டாலும் பரவாயில்லை.

அத்துடன், கடுங்குற்றங்களைப் புலனாய்வு செய்து வழக்குத் தொடரும் பொறுப்பை, அதே இலங்கை அரசாங்கத்தின் கையில் ஒப்படைப்பது என்பது, குற்றஞ்சாட்டப்பட்டவரே ஒருபோதும் நீதிபதியாக முடியாது என்ற அடிப்படையான நீதிக் கொள்கையோடு அப்பட்டமாக முரண்படுவதாகும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது.

“அமைச்சரவையிலுள்ள விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தங்கள் இன வெறி, மத வெறி பிரசாரங்களைப் பகிரங்கமாகவே மேற்கொண்டு வருகின்றனர்” – ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு !

“அமைச்சரவையிலுள்ள விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தங்கள் இன வெறி, மத வெறி பிரசாரங்களைப் பகிரங்கமாகவே மேற்கொண்டு வருகின்றனர்” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

ஆனால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்றது முதல் என் மீதும், என் சமூகத்தின் மீதும் இல்லாத, பொல்லாத குற்றச்சாட்டுக்களை அரசிலுள்ள சிலர் சுமத்தி வருகின்றனர். அதில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமே ஆகியோரின் உளறல்கள் உச்சத்தில் உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர் 2 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டனர். அதில் 250 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மட்டும் தற்போது சிறைகளில் இருக்கின்றார்கள். ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். என்னையும் பல தடவைகள் அழைத்து விசாரணை செய்து சிறையில்  அடைக்க முயன்றனர். ஆனால், குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்க முடியாத சந்தர்ப்பத்தில் என்னை விடுவித்தனர்.

தேவையில்லாமல் என்னைச் சீண்டிப் பார்க்கும் அமைச்சர் விமலுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு செய்துள்ளேன். அடுத்த வாரம் அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கையையும் நாடவுள்ளேன். முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு தொடர்ந்து அடக்க முயன்றால் அதன் விபரீதங்கள் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மட்டத்தில் உச்சத்தில் இருக்கும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்” – என்றார்.