05

05

“வெளிநாட்டு பேரவைகள் இலங்கையின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை.” – கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

“வெளிநாட்டு பேரவைகள் இலங்கையின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை.” என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு இதனை தெரிவித்துள்ள அமைச்சர் பொதுமக்கள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளங்கிக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
சட்டங்களை உருவாக்குவது அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது முப்படையினரினதும் நியமனங்களை மேற்கொள்வது போன்றவற்றை முன்னெடுப்பதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையும் ஆணையாளரும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அனுமதிக்கவேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் நாடாளுமன்றத்தின் பங்களிப்பு என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என மனித உரிமை கருதுகின்றது,என தெரிவித்துள்ள அமைச்சர் 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து முப்படையினரையும் கைதுசெய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான திட்டம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பயன்படுத்தி சில நாடுகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை பூர்த்தி செய்ய முயல்வதற்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து விட்டு அனைத்து தரப்பினரும் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அரசு சிங்கராஜ வனத்தை அழித்துக் கொண்டிருக்கும் அதேவேளை கொழும்பில்  மரக்கன்றுகளை நாட்டுவது பயனற்றது .” – ரணில் விக்கிரமசிங்க

“அரசின் சிங்கராஜ வனப்பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான முறையற்ற செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்சிபேதங்கள் இன்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.” என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நுகேகொடையில் நேற்று ஞாயிறுக்கிழமை இளைஞர்களுடனான சந்திப்பின் போதே முன்னாள் பிரதமர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கராஜ வனப்பகுதியில் நீர்தேக்கமொன்றை உருவாக்கி அதனூடாக அம்பாந்தோட்டை பிரதேசத்துக்கு நீர் வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இது வனப்பாதுகாப்பு சட்டத்துக்கு முரணானது.  தற்போது நடைமுறையில் உள்ள வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு அமைய சிங்கராஜ வனத்தில் ஒரு மரத்தை கூட வெட்டுவது கூட  சட்டவிரோத செயற்பாடாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து உலக நாடுகள் துரிதகர அபிவிருத்தி செயற்திட்டங்களை சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுத்துள்ளன . ஆனால் அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக செயற்படுகிறது. சிங்கராஜ வனம் இலங்கையின் பிரதான மழைக்காடாக காணப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்க  முன்னாள் ஜனாதிபதி ஜே..ஆர்.ஜயவர்தன காலத்தில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சிங்கராஜ வனத்தின் நிலப்பகுதிகள் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சட்டவிரோத செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கராஜ வனத்தை அழித்துக் கொண்டிருக்கும் அதேவேளை கொழும்பில்  மரக்கன்றுகளை நாட்டுவது பயனற்றது . சிங்கராஜ வனம் பாதிக்கப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

சிங்கராஜ வனத்தை  பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் அரசியல் கட்சி பேதங்களை துறந்து ஒன்றினைய வேண்டும். சட்டத்திற்கு முரணாக செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து  செயற்பட வேண்டும்.

சிங்கராஜ வனத்தை பாதுகாக்க சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தற்போது செயற்படுத்தியுள்ளோம்.

அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்படுகிறது. சீனி வரிக்குறைப்பு மோசடி, தரமற்ற எண்ணெய் விநியோகம்  என பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன.  சீனி வரிக்குறைப்பு மோசடி, தரமற்ற எண்ணெய் இறக்குமதி ஆகியவற்றின் உண்மை தன்மையினை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.  அரசாங்கத்தின் கருத்துக்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன.

துரித பொருளாதார முன்னேற்றம், சுற்றுசூழல் பாதுகாப்பு, சட்டவாட்சி கோட்பாடு ஆகிய துறைகள் குறித்து சிறந்த திட்டங்களை வகுத்துள்ளோம். கட்சியை பலப்படுத்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற எமது கொள்கைகளை நாட்டு மக்களுக்கு இனிவரும் காலங்களில் அறிவிப்போம் என்றார்.