08

08

கூகுளின் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தமிழக இளைஞன் – பரிசு வழங்கி பாராட்டிய கூகுள் நிறுவனம் !

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது.

அந்தவகையில் கூகுள் செயலி ஒன்றில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழக இளைஞர் ஒருவருக்கு அந்நிறுவனம் பரிசு தொகை வழங்கியுள்ளது.

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். பொறியியல் பட்டதாரியான இவர், கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகேஷன் தயாரிப்பதற்கான செயலியில், வாடிக்கையாளரின் தகவல்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் திருடப்படுகிறது என்ற பிழையை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார். அவரின் இந்த சேவையை அங்கீகரித்துள்ள கூகுள் நிறுவனம், அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் அவரின் பெயரை கூகுளின் Hall of Fameல் இணைத்து மரியாதை அளித்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீராம்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

“பொருளாதார அழிவையா , சுகாதார அழிவையா அரசாங்கம் தெரிவு செய்யப் போகின்றது.? – லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கேள்வி !

நாட்டில் கொரோனா அச்சுறுத்தும் இத்தருணத்தில் முழுமையாக நாட்டை முடக்குவது சிக்கலானது என்றால் மாகாணங்களின் ஆளுநர்களுக்கு அதிகாரங்களை வழங்கி மாகாண மட்டத்தில் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கையின் தற்போதைய கொவிட் நிலைமை தொடர்பான சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே லக்‌ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா விடயத்தில் அரசாங்கம் அரசியல் தீர்மானங்களையே எடுக்கின்றது. முதலாவது கொரோனா அலை ஏற்படும் போது நாட்டை முடக்குமாறு கோரிய போதும் தேர்தலுக்காக நாட்டை மூடுவதற்கு மறுத்தனர். அப்போதே நாங்கள் கூறுவதை செய்திருந்தால் இப்போது பிரச்சினை இருந்திருக்காது.

நாங்கள் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்க தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அரசியல் ரீதியிலான தீர்மானங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பை வழங்க மாட்டோம். நாட்டை முடக்க வேண்டுமென்று நாங்கள் கூறவில்லை. ஆனால் கொவிட்டை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அதனை செய்ய வேண்டும். அதனை செய்தால் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் என்று கூறுகின்றனர். அதனை செய்யாவிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படுமே. இதில் எதனை இந்த நேரத்தில் தெரிவு செய்யப் போகின்றீர்கள். பொருளாதார அழிவையா, சுகாதார அழிவையா நீங்கள் தெரிவு செய்யப் போகின்றீர்கள்.

இந்த நேரத்தில் எங்களின் ஒத்துழைப்பு எதற்கு வேண்டுமென்று அரசாங்கம் கூறினால் தெரிவுக் குழுவை அமைத்தாவது நாங்கள் கதைக்க முடியும். தற்போது இரண்டு மாதங்களில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. அப்படியென்றால் எங்கே தடுப்பூசி. இன்னும் முறையாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக விவசாய பட்டதாரி மாணவர்களின் நஞ்சற்ற அரிசி வழங்கும் முயற்சி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பாராட்டு !

கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தில் யாழ். பல்கலைக்கழக விவசாய பட்டதாரி மாணவர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற நவீன முறையிலான நெல் நாற்று நடப்படும் செயற்பாட்டை இன்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளையோரின் முயற்சிகளை பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.

குறித்த பொறிமுறையினால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் களநாசினிப் பிரயோகம் மட்டுப்படுத்தப்படுவதுடன், அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் உற்பத்திச் செலவு குறைவடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

df0c0b94 5038 4353 b82b e120c23270ec

அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு ஏற்றவாறு நஞ்சற்ற விவசாயம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு நெல் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏற்றவாறு நெல்லை தாங்கள் குறைந்த செலவில் பாத்திகள் அமைத்து நெல்லை முளைக்க வைத்து,அவற்றை நாற்று நடும் இயந்திரம் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் நாற்றும் நாட்டி அந்த வயல் நிலங்களுக்கு புல் பிடுங்கும் இயந்திரம் மூலம் களைகளை பிடுங்கி களைநாசினிகள் 100 வீதம் தெளிக்காமல் நஞ்சற்ற அரிசி வழங்கும் முயற்சியால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

7f6a831c f1df 4e78 81ad 79f42bbd7abc

இந்நிலையில், குறித்த முயற்சியை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான செயற்பாடுகளுக்கு தன்னுடை ஆதரவும் அரசாங்கத்தினது ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.நயினாதீவில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வு இரத்து !

யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அரச வெசாக் நிகழ்வை வேறு இடத்தில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் திட்டமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசின் வெசாக் நிகழ்வை இம்முறை யாழ்ப்பாணம் – நாகதீப ரஜ மகா விகாரையில் நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஆலோசனை ஒன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அரசியல் ரீதியில் செல்வாக்கு பெற்றவர்களிற்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை வழங்குகிறார்கள்.” – ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“அரசியல் ரீதியில் செல்வாக்கு பெற்றவர்களிற்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை வழங்குகிறார்கள்.” என ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பொய்யான புள்ளிவிபரங்களை வெளியிடுவதன் மூலமும் பி.சி.ஆர் சோதனைகளை குறைப்பதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் உயிரிழப்புகளுடன் விளையாடுகின்றது எனவும் டிதெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைரசினால் உயிரிழக்கும் நோயாளிகளின் விபரங்களை வெளியிடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் விபரங்களை மாத்திரம் வெளியிடுகின்றோம் கொரோனாவைரசினால் தீவிரமடைந்த ஏனைய நோய்களினால் உயிரிழந்தவர்களின் விபரங்களை வெளியிடுவதில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார் என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார்.
சுகாதார பணியாளர்களிற்கு முன்னுரிமை வழங்காமல் அரசியல் ரீதியில் செல்வாக்கு பெற்றவர்களிற்கு இரண்டாவது டோஸினை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.75 கோடி !

