23

23

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி – வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா !

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் தவான் 98 ஓட்டங்களையும் , விராட் கோலி 56 ஓட்டங்களையும் , கே.எல் ராகுல் 62 ஓட்டங்களையும் , குருணால் பாண்ட்யா 58 ஓட்டங்களையும் பெற இந்தியா 50 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்கு இழப்பிற்கு 317 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் 318 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பேர்ஸ்டோவ் 40 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜேசன் ராய் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஜேசன் ராய்- பேர்ஸ்டோவ் ஜோடி முதல் இலக்குக்கு 135 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ஓட்டத்துடன் ஏமாற்றம் அளித்தார்.
இரண்டு இலக்கு வீழ்ந்தாலும் மறுமுனையில் பேர்ஸ்டோவ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 94 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இங்கிலாந்து இலக்குகள் மளமளவென சரிந்தது. மோர்கன் 22 ஓட்டங்களிலும், பட்லர் 2 ஓட்டங்களிலும், சாம் பில்லிங்ஸ் 18 ஓட்டங்களிலும், மொயீன் அலி 30 ஓட்டங்களிலும், சாம் கர்ரன் 12 ஓட்டங்களிலும் வெளியேற இங்கிலாந்து 42.1 பந்துப்பரிமாற்றங்களில் 251 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 8.1 பந்துப்பரிமாற்றங்களில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

“தமிழ் இன அழிப்பைக் கட்டுப்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுவப்பட வேண்டும்” – ஐ.நாவில் சுரேஷ் பிரேமச்சந்திரன்!

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பைக் கட்டுப்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுவப்பட வேண்டும்.என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பிரான்ஸில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இணையவழி ஊடாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட அறிக்கையாளர் ஒருவர் இலங்கைக்கு நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் சிங்கள அரசு 72 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் உரிமைகளை மீறி வருகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேநேரம், இலங்கை மீது பல்வேறு ஐ.நா. பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இருந்தாலும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் எதையும் இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடை சட்டம் , தண்டனை சட்டக் கோவைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணை !

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று இந்த விடயம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் சி.ஐ.டி.யினர் பீ அறிக்கையை சமர்ப்பித்து இதனை அறிவித்துள்ளனர்.

கடந்த 2020 ஓகஸ்ட் மாதம், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்தார்.

குறித்த கருத்துக்கள் இனங்களிடையே, நாட்டில் குழப்பத்தை தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருந்ததாக கூறி, முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பயங்கரவாத தடை சட்டம், சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவைகளின் கீழ் இவ் விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி.யினர் நீதவானுக்கு அறிவித்துள்ளனர்.

“இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்த ,இந்தியா ஈழத்தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டது” – வைகோ காட்டம் !

“ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நா.மனித உரிமகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே இந்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்துள்ளார்கள் என குற்றம் சாட்டிய வைகோ, இல்லையேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள் என்றும் சாடியுள்ளார்.

“இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கே தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியாத தமிழ் தலைமைகள் முஸ்லீம்களின் ஜனாசாவை அடக்கம் செய்யகோரி  ஆர்ப்பாட்டம் செய்தமை வேடிக்கையானது” – சிங்களே அப்பி சங்கிவிதான அமைப்பு

“இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கே தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியாத தமிழ் தலைமைகள் முஸ்லீம்களின் ஜனாசாவை அடக்கம் செய்யகோரி  ஆர்ப்பாட்டம் செய்தமை வேடிக்கையானது”  என சிங்களே அப்பி சங்கிவிதான அமைப்பின் தலைவர் யம்புர ரேவல சந்திரரத்ன தேரர் தெரிவித்தார்.

அப்பி சங்கிவிதான அமைப்பின் தலைவர் யம்புர ரேவல சந்திரரத்ன தேரர் தலைமையிலான தேரர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கிழக்கு மாகாண இணைப்பாளர், கோல்டன் பொனாண்டே குழுவினர் தமிழ் மக்களின் பிரச்சனைகள் மற்றும் இனநல்லுறவு தொடர்பான 3 நாள் விஜயம் ஒன்றை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்டனர்.

