10

10

பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா பரவாதா..? அவரை ஏன் பொலிஸார் தூக்கிச்செல்லவில்லை,? – சமூக வலைத்தளவாசிகள் கேள்வி !

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமா​டிக் கொண்டிருக்கிறது.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அவற்றை கடைப்பிடிப்பதில்லை.

முகக்கவசம் அணியாத பொதுமக்களை, பொலிஸார் அப்ப​டியே தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடி​யோக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

யாழ்ப்பாணம், மன்னார், பண்டாரவளை மற்றும் மட்டக்களப்பில் பொதுமக்களை இவ்வாறு, பொலிஸார் தூக்கிச்சென்றிருந்தனர்.

அதேபோல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, முக்கிய கூட்டமொன்றில், முகக்கவசம் அணியாது அமர்ந்திருக்கின்றார். இந்த வைபவம் இன்று (10.05.2021) இடம்பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவரை ஏன்? பொலிஸார் தூக்கிச் செல்லவில்லை என்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

“எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க.” – சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே

“எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாகும்.பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணிவந்தால் இதனை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எங்களுக்கு இருக்கின்றது.” என இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் தொற்றாளர்களின் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிக்கையில்,

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் கடந்த இரண்டு தினங்களில் 1500 முதல் 2500க்கும் அதிகமானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையிலும் இதனை கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். அதனால் பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணிவந்தால் இதனை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எங்களுக்கு இருக்கின்றது.

அத்துடன் எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாகும். அதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்வதாக இருந்தால் ஒருவர் மாத்திரம் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று இரண்டு முகக்கவசங்களை அணிந்துகொண்டு வெளியில் செல்லுமாறே நாங்கள் கேட்கின்றோம். இதுதான் புதிய சுகாதார வழிகாட்டலாகும். சனக்கூட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை முடியுமானவரை தவிர்த்து கொள்ளவேண்டும். அதேபோன்று பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொண்டவர்கள் அதன் பெறுபேறு கிடைக்கும்வரை யாரும் வெளியில் செல்லாமல் தனிமையிலேயே இருக்கவேண்டும்.

அவ்வாறு யாராவது பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டுள்ள ஒருவருடன் நெருங்கிப்பழகி இருந்தால், அவர் உடனடியாக தனது பொது சுகாதார அதிகாரிகளிடம் அதுதொடர்பில் முறையிட்டு, சுயதனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

மேலும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை, பி.சீ.ஆர். பரிசோதனைகள், ஒட்சிசன் போன்றவற்றை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்று. அதனால் பொது மக்கள் இதுதொடர்பாக சிந்திக்காமல் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தால் எங்களுக்கு இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் போவதில்லை. தற்போது நாட்டில் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருவது மேல்மாகாணத்தில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கண்டி, குருணாகல். மாத்தளை மாவட்டங்களாகும். தொற்றாளர்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படும் கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.

“கர்ப்பிணி தாய்மார்களும் பச்சை பாலகர்களும் இறக்கின்றனர். நாட்டை முடக்குங்கள்.” – மனோகணேசன் ஆதங்கம் !

“கர்ப்பிணி தாய்மார்களும் பச்சை பாலகர்களும் இறக்கின்றனர். நாட்டை முடக்குங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டை மூன்று வாரத்திற்கு முடக்குமாறும் அத்தோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இதுவரை ஆறு நாடுகளில் உள்ள கொரோனா வைரஸ்கள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. என்றும் இதனால் கர்ப்பிணி தாய்மார்களும் பச்சை பாலகர்களும் இறப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டை மூட மறுப்பது ஏன்? என கேள்வியெழுப்பிய அவர், துறைமுக நகர சட்டமூலத்தை சபையில் நிறைவேற்றிக்கொள்வதுதான் தேவை என்றால் நாட்டை மூடி, நாடாளுமன்றத்தை மாத்திரம் திறந்து வையுங்கள் எனக் கோரியுள்ளார்.

முந்தைய அரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்தது மியன்மார் இராணுவம் !

மியன்மாரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது சிறை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியன்மார் ராணுவம்.

