11

11

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி,முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எழுவர் மீதான தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தங்களுடைய இளமை காலம் முழுவதையும் சிறையிலேயே இவர்கள் கழித்துவருகிறார்கள்.

பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் விடுதலை நாடகமே நீதிக்கு சவால் -  Today Jaffna News - Jaffna Breaking News 24x7

எழுவர் விடுதலை செய்ய தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. அதேபோல் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குறித்து சட்ட ரீதியான போராட்டங்கள் தற்போதுவரை நடைபெற்றுவருகிறது.

எழுவர் விடுதலை தொடர்பாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்த வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் திக தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலைச் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகவும் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் இருந்தார். பின்னர் 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வராகக் கடந்த 7-ம் திகதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை அரசு வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரறிவாளனுடைய அம்மா அற்புதம்மாள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “விடுதலை கோரி 30.12.2015ல் அளித்த கோரிக்கை மனு மீதான ஆளுநர் நடவடிக்கைகள் மர்மமானதாகவே நீடிக்கிறது. இதுகுறித்த அறிவின் RTI விண்ணபங்களுக்கு ஆளுநர் அலுவலகம் இன்று வரை செவி சாய்க்க மறுக்கிறது.புகார் மனுக்களை மாநில தகவல் ஆணையம் இன்னமும் விசாரணைக்கு பட்டியலிடாமல் இருப்பதும் வேதனையே” என பதிவிட்டிருந்தார். அதேபோல் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் குஜராத்தில் கொரோனாவிலிருந்து விடுபட வாரத்திற்கு ஒரு முறை மாட்டு சாணம் மற்றும் மாட்டின் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு பிரார்த்தனை !

இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கி தவித்துவருகிறது. இந்தியாவில்  இதுவரை 2,29,92,517 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பலியானர்வகளின் எண்ணிக்கை 2,46,116 உள்ளது. இதன் விளைவாக மக்கள் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தில் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் சிலர் வாரத்திற்கு ஒரு முறை மாட்டு சாணம் மற்றும் மாட்டின் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு பிரார்த்தனை செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் கொரோனாவை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.

காலம் காலமாக ஹிந்துக்கள் மாடுகளை தெய்வமாகவும் மாட்டின் சாணத்தை மற்றும் கோமியத்தை கிருமி நாசினியாக தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குஜராத்தில் மக்கள் கொரோனாவிற்கு மருந்தாக மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்திய சம்பவம் குறித்து மருத்துவர் மக்களை எச்சரித்துள்ளார்.

“மாட்டு சாணத்திலோ அல்லது கோமியத்திலோ கொரோனாவை முறியடிக்கக்கூடிய எந்த விதமான மருத்துவ தன்மையும் இல்லை மேலும் இவை மருத்துவ ரீதியாகவோ அல்லது அறிவியல் ரீதியாகவோ நிரூபிக்கப்படவில்லை என்றும், இவ்வாறாக செய்வதால் மேலும் வேறு நோய்கள் உருவாகக்கூடிய அபாயமும் உள்ளதாக” என இந்திய மருத்துவர்கள் மற்றும்   விஞ்ஞானிகள் பலர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த கவுதம் மணிலால் என்பர் கூறுகையில் “இங்கு மருத்துவர்கள் கூட வந்து இந்த முறையைச் செய்து செல்கின்றனர். இவ்வாறாக அவர்கள் செய்வதால் மருத்துவமனையில் அவர்கள் சந்திக்கும் நோயாளிகளிடம் இருந்து அவர்களுக்கு தொற்று ஏற்படாது என்பது அவர்களின் நம்பிக்கை” என்று கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றிலிருந்து மாட்டின் சாணத்தை உடலில் பூசி பிரார்த்தனை செய்ததால் மட்டுமே அவர் நோயிலிருந்து காப்பாற்றப்பட்டார் என்றும் கூறியுள்ளார். இவர் ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுல் விஸ்வவித்யா பிரதிஷ்டானம் என்ற இந்து துறவிகள் நடத்தி வரும் பள்ளியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இந்திய மருத்துவ கழகத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் குறிப்பிடும் போது “COVID-19 க்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக பசு அல்லது சிறுநீர் செயல்படுகிறது என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை, இது முற்றிலும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறியிருக்கிறார்.

“இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் சுகாதார நடைமுறைகளை மீறி பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளில் தீவிரமாகச் ஈடுபடுகின்றனர்.” – துரைராஜா ரவிகரன்

“முல்லைத்தீவில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் சுகாதார நடைமுறைகளை மீறி பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளில் தீவிரமாகச் ஈடுபடுகின்றனர்.” என துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – குருந்தூர்மலைக்கு, கடந்த 10.05.2021அன்றிலிருந்து பௌத்த பிக்குகள், இராணுவத்தினர், உள்ளிட்ட பலரும் பாரிய அளவில் செல்வதாகவும் அங்கு பாரிய அளவில்நிகழ்வொன்று இடம்பெறுவதற்கான ஆயத்தப்பணிகள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

அத்தோடு என்றுமில்லாதவாறு ஆறுமுகத்தான்குளம், தண்ணிமுறிப்புப் பகுதிகளில் இராணுவம் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு பாதுகாப்புக்கடமையிலுள்ள இராணுவத்தினர் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளிலுள்ள வயல் நிலங்களுக்கு செல்பவர்களை வழிமறிப்பதாகவும் மக்களால் மேலும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

VideoCapture 20210511 162229

இந் நிலையில் 11.05.2021 இன்று குருந்தூர் மலைப் பகுதிக்குச் சென்ற ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் அங்குள்ள நிலைமைளைப் பார்வையிட்டனர்.

அப்போது அங்கே இராணுவத்தினர் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதமை தொடர்பில் ரவிகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ரவிகரன்,

கொரோனா சுகாதார நடைமுறைகளுக்கு மாறாக யாராவது செயற்பட்டாலோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாராவது செய்ய முற்பட்டாலோ தராதரமின்றி அனைவரையும் கைதுசெய்வோம் என இராணுவத் தளபதி அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் நிலையில், இங்கு இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் சுகாதார நடைமுறைகளை மீறி பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்படுகின்றனர். எனவே இவர்களுக்குரிய நடவடிக்கை என்ன என அவர்கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலையில் 10.05.2021அன்று இரவுதொடக்கம் ஏதோ இடம்பெறுகின்றது என அப்பகுதிமக்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர். குறிப்பாக குமுழமுனை, ஆறுமுகத்தான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு வயல்களில் வேலைசெய்கின்ற பொதுமக்கள் எனப் பலராலும் எங்களுக்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்தன.

இந்நிலையில் 10.05.2021அன்று இரவு உடனேயே செல்லமுடியாத நிலையில், 11.05.2021 இன்று குருந்தூர்மலைக்குச் சென்றிருந்தோம். அங்கு குருந்தூர்மலைக்குச் செல்லும்வழியில் ஆறுமுகத்தான் குளத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு இடங்களில் இராணுவத்தினர் இருவர் வீதம் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அத்தோடு குருந்தூர் மலைக்கு நுழையும் வீதியில் குருந்தூர் மலைக்கு அண்மையில் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்த இரு இராணுவத்தினர் எம்மை அங்கு செல்லவிடாது தடுத்திருந்தனர். அப்போது குருந்தூர்மலைப் பகுதியிலிருந்து பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேறிக்கொண்டிருந்ததையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

இந் நிலையில் நாம் குருந்தூர்மலைக்குச் செல்லவேண்டும் என அந்த இராணுவத்தினரிடம் வலியுறுத்தியிருந்த நிலையில், குறித்த இராணுவத்தினர், தொலைபேசி அழைப்பு ஒன்றினை ஏற்படுத்திவிட்டு உள்ளே செல்வதற்கு அனுமதித்திருந்தனர்.அந்தவகையில் நேரடியாக நாம் குருந்தூர் மலை அடிவாரத்திற்குச் சென்றிருந்தோம். அங்கு தொல்லியல் திணைக்களத்தினரும், அதிகளவான இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அங்கு 10.05.2021 அன்று பாரிய அளவில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றமை குறித்தும் அங்கிருந்த இராணுவத்தினரிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். பௌத்த பிக்குகளும், வழிபாடுகளுக்குரியவர்களும், இராணுவத்தினரும்தான் அங்கு வருகைதந்ததாக இராணுவத்தினர் பதிலளித்திருந்தனர்.

