17

17

மியன்மாரில் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் – குழந்தைகள் உட்பட 138 பேர் உயிரிழப்பு !

மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அமைப்பின் பொது செயலாளரின் செய்தி தொடர்பு அதிகாரி ஸ்டெபானி டுஜார்ரிக் தெரிவித்துள்ளார்.

யாங்கூன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெருமளவிலானோர் லெயிங் தாயிர் பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த சனிக்கிழமை 18பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே மியன்மார் மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக நடந்து வரும் தொடர் வன்முறைக்கு ஐ.நா. பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மியன்மார் மக்களுக்கு ஆதரவாக ஓரணியில் திரள சர்வதேச சமூகத்திற்கு அவர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோன்று மியன்மார் நாட்டில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. பொது செயலாளருக்கான சிறப்பு தூதர் கிறிஸ்டைன் ஸ்கிரானெர் பர்கனெரும் நேற்று கடும் கண்டனம் வெளியிட்டார்.

கால்பந்து ஜாம்பவன் பீலேவின் சாதனையை முறியடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ !

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர், இத்தாலியில் உள்ள ஜுவன்டஸ் கிளப்புக்காக தற்போது விளையாடி வருகிறார்.

இத்தாலி கிளப் கால்பந்து போட்டி ஒன்றில் ஜுவான்டஸ்- காக்லியானி அணிகள் மோதின. இதில் ஜுவான்டஸ் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ரொனால்டோ 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இதன் மூலம் அவர் அதிகாரப்பூர்வ போட்டிகளில் ஜாம்பவன் பீலே (பிரேசில்) சாதனையை முறியடித்தார்.

இந்த 3 கோல்கள் மூலம் ரொனால்டோ 770 கோல்களை தொட்டார். அவர் பீலேவை முந்தினார். இந்த போட்டிக்கு முன்பு ரொனால்டோ அவரை சமன் செய்து இருந்தார். தற்போது பீலேவை முந்தி சாதனை படைத்துள்ளார்.

ரொனால்டோ கிளப் போட்டிகளில் 668 கோல்களும், போர்ச்சுக்கல் அணிக்காக 102 கோல்களும் அடித்துள்ளார். கிளப் போட்டிகளில் ரியல் மாட்ரிட்டுக்காக 450 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட்டுக்காக 118 கோல்களும், ஜுவான்டஸ் கிளப்புக்காக 96 கோல்களும், ஸ்போர்ட்டின் லிஸ்பன் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.

தனது சாதனையை முறியடித்த ரொனால் டோவுக்கு பீலே வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

“எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்” – ரவிசந்திரன் அஸ்வின்

“எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்” என இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் விளையாடாமல் உள்ள அஸ்வினிடம், எப்போது மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் அணிக்குள் திரும்புவீர்கள் என வினவிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று சொல்வார்கள். நான் என்னுடன் எப்படிப் போட்டியிட வேண்டும், முழு நிம்மதியுடன் இருக்கவேண்டும் என்பதை அறிந்துள்ளேன்.

ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு நான் எப்போது திரும்புவேன் என என்னிடம் கேட்பது நகைப்புக்குரியதாக உள்ளது. என் வாழ்வில் இப்போது நிம்மதியாக, மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது இப்போதுள்ள நிலையில் என்னால் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும் என நம்புகிறேன்.

மக்களின் கேள்விகளையும் அவர்களுடைய கருத்துகளையும் பற்றி நான் கவலைப்படவில்லை. எப்போதும் மைதானத்தில் விளையாடும்போதும் என்னிடமும் மற்றவர்களின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர விரும்புகிறேன்’ என கூறினார்.

34 வயதான அஸ்வின் இதுவரை 78 டெஸ்ட், 111 ஒருநாள் மற்றும் 36 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் காடழிப்பு – தடுப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் விசேட அதிரடிப் படையின் முகாம்கள் !

காடழிப்பு இடம்பெறுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சோமாவதி வனம், கிண்ணியா மற்றும் வன்னி பகுதிகள் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்களை ஸ்தாபிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் காடழிப்பு இடம்பெறும் இடங்களை தேடி அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கிளிநொச்சியில் மிகக்குறுகிய காலத்தில் அதிகளவான கொலைக்குற்றங்கள். கொலைக்குற்றவாளிகளை பாதுகாக்கிறதா காவல்துறை ..? ” – சி.சிறீதரன் கவலை !