ஆனால் மியான்மர் மக்கள் இராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தினமும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

இராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 700-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மியான்மரில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. அதேபோல் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும் தொடர்கிறது.

இதனிடையே இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளும் கட்சி தலைவர்கள் பலரையும் ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ள அதேவேளையில் துணை அதிபர் மான் வின் கைங் தான் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இராணுவத்திடம் இருந்து தப்பி தலைமறைவாகினர்.

அதனை தொடர்ந்து இராணுவத்திடம் இருந்து தப்பிய ஆளும் கட்சி எம்.பி.க்கள் பைடாங்சு ஹுலுட்டாவ் (மியான்மர் நாடாளுமன்றம்) பிரதிநிதிகள் குழு (சி.ஆர்.பி.எச்) என்கிற குழுவை தொடங்கினர். இந்தக் குழுவின் தலைவராக (பொறுப்பு) மான் வின் கைங் தான் உள்ளார். மியான்மரின் நிழல் அரசாக செயல்பட்டு வரும் இந்த சி.ஆர்.பி.எச்., நாட்டின் மக்களாட்சி அரசாக செயல்பட சர்வதேச அங்கீகாரத்தை நாடுகிறது.

ஆனால் மியான்மர் இராணுவம் சி.ஆர்.பி.எச்-சை சட்ட விரோத குழுவாக கருதுகிறது.
அந்த குழுவுடன் ஒத்துழைக்கும் எவரும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும் என இராணுவம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இந்தநிலையில் சி.ஆர்.பி.எச்-சை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ள மியான்மர் இராணுவம், முந்தைய அரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டுமன்றி மியான்மரின் நிழல் அரசாக இயங்கும் சி.ஆர்.பி.எச்-சால் கடந்த வாரம் அமைக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு படையும் பயங்கரவாத இயக்கமாக மியன்மார் இராணுவம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை இன குழுக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த மக்கள் பாதுகாப்பு படை மத்திய ஒற்றுமை இராணுவத்தின் முன்னோடியாக செயல்படும் என சி.ஆர்.பி.எச். கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உயிரி ஆயுதமாக கொரோனா வைரஸை பயன்படுத்த திட்டமிட்டதா சீனா..? – அரெிக்காவுக்கு கிடைத்த இரகசிய ஆவணங்களால் பரபரப்பு !

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவ ஆமர்பித்ததாக கருதப்படும் கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவியது. அதன் தாக்கம் தற்போதும் குறையவில்லை. உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை தற்போது வேகமாக உள்ளது.
சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும், இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது.
 இந்நிலையில், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான சீன ராணுவத்தின் ரகசிய ஆவணங்கள், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு கிடைத்துள்ளதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு 5 ஆண்டுக்கு முன் 2015-ம் ஆண்டில் சீன இராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இணைந்து சார்ஸ் கொரோனா என்ற வைரசை உருவாக்கும் திட்டத்தை தயாரித்தனர். தேவைப்படும்போது இந்த வைரசை உயிரி ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டனர். போர்க்காலத்தில் மட்டுமின்றி, தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் பயன்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டது.
வைரஸ் இயற்கையாக உருவானதாக தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும், குற்றம் சாட்டினால் மறுக்கும் அளவுக்கு இயற்கையாகவும் இருக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு கிடைத்த இந்த இரகசிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெருசலேமில் பாலஸ்தீனர்களுக்‍கும், இஸ்ரேல் போலீசாருக்‍கும் இடையே மோதல் – 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் !

ஜெருசலேமில் உள்ள அல் அக்‍சா பள்ளி வாசலில் பாலஸ்தீனர்களுக்‍கும், இஸ்ரேல் போலீசாருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் 150க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

பழைய ஜெருசலேம் நகரில் உள்ள அல்- அக்‍சா பள்ளி வாசல், யூதம், இஸ்லாம் உள்ளிட்ட நான்கு மதங்களின் புனித இடமாகக்‍ கருதப்படுகிறது. இந்த பள்ளிவாசலுக்‍கு வரும் பாலஸ்தீனர்களுக்‍கு இஸ்ரேலியர்களும், இஸ்ரேல் போலீசாரும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதாக எழும் குற்றச்சாட்டின் பேரில் அடிக்‍கடி மோதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன.

