07

07

“ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை.” – ரவூப் ஹக்கீம்

“ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை.” என  நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(07.04.2021) விவாதிக்கப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு தொடர்பிலும் Pakkam Bin-abu என்ற நபர் குறித்தும் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனக்கூறிய அவர், ஏப்ரல் 21 தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியவர்கள் வௌியில் உள்ளனரா? என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ள போதிலும், உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன்ராமநாயக்க !

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்க தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார்.
சபாநாயகர் இதனை இன்றைய நாடாளுமன்றில் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ரஞசன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது என நாடாளுமன்ற செயலாளர்நாயகம் தேர்தல் ஆணையகத்திற்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே ரஞசன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார்.

“விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.” – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

“விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.” என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(07.04.2021) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து தேசியமற்றும் சர்வதேச ரீதியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 97 பேர் அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் 36 விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அரசாங்கம் யாரையும் பாதுகாக்கவோ குற்றங்களை மூடி மறைக்கவோ முற்படவில்லை என குறிப்பிட்ட அவர் சட்டமா அதிபரே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.பயங்கராவத செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டத்திட்டங்களை கொண்டுவர வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் அதிரடி தடை !

ஐ.ஸ், அல் குவைதா உட்பட பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் இன்று அதிரடி தடை உத்தரவை அறிவித்துள்ளது.

இவைகளில் 11 அமைப்புக்கள் இருப்பதோடு அதிக அமைப்புக்கள் இலங்கைக்குள் செயற்படுவதாக காணப்படுகின்றன.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த அமைப்புக்களை தடை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அவரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ) , சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ) , ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ), ஜம்மியதுல் ஹன்சாரி துன்னத்துல் முகமதியா (JASM), தாருல் அதர் @ ஜம் உல் அதர், இலங்கை இஸ்லாமிய மாணவ அமைப்பு / ஜமியா (SLISM), ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு (ISIS) , அல் குவைதா (AL-Qaeda) அமைப்பு, சேவ் த பர்ல்ஸ் அமைப்பு (Save the pearls), சூப்பர் முஸ்லிம் அமைப்பு (Super Muslim) ஆகிய அமைப்புக்களே தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களாகும்.

ஏற்கனவே புலம்பெயர்ந்த 7 தமிழர் அமைப்புக்களும் 338 தனிநபர்களுக்கும் இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் படத்தை வைத்திருந்த நபர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் பின் இன்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது பி அறிக்கையை கோப்பாய் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

இளைஞன் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.

வழக்கை விசாரித்த நீதிவான் இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்து இளைஞனை வரும் ஏப்ரல் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, இளைஞனின் அலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படம் உள்ளமை தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

“காலம் தாழ்த்தாமல் வெகுவிரைவாக தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.“ – கெஹலிய ரம்புக்வெல்ல

“காலம் தாழ்த்தாமல் வெகுவிரைவாக தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.“ என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்  இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில் ,

மாகாணசபைத் தேர்தல் தெளிவானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எமது தேர்தல் பிரசாரத்திற்கு அமைய விருப்பு வாக்குமுறைமையை நீக்கவும் , 70 வீதம் தொகுதிவாரி முறைமையினடிப்படையிலும் 30 வீதம் விகிதாசார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்.

அதற்கமைய கடந்த 15 வருடங்களாக அவதானம் செலுத்தப்பட்ட விடயத்திற்கு ஏற்ப தொகுதிகளை எவ்வாறு நிர்ணயிப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டு வெகுவிரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்.

அமைச்சரவையிலும் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் வெகுவிரைவாக நடத்தும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. என தெரிவித்துள்ளார்.