அதேவேளை அங்கிருந்த இராணுவத்தினர், மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பேணாதிருந்ததையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. அந்தவகையில் இராணுவத் தளபதி கொரோனா சுகாதார நடைமுறைகளில் இறுக்கமான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் ஏன் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என அவர்களிடம் கேள்விஎழுப்பியிருந்தோம், அப்போது அங்கிருந்தவர்கள் சற்றுத் தடுமாறியதுடன், உடனேயே அவர்கள் முகக் கவசங்களையும் அணிந்துகொண்டனர்.

இந் நிலையில் நாங்கள் மலைஅடிவாரத்திலிருந்து, குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச் செல்லவேண்டும், அங்கு நாம் எமது சமய வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டபோது அவர்கள் அதற்கு மறுப்புத்தெரிவித்தார்கள். குருந்தூர் மலையின் மேற்பகுதிக்குச் செல்லவேண்டுமானால் தொல்லியல் திணைக்களத்தினுடைய அனுமதி பெறப்படவேண்டும் எனவும், அவ்வாறு அனுமதி பெற்றுவந்தால் மலையின் மேற்பகுதிக்குச் செல்ல அனுமதிப்பதாகத் தெரிவித்தனர்.

அப்படி எனில் 10.05.2021 இடம்பெற்ற நிகழ்விற்கு வந்தவர்கள் அனுமதிகளைப் பெற்றுவந்தார்களா எனக் கேள்வி எழுப்பியபோது அவர்கள் அனுமதிகளைப் பெற்றே வந்ததாக இராணுவத்தினர் தெரிவித்தார்கள்.

இது தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் என்னிடம் முறையிடும்போது, பௌத்த பிக்குகள் கிட்டத்தட்ட 29பேர் அங்கு வந்திருந்ததாகவும், அத்தோடு கிட்டத்தட்ட30 முச்சக்கரவண்டிகள் அங்கு வந்ததாகவும் அதில் வந்தவர்கள் பொதுமக்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

இதுதவிர ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய நட்சத்திரத் தரங்களில் உள்ள அதி சொகுசு இராணுவ வாகனங்கள், ஐம்பதிற்கும்மேற்பட்ட சொகுசுவாகனங்கள், இராணுவ வாகனங்கள் என பல வாகனங்கள் அங்கு சென்றதாகவும் பொதுமக்கள் எம்மிடம் முறையிட்டிருந்தனர்.

இந்த விடயத்திலே குறிப்பாக, முல்லைத்தீவு என்பது தமிழர்களுடைய இடமாகும். இதிலே குருந்தூர் மலையானது எங்களுடைய தமிழ் மக்களுக்குரிய மலையாகும். இங்கு எமது தமிழ் மக்கள் பூர்வீகமாக ஐயனார் வழிபாடுகளைச் செய்ததுடன், குருந்தூர் மலையினை அண்டிய பகுதிகளில் எமது தமிழ் மக்கள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.

அவ்வாறு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் எமது தமிழ் மக்களுக்கு குருந்தூர் மலையில் உள்ள ஐயனார் காவல் தெய்வமாக இருக்கின்றது. என எமது தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

இப்படியாக தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையை, சிங்கள மயப்படுத்தத் தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள். இது தவிர கொரோனா சுகாதார நடைமுறைகளுக்கு மாறாக யாராவது செயற்பட்டாலோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாராவது செய்ய முற்பட்டாலோ தராதரமின்றி அனைவரையும் கைதுசெய்வோம் என இராணுவத் தளபதி அறிக்கைகளை வெளியிடுகின்றார்.

இவ்வாறிருக்க குருந்தூர் மலையில் கொரோனா சுகாதார நடமுறைகளைப் பின்பற்றாத இராணுவத்தினர் கைதுசெய்யப்படாதது ஏன்? அவ்வாறு சுகாதாரநடைமுறைகளைப் பின்பற்றாத இராணுவத்தினருக்குரிய நடவடிக்கை என்ன?