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.75 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.47 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32.83 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.86 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்து 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஈராக்கில் ஒரு வாரத்திற்குள் நான்காவது முறையாக ஆளில்லா விமானம் மூலம்அமெரிக்க படைகளை குறிவைத்து தாக்குதல் !

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்க வான் தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின.
அமெரிக்க படைவீரர்களை ஈராக்கிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் ஈராக்கில் அவர்கள் தங்கியிருக்கும் இராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் ஐன் அல்-ஆசாத் விமானப்படை தளத்தை குறிவைத்து இன்று காலை  தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளுடன் கூடிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவ தளம் கடுமையாக சேதமடைந்தது. ஆனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என ஈராக் இராணுவம் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் நான்காவது முறையாக அமெரிக்க படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

“2023 ஆம் ஆண்டில் எமது மாணவர்களுக்கு மிகச்சிறந்த கல்விமுறையொன்றை வழங்குவோம்.” – கல்வி அமைச்சு !

அரசாங்கத்தினால் நாட்டின் கல்விமுறை முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள ‘டிஜிட்டல் தளங்களில்’ யோசனைகளை முன்வைக்க முடியும். இதனூடாக 2023 ஆம் ஆண்டில் எமது மாணவர்களுக்கு மிகச்சிறந்த கல்விமுறையொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

“இலங்கைப் பாடசாலை மாணவர்களின் கல்வி கற்றல் காலத்தில் 9 மாதங்கள் அவர்களை கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைக்கும் வகையிலான கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்தும் காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போதைய கல்விமுறையின் பிரகாரம் சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும் நடைபெற்று வருகின்றது. இதன் போது சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் உயர்தரத்திற்கான தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கும் இடையில் 9 மாதகால இடைவெளி காணப்படுகின்றது. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு அவ்விரு பரீட்சைகளும் நடைபெறும் காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது சிறந்த தீர்வாக அமையும்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் மாதம் நடைபெற்றால் அதற்குரிய பெறுபேறுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும். எனினும் உயர்தர மாணவர்கள் இருக்கின்ற காரணத்தினால் சாதாரண தரம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உடனடியாகப் பாடசாலைகளுக்கு உள்வாங்க முடியாத நிலையேற்படும். உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைந்ததன் பின்னரே அந்த மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்க முடியும்.

அதேபோன்று க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகும். பெறுபேறுகள் வெளிவந்ததன் பின்னர் மீள்திருத்தப்பணிகள் இடம் பெறுவதற்கு சுமார் 3 – 5 மாத காலம் தேவைப்படும். அதன் பின்னரே பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆனால் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டால், அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அவர்கள் உயர்தரத்திற்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும். க.பொ.த உயர்தரப்பரீட்சை டிசம்பர் மாதத்தில் நடைபெற்றால் அதன் பின்னர் அம்மாணவர்கள் பாடசாலைக்க சமூகமளிக்க மாட்டார்கள். மேலும் உயர்தரப் பரீட்சையின் மூலம் தெரிவாகும் மாணவர்களின் மாவட்டங்களை நிர்ணயிப்பதை இலகுவாக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பதிவாளர் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்று தயாரிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் ‘சுபீட்சமான எதிர்காலம்’ கொள்கைத்திட்டத்தின் 21 ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாற்றங்கள் இடம்பெறுகின்றது. சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் எடெக்ஸல், கேம்பிரிட்ஜ், லண்டன் போன்ற பரீட்சைகளுக்குத் தோற்றுவதன் ஊடாக மிச்சப்படுத்திக்கொள்ளக்கூடிய காலத்தை தற்போது ஏற்படுத்தப்படும் மாற்றங்களின் ஊடாக எமது நாட்டின் கல்வி முறையைப் பின்பற்றும் மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.

கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் உடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் ஒளிப்படம் !

இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். குறித்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த உடையில் புலிகளின் தலைவரின் பெயரும் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மீனவர்களை ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்தபின்னர் அவர்களை விடுவித்திருந்தனர்.
தற்போது, எடுக்கப்பட்ட காணொளி, ஒளிப்படங்களை அடிப்படையாக கொண்டு கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“யாழ். மாநகர முதல்வரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்திற்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ். மாநகர சபைக்குள்ளது.” – மனோ கணேசன்

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ள யாழ். மாநகர முதல்வரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்திற்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ். மாநகர சபைக்குள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்து்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்த பதிவினை இட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பயங்கரவாத விசாரணை பிரிவு, சர்ச்சைக்குரிய யாழ் மாநகர சபையின் தூய்மை கண்காணிப்பு அணியினர் ஐவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளது. அப்பாவிகளான இவர்களை, ‘பயங்கரவாத’ அடையாளத்துக்குள் சிக்காமல் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு, யாழ். மாநகர சபைக்கு இருக்கின்றது.

கட்சி பேதங்களுக்கு அப்பால், அனைத்துக் கட்சி யாழ். எம்.பிக்களினதும், அரசியல், சட்டரீதியான கூட்டு முயற்சிகள், இது தொடர்பில் அவசியம். முக்கியமாக, யாழ். மாவட்ட அரசின் பங்காளி அமைச்சர்கள், எம்.பிக்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும் .

அது அப்படியிருக்க, இந்தப் பணியாளர்களின் அதிகாரபூர்வ பணிப்பெயர் என்ன? ‘யாழ் மாநகர காவல் படையா’ அல்லது ‘தூய்மை கண்காணிப்பு அணியா’? ஊடகங்களுக்கு இது பற்றிய தெளிவை மாநகரசபை தர வேண்டும் – என்றுள்ளது.