“ஏப்ரல் 21 ஆம் திகதி நடை பெற்ற தாக்குதலை யார் செய்தது? எப்படி செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எமது தலைவர் ரிஷாட் பதியுதீன் எந்த ஒரு தவறும் செய்யாமல் அவர் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார்.” என மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எம் .எச் .எம். முஜாஹிர் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (6.05.2021) காலை 11.30 மணியளவில் நடை பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய தலைவர் ரிஷாட் பதியுதீன் எந்த ஒரு தவறும் செய்யாமல் அவர் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 ஆம் திகதி நடை பெற்ற தாக்குதல் யார் செய்தது? எப்படி செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எமது தலைவர் எந்த ஒரு தவறும் செய்யாமல் அவர் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டு வெடிப்பின் அடுத்த நிமிடம் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பெயரை நாடு முழுவதும் பேசினார்கள். எமது தலைவர் நாடாளுமன்றத்திற்கு சென்று நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. நீங்கள் விசாரணை செய்து நிரூபித்தால் எனக்கு மரண தண்டனை தாருங்கள் என்று கூறியிருந்தார்.
இருந்த போதும் இரண்டு வருடங்களாக பல விசாரணைகளை செய்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் தொடர்பில்லை என அவர்கள் கூறியிருந்தார்கள். இது எல்லோருக்கும் தெரியும்.
இரண்டு வருட விசாரணையில் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் நாடாளுமன்ற குழு அதே போல் முன்னாள் காவல்துறை மா அதிபர் கடந்த நல்லாட்சி அரசாங்கமும் விசாரணை செய்து ரிஷாட் பதியுதீன் குற்றமற்றவர் என்று விடுதலை செய்திருந்தனர்.
இப்படி இருந்த போது கடந்த சனிக்கிழமை இரவு 3 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட சி.ஐ.டி யினர் முன்னாள் அமைச்சரின் வீட்டுக்குச் சென்று ஒரு பாதாள உலகக் குழு தலைவரை கைது செய்வது போன்று கைது செய்து இருக்கின்றார்கள்.
இவ்வாறு செய்தது சரியா? என்று நான் கேட்கின்றேன்.
இந்த நாட்டில் சகல அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி அவர்களே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறான தவறினை செய்திருப்பாரா? என்று நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும்.நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஏதேனும் நடந்தால் பொறுப்பு கூற வேண்டியவராக சபாநாயகர் அவர்கள் இருக்கின்றார்.
அவருக்கு தெரியாமல் அவருடைய அனுமதி இல்லாமல் சென்று கைது செய்தது தவறு என்று நாங்கள் சொல்கின்றோம். அது மட்டுமல்ல நேற்றைய தினம் சபாநாயகர் அவர்கள் ரிஷாட் பதியுதீன் அவர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வாருங்கள் என்று சொன்ன பொழுது கொண்டுவரவில்லை.
குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சொல்கின்றார்கள் கொரோனா தொற்று காரணமாக அவரை கொண்டுவரவில்லை என்று.ஆனால் இன்னும் ஒரு அமைச்சர் சொல்கின்றார் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றம் கொண்டு வர முடியாது என்று.
இப்பொழுது நான் கேட்கின்றேன். எங்கே சட்டம் இருக்கின்றது. எங்கே நியாயம் இருக்கின்றது. இந்த அரசு வந்த பின் ஒரு நாட்டில் ஒரு சட்டம் இல்லை. இங்கு நடக்கின்ற பல சட்டங்களும் பல சர்வாதிகாரம் தான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது.
உலக நாடுகளில் இருக்கின்ற அனைத்து முஸ்லிம் நாடுகளும் இந்த விடயத்தில் கண் திறந்து பார்க்க வேண்டும். எமது சிறுபான்மை சமூகத்திற்கு சேவை செய்த ஒரு அமைச்சரை இன்று இல்லாமல் ஆக்க வேண்டும். அவருடைய குரல் வலையை நசுக்க வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து இங்கு சிறையில் அடைத்து இருக்கின்றார்கள். எந்த தவறும் செய்யாத ஒருவருக்கு பயங்கரவாத தடை சட்டம் என்ற ஒரு பொய்யை கூறி தடுத்து வைத்திருக்கின்றார்கள்.
ஜனாதிபதி அவர்களே உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன்.இதை உங்களுடைய அரசியல்வாதிகளுக்காக செய்தார்களா? இல்லா விட்டால் இருக்கின்ற உங்களுடைய மாத தலைவர்களுக்காக கைது செய்தார்களா? ஏனெனில் இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் தெரியும் இந்த குண்டு தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது. உங்களுடைய அரசியல் இலாபத்திற்காக எங்களுடைய தலைவரை நீங்கள் கைது செய்து வைத்திருக்கின்றீர்கள்.
கடந்த காலம் உங்களுடைய தேர்தல்களில் இந்த தலைவனை கூறித்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் இன்று இந்த அமைச்சரை வளர விடாமல் பல சதிகள் செய்து செய்கின்றீர்கள். இருந்த போதும் இந்த வன்னி மாவட்டத்தில் உள்ள மக்கள் அதி கூடிய முதன்மை வாக்குகளால் இந்த அமைச்சரை தெரிவு செய்துள்ளார்கள்.
தற்போதைய அரசு வங்குரோத்து நிலைக்கு செல்கிறது. இந்த ரிஷாட் பதியுதீனை கைது செய்தால் தான் அரசியலில் நிலைத்து நிற்கலாம் என்று நீங்கள் இதை செய்கிறீர்களா? என்று சந்தேகமாக இருக்கின்றது. இந்த நேரத்தில் எமது அனைத்து முஸ்லிம் மக்களிடமும் நாங்கள் கேட்பது எங்களுடைய நோன்பு காலத்தில் ரிஷாட் பதியுதீன் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
எமக்கு இறைவன் மட்டுமே துணை. அதனால் அவரின் விடுதலைக்காக நீங்கள் இறைவனை மன்றாடுங்கள். என மன்னார் பிரதேச சபை தவிசாளர் மேலும் தெரிவித்தார்.