22

22

பொலிஸ் நிலையத்தில் வைத்து மனைவி மீது அசிட் வீசிய கணவன் !

பொலிஸ்  நிலையத்தினுள் வைத்து தனது கணவனால் மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலால் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான பெண் ஒருவர் காலி –கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிப்பக்கட்டுள்ளார்.

காலி – உடுகம பொலிஸ்  நிலையத்தினுள் வைத்து நேற்றுக் இந்த அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்ப தகராறு தொடர்பான முறைப்பாடொன்றை விசாரிக்க மேற்படி தம்பதியினர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அசிட் தாக்குதலுக்கு உள்ளான மனைவிக்கு 28 வயது என்றும் கணவனுக்கு 32 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அசிட் தாக்குதலில் பொலிஸ்  அதிகாரி ஒருவரும் எரிக்காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சந்தேகநபரான கணவர் கைது செய்து, உடுகம நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இத்தம்பதியினரிடையே நீண்டகாலமாக குடும்பத்தகராறு இடம்பெற்றுவந்ததால் குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி வேறோரு நபருடன் வசித்து வந்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று முன்தினம் (20) அப்பெண்ணின் கணவர் உடுகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டுக்கமைய, மனைவி அன்றைய தினம் மாலை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதற்கமைய, கணவனும் மனைவியும் நேற்றுக் காலை உடுகம பொலிஸ்  நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதன்போது, அசிட் போத்தலொன்றை மறைத்து எடுத்து வந்திருந்த சந்தேக நபரான கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

“நாளைய தினம் ஐ.நா.பிரேரணை நிறைவேற்றப்படும் என்ற நல்ல செய்தியை மக்கள் அறிவார்கள்” – எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை !

“நாளைய தினம் ஐ.நா.பிரேரணை நிறைவேற்றப்படும் என்ற நல்ல செய்தியை மக்கள் அறிவார்கள்” என நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (22.03.2021) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன், இந்த பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என இயன்றவரை இலங்கை அரசாங்கம் போராடி வருகின்ற நிலையில் அவர்களுடன் இணைந்து ஒரு சில தமிழ் தரப்புக்களும் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பிரேரணையில் வலு கிடையாது பிரயோசனமற்றது என கூறி வாக்களிக்கும் நாடுகளின் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தி வருவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

சர்வதேச தளம் ஒன்றில் இலங்கையை தொடர்ந்தும் மேற்பார்வை செய்வதாக இருந்தால் இந்த பிரேரணை நிச்சம் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன்படி நாளைய தினம் பிரேரணை நிறைவேற்றப்படும் என்ற நல்ல செய்தியை மக்கள் அறிவார்கள் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“நாட்டு மக்களுக்கான அபிவிருத்தி பணிகளையும் எதிர்தரப்பினர் அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்வது கவலைக்குரியது” – அமைச்சர் விமல் வீரவன்ச

“நாட்டு மக்களுக்கான அபிவிருத்தி பணிகளையும் எதிர் தரப்பினர் அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்வது கவலைக்குரியது” என கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றுள்ளது. கொவிட்-19 வைரஸ் தாக்கம் குறுகிய காலத்தில் பாரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த திட்டமிடலின் ஊடாக அனைத்து சவால்களும் வெற்றிக் கொள்ளப்பட்டு நாடு தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.

அரசியல் மற்றும் சமூக களத்தில் காடழிப்பு விவகாரம் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. வெளிநாடுகளில் அழிக்கப்பட்டுள்ள காடுகளின் புகைப்படங்களை கொண்டு தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வில்பத்து காடு அரசியல்வாதிகளினால் திட்டமிட்டு அழிக்கப்படும் போது அதற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் இன்று இயற்கையை பாதுகாக்கும் சூழலியலாளர்களாக அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.

வனப்பகுதிகளை அண்மித்த பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது அதனையும் சுற்றுசூழல் அழிப்பு செயற்பாடு என போர்கொடி தூக்குகிறார்கள். ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல் செயற்திட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எதிர் தரப்பினர் அப்போதைய அரசாங்கத்துக்கு எதிராக இவ்வாறான பல குற்றசாட்டுக்களை முன்வைத்தார்கள். போலியான குற்றச்சாட்டுக்கள் அப்போது வெற்றியீட்டியது. அவ்வெற்றியும் நெடுநாள் நீடிக்கவில்லை.போலியான குற்றச்சாட்டுக்களினால் இனி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

இயற்கை வளங்கள் ஏதும் அழிக்கப்படவில்லை. சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்தில் இயற்கையினை பாதுகாக்க குறிப்பிடப்பட்ட விடயங்கள் பல தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டு மக்களுக்கான அபிவிருத்தி பணிகளையும் எதிர் தரப்பினர் அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்வது கவலைக்குரியது என்றார்.

“தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் அடிப்படைவாத கொள்கைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு சில உறுப்பினர்கள் ஈர்க்கப்பட்டுள்ளார்களா” – அட்மிரல் சரத் வீரசேகர சந்தேகம் !

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் அடிப்படைவாத கொள்கைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு சில உறுப்பினர்கள் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் .? என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

மாளிகாகந்த விகாரையில் இடம்பெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21குண்டுத்தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செயற்பட்டுள்ளார். இவ்விடயம் குறித்து விசாரணைகளில் வாக்குமூலம் வழங்க நேரிடும் என்பதில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அச்சம் கொண்டுள்ளார்.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இப்ராஹிம் என்பவர் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செயற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின் கொள்கைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு சில உறுப்பினர்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் காணப்படுகிறது.

சிலைகளை வழிபடுபவர்கள் கோத்திரர்கள் என மக்கள் விடுலை முன்னணியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அண்மையில் குறிப்பிட்டுள்ளார். சிலைகளை வழிபடுபவர்களுக்கு எதிராக செயற்பட்ட சஹ்ரான் போன்ற அடிப்படைவாதிகளின் கொள்கைக்கு ஈர்க்ப்பட்டவர்கள் சிலை வழிபாடுகளுக்கு எதிராக கருத்துரைப்பவர்களாக கருதப்படுவார்கள்.

3 சதவீத மக்களாணையினை பெற்றுள்ள மக்கள் விடுதலை முன்னணிக்கு இனி மக்களின் ஆதரவு ஒருபோதும் கிடைக்கப் பெறாது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் யோசனைகளை துரிதகரமாக செயற்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“எனது தேசிய நல்லிணக்க அரசியல் ஒரு வலுவான நிலையில் இருப்பதனால் தமிழ்மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகள் வருகின்ற போது அதனை தீர்க்க முடிகின்றது” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“எனது தேசிய நல்லிணக்க அரசியல் ஒரு வலுவான நிலையில் இருப்பதனால் தமிழ்மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகள் வருகின்ற போது அதனை தீர்க்க முடிகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் அன்மையில் இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரணைதீவில் கொரோனாவால் இறந்தவர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்தியைமை, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காரியாலயத்தை அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்ல எடுக்கப்பட்ட முயற்சியை தடுத்து நிறுத்தியமை, தீவகத்தின் சில தீவுப்பகுதிகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களை சீன நிறுவனங்களுக்கு வழங்கியமையை இடைநிறுத்தியமை தொடர்பாக வினவப்பட்டபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அந் நிகழ்ச்சியில் மேலும் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெறவில்லை. இதனால் இந்த அரசாங்கத்தின் கொள்கை ஒரு பேரினவாதத்தை ஊக்குவிக்கின்ற அல்லது பேரினவாதிகளின் விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துகின்ற கொள்கையாக இருக்குமென நினைத்துக்கொண்டு சில அரசியல்வாதிகளும் அதிகாரம் படைத்த அதிகாரிகளும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட காலம் முதல் இன்றுவரை நான் மூன்று விடயங்களை வலியுறுத்தி வருகிறேன். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் தீர்க்கவேண்டுமாகவிருந்தால் நாங்கள் தேசிய நீரோட்டத்தில் பங்கெடுக்கவேண்டும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கலந்துகொள்ளவேண்டும் அத்தோடு தேசிய நல்லிணக்கத்தோடு செயற்படவேண்டும் என்பதே அவையாகும்.

ஆனால் அன்றைக்கு இருந்தவர்கள் அல்லது அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் எனது கருத்து எதிரான, நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரு கருத்தையும் செயற்பாட்டையுமே கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று எமது மக்களும் நாடும் சர்வதேசமும் எது சரி எது பிழை என்பதை உணர்ந்திருக்கின்றனர்.

அந்தவகையில் எனது தேசிய நல்லிணக்க அரசியல் ஒரு வலுவான நிலையில் இருப்பதனால் எமது மக்களை பாதிக்கின்ற ஒரு பிரச்சினை வருகின்றபோது அதனை நான் அரசாங்கத்திடம் எடுத்துச்செல்கின்றபோது அதற்கு தீர்வு கிடைக்கின்றது. அந்தவகையில்தான் இரணைதீவில் கொரோனாவால் இறந்தவர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்த முடிந்ததோடு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காரியாலயத்தை அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்ல எடுக்கப்பட்ட முயற்சியையும் நிறுத்தமுடிந்தது.

அத்தோடு, தீவுப்பகுதிகளில் சீன நிறுவனத்தால் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களை இடைநிறுத்த முடிந்ததும் இந்த தேசிய நல்லிணக்க அரசியல் மூலமாகத்தான் எனக்குறிப்பிட்டார்.