அவ்வாறு இராணுவத்தினர் சுகாதார நடமுறைகளை மீறியதற்குரிய ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.முள்ளிவாய்க்காலிலே கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவேந்தலை செய்தாலும் கைதுசெய்யப்படுவோம் என்று கூறப்படுகின்றது.

ஆனால் இங்கு கொரோனா தொற்று அசாதாரண நிலையினையும் கருத்தில் கொள்ளாது, சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படாது தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையை சிங்களமயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் பாரிய இராணுவப் பாதுகாப்புக்களுடன் மேற்கொள்ளப்படுகின்றது. இது எந்த வகையில் நியாயம்? அதேவேளை குருந்தூர் மலையில் இடம்பெறும் அகழ்வாராட்சி நடவடிக்கைகளில், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்ந்தவர்களும் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்று நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளை இங்கு மீறப்பட்டுள்ளது.

இந் நிலையில் மலையின் மேற்பகுதிக்குச் செல்வதற்கு எமக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் அறிய முடியாதுள்ளது. குறிப்பாக கட்டடங்கள் எவையாவது கட்டப்படுகின்றதா என்பது தொடர்பிலும் அறியமுடியாதுள்ளது – என்றார்.

“இலங்கையர்களுக்கு விரைவில் digital vaccine identity card” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

இலங்கையில் டிஜிட்டல் தடுப்பூசி அடையாள அட்டை (digital vaccine identity card) எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டை தடுப்பூசி திட்டத்தை சீராக செயற்படுத்த  உறுதி செய்யும் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் டிஜிட்டல் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடையாள அட்டையில் தடுப்பூசி பெற்ற நபரின் விபரங்கள், தடுப்பூசியின் வகை,  பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியின் விபரங்கள், வழங்கப்பட்ட திகதி மற்றும் இரண்டாவது ஜப் வரவிருக்கும் திகதி மற்றும் தடுப்பூசி செயன்முறை தொடர்பான ஏனைய தகவல்கள் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

”கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற தயங்குவதே அதிகரிக்கும் உயிரிழப்புக்களுக்கு காரணம்.” – இலங்கை மருத்துவ சங்கம்

கொவிட் நோயாளிகள் மருத்துவமனைகளில் தங்களை அனுமதிப்பதற்கு தயங்குகின்றனர் இதன் காரணமாக நாட்டில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண இதனை தெரிவித்துள்ளார்.
பலர் நிலைமை மோசமடைந்த பின்னரே மருத்துவமனைகளிற்கு செல்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ள அவர் , முன்கூட்டியே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது இவ்வாறான ஆபத்தைத் தடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே நோயாளிகள் மருத்துவமனைகளிற்குச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் எதிரொலி – இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் !

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவமும் எதிர்த்தாக்குதல் செய்து வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

முதலில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலை தொடங்கினர். அதன் பின்னர் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். பாலஸ்தீனர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பலர் காயமடைந்தனர். அதேபோல், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து ஷைக் ஜாராவில் இருந்து பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கை சிறிது நாட்களுக்கு தள்ளிவைப்பதாக இஸ்ரேல் நீதித்துறை தெரிவித்துள்ளது.

வழக்கு தள்ளிவைக்கப்பட்டபோதும் மோதல் அரங்கேறி வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த மோதல் மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் - அதிகரிக்கும் பதற்றம்முதலில் 7 ராக்கெட்டுகள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஏவப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இஸ்ரேலை குறிவைத்து மொத்தம் 45 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான ராக்கெட்டுகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்ததாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலால் ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலின் பிற நகரங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பதிலடி கொடுத்துள்ளது. காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் ஜெருசலேம், ஹமாஸ் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்திய அணி அறிவிப்பு !

