May

May

தமிழக சட்டமன்ற தேர்தல் – தி.மு.க 139 தொகுதிகளில் முன்னிலை !

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது.
தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 139 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 94 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. திமுக மட்டும் 114 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதேபோல் அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் பல்வேறு அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.

“கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயார்.” – சீனா

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. இதனால்  இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவி பொருட்கள் பல நாடுகளில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன அரசு தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளதாவது:

“கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜின்பிங் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லை.” – பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர்

“இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லை.சில நோயாளிகள் வீட்டிலேயே இறந்து விடுகின்றார்கள்.” என  பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சைகளை பெவதிலுள்ள இடர்பாடு குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குபுறிப்பிடுகையில்,

ஆய்வகங்களின் திறன் மீறப்பட்டு வருகிறது, இது மிகவும் கடுமையான காலம் என்று அவர் எச்சரித்தார்.

இது வரை எடுக்கப்பட்ட சீரற்ற பி.சி.ஆர் சோதனைகளில் 15% நோய்த்தொற்றுக்கள் அடையாளம் காண்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் இல்லை என்றும் நோயாளிகள் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வீட்டில் தங்குவதாகவும் அவர் கூறினார்.

மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல அம்பியூலன்ஸ்கள் இல்லாததால் சில நோயாளிகள் வீட்டிலேயே இறந்து விடுகின்றார்கள் என்றும், நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்த நாடு உடனடியாக பூட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

15.26 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு – 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.26 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.88 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

“தமிழர் பிரதேசங்களை பௌத்த மயப்படுத்த முற்பட்டால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.” – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதியில் உள்ள பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்தினை அண்மையில் அரச அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பௌத்த பிக்குகள் வருகை தந்து பார்வையிட்டு அவ்விடத்தில் பௌத்த மத்தியஸ்தானம் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் அவ்விடம் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசசபைப் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் உள்ளிட்ட பலரும் இவ் விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

DSCN0558குறித்த பிரதேசத்தின் நிலைமைகள் மற்றும் சூழமைவுகள் தொடர்பில் இவர்கள் பார்த்து பரிசீலித்தனர். இப்பிரதேசம் பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசமாக இருப்பதுடன் பல செதுக்கல்கள், படி அமைப்புகள் போன்றனவும் இங்கு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பிரதேசம் தொல்பொருள் சார்ந்த பிரதேசமாக இருந்தாலும், இதனை வைத்து இது பௌத்தத்திற்குரியது என்று சொல்லி பௌத்த விடயங்களை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு அரசு செயற்பட முனையக் கூடாது, அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கக் கூடாது, அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படின் அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்ற அடிப்படையில் ஊடகங்கள் வாயிலாக அவரவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

DSCN0512

““தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆபத்தானது.” – இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.  ஆகவே  இவ்விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று இணையவழியூடாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போததே அவர்  இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்ற காலத்தில் இருந்து மே தின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த முடியாத துரதிஷ்ட நிலை ஏற்பட்டது. இம்முறை மே தின கூட்டத்தை  வெகுவிமர்சையாக நடத்த திட்டமிட்டிருந்தோம். புத்தாண்டு கொவிட் கொத்தணியின் காரணமாக   உழைக்கும் வர்க்கத்தினரை ஒன்றினைத்து கூட்டங்களை நடத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் ஒரு நாடு – ஒரு சட்டம், அனைவருக்கும் சமவுரிமை என்ற இலக்கிற்கு  அமைய இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் பொது சட்டத்தை பின்பற்ற வேண்டும். பொது சட்டத்திற்கு புறம்பாக ஒரு தரப்பினர் செயற்படும் போது முரண்பாடுகள் மாத்திரம் தோற்றம் பெறும்.

தமிழ் பிரிவினைவாதம் நாட்டின் அரசியலமைபப்பிற்கு முரணாக செயற்பட்டதால்  பாரிய விளைவுகள் நாட்டில் தோற்றம் பெற்றது.  30 வருட கால யுத்தம் பல்வேறு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை  நாட்டிலிருந்து இல்லாதொழித்தார்.

தமிழ் பிரிவினைவாதத்தை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இதன் விளைவை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின்ஊடாக விளங்கிக் கொள்ள முடிந்தது.  இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு இதற்காகவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை  தோற்றுவித்துள்ளார்கள்.

அரசியல் நோக்கங்களினால் முடக்கப்பட்டிருந்த தொழிலாளர் உரிமைகளை  பாதுகாத்துள்ளோம்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த உழைக்கும் வர்க்கத்தினர் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று பல்வேறு சவால்கள்  நேரடியாகவும், மறைமுகமாகவும்   தோற்றம் பெற்றுள்ளன. சவால்களை வெற்றிக் கொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.

