25

25

“அரசு தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐ.நா. தீர்மானம் தோற்றுவிட்டது என்கிறது” – மனோ கணேசன்

“அரசு தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐ.நா. தீர்மானம் தோற்றுவிட்டது என்கிறது” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரசாங்கம் கூறியுள்ள கணக்குப்படி ஐ.நா. வாக்கெடுப்பில் இலங்கை தோற்கடிக்கப்படவில்லை என்றால், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவும் வெற்றிபெறவில்லையென்றேக் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து தனது உத்தியோப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், சிங்கள மக்களுக்கு இந்த விடயம் குறித்து எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் தான் கடமைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை கண்காணித்து, இலங்கை குறித்து வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபரிலும் எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி அல்லது மார்ச்சிலும் சமர்ப்பிக்கும்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை கோரியுள்ளது

இதையடுத்து, இலங்கை திருந்தாவிட்டால் பொறுப்பு கூறல் தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும் அந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. இதனை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் இன்று கண்ணை கட்டி கணக்கு வித்தை காட்டுகிறது என  விமர்சித்துள்ள மனோ, தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐ.நா. தீர்மானம் தோற்றுவிட்டது என கூறுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்ற வாக்குகள் சுமார் 69 இலட்சம்.  அவருக்கு எதிராக வாக்களித்த, வாக்களிக்காத, ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை சுமார் 90 இலட்சமாகும்.

ஆகவே வாக்களிக்காதவர்களும் நம்மவரே என்ற அரசாங்கத்தின் கணக்கின்படி, கோட்டாபய ராஜபக்ஷ உண்மையில் தோல்வியடைந்துள்ளார் என தெரிவித்துள்ளார். ஆகவே அவர் அரசியலைவிட்டு வீட்டுக்கு போக வேண்டுமோ? என்ற கேள்வியை வெளிவிவகார அமைச்சர், தினேஷ் குணவர்தனவிடம் கேட்க விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக பன்னிரெண்டு விசேட ஊழியர்கள், இலங்கை கண்காணிப்பு தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க சுமார் 29 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அலுவலகம் ஐநா பொதுசபையை கோரியுள்ளது.

இதன்மூலம், சாட்சியம், தகவல் ஆகியவற்றை சேகரிக்கும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை அலுவலகம் ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பு கூறல், நீதி விசாரணை, தண்டனை, நஷ்டஈடு, காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாக செயற்படல், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்,பன்மைத்துவம் ஏற்பு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் இனியும் சர்வதேசத்துடன் முரண்பட முடியாது என்றும் மனோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய பிற்போக்கு அரசியல் விளையாட்டுக்கு இனி கால அவகாசமும் இல்லை என்றும் அதற்கு இது உள்நாட்டு மைதானமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“வடக்கில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” – நாடாளுமன்றில் வலியுறுத்தல் !

“வடக்கில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் சபையில் நேற்று வலியுறுத்தினர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

குறிப்பாக கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளால் அங்குள்ள மக்கள் மிகவும் கோபாவேசமடைந்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் இது தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளில் தொல்லியல் துறையினரை விடவும் இராணுவத்தினரே அதிக அக்கறை கொண்டுள்ளனர்- என்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான த.கலையரசன் இவ்விடயம் தொடர்பில் உரையாற்றுகையில், தொல்லியல் திணைக்களத்தின் பணியில் ஏன் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்? நாம் சமாதானத்தை விரும்புகின்றோம். அதேபோன்றே எமது ஆலயங்களும் சமாதானத்தையே வலியுறுத்துகின்றன” – என்றார்.

இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியனும் இவ்விவாதத்தில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்குத் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

அதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் உரையாற்றுகையில்,

3500 ஆண்டுகள் பழைமையான உருத்திரபுரம் சிவன் கோயிலில் அகழ்வு ஆராய்ச்சி செய்து சிங்களவர் பகுதியாக்க முற்படுகின்றனர். இது வடபகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கிலுள்ள இது தொடர்பான அதிகாரிகளுடன் எந்தவித கலந்துரையாடல்களையும் செய்யாது பிக்குகள் மற்றும் இராணுவத்தினரின் தலையீடுகளுடன் தமிழர்களின் வரலாறுகளை திரிவுபடுத்தும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுகினறன.

இதன் கருவியாக தொல்லியல் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது” – என்றார்.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடனான கலந்துரையாடலுக்கு கூட்டமைப்பினருக்கு பாராளுமன்றில் வைத்து அழைப்பு விடுத்த அமைச்சர் விதுர விக்ரமநாயக்க !