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளன. இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லோர்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18-ம் திகதி முதல் ஜூன் 22-ம் திகதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐ.சி.சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான டெஸ்ட் அணியில், விராட் கோலி (தலைவர்), ரஹானே, ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, மயங்க் அகர்வால், விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் படேல், வாசிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி, சிராஜ், சர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.
பேக் அப் வீரர்களாக கே எல் ராகுல், சகா இடம் பெற்றுள்ளனர். காத்திருப்பு வீரர்களாக (Standby players) அபிமன்யு ஈஸ்வரன், பிரசீத் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நாக்வஸ்வல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம் மகளிர் பள்ளிக்கூடத்தை குறிவைத்து பயங்கரவாதத்தாக்குதல் – பலியான மாணவிகள் எண்ணிக்கை 60ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் டாஷ்தே  பார்ச்சி நகரில் மகளிர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இரு தினங்களுக்கு முன் மாலை வகுப்புகள் முடிந்து மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அப்போது பள்ளிக்கூடத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி மாணவிகள் மரண ஓலம் விட்டனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த தொடர் குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த நகரையும் அதிர வைத்தது.‌ முதல் கட்டமாக 25 மாணவிகள் பலியானதாக தகவல் வெளியானது.

ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நடந்த தொடர் குண்டு வெடிப்பு! பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!இந்நிலையில், குண்டு வெடிப்பில் பலியான மாணவிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.‌

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த காலங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனவே இந்த கொடூர தாக்குதலையும் அவர்களே நடத்தி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களை நசுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” – கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு !

“ஆயிரம் ரூபா சம்பளம் கிடைத்தாலும்  பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீதான தொழில் சுமைகளை அதிகரித்து, தொழிலாளர்களை நசுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று (10 ) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தாலும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீரவில்லை. தோட்ட நிர்வாகங்களின் அழுத்தங்கள், கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. தொழில் சுமைகளை அதிகரித்து, தொழிலாளர்களை நசுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக 20 கிலோ கொழுந்து பறித்தால்தான் ஒரு நாள் பெயர் வழங்கப்படும் என கட்டளை இடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அனுபவித்து வந்த சலுகைகள், நிர்வாகங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல தோட்டத் தொழிலாளர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொழிலாளர்கள், செலுத்தும் சந்தாப்பணத்தை அறவிடுவதை கம்பனிகள் நிறுத்தியுள்ளன. தொழிலாளர்கள் தொடர்பில், தொழில் சங்கங்கள் தலையிடக் கூடாது என்பதே இதன் நோக்கமாகும். இதனை நாம் எதிர்க்கின்றோம். இவ்விடயம் உட்பட 10 பிரச்சினைகளை பட்டியலிட்டு, தொழில் ஆணையாளருக்கு மலையக மக்கள் முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது.

தொழில் சங்கங்களை அடக்கி, தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்காக சந்தாப் பணத்தில் கை வைத்துள்ள கம்பனிகளுக்கு எதிராக போராடுவோம். தொழில் ஆணையாளர் தீர்வை பெற்றுத் தருவார் என நம்புகின்றோம். அதேவேளை, இரசாயன உரப் பயன்பாட்டுக்கு எடுத்த எடுப்பிலேயே தடை விதித்தமை தவறு. இதனால் பல துறைகள் பாதிப்படையக்கூடும். மாற்று வழி அடையாளம் காணப்பட்ட பின்னர் தீர்மானம் ஒன்றுக்கு சென்றிருக்கலாம். அதனை விடுத்து அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு தவறு.” – என்றார்.

“தமிழர்களை எவ்வாறு ஒரு இடத்திலிருந்து கபளீகரம் செய்து அகற்ற வேண்டும் என்ற ஒரு முனைப்பிலேயே முஸ்லீம் அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள்.” – கலையரசன் குற்றச்சாட்டு !

“தமிழர்களை எவ்வாறு ஒரு இடத்திலிருந்து கபளீகரம் செய்து அகற்ற வேண்டும் என்ற ஒரு முனைப்பிலேயே முஸ்லீம் அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள்.” என நாடளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (11.05.2021) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“தமிழர்கள் பல விதமான துன்புறுத்தலுக்கு ஆளான யுத்த காலத்தை சாதக சாதுர்யமாகப் பயன்படுத்தி பல விடயங்களை கிழக்கிலே கையாண்டு முஸ்லிம் மக்களின் இனப் பரம்பலை அதிகரிப்பதற்காக முழு மூச்சாக செயற்பட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட விடயங்களை ஞாபகப்படுத்தி எந்த ஒரு அரசியலாளர்களின் உள்ளங்களையும் காயப்படுத்த விரும்பவில்லை.