இதன்போது அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் இந்து மயானம் அபகரிப்பு தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட தோரர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரித்தார்.

குறித்த பிரதேசத்திலுள்ள சுமார் 1200 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் உறவினர்களை உயிரிழந்தவர்களை அந்த பகுதியிலுள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்து மயானத்தில் சடலங்களை புதைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு அந்த இந்து மயானத்தை முஸ்லீம் நபர் ஒருவர் தனது காணி என போலி காணிப் பத்திரத்துடன், உரிமைகோரி இந்து மயானத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பகுதியை மயானத்தின் நடுவே கம்பிவேலி அமைத்து அபகரிக்க முற்பட்டவேளை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தவேளை மயானத்தை உரிமைகோரிய முஸ்லீம் நபரை தாக்கியதாகவும் அதற்கு உறுதுணையாக இருந்த அரச அதிகாரிகளை கடமைசெய்ய விடாது தடுத்ததாகவும் அந்த அப்பாவி பொதுமக்கள் 21 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் இரண்டு வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பூர்விகமாக வாழ்ந்துவரும் இந்த தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளை அடக்கம் செய்து வந்த இந்த மயானத்தை முஸ்லீம் நபர் அபகரித்துள்ளமை கண்டிக்கத்தக்கது அதேவேளை இந்த தமிழ் மக்கள் தமது இறந்த உறவுகளின் உடல்களை புதைக்கமுடியாமல் கடந்த 3 வருடங்களாக இருந்துவருகின்ற நிலையில் தமது தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய தமிழ் தலைமைகள் அதனை செய்யாது சர்வதேசத்திற்கு எமது நாட்டினை இக்கட்டுக்குள்ளகவே முன்வருகின்றனர்.

கிழக்கு மாகாணம் தான் கள்ள உறுதி வியாபாரம் செய்யும் பிரதானமான மர்ம இடமாகவுள்ளதுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் கள்ளமாக உறுதிமுடிப்பவர்கள் என நாங்கள் சில தினங்களில் மேற்கொண்ட கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.

முஸ்லீம் இன உத்தியோகத்தர்களுக்கு மிக தெளிவாக கூறுகின்றோம் பல பிரதேச செயலாளர்கள் அதற்கு கீழ்உள்ள உத்தியோகத்தர்களும் வேறு அரச திணைக்களங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும் இணைந்து குழுவாகத்தான் இந்த காணி வியாபாரத்தினை மேற்கொள்கின்றார்கள். இவ்வாறு தமிழ் மக்களுடைய இடங்களை பறித்தெடுக்கின்றார்கள். தமிழ் மக்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்ற எந்த அரசியல்வாதிகளும் இவர்களுக்காக முன்வருவதில்லை.

இவ்வாறு தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தமிழ் அரசியல் வாதிகள் தீர்த்து வைக்காது கொரோனாவில் உயிரிழந்த முஸ்லீம் மக்கள் உடல்களை புதைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தனது இனம் தன்னுடைய மதம் தன்னுடைய மக்களுக்கான இறந்த உடல்களை புதைக்கும் இடத்தினை பாதுகாத்து அவர்களுக்கு வழங்க முடியாத மக்கள் பிரதிநிதிகளால் ஏதேனும் பயன்கள் இருக்கின்றதா என்ற கேள்வியை கேட்கின்றேன்.

எனவே அரசாங்கம் சட்டரீதியாக பரம்பரைபரம்பரையாக தங்களது உறவினரது சடலங்களை புதைத்துவந்த இந்த மயானத்தை பலவந்தமாக பறித்து கள்ள உறுதி முடிக்கும் இந்த வியாபாரத்தை மேற்கொள்ளும் இவர்களை கைது செய்யவேண்டும் என்பதுடன் ஜனாதிபதி, கிழக்குமாகாண ஆளுநர், அவர்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் இந்த தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பாரதூரமான காணிப் பிரச்சனைக்கு தீர்வுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே நாம் மீண்டும் இந்த பிரதேசத்திற்கு பயணிக்கும்வேளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்தெடுத்த காணிகளை எவ்வித பிரச்சனைகளுமின்றி இவர்களுக்கு வழங்குவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் இந்த இரவு வேளைகளில் கட்டப்பட்ட கம்பிவேலி மற்றும் கட்டடம் அனைத்தையும் அகற்றுவதற்கு மகா சங்கத்தினர் இருமுறை யோசிப்பதில்லை நாங்கள் முன்னின்று வேலிகளை அகற்றி கட்டிடங்களை அகற்றி இதனை மயானமாக மாற்றுவித்ததன் பின்னர். இதற்கு எதிராக செயற்பட்டுள்ளீர்கள் என சட்டப் புத்தகங்களையும் சட்டங்களையும் எடுத்துக் கொண்டு வரவேண்டாம். என்றார்.

