05

05

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு – 3000த்துக்கும் அதிகமானோர் பலி !

இந்தியாவில் கடந்த 2 தினங்களாக சற்று குறைந்திருந்த கொரோனா தொற்று, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரம் பேருக்‍கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்: உலக அளவில் 30 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள் - இந்தியாவில் என்ன நிலை? - BBC News தமிழ்இந்தியாவில் சில தினங்களுக்‍கு முன்னர் 4 லட்சத்தை கடந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை, நேற்று முன்தினம் 3 லட்சத்து 68 ஆயிரமாகவும், நேற்று 3 லட்சத்து 57 ஆயிரமாகவும் குறைந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 780 பேர் மரணமடைந்து உள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்‍கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 188-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 34 லட்சத்து 87ஆயிரத்து 229 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

“ஓக்‍ஸிஜன் பற்றாக்‍குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்‍கு நிகரானது.” – அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம்

“ஓக்‍ஸிஜன் பற்றாக்‍குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்‍கு நிகரானது.” என இந்தியாவின் அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக, மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், ஓக்‍ஸிஜன் பற்றாக்‍குறையால் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது. ஓக்‍ஸிஜன் சிலிண்டர் விநியோகம் செய்வதில் பாகுபாடு நிலவுவதாகக்‍ கூறி, உத்தரபிரதேச அரசுக்‍கு எதிராக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது.

இந்த வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புக்‍கு ஓக்‍ஸிஜன் பற்றாக்‍குறையே காரணம் என்றால் அது குற்றச்செயலாகவே கருதப்படும் என்றும், இனப்படுகொலைக்‍கு சற்றும் குறையாதது என்றும் அரசுக்‍கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் ஓக்‍ஸிஜன் சிலிண்டர் பதுக்கல் காரணமாக, ஏழை எளிய மக்‍கள், தங்களது உறவினர்கள் மற்றும் நெருக்‍கமானவர்களுக்‍கு, ஓக்‍ஸிஜன் கிடைக்‍க வேண்டி பிச்சை எடுக்‍கும் அவலத்தைக்‍ காண்பது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே பாகுபாடு காட்டாமல், ஓக்‍ஸிஜன் விநியோகத்தை முறையாக கையாண்டு, உயிரிழப்புகளை தடுக்‍க உத்தரபிரதேச அரசு விரைந்து நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும், அரசின் நடவடிக்‍கைகளை நீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

“மனித உரிமைகளை பாதுகாத்து யுத்தம் புரிந்தமையால்தான் தமிழ் மக்கள் இராணுவத்தளபதியான எனக்கு வாக்களித்தார்கள்.” – சரத் பொன்சேகா

“மனித உரிமைகளை பாதுகாத்து யுத்தம் புரிந்தமையால்தான் தமிழ் மக்கள் இராணுவத்தளபதியான எனக்கு வாக்களித்தார்கள்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்றைய தினம் சபாநாயகர் தலைமையில் கூடிய போது சரத் பொன்சேகா மீது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக “கடந்த 2010 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா தமிழ்ப் பிரதேசங்களை வெற்றிகொண்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட சர்வதேச சமூகத்திற்கும், அவருக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தமே காரணம் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அங்கு பேசிய அவர், யாழ் – மிருசுவில் படுகொலை வழக்கில் விடுலையாக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவின் விடுதலையை எதிர்க்கின்ற பொன்சேகா, ஏன் 12,500 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுகையில் எதிர்ப்பு வெளியிடவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இதன்போது சரத்வீரசேகரவின் கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றிய பொன்சேகா,

தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மனித உரிமைகளை பாதுகாத்து யுத்தம் புரிந்தமையால்தான் தமிழ் மக்கள் இராணுவத்தளபதியான எனக்கு வாக்களித்தார்கள். அது தொடர்பில் நாங்கள் பெருமைப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் மீது எவ்வித கோபமும் இருக்கவில்லை என்றார்.

“சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு அராஜக அரசியலை அரசாங்கம் செய்து வருகின்றது.” – நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சாடல் !

“ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான செயற்பாடானது சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு அராஜக அரசியலை அரசாங்கம் செய்து வருகின்றது என்பதையே காட்டுகின்றது.”  என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் காரியாலயத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கின்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வந்து செல்வதற்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்கும் முழுமையான உரிமை இருக்கின்றது. ரிஷாட் பதியுதீன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். அவரை ஒரு குற்றவாளியாக இதுவரை இனம் காணப்படவில்லை. எனவே பொது மக்களின் வாக்கு பலத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கும் இங்கு நடைபெறுகின்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லை.

இது தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்த நிலையில், அவரை நாடாளுமன்றம் அழைத்து வர வேண்டுமாக இருந்தால் சபாநாயகரின் கையெழுத்திடப்பட்ட ஆவணம் தேவை என குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆனால் நேற்று முன்தினம் மாலை ரிஷாட் பதியுதீனுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை என இன்னுமொரு காரணம் குறிப்பிடப்பட்டது.

அதேவேளை நேற்று நாடாளுன்றத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது வேண்டுகோளின் பேரில் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அது விசாரணைக்கு இடையூறாக அமையும் எனவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவை முன்னுக்கு பின் முரணான கருத்தாகவே இருக்கின்றது. இந்த விடயமானது எந்த சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என எனக்கு தெரியவில்லை.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சட்டத்தை தனது கையில் எடுத்து செயற்பட முடியுமா? அது எந்த சட்டத்திற்கு உட்பட்டது என்பது புரியவில்லை. இந்த விடயத்தின் மூலம் தெளிவாக தெரிகின்ற விடயம் என்னவென்றால் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிடுகின்றது. இது ஜனநாயக நாடா? அல்லது இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற நாடா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே இதன் மூலம் இந்த நாட்டிற்கு இந்த அரசாங்கம் என்ன சொல்ல வருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றவர்களின் குரல் வளையை நசுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோவையும் கைது செய்வதற்கு திட்டமிட்டு வருகின்றது. இவையெல்லாம் அராஜக அரசியலின் வெளிப்பாடாகும்.

அரசாங்கத்தின் திட்டம் என்னவென்றால் எங்களுடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இல்லாது செய்ததைப் போல ரிஷாட் பதியுதீனுடைய நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை அனைவராலும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

எனவே அரசாங்கம் தெளிவாக ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும் எதிர்கட்சிகளின் குரல் வளையை நெருக்கியோ அல்லது எங்களை அச்சுறுத்தியோ எங்களுடைய செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போத கருத்து தெரிவித்துள்ளார்.

“இரா.சாணக்கியன் தான் புலிகளைக் காட்டிக்கொடுத்த கை்ககூலி.” – எச்.எம். ஹரிஸ்

“இரா.சாணக்கியன் தான் புலிகளைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானின் கட்சியில் இருந்தவர்.” என ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம் ஹரிஸ் குற்றஞ்சாட்டினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சாணக்கியன் முஸ்லிம் விரோத போக்கை கையில் எடுத்துள்ளார். அம்பாறையில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். அந்த அம்பாறை மாவட்டத்தை பிரிக்குமாறோ அல்லது ஒரு தமிழ் அரச அதிபரை நியமிக்குமாறோ கேட்கக்கூட முடியாதவர்தான் இந்த சாணக்கியன். ஆனால் அவர் எம்மை அரசின் கைக்கூலி என்கின்றார். இவர் தான் புலிகளைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானின் கட்சியில் இருந்தவர். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கியதாக குற்றம் சாட்டப்படும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக இருந்தவர். இவர்தான் தமிழ் மக்களையும் அவர்களின் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்தவர்.