எதிர்வரும் திங்கட்கிழமை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொல்பொருள் அகழ்வுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனினால் நேற்று நாடாளுமன்றில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இந்த விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விவாத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தேவராசா கலையரசன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, பதிலளித்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, தொல்பொருள் விடயப்பரப்பானது, எந்தவொரு சமயத்திற்கோ அல்லது மதத்திற்கோ அல்லது ஏதாவது ஒரு குழுவிற்கு வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளாமல், ஏன் வடக்கில் மாத்திரம் அகழ்வுப் பணிகளை மேற்கொள்கின்றீர்கள்? என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உலகில் இந்த நாட்டைப் போல, தொல்பொருள் சிறப்புமிக்க வேறு ஒரு நாடு எங்கும் இல்லை. இது எம் அனைவரினுடைய உரிமையாகும். எனவே, இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் பங்கேற்புடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதில் அனைவரும் பஙற்கேற்று தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்தால், எவ்வாறான முடிவை எடுக்கலாம் என்பதை ஆராயலாம் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கம் புலம் பெயர் தமிழர் அமைப்புக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கிடையாது.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 46/1 பிரேரணையின் வெற்றியை தமிழ் மக்கள் முழுமையாக கொண்டாட முடியாது எனவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கம் புலம் பெயர் தமிழர் அமைப்புக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கிடையாது எனவும்  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் பொறுப்புக்கூறலையும்,நல்லிணக்கத்தையும்,மனித உரிமைகளை ஊக்குவித்தல் எனும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மேற்குலக நாடுகள் கொண்டு வந்த 46/1  பிரேரணை  22  நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், வெற்றியை கொண்டாட முடியாத நிலை காணப்படுகிறது.

உள்ளக பொறிமுறையினை மையப்படுத்தியதாகவே 46/1  பிரேரணை நிறைவேற்றப்பட்டடுள்ளது. உள்ளக பொறிமுறையின் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப் பெறாது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், தமிழ் சமூகத்துக்கு எதிரான இன அழிப்பு கொடுமைகள் ஆகியவற்றுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரம் தீர்வை பெற்றுக் கொள்ள  முடியும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கடந்த ஜனவரி மாதம் எழுத்து மூலமாக அறிவித்தோம். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பிரதான தமிழ் அரசியல் கட்சிகளும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்கள் ஆதரவு வழங்கின.

நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் குற்றவியல் நீதிமன்றம் குறித்து எவ்வித விடயதானங்களும் உள்வாங்கப்படவில்லை. மாறாக உள்ளக பொறிமுறை ஊடான தீர்வை மையப்படுத்தியுள்ளது. இப்பிரேரணை ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட  30/1  பிரேரரணை அதற்கு முற்பட்ட பிரேரணைகளின் சாயலை மாத்திரம் கொண்டுள்ளது.

பிரேரரணையின் 6 ஆவது நடைமுறை பந்தியில் 13 விசேட நிபணர்களை உள்ளடக்கிய குழு நியமித்து  குழுவின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள்  ஆணைக்குழுவின் அலுவலகம் சமர்பித்த அறிக்கை, தருஸ்மன் அறிக்கை  மற்றும்  பெட்றிக் அறிக்கை ஆகிய அறிக்கைகள் உள்ளக பொறிமுறையினை வலியுறுத்தியதாக காணப்பட்டது.

இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும்  உள்ளக பொறிமுறையினை முறையாக செயற்படுத்தவில்லை. மாறாக காலதாமதத்தை மாத்திரம் ஏற்படுத்தின. இவ்வாறான பின்னணியில்  உள்ளக பொறிமுறைக்காக 13 பேரை உள்ளடக்கிய குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளமை வெறும் கண்துடைப்பு செயற்பாடாகவே கருத வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கம் புலம் பெயர் தமிழர் அமைப்புக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கிடையாது. சீனாவின்கொள்கைக்கு முழுமையாக ஈர்க்கப்பட்டுள்ள ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தை சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்புக்குள்ளாக்கி 2015 ஆம் ஆண்டுஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதை போன்று 2024 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே 46/1  பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணையில் 4 ஆவது நடைமுறை பந்தியில் விடுதலை புலிகள் அமைப்பினால் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயும் யோசனை குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான யோசனையாகும். விசாரணைகள் ஏதுமின்றி விடுதலை புலிகள் அமைப்பிற்கு அதியுச்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ படையினர் முன்னெடுக்க மனித உரிமை மீறல் குற்றங்களை நியாயப்படுத்தும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பின் மனித உரிமை தொடர்பில் ஆராயும் போது தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள  போராளிகள் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ் தேசிய கூட்மைப்பு உட்பட அரசியல் கட்சிகளுக்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் கோரிக்கை ஒரு அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளமாக காணப்படுகிறது. நேரத்திற்கும், காலத்திற்கும் ஏற்றாற் போல இவர்களின் கோரிக்கைகள் மாற்றமடைகிறது. இவ்வாறானவர்களை முன்னிலைப்படுத்தி சர்வதே அரங்கில் தமிழ் மக்கள் ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது. ஆகவே இனியாவது தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்தானங்களை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

“தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்” – இரா.சாணக்கியன்

வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். தேசிய பட்டியலில் ஒருவருடன் சேர்ந்து ஐவர் இருக்கின்றனர்.

உண்மையிலேயே இந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தினை கொடுக்க வேண்டும். எங்களுடைய வடக்கு, கிழக்கிலே அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.