ஆனால் தொடர்ச்சியாக முஸ்லிம் அரசியலாளர்களின் செயற்பாடு, தமிழர்களை எவ்வாறு ஒரு இடத்திலிருந்து கபளீகரம் செய்து அகற்ற வேண்டும் என்ற ஒரு முன்முனைப்பிலேயே தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் அமைச்சராக இருந்த ஏ.எல்.எம்.அதாஉல்லா, 5000 மக்கள் தொகையைக் கொண்ட அக்கரைப்பற்றை பிரதேசத்தை ஒரு பிரசே சபையாகவும், ஒரு மாநகர சபையாகவும் உருவாக்கியிருந்தார். இதெல்லாம் அரசியல் அதிகாரங்களை வைத்துக்கொண்டு செய்த வேலைகளாகும்.

ஆனால் கல்முனையைப் பொறுத்தமட்டில் 39,000 மக்கள் வாழ்கின்ற கல்முனை வடக்கு நகரத்திலே தமிழ்ப் பிரதேச செயலகமொன்று தனியாக முழு நிர்வாகக் கட்டமைப்பில் இயங்கும் இவ்வேளையிலேயே சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக நடைபெறுகின்ற அநீதிகளை விட்டு விட்டு தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரு குரோத சிந்தனைப் பார்வையில் முன்னெடுப்பதற்காக கல்முனையிலே இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஷ் எடுக்கின்ற நடவடிக்கை மன வேதனையான விடயம்.

தமிழ் – முஸ்லிம்- சிங்கள மக்கள் இணைந்து மக்களுக்கான நல்ல பல காரியங்களை முன்னெடுக்க வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஷைப் போன்றவர்கள் முன்னெடுக்கின்ற பணிகள் எங்களுக்கும் தமிழ்மக்களுக்கும் மன வேதனையைத் தருகின்றது. எனவே, அம்பாறை மாவட்டத்திலே தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட வீதம்தான் வாழ்கிறார்கள். எங்களுடைய ஒவ்வொரு வரலாறுகளையும் எடுத்துப் பார்க்கின்றபோது, எல்லைக் கிராமங்களிலே இடம்பெயர்வுகளால் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

எனவே எதிர்காலத்தில் அரசியல் ரீதியான அதிகாரங்களை தமிழர்கள் மீது திணித்து அதை மேற்கொண்டு தங்களுடைய பணிகளை முன்னெடுத்தாலும் நாங்கள் பின்நிற்கப் போவதில்லை. நிச்சயமாக முஸ்லிம் சமூகம் இன்னும் பல அடிகளை வாங்கக்கூடிய வகையிலேயே முஸ்லிம் அரசியலாளர்களின் செயற்பாடு அமைகின்றது.

ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து பயணிக்க வேண்டிய அரசியல்வாதிகள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என்று செயற்படுகிறார்கள். இது இந்த பெரும்பான்மைச் சமூகம் தற்காலத்தில் கையாளப்படுகிற ஒவ்வொரு விடயங்களுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தீணி போடுகின்ற செயற்பாடாகவே அமையும்.

ஆகவே, அரசாங்கத்தோடு இணைந்து எங்களுக்கெதிரான வேலைகளை முஸ்லிம்கள் முன்னெடுத்தாலும் தொடர்ச்சியாக எங்கள் மக்களின் பணிகளை இருப்புகளை பாதுகாப்பதற்கு அக்கறை செலுத்துவோம். இதைப் போன்று பல சதிகள் எங்களுக்கு ஏற்டுத்தப்பட்டது, இருந்தும் எங்களுடைய மக்கள் பணிகளை தாமதப்படுத்தவோ சோர்ந்து போகவோ இல்லை. தொடர்ச்சியாக திடகாத்திரமாக முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.