மேலும், 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நாம் கை தூக்கியதாக கூறுகிறார். அப்படி கை தூக்கியதன் மூலமே உங்களிடமிருந்து முஸ்லிம்களின் சில உரிமைகளையாவது எம்மால் பாதுகாக்க முடிந்தது. கிழக்கில் சிங்கள முதலமைச்சர் ஒருவரை நாம் கொண்டுவர முயற்சிப்பதாக சாணக்கியன் கூறுகின்றார். இது அப்பட்டமான பொய். இந்த நோன்பு நாளில் அல்லாஹ் மீது சத்தியமாக கூறுகின்றேன் நான் அப்படிப்பட்ட காட்டிக் கொடுக்கும் குடும்பத்தில் பிறக்கவில்லை. கல்முனை வடக்கு பிரதேச சபை தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கவேண்டும் என்றே நாங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்து வந்தோம். அதற்கு தீர்வொன்றை காணும் நோக்கிலே எல்லை நிர்ணய குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. 6 மாதங்களில் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் கல்முனை மாநகரின் வரலாறு தெரியாமல், அங்கு தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு எவ்வாறு இருந்தது என்பது தொடர்பாக தெரியாமலே சிலர் சபையில் கதைக்கின்றனர். கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தே நாங்கள் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றோம். சில சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட எடுத்த தீர்மானங்கள் காரணமாக முஸ்லிம்கள் அதற்கான விளைவை இன்றும் அனுபவித்து வருகின்றனர்.” என்றார்.

தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் 06 சிறுபான்மையினர் நியமனம் !

தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில், 15 பேர்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரால் இன்று சபையில் அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவில், சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மற்றும் கபிர் ஹஷிம் ஆகியோர் சிறுபான்மையின பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், பவித்ரா வன்னியாரச்சி, விமல் வீரவன்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

“புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுவிக்கப்பட்ட 11 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களை கொலை செய்திருக்க வேண்டும் என கூறுகிறீர்களா..?” – நாடாளுமன்றில் சரத்வீரசேகரவிடம் பொன்சேகா கேள்வி !

வெளிநாட்டு டொலர்களுக்கும் பணத்திற்கும் அடிபணிந்து இலங்கை இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயலை சரத்பொன்சேகா செய்து கொண்டிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகாவை சாடியுள்ளார்.

மிருசுவில் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் விடுதலை தொடர்பில் கடந்த கூட்டத் தொடரில் சரத் பொன்சேகா கடுமையாக சாடியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய போதே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வெளிநாட்டிலுள்ள புலம்பெயர் தமிழர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு எமது நாட்டு இராணுவ வீரர்களை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.இப்போது அவர் டொலர்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

இதேவேளை, 11 ஆயிரம் விடுதலை புலிகளை புனர்வாழ்வளித்து விடுவித்த சந்தர்ப்பத்தில், குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடைய நபர்களை விடுதலை செய்த போது எதிர்ப்பினை தெரிவிக்காத பொன்சேகா இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதா..? என கேள்வி எழுப்பினார் சரத் வீரசேகர .

இந்த நிலையில், இதற்கு பதிலளித்த பொன்சேகா , சரத் வீரசேகர கூறுவதை பார்த்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுவிக்கப்பட்ட 11 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களை கொலை செய்திருக்க வேண்டும் என்பதா? என  சரத்வீரசேகரவிடம் பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

“மிக மோசமானதொரு காலகட்டத்தில் நாம் பயணிக்கிறோம்.” – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

“மிக மோசமானதொரு காலகட்டத்தில் நாம் பயணிக்கிறோம். சுகாதார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியிலேயே அனைத்து செயற்பாடுகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்றது.” என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இதை குறிப்பிட்டார்.

அந்த நேர்காணலில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மிக மோசமானதொரு காலகட்டத்தில் நாம் பயணிக்கிறோம். சுகாதார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியிலேயே அனைத்து செயற்பாடுகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சுகாதாரத்துறையில் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேரடியான வழிகாட்டல்களையும் தேவையான பணிப்புரைகளையும் அன்றாடம் வழங்கி வருகிறார். அனைத்து நடவடிக்கைகளையும் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதோடு வைரஸ் தொற்றிலிருந்து மக்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவர் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.

