April

April

“டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் அமைகின்ற தமிழ் இருக்கை புலம் பெயர்ந்து வாழும் உலக தமிழ் சமூகத்தின் எழுச்சி அடையாளம்.” – மனோ கணேசன்

கனடிய டொரோன்டோ பல்கலைக்கழகத்தில், உலக செம்மொழியாம் எங்கள் தமிழை கற்கவும், ஆய்வு செய்யவும், அமைகின்ற தமிழ் இருக்கை (University of Toronto Chair on Tamil Studies), புலம் பெயர்ந்து வாழும் உலக தமிழ் சமூகத்தின் எழுச்சி அடையாளம். “நீங்கள் வெட்ட வெட்ட, நாங்கள் வளர்வோம். துளிர் விடுவோம்”, என்ற எழுச்சிகர செய்தி இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

கனடிய டொரோன்டோ பல்கலைக்கழகத்தில், உலக மொழியாம் எங்கள் தமிழை கற்கவும், ஆய்வு செய்யவும், அமைகின்ற தமிழ் இருக்கை (University of Toronto Chair on Tamil Studies), புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் அடையாளம். நல்ல பரிணாமம் (Evolution). நல்ல பரிமாணம்.

“நீங்கள் வெட்ட வெட்ட, நாங்கள் வளர்வோம். துளிர் விடுவோம்”, என்ற அரசியல், சமூக, கலாச்சார செய்தியையும் இந்த தமிழ் இருக்கை அறிவிக்கின்றதாக நான் நம்புகிறேன்.

டொரோன்டோ மத்திய எம்.பி மார்சி இயன், இதுபற்றி கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றி கனடாவில் வாழும் மூன்று இலட்சம் புலம் பெயர் தமிழர்களையும், இதற்காக முன்னின்று உழைத்த கனடிய தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளையும் பாராட்டியுள்ளார்.

அதேபோல், காலமறிந்து இந்திய ரூபாயில் ஒரு கோடி நன்கொடை தந்து உதவியுள்ள தமிழகத்தின், அ.இ.அ.தி.மு.க அரசுக்கும், இந்திய ரூபாயில் பத்து இலட்சம் நன்கொடை தந்து உதவியுள்ள தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி தி.மு.கவுக்கும், இலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

இந்த காரியத்தை கருப்பொருளாக, முன்வைத்து, வளர்த்தெடுத்து, நிதி சேகரித்து, சாத்தியமாக்கியுள்ள அனைத்து புலம் பெயர் தமிழ் நெஞ்சங்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும், ஒட்டுமொத்த கனடிய தமிழர்களுக்கும் எனது பாராட்டுகள்.

“மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது. அவதானமாக இருங்கள்.” – மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்

கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்று அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியில் இன்று ( வெள்ளிக்கிழமை ) எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்மையிலே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பொதுமக்கள் அதிகளவாக நகர்பகுதியில் நடமாடுவதாகவும் ஒரு சில இடங்களிலே தனியார் வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே இன்றில் இருந்து தனியார் வகுப்புக்கள் நிறுத்துவதகா முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதை மீறுவோருக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாராலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே வேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலே வழக்கமாக ஒரு நாளைக்கு 4 தொடக்கம் 5 சிலிண்டர் ஒட்சிசன் தேவைப்படுவது வழக்கம் ஆனால் தற்போது அங்கு கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதன் காரணமாக ஒரு நாளைக்கு 15 சிலிண்டர் ஒட்சிசன் தேவைப்படுகின்றது.

எனவே இதுவரை காலமும் ஒட்சிசனைப்பற்றி சிந்திக்கவில்லை ஆகவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் அதேவேளை பொலிசார் இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஏற்படுத்துகின்ற கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடித்தால்தான் இந்த கொரோனா தொற்றை தடுக்க முடியும்.

அதே வேளை பொதுமக்களை வினையமாக கேட்டுக் கொள்வது மரணச்சடங்குகளில் 25 பேரும் திருமணவீடு அல்லது கோயில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது பொது இடங்களில் அனாவசியமாக கூடக்கூடாது நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் உயிர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வீட்டை விட்டுவெளியேறி பொது இடங்களுக்கு செல்லவேண்டாம்.

