25

25

“குட் மோர்னிங்” சொல்லவில்லை என ஆசிரியர் அடித்ததில் மாணவனின் கண் பாதிப்பு – யாழில் சம்பவம் !

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் தனக்கு “குட் மோர்னிங்” சொல்லவில்லை என ஆங்கில ஆசிரியை தடியினால் அடித்ததால் , மாணவனின் கண் பாதிப்படைந்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கணவர் பிரிந்து சென்ற நிலையில் இரு பிள்ளைகளுடன் ஊர்காவற்றுறையில் வசிக்கும் பெண் தனது பிள்ளையை ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலையில் சேர்ந்து , அங்குள்ள மாணவர் விடுதியிலும் (ஹொஸ்டல்) சேர்த்துள்ளார்.

படிப்பில் கெட்டிக்காரனான மாணவன் விடுதியில் தங்கி தனது கல்வியை தொடர்ந்து வந்துள்ளான். தரம் 09 கல்வி கற்கும் குறித்த மாணவனே வகுப்பு தலைவரும் (மொனிட்டர்) ஆவான்.

கடந்த 18 ஆம் திகதி வகுப்பிற்கு ஆங்கில ஆசிரியை வந்த போது மாணவன் எழுந்து “குட் மோர்னிங் மிஸ்” என கூறி விட்டு அமர்ந்துள்ளான். அதனை அவதானிக்காத ஆசிரியை தான் வகுப்பு வரும் போது எழுந்து குட் மோர்னிங் சொல்லவில்லை என கூறி தடியினால் மாணவனை அடித்துள்ளார்.

அதன் போது தடி கண்ணில் பட்டுள்ளது. அதனால் வேதனையில் மாணவன் அழுத்த போது தான் கற்பிக்கும் போது, அழுது தொந்தரவு செய்ய வேண்டாம் என மிரட்டியுள்ளார்.

அவரது பாடம் முடிந்த பின்னர் வகுப்பு மாணவர்கள் தமது வகுப்பாசிரியரிடம், மாணவனை ஆசிரியை அடித்து கண்ணில் தடி பட்டு அழுது கொண்டு இருக்கிறான் என கூறியுள்ளனர். வகுப்பாசிரியர் மாணவனை அழைத்து சென்று தண்ணீரினால் கண்களை கழுவி விட்டுள்ளார்.

இருந்த போதிலும் கண் வலி மாணவனுக்கு குறையவில்லை. பாடசாலை முடிந்து விடுதிக்கு சென்ற பின்னரும் மாணவன் வலியினால் துடித்து அழுத்துள்ளான்.அது தொடர்பில் சக மாணவர்கள் விடுதி பொறுப்பாளரும் , பாடசாலை அதிபருமான பாதிரியாரிடம் கூறியுள்ளனர்.

அவர் மாணவனை அழைத்து அருகில் உள்ள ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறும், அங்கு வைத்தியர்கள் கேட்டால் விளையாடும் போது கண்ணில் தடி பட்டு விட்டதாக கூறுமாறும், கூறி சக மாணவனுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வைத்தியசாலையில் கண்ணுக்குள் இருந்து சிறு தடி துண்டினை வைத்தியர்கள் எடுத்துள்ளனர். வைத்தியர் கேட்ட போது, விளையாடும் போது தடி பட்டதாகவே கூறியுள்ளனர்.

இது தொடர்பில் அறிந்த மாணவனின் தாயார் மறுநாள் பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலையில் மகனை சந்தித்து அது தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டு பாடசாலை அதிபரை சந்திக்க காத்திருந்துள்ளார்.

பாடசாலை அதிபர் அறைக்கு அருகில் பல மணிநேரம் காத்திருந்த போது அவ்வழியே சென்ற ஆசிரியர்கள் விசாரித்து விட்டு சென்றார்களே தவிர யாரும் அதிபரிடம் கூட்டி செல்லவில்லை.

மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஆண் ஆசிரியர்கள் அதிபர் அறைக்கு பக்கத்தில் உள்ள அறைக்குள் தாயாரை அழைத்து சமாதானம் பேசியுள்ளனர். அத்துடன் மகனை வேறு பாடசாலையில் அனுமதிக்க மாட்டீர்கள். என்ன நடந்தாலும் இங்கே தான் கல்வி கற்கவேண்டும் என மிரட்டும் தொனியிலும் கதைத்துள்ளனர்.

அதற்கு தாயார் தனது பிள்ளைக்கு ஆசிரியை அடித்தது தொடர்பில் ஏன் எனக்கு அறிவிக்கவில்லை? பிள்ளை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று இருக்கிறான். அது தொடர்பில் கூட எனக்கு அறிவிக்கவில்லை. இது தொடர்பில் நான் விடுதி பொறுப்பாளரும், அதிபருமான பாதிரியாரை சந்தித்து கேட்டு விட்டே செல்வேன் என கூறியுள்ளார். ஆசிரியர்கள் இருங்கள் அதிபரை அழைத்து வருகின்றோம் என போனவர்கள் , அதிபரை அழைத்து வரவே இல்லை .

பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் 2.30 மணியளவில பாதிரியார் தாயாரை சந்தித்துள்ளார்.

தான் ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும், ஆசிரியை தொடர்பில் உரிய தரப்புக்களும் அறிவித்து விட்டதாகவும் , இனி அவ்வாறு நடக்காது என தாயாருக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டு மாணவனை விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

தாயார் சென்றதும், விடுதியில் வைத்து,சக மாணவர்கள் முன்னால் சகட்டு மேனிக்குள் மாணவனை திட்டி அடித்துள்ளார்.