இலங்கை மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் கெனெத் ரொத் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது;
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இலங்கை மக்களுக்கு பெரும் வெற்றி. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை 22க்கு 11 என்ற அடிப்படையில் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கான எந்த பொறுப்புக்கூறலும் இல்லை என்பதை மனித உரிமை பேரவை அங்கீகரித்துள்ளதுடன் ராஜபக்ச அரசாங்கத்தை தொடர்ந்தும் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் !

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இன்று இலங்கை குறித்த தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.

இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பதிவிட்டுள்ள  ட்விட்டர் பதிவில், ‘ஜெனிவா மாநாட்டில் ஆதரவளித்த பஹ்ரைன், இந்தியா, ஜப்பான், நேபாளம், இந்தோனேசியா, லிபியா, சூடான், நமீபியா, காபோன், டோகோ, மவுரிடானியா, செனகல், கமெரூன், பர்கினோ ஃபாசோ ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. எக்காரணம் கொண்டும் இந்தத் தீவை இந்தியாவுக்குத் தாரைவார்க்கமாட்டோம்.” – அமைச்சர் விமல் வீரவன்ச

“கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. எக்காரணம் கொண்டும் இந்தத் தீவை இந்தியாவுக்குத் தாரைவார்க்கமாட்டோம்.” என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப்பெறுவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றோம் என்று அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அன்று இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்த கச்சதீவை, இந்திய மத்திய அரசு, ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு முழுமையாக வழங்கிவிட்டது. இந்தநிலையில், இன்று இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை உரிமை கோருவதை நினைக்கும்போது வேடிக்கையாகவுள்ளது.

ஒப்பந்தத்தின்படி கச்சதீவிலுள்ள அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இரு நாட்டு மக்களும் ஒவ்வொரு வருடமும் கலந்துகொள்வார்கள். தமிழக மீனவர்களும் இந்தத் தீவில் தங்கித் திரும்புவார்கள்.

அதற்காக இலங்கையின் சொத்தான கச்சதீவை இந்தியாவுக்கு நாம் தாரைவார்க்கமாட்டோம். தமிழக மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதி வழங்கமாட்டோம் ” என்றார்.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

11 மேலதிக வாக்குகளால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் - Jvpnews

அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்ட அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

குறிப்பாக இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லிபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.

“ராஜ பக்சக்களின் அரசு தமிழ், முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே புறந்தள்ளி அவர்களின் மத, கலாசார உரிமைகளில் கைவைத்துள்ளது” – சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

“ராஜ பக்சக்களின் அரசு தமிழ், முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே புறந்தள்ளி அவர்களின் மத, கலாசார உரிமைகளில் கைவைத்துள்ளது” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த நல்லாட்சி அரசு நூறு வீதம் திறன் என்று சொல்ல வரவில்லை. ஆனால், அந்த ஆட்சியில் சர்வதேசத் தலையீடுகள் இருக்கவில்லை. சர்வதேசத்துடன் இணைந்து நாடு பயணித்தது. ஆனால், இந்த ஆட்சியில் சர்வதேசத் தலையீடுகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. ராஜபக்ச அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே இதற்குக் காரணமாகும்.

நாட்டிலுள்ள மூவின மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டிய அரசு, தமிழ், முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே புறந்தள்ளி வைத்துள்ளது; அவர்களின் மத, கலாசார உரிமைகளில் கைவைத்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள்தான் இலங்கை மீதான சர்வதேசத்தின் தலையீடுகளை அதிகரிக்கச் செய்துள்ளன என தெரிவித்துள்ளார்