இந்த 3 ம் கட்ட கொரோனா இளம் சந்ததியினரை தாக்குவது அதிகம் எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படவும் இல்லாவிடில் வேறுமாவட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சனையை எதிர்நோக்க வேண்டிவரும் என மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்” என்றார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள ரிஷாட்டிற்கு சபாநாயகர் அழைப்பு !

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அடுத்த நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதற்கான அனுமதியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்ற விவகார தெரிவுக்குழுக் கூட்டத்தில் வழங்கினார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 15.11 கோடியை கடந்தது !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்று வரை  உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாடுகளிலும் அடுத்த கொரோனா அலை ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.11 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.84 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.89 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இஸ்ரேலில் மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் – 40க்கும் அதிகமானோர் இறப்பு !

இஸ்ரேல் நாட்டின் மவுண்ட் மெரான் பகுதியில் நேற்று இரவு யூதர்களின் பாரம்பரிய மத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் ஆடல், பாடல் என விழா களைகட்டியது.
அப்போது, நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். சிலர் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த ஷீட்களை பிரித்து, இடைப்பட்ட பகுதி வழியாக வெளியேற முயன்றதால் நெரிசல் மேலும் அதிகரித்தது. நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமான ஆம்புலன்ஸ்கள் அப்பகுதிக்கு விரைந்தன. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு நோக்கி பயணித்த சுமந்திரனின் வாகனம் விபத்து !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அதிஷ்டமவசமாக உயிர்தப்பியுள்ளார்.

எனினும் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அவரின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

சுமந்திரன் பயணித்த வாகனம் கடுமையாக விபத்துக்குள்ளானதில் முழுமையாக சேதமடைந்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போது, அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியில் வழுக்கி, பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வேறு வாகனம் ஒன்றின் மூலம் அவர் கல்முனை நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமைக்காக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக, கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகும் பொருட்டு அங்கு செல்லும் வழியிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

“ரஷ்யாவிடம் இருந்து தடுப்பூசிகளிற்கு பதில் அரசாங்கம் ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யவுள்ளது.” – சஜித் குற்றச்சாட்டு !

கொரோனா தடுப்பூசிகளிற்கு பதில் அரசாங்கம் ரஸ்யாவிடமிருந்து ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யவுள்ளது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வேகமாக பரவி வரும் கொரோனாவை அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர் மேலும் குறிப்பிடும் போது ,

நாட்டில் கொவிட் வேகமாக பரவிவரும்நிலையில் மக்களின் துன்பங்களை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் அரசாங்கத்திடமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டுமக்களிற்கு அவசியமான தடுப்பூசியை பெறுவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு பதில் அரசாங்கம் ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்ய முயல்கின்றது எனவும் ரஸ்யாவிலிருந்து இலங்கை இராணுவத்திற்கு நான்கு ஹெலிக்கொப்டர்களையும் சாதனங்களையும் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது தான் என தெரிவித்துள்ள அவர் பெருந்தொற்று நேரத்தில் தடுப்பூசியை விட ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்வது எவ்வளவு முக்கியமானது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஈஸ்ரர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவு கூர அனுமதித்தது போல முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இந்த அரசு அனுமதி வழங்க வேண்டும்.” – சிறிதரன் கோரிக்கை !

