April

Thursday, October 21, 2021

April

“தான் அடக்கப்பட்ட நேரத்திலும் , அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த குரல் ஒன்று ஓய்வெடுத்து விட்டது.” – எம்.ஏ.சுமந்திரன்

“தான் அடக்கப்பட்ட நேரத்திலும் , அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த குரல் ஒன்று ஓய்வெடுத்து விட்டது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகையின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை போரின் போதும் போருக்குப் பின்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி ஒலித்த ஒரு குரல். போரில் நசுக்கி ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட அல்லது காணாமல்போனோரின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கிட்டு சர்வதேசத்துக்கும் ஆணைக்குழுக்களின் முன்பும் பகிரங்கமாகவே சாட்சியம் அளித்த ஒருவர். எமது மக்களின் இன்னல்களுடன் அனைத்து வழிகளிலும் பாடுபட்டதோடு அவை தொடர்பில் எமக்கு காலத்துக்குக் காலம் உரிய ஆலோசணைகளையும் வழங்கி வந்த ஒருவரை இழந்து நிற்கின்றோம்.

இலங்கை கத்தோலிக ஆயர் பேரவைக்கு சட்ட ஆலோசகராக நான் செயற்பட்ட காலத்தில் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையுடனான உறவு மேலும் அதிகரித்தது. என்றுமே மக்களின் விடயங்களிலேயே அதிக கரிசனை கொண்டவராகக் காணப்பட்ட ஆயர், நோய்வாய்ப்பட்ட பின்பும் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என இரவு பகலாக முயற்சித்தார். அதனால் இன்று அவரை இந்த முயற்சியில் இருந்து நிரந்தரமாக விடுவித்துள்ளது.

இவ்வாறு தனது இன மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தது மட்டுமன்றி அதற்காகவே வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவரை இழந்து நிற்பது ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பும் ஆற்றுப்படுத்த முடியாத துயருமாகும். இதனால் ஆயரின் பிரிவால் துயருற்ற அனைவருக்கும் விசேடமாக கத்தோலிக்க மக்களுக்கும் எனது இரங்கலைக் காணிக்கையாக்குகின்றேன் ”.  என்றுள்ளது.

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் கூறும்போது “

தமிழ்தேசிய மண்ணிலே தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அவர்களுடைய வாழ்வுக்காகவும் ஒரு நீண்ட பெரும் பாதையிலே தன்னுடைய ஆழமான பங்கினை ஆத்மார்த்தமாகவும் உணர்வாகவும் வெளிப்படுத்திய ஆன்மா ஒன்று மீளாத்துயரில் உறங்கிக் கொண்டிருக்கின்றது எனவும்  தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதிகமான பற்று கொண்ட ஒரு மனிதனாக நின்று அவர் தன்னை அர்ப்பணித்து இன்று உறக்கம் கொள்கின்ற அவரை நினைக்கும் போது நெஞ்சம் துடிக்கின்றது.” எனவும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர்  இராயப்பு யோசேப்பு ஆண்டனை  தனது 80ஆவது வயதில் காலமானார் !

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர்  இராயப்பு யோசேப்பு ஆண்டகை  தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (1) அதிகாலை சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதி படுத்தியுள்ளார்.

நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கண்ணியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30  மணியளவில் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குரு முதல்வர் மேலும் தெரிவித்தார்.

ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை மறைந்தார். - www.pathivu.com

இந்நிலையில் இது தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் “மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்கள் மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

இன, மத மொழிகளிற்கு அப்பால் சாதாரண மக்களின் உரிமைகளிற்காக எவ்வித தயக்கமும் பாரபட்சமும் இல்லாமல் அயராது பணியாற்றிய ஒரு தலைவரை இன்று நாம் இழந்துள்ளோம். மக்களின் உரிமைகளிற்காக போராடிய மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டும் என நாம் இறைவனை பிரார்த்திப்பதோடு, ஆண்டகையின்

மறைவால் துயறுற்றிருக்கும் அவரது உறவினர்கள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மேலும், அன்னாரது ஆன்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.