மீள்குடியேற்றத்தின் பின்னரான பத்துவருட காலப்பகுதியில் தங்கள் நிருவாக எல்லைக்குட்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதும், அக் கொடூர கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இனங்காணப்படாமலும், இனங்காணப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படாமலும் உள்ளமை இறந்தவர்களின் குடும்பங்களிடையே உளரீதியான தாக்கத்தையும், மக்களிடையே காவல்துறை மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

1.இல.935, சிவிக்சென்ரர், வட்டக்கச்சியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான திரு.அருளம்பலம் துசியந்தன் (வயது.34) அவர்கள் கடந்த 2021.03.10 ஆம் திகதி மாலை அவரது வீட்டில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களின் கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 2021.03.11ஆம் திகதி மரணமடைந்துள்ளார். இவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ள போதும் அக் கொலையாளிகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் 2021.03.15 ஆம் திகதி கொலையாளிகளின் வீட்டிற்குப் காவல்துறையினர் சென்றதை அவதானித்து அங்கு சென்றிருந்த ஊரவர்களும், இறந்தவரின் மனைவியான திருமதி. தீபா துசியந்தன் (வயது.34), இறந்தவரின் சகோதரியான திருமதி. வசிதினி தீபன் (வயது.33), அவர்களது அயலவரான செல்வி. பிரவீனா தங்கேஸ்வரன் (வயது.20), இறந்தவரின் மைத்துனரான திரு. குகதாசன் ஜனகன் (வயது.40) ஆகியோர் தருமபுரம் காவல்துறையினரால் துப்பாக்கிகளாலும், குண்டாந்தடிகளாலும் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் காணொளி வடிவில் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்ததை தாங்களும் அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே ஒரு உயிரை அநியாயமாகப் பலிகொடுத்துவிட்டு ஆற்றாமையின் விளிம்பில் நிற்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அதிலும் குறிப்பாக பெண்களை அவர்கள் கண்ணீரோடு கதறியழுததையும் பொருட்படுத்தாது கடுமையாக தாக்கிய காவல்துறையினரின் ஈவிரக்கமற்ற இச்செயல் அப்பகுதி மக்களிடையே பாரிய அச்ச நிலையையும், காவல்துறையினர் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் தருமபுரம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட இவ் அராஜகச் சம்பவம், இந்த மண்ணில் கடந்த எழுபது ஆண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு ஆரம்பத்தில் அடித்தளமிட்ட காவல்துறையினரின் இனவெறிச் செயற்பாடுகளை எமக்கும், பாதிக்கப்பட்ட எம்மின மக்களுக்கும் நினைவுபடுத்தும் வகையிலான மோசமான செயற்பாடகாவே அமைந்திருந்தது என்பதை தங்களுக்கு மனவருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2.கடந்த 2021.03.09 ஆம் திகதி கிளிநொச்சி, அம்பாள் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 37 வயதான திருமதி. திலகேஸ்வரி காமராஜ் அவர்கள் கொலைசெய்யப்பட்டே மரணமடைந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அக் கொலையாளியோ, சம்பவத்துடன் தொடர்புடையவர்களோ இதுவரை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படவில்லை.

3.10 வீட்டுத் திட்டம், மாயவனூர், வட்டக்கச்சியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான திருமதி. நிறோசா பாஸ்கரன் (வயது.24) அவர்கள் கடந்த 2018.02.14 ஆம் திகதி குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரான திரு.யோகராஜா பாஸ்கரன் என்பவரால் கொலைசெய்யப்பட்டு இற்றைக்கு மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலையாளிக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை. இக் கொலையாளியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே திரு.அருளம்பலம் துசியந்தன் அவர்களின் கொலையுடன் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4.வட்டக்கச்சிப் பகுதியில் 2012 ஆம் நடைபெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றவாளிக்கும் இதுவரை தண்டனை வழங்கப்படாத நிலையில் மிகக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட அவர்களும் தற்போது சமூகத்தில் சாதாரண மனிதர்கள் போன்று நடமாடுவதை அவதானிக்க முடிகிறது.