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இந்த அரசு அனுமதிக்க வேண்டும்.” என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.,
தமிழ் மக்கள் தாங்கள் இறந்து போன தங்கள்  இறந்து போன உறவுகளை தங்களோடு  வாழ்ந்த மக்களை தங்களுடன் சேர்ந்து இருந்த உறவுகளை கண்ணீர் சிந்தி நினைக்கின்ற மே 18 அந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவு கூர  இந்த அரச அனுமதிக்க வேண்டும். இந்த அரசாங்கம் அதனை தவிர்த்து விட முயன்று வருகிறது. ஆனால் அது அரசாங்கத்தினுடைய மிகப்பெரிய தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அநியாயமான  செயல் ஒன்றாகும்.
மிக முக்கியமாக எங்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு வணக்கம் செலுத்துவதற்கு  கோரிக்கை விடுக்கின்ற மதத் தலைவர்கள் சரி அல்லது இந்தத் தாக்குதலுக்காக விடுமுறை வழங்கி பாராளுமன்றம் வரைக்கும் அஞ்சலி செலுத்துகின்ற இந்த நாட்டின் தலைவர்கள் ஒரு நியாயமான நீதியாக   ஜனநாயகத்தை நேசிக்கும் தேவர்களாக இருந்தால்  உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.
பகிரங்கமாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்டு உயிரிழந்தோரினை நினைவு கூர்ந்து  வணக்கம் செலுத்த அனுமதி வழங்குவதன் மூலமே அவர்கள் தங்களை மனிதர்களாக இந்த பூமிப்பந்தில் அடையாளப்படுத்த முடியும். ஆகவே இது ஒரு முக்கியமான தமிழர்களுடைய வரலாற்றில் எல்லோராலும் பார்க்கப்படுகின்ற எல்லோராலும்  எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம்.
உலகத்திலே இருபதாம் நூற்றாண்டில் 21ம் நூற்றாண்டு காலகட்டங்களில் மனிதகுலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய பேரழிவு பெரிய அனர்த்தம் அதன்  நினைவு கூரலை தடுப்பது பௌத்த மதத்தை நேசிக்கின்ற புத்த பெருமானை  வணங்குகின்றவர்கள் புரியும் ஒரு காரியமல்ல.
ஆகவே அரசு ஈஸ்ர்ர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவு கூர எவ்வாறு அனுமதி வழங்கினார்கள் அதேபோல கடந்த காலங்களில் 2016 ல் இருந்து தமிழர்கள் இந்த வணக்கத்தை முள்ளிவாய்க்காலில் சென்று உணர்வுபூர்வமாக மேற்கொண்டார்கள் அந்த வகையில் அவர்கள் அந்த வகையில் வணக்கம் செய்வதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

“வன்னியின் தலைவனை விடுதலை செய் ” – ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம் !

கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காது விடுதலை செய்யுமாறு கோரி, வன்னி மக்கள் வவுனியா கச்சேரிக்கு முன்னாள் 28.04.2021 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுலோக அட்டைகளையும், பதாதைகளையும் தாங்கியவாறு, சமூக இடைவெளிகளை பின்பற்றி, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாகவே, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

எந்தவிதமான, காரணங்களும் கூறாமல், வெறுமனே ஊகத்தின் அடிப்படையில், தமது பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டது, நீதிக்கு முரணானது எனவும், சட்டத்துக்கு விரோதமானது எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்புமில்லை என, அரச இயந்திரத்துக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் நன்கு தெரிந்திருந்த போதும், முன்னர் பல விசாரணைகளிலிருந்து அவர் நிரபராதி என வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும், வேண்டுமென்றே, எவரையோ திருப்திப்படுத்துவதற்காகவும், அரசியல் குரோதங்களை தீர்த்துக்கொள்ளும் வகையில் பழிவாங்குவதற்காகவுமே, இந்த ‘அர்த்தராத்திரிக் கைது’ இடம்பெற்றது” என ஆதரவாளர்கள் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டனர்.

மனிதநேயத்தையும் மனிதாபிமானத்தையும் மதித்து, அதன்படி மக்கள் பணி செய்த தலைவன், எந்தக் காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவியதில்லை எனவும், அவர் மீது வீண்பழி சுமத்துவதை விடுத்து, விடுதலை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வவுனியாவில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, பொலிசார் தலையீடு செய்து, ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி, மக்களை கலைந்து செல்லுமாறு கூறியதனால், ஆர்ப்பாட்டம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றுவேன்.” – ஜனாதிபதி உறுதி !

“இரசாயன உரங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றுவேன்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் பயன்பாடு மற்றும் இறக்குமதி மீதான தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

“இரசாயன உரங்களின் பயன்பாட்டிலிருந்து நீங்கிய எந்த நாடும் உலகில் இல்லாதிருப்பது இலக்கை அடைவதற்கு ஒரு தடையல்ல. பேசிப் பேசி இருக்காது விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது – இரசாயன உரங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றுவேன்.” என்றார்.