அதனால் மாணவனின் உடல் முழுக்க தழும்பு வரும் வரையில் அடித்துள்ளார். அத்துடன் மாணவன் மறுநாள் பாடசாலைக்கு தாயார் வந்து கதைத்து விட்டு சென்ற ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோருமாறும் கூறியுள்ளார். மறுநாள் மாணவன் ஆசிரியர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

தற்போது மாணவன் அடி காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலம் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு மேலதிக விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.-

“மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ்- முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்..” – பேராசிரியர் திஸ்ஸ விதாரண

“மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ்- முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்.” என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பல சிக்கல் நிலை காணப்படுகிறது. . தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் வெற்றிப் பெறாத அளவிற்கு பல பிரச்சினைகள் ஏதாவதொரு வழியில் தோற்றம் பெறுகிறது.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாண  எதிர்பார்த்தோம் அதுவும்  வெற்றிப்பெறவில்லை.

மாகாண சபை தேர்தல் உட்பட  பல பிரச்சினைகளுக்கு   தீர்வுகாண பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க பங்காளி கட்சி தலைவர்கள் அனுமதி  கோரியுள்ளார்கள். எதிர்வரும் வாரம் பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.

மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான  சாத்தியப்பாடுகள் ஏதும்  கிடையாது. தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர்கள் இதுவரையில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனை முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.  யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்களுக்கு 11 பங்காளி கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். மாகாண சபை தேர்தலில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தேர்தலை நடத்த முடியாது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பெறுவதுடன் , சிறு கட்சிகளின் ஆலோசனைகளையும் பெற வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்டது. ஆகவே மாகாண சபை தேர்தல் தொடர்பில் தமிழ்- முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும்.

மாகாண சபை தேர்தலில் காணப்படும் சிக்கல் நிலைக்கு தீர்வு கண்டு தேர்தலை விரைவாக நடத்த லங்கா சமசமாஜ கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். மக்களின் ஜனநாயக தேர்தல் உரிமையினை பாதுகாப்பது அனைத்து தரப்பினது பொறுப்பாகும் என்றார்.

ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோருக்கு 90 நாட்கள் தடுப்புகாவல் !

கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் 72 மணித்தியாலம் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

அத்தோடு சந்தேகநபர்களை தொடர்ந்தும் 90 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

காவல்துறை தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை தாக்குதலுக்கு பின்னர் கொலையாளிகள் உயிரிழந்திருந்தாலும் , அவர்களுக்கான உதவிகளை வழங்கிய நபர்கள் தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று , தாக்குதலுக்கு முன்னர் அதாவது 2017, 2018 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் , அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டன.

அதற்கமைய ஏற்கனவே 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை குளியாப்பிட்டியில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் , இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் , 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 202 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளதுடன் , பயங்கரவாத தடுப்பு பிரிவு , பயங்கரவாத விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் 83 பேர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களில் பயங்கரவாதியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி உள்ளிட்ட பயங்கரவாதிகளின் உறவினர்கள் பலரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை சஹ்ரானின் ஆலோசனைக்கமைய கல்முனை , அக்கரைப்பற்று , ஒலுவில், அம்பாந்தோட்டை மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளி நாடாத்தப்பட்டதாக கூறப்படும் அடிப்படைவாத வகுப்புகளில் கலந்துக் கொண்டவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்கொலைதாரிகளுக்கு உதவி வழங்கிய நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றதுடன் , அவர்களுக்கு நிதி கிடைக்கப்பெற்ற விதம் தொடர்பிலும் இதன்போது விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தியிருந்தனர். அதற்கமைய கொலையாளிகளுக்கு சிலர் உதவி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தனிநபர்களின் சாட்சிகள், விசாரணையின் போது கிடைக்கப்பெற்ற சாட்சிகள் மற்றும் தொழிநுட்ப ரீதியிலான சாட்சிகள் ஊடாகவே இது தொடர்பில் தெரியவந்திருந்தது. இதன்போது வங்கி கணக்குகள் மற்றும் இந்த கணக்குகளின் பண பரிமாற்றம் தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதனடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரன் ரியாஜ் பதியுதீனை குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் தற்போது பயங்கரவாத தடுப்பு பிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

979 இலக்கம் 48 இல் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் சட்டவிதிகளுக்கு கீழ் , ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்காக அதிகாரிகளால் அனுமதிப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கமைய சந்தேக நபர்களை 72 மணித்தியாலம் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த முடியும். பயங்கரவாத தடைச் சட்டத்தில் 6:1 சரத்துக்கமைய 72 மணித்தியால தடுப்புகாவல் உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் , அதற்கமைய அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 9:1 சரத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் அனுமதிப் பெற்றுக்கொள்ள முடியும்.

அது தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவருக்கு உதவி ஒத்தாசைகள் புரிபவர்களை பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு அனுமதியுள்ளது.

கேள்வி : உயிர்த்தஞாயிறுதின தற்கொலை குண்டுதாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் முறையாக விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்று நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன இது தொடர்பில் உங்களது கருத்து ?

பதில்: இந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமையவே 702 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் பல்வேறு நபர்களால் பல கருத்துகள் கூறப்படலாம். இவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களை பயங்கரவாத விசாரணைப்பிரிவு , பயங்கரவாத தடுப்பு பிரிவு அல்லது குற்றப்புலனாய்வு பிரிவில் வந்து வாக்குமூலம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அப்போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.