Israeli police fired rubber bullets and stun grenades to disperse the crowds

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள யூதர்களுக்‍குச் சொந்தமான குடியிருப்புப் பகுதியிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு முயன்றது. இது தொடர்பாக ஏற்கெனவே மோதல் போக்‍கு அதிகரித்த நிலையில், ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்‍கிழமையன்று வழக்‍கம் போல் ஏராளமான பாலஸ்தீனர்கள் அல்- அக்‍சா பள்ளிவாசலுக்‍குச் சென்றனர். அப்போது அவர்கள் இஸ்ரேல் போலீசார் மீது கற்களை வீசித்தாக்‍குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பாலஸ்தீனர்கள் 160 பேரும், போலீசார் 6 பேரும் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

“செப்டெம்பர் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்வடையும்” – இலங்கைக்கு எச்சரிக்கை !

இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் செப்டெம்பர் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்வடையும் என வோஷிங்டனை தளமாக கொண்ட பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்றை மேற்கோள்காட்டி, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இந்த எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்கடன் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை குறித்து இலங்கை அவதானம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள மங்கள சமரவீர, குறித்த பல்கலைக்கழகமானது கொரோனா தொற்று தொடர்பான ஆழமான ஆய்வை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த வகையில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் தொற்று பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு இலங்கையும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்பிரகாரம் நாட்டில் ஏற்படக் கூடிய பேரழிவை தடுக்கும் வகையில் மொத்த சனத்தொகையில் குறைந்தது 70 வீதமான மக்களுக்கு தடுப்பூசி மருந்தை விரைவில் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரிய பேரழிவை தடுப்பதற்கான கால அவகாசம் தற்போதும் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இலங்கை துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிதாக பரவும் ஐந்து வகையான கொரோனா வைரஸ் திரிபுகள் – ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் வைரஸ் நல்லூரில் !

இலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவி வருவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதன்படி பிரித்தானியாவில் பரவிவரும் பி.1.1.7 என்ற வைரஸ் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடையாளங்காணப்பட்டுள்ளது.

கொழும்பு, குருநாகல், கண்டி, பொலன்னறுவை, மன்னார் மாவட்டங்களில் சில பகதிகளில் இந்த வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் பி.1.428 என்ற வைரஸ் திரிபுடன் யாழ்ப்பாணத்தில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நல்லூரை மையமாக கொண்டு குறித்த வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் சில பிரதேசங்களில் பி.1.411 என்ற இலங்கையில் திரிபடைந்த வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேசத்தல் நைஜீரியாவில் பரவும் வைரஸ் திரிபு அடையாளங்காணப்பட்டுள்ளது.

இதனைவிட, கொழும்பில் அமைந்துள்ள தனியார் தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் தென்னாபிரிக்க வைரஸ் திரிபும் கண்டறியப்பட்டுள்ளதாக சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகம் தெரிவித்துள்ளது.

“பகுதியளவில் நாட்டை முடக்குவதற்கு தயாராக இருங்கள்.” – பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் !

தற்போதுள்ள COVID-19 நிலைமையை அடுத்து 75% முழுமையாக அல்லது பகுதியளவில் நாட்டை முடக்குவதற்கு தயாராக இருக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நேற்று (09) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவராக உள்ளார்.

அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஊரடங்கு உத்தரவு அல்ல, பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை எவ்வாறு தொடர்வது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க தீவிர சிகிச்சை பிரிவுகளில் பற்றாக்குறை !

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க தீவிர சிகிச்சை பிரிவுகளில் பற்றாக்குறை நிலவுகின்றது எனக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இருதய நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. ஆனால், நாங்கள் தற்போது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அவர்களை இடம் மாற்றப் போகின்றோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் பிரதீப் டி சில்வா, “கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரம் பிரத்தியேகமான தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளதா.? என்பது தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது – என்றார்.

இதனிடையே நேற்றைய ஒரு நாளில் மட்டுமே சுமார் 2500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன் நேற்று மட்டும் 15பேர் கொரோனாவால் இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.