15

15

“அரசு கவிழும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பகல் கனவு காணக்கூடாது.” – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பதிலடி

“அரசு கவிழும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பகல் கனவு காணக்கூடாது.” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

‘எதிர்வரும் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கூட்டத்துடன் அரச கூட்டணி பிளவடைந்தே தீரும்’ என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு குறுக்கு வழியால் நிறுவப்பட்ட அரசு அல்ல. நாட்டு மக்களின் ஆணையுடன் – மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறுவப்பட்ட அரசாகும். எனவே, அரசிலுள்ளவர்கள் மக்களின் ஆணையை மீறிச் செயற்பட மாட்டார்கள். இந்த அரசு கவிழும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பகல் கனவு காணக்கூடாது.

அரசைப் பிளவடையச் செய்வது எதிரணியினரின் நீண்ட நாள் சதித் திட்டம். இதற்கு அரசிலுள்ள பங்காளிக் கட்சியினர் எவரும் துணைபோகமாட்டார்கள்” – என்றார்.

“எதிர்வரும் 19ஆம் திகதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கூட்டத்துடன் அரச கூட்டணி பிளவடைந்தே தீரும்.” – சஜித் பிரேமதாஸ ஆருடம் !

“எதிர்வரும் 19ஆம் திகதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கூட்டத்துடன் அரச கூட்டணி பிளவடைந்தே தீரும்.” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் உச்சத்தில் இருப்பது உண்மைதான். மாகாண சபைத் தேர்தலை முறைமை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்வைத்த திட்டத்துக்கு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனவே, எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. அதன்பின்னர் சுமுக நிலை உருவாகும்’ என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றனர். அரசுக்குள் இருக்கும் குத்துவெட்டுக்களே இதற்குக் காரணம். இந்த நிலைமை எமது நல்லாட்சி அரசின் இறுதிக்கட்டத்திலும் உருவானது. அதிகாரப் போட்டியே இதற்குக் காரணமாகும்.

இலங்கையில் தொடர்ந்து ராஜபக்ச பரம்பரை ஆட்சியை ராஜபக்ச குடும்பம் விரும்பியது. இந்தப் பேராசை தற்போது ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ராஜபக்ச குடும்பத்துக்குள் சொந்தமான கூட்டணி அல்ல. பங்காளிக் கட்சிகள் பல சேர்ந்தே பொதுஜன முன்னணி கூட்டணியை அமைத்தன.

பங்காளிகளைப் புறந்தள்ளிவிட்டு கூட்டணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றார். அதனால் பங்காளிக் கட்சிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன.

மாகாண சபைத் தேர்தல் முறைமை, மே தினக் கூட்டங்கள் தொடர்பில் அரசுக்குள் இரு வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசு தற்போது ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. அரச கூட்டணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல பங்காளிக் கட்சிகள் அதிலிருந்து வெளியேறும் முடிவில் இருக்கின்றன. எதிர்வரும் 19ஆம் திகதிக்குப் பின்னர் அனைத்து உண்மைகளும் அம்பலத்துக்கு வரும்” – என்றார்.

“ரஞ்சன் ராமநாயக்கவை மீட்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – சஜித் பிரேமதாஸ

“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும் , சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.”  என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பிறந்துள்ள சித்திரை புத்தாண்டு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறந்ததாக அமைய வாழ்த்துவதற்காக அவரை பார்வையிட வந்தோம். அவருக்காக எதிர்வரும் நாட்டில் ஜனநாயக ரீதியிலும் , சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு அமையவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைப்பதற்கு தொடர்ந்தும் நாம் முன்னின்று செயற்படுவோம். ரஞ்சன் ராமநாயக்க என்ற மனிதாபிமானம் மிக்க நபர் இந்த நாட்டின் சொத்தாவார். நாட்டு மக்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார்.

மக்கள் அதிகம் நேசிக்கும் அரசியல் தலைவரான அவருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய புத்தாண்டு தினத்தில் 165 பேர் இரத்தக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி !

தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலையில் மொத்தம் 165 பேர் இரத்தக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட 47 வீதம் உயர்ந்துள்ளது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தலைமை நர்சிங் பயிற்றுவிப்பாளர் புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்தார்.

அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

சண்டைகள் காரணமாக 21 பேரும், உடல் ரீதியான தாக்குதல் தொடர்பாக 19 பேரும் காயமடைந்துள்ளனர். ஏனையோர் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் காரணமாகக் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு புத்தாண்டில் 85 நோயாளிகள் மட்டுமே காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

புத்தாண்டு பருவத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பண்டிகைக் காலங்களில் அதிகமாக மது அருந்துவதைத் தவிர்க்கவும், விபத்துக்குள்ளாகும் சம்பவங்களைக் குறைக்கவும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

“மாகாண சபை முறைமை முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும்.”  – எம்.ஏ.சுமந்திரன்

“மாகாண சபை முறைமை முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். அல்வாய் கிழக்கு, இலகடியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் – சிங்களப் புத்தாண்டு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டிலே பலவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினை இப்போது முக்கியமாக மேலோங்கி நிற்கின்ற இந்தச் சூழ்நிலையிலேயே இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு வழியில்லாமல் இருப்பவர்களை நினைவு கூருகின்றோம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்தப் புத்தாண்டிலாவது ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கின்றார்கள். அந்த இலக்கை அடைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.

எங்களுடைய முயற்சி ஒருபோதும் கைவிடப்படமாட்டாது. ஆகையினாலே அனைத்து மக்களுக்கும் நாங்கள் வாழ்த்துச் சொல்லுகின்ற அதே வேளையில், விசேடமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலையை நாங்கள் வேண்டி அதற்காக உழைப்போம் என்று உறுதி கூறுகின்றோம்.

அரசுக்குள்ளே மாகாண சபைத் தேர்தல் நடத்துவது பற்றி பெரியதொரு இழுபறி நடந்து கொண்டிருக்கின்றது என்று எங்களுக்குத் தெரிகிறது. அரசு அனைத்து மாகாண சபைகளையும் கைப்பற்ற வேண்டும் என்று சிந்திக்கின்றார்கள். ஆனால், கடும்போக்குவாத பின்னணியைக் கொண்ட பலர் – குறிப்பாக இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் – விசேடமாக ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்த இனவாத சிந்தனை உள்ள கடும்போக்குவாதிகள் மாகாண சபை முறை அகற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்து வருகின்றார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம். ஆனால், வெறுமனே இருக்கின்ற மாகாண சபை முறைமையே நாங்கள் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். ஆனால், அது முழு அதிகாரங்களைப் பெற்றதாக ஒரு சமஷ்டிக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக ஓர் ஆட்சியாக மலர வேண்டும். அதற்கான எங்களுடைய யோசனைகளை இந்த அரசு நியமித்துள்ள அரசமைப்பு வரைபு குழுவிடம் முன்வைத்துள்ளோம். ஆகையினாலே எங்களுடைய முயற்சி இது தொடர்பாக தொடர்ந்து நடைபெறும். மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என மேலும் தெரிவித்துள்ளார்.