நாட்டில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – 1600 பேர் பாதிப்பு . 09 பேர் பலி !

நாட்டில் நேற்று மட்டும் ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 845ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 503 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறிய நிலையில், மொத்தமாக 96 ஆயிரத்து 478 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அதே நேரம் நாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 687ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 678 பேர் மரணித்துள்ளதுடன் 12 ஆயிரத்து 689 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையில் அரசாங்கம் செயற்படும்.” – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ

“கொரேனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையில் அரசாங்கம் செயற்படும்.” என  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இம்முறையும் மே தின கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியனவைகளை தொழிலாளர்கள்  இழந்துள்ளனர்.

ஆனாலும் தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும் வலிமையானது என்பதை நாம் அறிவோம்.

இதேவேளை மக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிக்கும் கட்டுப்பாடுகளை விதிக்காமல் அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கும்” என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இரண்டு வாரத்தில் காணமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“இரண்டு வாரத்தின் பின்னர் காணாமல் போனோர் விடயத்தை கையாண்டு தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் காலை பதினோரு மணியளவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர், காணாமல் போனோர் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் தீர்வுகள் முன்வைக்கப்படும் என அண்மையில் கூறியிருந்தீர்கள் அதன் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என வினவினார்

இதற்க்கு பதிலளித்த மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதில் முன்னேற்றம் உள்ளது நேற்றும் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடினேன். அதனை விட கொடிய நோய் ஒன்று உலகளாவிய ரீதியில் பரவியிருக்கிறது. ஆனபடியினால் நாங்கள் இருவரும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்திருந்தோம் சற்று பொறுத்து ஒரு இரண்டு வாரத்தின் பின்னர் அந்த விடயத்தை கையாண்டு தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம் என்றார்

“தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.” – உழைக்கும் மகளீர் அமைப்பு கோரிக்கை !

“தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.” என உழைக்கும் மகளீர் அமைப்பின் இயக்குனர் மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் கோரியுள்ளார்.

உழைக்கும் மகளீர் அமைப்பின் இன்றைய மேதின ஒன்று கூடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“பெண்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சமூக பொருளாதார ரீதியாக முன்னேற வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.மே தினமாகிய இன்றைய தினம் நாம் ஒரு பெரிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். அதனை தற்போது நிறுத்தி இருக்கின்றோம். எனினும் இன்றைய தினம் ஒரு சிறிய ஒன்றுகூடலை நடத்தினோம்.

அதில் அரசியலில் பெண்களுக்கு 30 வீதமான இட ஒதுக்கீடு மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத்திலும் வழங்கப்பட வேண்டும். இம்முறை தமிழ் பெண்கள் எவரும் செல்லவில்லை. ஆனால் பெரும்பான்மை கட்சிகளில் பெண்கள் பலர் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்று இருக்கின்றார்கள்.

ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரைக்கும் பெண்களில் ஒருவரும் நாடாளுமன்றம் செல்லவில்லை என்பது குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

யுத்த காலத்தில் இருந்து பெண்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே பெண்கள் எமது பிரச்சனையை தீர்ப்பதற்கு நாமே நாடாளுமன்றம் மற்றும் ஏனைய சபைகளுக்கு செல்வதன் மூலம் எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும்.

எனவே எம்மை போன்ற பெண்களை நாடாளுமன்ற அனுப்புவதன் மூலம் தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். எனினும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும முகம் கொடுத்துக் கொண்டு கையேந்தி நிற்கும் நிலை காணப்படுகின்றது.

பலர் கடனாளிகளாக இருக்கின்ற நிலை காணப்படுவதோடு பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றதோடு, சமூக மட்டத்தில் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

எனவே அவ்வாறான பெண்களின் வாழ்வாதாரத்தை வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நாங்கள் எமது அமைப்பின் மூலம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

முக்கியமாக தமிழரசுக் கட்சியாக இருக்கலாம் , ரெலோ, புளொட். மற்றும் விக்னேஸ்வரன் அனந்தி சசிதரன் போன்ற அனைத்து தமிழ் கட்சிகளும் பெண்களுக்கு 30 வீதமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதுதான் மேதின தினமாகிய இன்றைய தினம் எமது கோரிக்கையாகும்.

எனவே அனைத்து தமிழ் கட்சிகளும் 30 வீத இட ஒதுக்கீட்டை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வழங்க வேண்டும். என்பதுதான் மே தினத்தில் எமது கோரிக்கையாக காணப்படுகின்றது. பல்வேறுபட்ட திறமையான பெண்கள் உள்ளார்கள். அவர்களை தேர்தலில் நிறுத்தினால் கட்டாயம் வெல்வார்கள் என தெரிவித்தார்.