சுகாதாரத்துறை, சிகிச்சை செயற்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தினமும் பாரிய செலவுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் பெரும்பாலும் இலவசமாகவே மேற்கொள்ளப்படுவதுடன் தினமும் மில்லியன் கணக்கான நிதி அதற்காக செலவிடப்பட்டு வருகிறது.

திரிபுபடுத்தப்பட்ட வைரஸ் மிக வேகமாக பரவும் நிலையை காண முடிகிறது. விரைவாக வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகரிக்கும் நிலையே காணப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் சுகாதாரத் துறையினர் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாலேயே நிலைமையை கட்டுப்படுத்த முடிகிறது. அதே போன்று பாதுகாப்பு படையினர், பொலிசார் உள்ளிட்டவர்களும் தம்மையும் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொண்டு நாட்டு மக்களையும் பாதுகாப்பதில் 24 மணித்தியாலங்களும் கடும் உழைப்பை மேற்கொள்கின்றனர். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் அர்ப்பணிப்பை நாம் எளிதாக கருத முடியாது. திருமண நிகழ்வுகளை தடை செய்துள்ள நிலையில் சிலர் வீடுகளில் விருந்து விருந்துபசாரங்களை நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இந்தக் காலம் அதற்கு பொருத்தமான காலம் அல்ல. மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்.

அவ்வாறான நிகழ்வுகளுக்கு இடமளிக்க முடியாது. சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இனியும் மக்கள் அலட்சியமாக செயற்பட இடமளிக்க முடியாது.நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியது போன்று இக்கட்டான இந்த காலகட்டங்களில் எதையும் உதாசீனம் செய்யாது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“உலகில் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நிகராக நாமும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“உலகில் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நிகராக நாமும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபையில் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்க முடியாது.தற்போதுள்ள நிலையில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக நாளொன்றுக்கு 440 இலட்சம் ரூபா செலவாகின்றன. கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்குவதே ஒரே தீர்வாகும். அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலமாக முழுமையாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியு

நாட்டை முடக்கி எவ்வாறு வருமானத்தை பெற்றுக்கொள்வது என்ற கேள்வியை நாம் எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்க வேண்டியுள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்குவதே எமது பிரதான வேலைத்திட்டமாகும். தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலமாக முழுமையாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமெனவும் அதேபோல் மக்களை சுகாதார வழிமுறைகளுக்குள் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கின்றோம். இதனால் இறப்பு வீதங்களை குறைக்க முடியும்.

09 இலட்சத்து 25 ஆயிரத்து 240 நபர்களுக்கு கொவிசீல்ட் தடுப்பூசிகள் முதலாம் தடுப்பூசியாக ஏற்றப்பட்டுள்ளன. இரண்டாம் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியையும் இலங்கையில் பயன்படுத்த ஒளடத கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. 13 மில்லியன் தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும். அதேபோல் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் 8.4 மில்லியன் அஸ்ரா செனெகா தடுப்பூசிகளும், அமெரிக்காவின் உற்பத்தியான பைசர் தடுப்பூசிகள் 5 மில்லியனும், சீன உற்பத்தியான சைனோபார்ம் தடுப்பூசிகளும் ஆறு இலட்சமளவில் தற்போது கைவசம் உள்ளது.

சீனாவின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தவுடன் மேலதிகமாக சைனோபார்ம் தடுப்பூசிகளை வழங்கவும் சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் 63 வீதமான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே தடுப்பூசி நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை செய்துள்ளோம். ஆகவே உலகில் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நிகராக நாமும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைகழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி !

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் பரீட்சை எழுதிய நிலையில், அவர்களில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் 64.39 வீதமாகும்.

அத்துடன், பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 86 பேருடைய பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சைப் பெறுபேறுகளை மீள் பரீசீலனை செய்வதற்கான விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெயிடப்படவுள்ளது.