5.இல.06, 30 வீட்டுத் திட்டம், உதயநகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான திரு.நாகராசா திருக்குமார் அவர்கள் கடந்த 2017.05.16 ஆம் திகதியன்று அவரது வீட்டில் வைத்து வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். குறித்த சம்பவத்தில் அவரது மனைவியான திருமதி.கிருஸ்ணவேணி திருக்குமார் அவர்களும் பலத்த காயமடைந்திருந்த போதும் இதுவரை அக்கொலைக்குரிய நீதியோ, கொலையாளிக்குரிய தண்டனையோ வழங்கப் படவில்லை.

6.கடந்த 2019.07.30 ஆம் திகதி ஜெயந்திநகர்ப் பகுதியில் 74 வயதான தாயும், 34 வயதான மகனும் அவர்களது அயல் வீட்டுக்காரரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டு கொலையாளி கைதுசெய்யப்பட்ட போதும் இன்றளவும் அவ் இரட்டைக் கொலையைப் புரிந்தவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.

7.சங்கத்தார் வயல், இயக்கச்சி, பளையைச் சேர்ந்த திரு.தங்கராஜா தர்மலிங்கம் (வயது.57) அவர்கள் கடந்த 2019.10.29 ஆம் திகதியன்று குறித்த பகுதியில் அடித்தும், வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்த போதும் அக்கொலைக் குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்கப்படவில்லை.

இவைதவிர குறுகிய கால இடைவெளியில் மிக அதிகமான கொலைச் சம்பவங்கள் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ள போதும் அக்குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்குவதிலும், தமது உறவுகளின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதிலும் காவல்துறையினரின் கரிசனை போதுமானதாக இல்லை என்பதே மக்களின் பொதுவான அபிப்பிராயமாக உள்ளது.

அதேவேளை இக் குற்றங்களுக்கான தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்படாமை குற்றவாளிகளை துணிகரமாக மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கப்பதாகவே அமைந்துள்ளது. எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈடுசெய்ய முடியாத உயிரிழப்புக்களால் பாதிப்படைந்துள்ள கொலையுண்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

“புர்காவைத் தடை செய்வது சட்டவிரோதம் என கூற முடியாது ஏனெனில் பிரான்ஸில்கூட பொதுவெளியில் புர்கா அணிய முடியாது” – கல்வி அமைச்சர்

“புர்காவைத் தடை செய்வது சட்டவிரோதம் என கூற முடியாது ஏனெனில் பிரான்ஸில்கூட பொதுவெளியில் புர்கா அணிய முடியாது” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, அந்த அறிக்கையிலுள்ள முக்கிய விடயங்கள் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை உட்பட அனைத்து இணைப்புகளும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எம்மிடம் ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை. எனினும், தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்கள் வெளிப்படுத்தப்படமாட்டாது.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் சிறந்த பெறுபேறு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம்.  அதன்மூலம் நம்பிக்கை ஏற்படும்.  தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க மாட்டோம். எவருக்கும் வெள்ளையடிப்பு செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லை. உண்மை கண்டறியப்படும். உரிய சட்ட நடவடிக்கை இடம்பெறும்.

அதேவேளை, ஷரியா சட்டம் தவறான அறிவிப்பு மட்டுமல்ல பயங்கரமானது. இந்நாட்டில் தனியார் சட்டங்கள் இருந்தாலும் அவை நாட்டின் பொதுசட்டத்துக்கு கட்டுப்பட்டவை. எனவே, நாட்டின் சட்டத்தை ஏற்கமுடியாது எனக் கூறுவது சட்டவிரோதமாகும். அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

புர்காவைத் தடை செய்வது சட்டவிரோதம் எனச் சிலர் கூறுகின்றனர். அவ்வாறு அல்ல. பிரான்ஸில்கூட பொதுவெளியில் புர்கா அணிய முடியாது. புர்காவைத் தடைசெய்வதற்கு புதிய சட்டம் இயற்றுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் உள்ளது – என்றார்.

“சிங்கள ஊடகத்தில் வெளியான செய்தியின் உண்மைத்தன்மையை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்” – எம்.ஏ.சுமந்திரன்

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்று தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.

