“யாழ். மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லை.” என மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையால் மாநகரத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைச் செயற்பாட்டுக்காக மாநகர காவல் படை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பிரிவின் சீருடை வடிவம் என சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று (08.04.2021) ஏற்பாடு செய்திருந்த வி.மணிவண்ணன் ஊடக சந்திப்பின் போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
மாநகர காவல்படையின் சீருடையில் எந்தவொரு முன்னிலைப்படுத்தலோ அல்லது உள்நோக்கமோ கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய காவல் படையானது, ஏற்கனவே மாநகர சபையில் பணிபரியும் ஐந்து ஊழியர்களைப் பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவர்கள் வடக்கில் உள்ள ஒரேயொரு மாநகரத்தைச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதற்காக, குப்பைகளைக் கண்டபடி போடுபவர்கள் மற்றும் நகரை அசுத்தமாக்கும் பிற செயற்பாடுகளைச் செய்பவர்களைக் கண்டறிந்து அந்தச் செயற்பாடுகளைத் தடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தச் செயற்பாடு கொழும்பு மாநகர சபையின் செயற்பாட்டைப் பின்பற்றியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பரப்பப்பட்டுவரும் செய்திகளுக்கு மாநகரசபை பொறுப்பேற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக பொலிஸார் தம்மிடம் விளக்கம் கோரியதாகக் குறிப்பிட்டுள்ள மாநகர முதல்வர் மணிவண்ணன், மேற்படி விடயங்களைச் சுட்டிக்காட்டியதாகவும், விளக்கமளிப்பதற்காக அவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட சீருடையை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.