எங்களுடைய பாரம்பரியமான நிலங்களை அபகரிப்பதற்கு, அதேபோன்று எங்களுடைய மதஸ்தலங்களினுடைய அபகரிப்பு செய்வதனை நிறுத்திவிட்டு உண்மையிலேயே  முழுமையான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

உதாரணமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அன்புமுனை என்று சொல்லப்படும் ஒரு குளம் கூட கிரான் பிரதேசத்திலே இன்று வரைக்கும், அதற்கு நிதி ஒதுக்கப்பட்டும் அதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

அதற்குரிய காரணம் தொல்பொருள் திணைக்களத்தினால் அந்த இடத்தினை அவர்களுக்குரிய இடமாக அடையாளப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இன்று அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நபர்கள், இன்று நாடாளுமன்றத்தில் மட்டும் ஒரு ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் இதை கதைக்காமல், உண்மையிலேயே ஜனாதிபதியின் விசேட குழுவிற்கு இரண்டு தமிழர்களையாவது உள்வாங்க வைக்கலாம்.

இதனைப்பற்றி அறிந்த தமிழர்களையாவது உள்வாங்க வைக்கலாம். அதனை விட்டுவிட்டு அபிவிருத்தி என்ற பெயரில் எங்களுடைய நிலஅபகரிப்பினை அவர்கள் நிறுத்த வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“எவ்வாறான தடைகள் மற்றும் விமர்சனங்கள் வந்தாலும் மக்களுக்காக முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை நிறுத்தப் போவதில்லை” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

“எவ்வாறான தடைகள் மற்றும் விமர்சனங்கள் வந்தாலும் மக்களுக்காக முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை நிறுத்தப் போவதில்லை” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி நேற்று (24) பிற்பகல் நுகேகொட வெளிபார்க் பூங்காவில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இணை அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இக்கருத்துக்களை தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்படுத்தப்படுகிறது. கடந்த அரசாங்கம் ஏற்படுத்திய பிரச்சினைகளை தீர்ப்பதிலேயே அரசாங்கத்தின் அதிக நேரம் செலவாகிறது. நீண்ட காலமாக மக்களை பாதித்து வரும் பிரச்சினைகளுக்கு முறையான அபிவிருத்தி மட்டுமே தீர்வு என தெரிவித்துள்ளார்

இதற்கு தேவையான கொள்கை சட்டகத்தையும் நிகழ்ச்சித் திட்டத்தையும் அரசாங்கம் முன்வைத்துள்ளது. ஜனாதிபதியாக கிராமம் கிராமமாக செல்வதும் உண்மையான மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்காகும். எத்தகைய கொள்கையோ திட்டமோ இல்லாத சிலர் இன்று அதையும் எதிர்க்கிறார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறான தடைகள் மற்றும் விமர்சனங்கள் வந்தாலும் மக்களுக்காக முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை நிறுத்தப் போவதில்லை என தெளிவுபடுத்திய ஜனாதிபதி, பொய்யான பிரச்சாரங்களினால் மக்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து 16 மாதங்களே ஆன குறுகிய காலத்தில் நாட்டில் தெளிவான கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தம்மிடம் இம்மாற்றத்தையே எதிர்பார்த்ததாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பை உறுதி செய்து கலாசாரம், எமது பாரம்பரியம், தேசிய விழுமியங்கள் மற்றும் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

இக்காலத்திற்குள் உருவான பிரச்சினைகளுக்கன்றி கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளுக்கே அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

19 ஆவது திருத்தத்தின் மூலம் உருவான தவறு அதில் ஒன்றாகும். 20வது திருத்தத்தை நிறைவேற்றி அத்தவறை திருத்தினோம். தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. அதைப்பற்றி விசாரணை செய்ய அவர்களே நியமித்த உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையும் எமது அரசாங்கத்திற்கே ஏற்பட்டுள்ளது.

எம்.சி.சி.ஒப்பந்தத்தைப்போல் கிழக்கு முனையத்தை குத்தகைக்கு வழங்க ஒப்பந்தம் செய்ததும் கடந்த அரசாங்கத்தின் காலத்திலாகும். அது தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைக்கும் அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

அவர்களே உருவாக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அன்றைய அரசாங்கத்தில் இருந்தவர்களே இன்று அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி , அரசாங்கத்தின் கொள்கை மற்றும் திட்டங்களை செயற்படுத்துவதுடன் அவர்கள் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மரங்களை வெட்டுவதற்கோ சுற்றாடலை அழிப்பதற்கோ அரசாங்கம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. எதிர்க்கட்சி நாட்டில் பாரிய காடழிப்பு இடம்பெறுவதாக பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றது.

மாவட்ட ரீதியாக காடழிப்பு இடம்பெறுமாயின் அதைப் பற்றி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு தான் இன்று பணிப்புரை விடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், எஸ்.எம்.சந்திரசேன, காமினி லொக்குகே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான டி.வி.சானக்க, கனக்க ஹேரத், பியல் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான லலித் எல்லாவெல, சாகர காரியவசம், உதயன கிரிந்திகொட, ஜயந்த கெடகொட ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.