அந்தச் செவ்வியில் பஸில் ராஜபக்‌ச தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தான் வழங்கிய பதில்களை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்‌சவுக்குத் தாம் ஆதரவளிப்பதாகக்  கூறியதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக சுமந்திரன் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

43 நிமிடங்களைக் கொண்ட அந்தச் செவ்வியில் பஸில் ராஜபக்ச தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களை வாசித்து செய்தியின் உண்மைத்தன்மையை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள இணையத்தளத்துக்கு சிங்கள மொழியில் அவர் வழங்கிய செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களின் தமிழ்மொழி பெயர்ப்பை சுமந்திரன் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

SLVLOG என்ற இணையத்துக்கு அண்மையில் சிங்கள மொழியில் கொடுத்த பேட்டியில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்சவுக்கு நாம் ஆதரவளிப்போம் என்று நான் கூறியதாக செய்திகள்  வெளியாகியுள்ளன.

இது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப் பேட்டியின் முழுமையான காணொளியும் இத்துடன் இணைக்கப்படுகின்றது. இதில் 41.15ஆம் நிமிடத்திலிருந்து 43ஆம் நிமிடம் வரை இவ்விடயம் பேசப்படுகின்றது.

இவற்றை வாசித்து/ செவிமடுத்து இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

நன்றி,
எம்.ஏ.சுமந்திரன்.

கேள்வி:- 2024/2025 இல் எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகிய இரு வேட்பாளர்களில் உங்கள் விருப்பு யாராக இருக்கும்?
பதில்:- தற்போது அதனைக்கூற இயலாது

கேள்வி:- நிகழ்கால நிலமையின் அடிப்படையில்?
பதில்:- இந்த காலகட்டத்தில் எமது தெரிவு சஜித்தாகவே இருக்கும். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதும் இரு தரப்பினரோடும் பேச்சு நடத்தினோம். அதன்போது சஜித்தே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இணங்கியதோடு அவரின் தேர்தல் அறிக்கையிலும் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேள்வி:- சஜித் பிரேமதாஸவுக்கு நிகராக பஸிலும் முற்போக்கு சிந்தனை உடையவராகக் காணப்படுகின்றார். அவ்வாறான சூழ்நிலையில் உங்கள் நிலைப்பாடு?

பதில்:- எனக்கு அக்கருத்தோடு உடன்பாடில்லை. அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்திலேயே ‘திவிநெகும’ எனும் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக பிரதேச சபையின் அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்திருந்தார். எனவே, அதிகாரப்பகிர்வு தொடர்பாக அவருக்குச் சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் காணவில்லை.

கேள்வி:- உங்களுக்கு சஜித் பிரேமதாஸ அதிகாரங்களைப் பகிர்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?
பதில்:- அவர் அதிகாரப் பகிர்வுக்கு இணங்கியுள்ளார். இருப்பினும் இது நிகழ்கால சூழ்நிலையே, 2024/2025 இன் போது பஸிலும் அதிகாரப் பகிர்வுக்கு இணங்குவாரானால், அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியிலும் இதனைப் பிரச்சாரப்படுத்தினால்….

கேள்வி:- சஜித் மூலமாக அல்லாது பஸிலின் மூலமாகவே இதனை அடைவது இலகுவல்லவா?
பதில்:- அவர் இணங்குவாராயின் அது இலகுவாக இருக்கும். இதனை நான் கோட்டாபய ராஜபக்சவிடமும் தெரிவித்திருந்தேன். “நீங்கள் தீர்வுக்காக முயற்சி செய்தால் தீர்வை அடைய முடியும். உங்களை சிங்கள மக்களுக்கு எதிராகத் தொழிற்படுவதாக யாரும் குற்றப்படுத்தமாட்டார்கள்” என்று கோட்டாபய ராஜபக்சவிடம் நான் கூறியிருந்தேன். அவரும் அதனை ஒத்துக்கொண்டார். ஆம் என்னால் முடியும் என்று அவர் ஏற்றுக்கொண்டாலும் அதனை இதுவரை செய்யவில்லை.

கேள்வி:- ஏன் அவர் அதனைச் செய்யவில்லை?
பதில்:- அவருக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அதனடிப்படையில் அவர் இதனைச் செய்யவில்லை.

நன்றி சுமந்திரனே. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரயாணத்தின் இடையில் இந்தச் செவ்விக்காக நேரத்தைத் தந்தமைக்கு மீண்டும் தங்களுக்கு நன்றி – என்றுள்ளது.

என குறித்த முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.