அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர, விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல் எமக்குக் கற்பித்திருக்கின்றது .
முள்ளிவாய்க்காலும் இதற்கு விதிவிலக்கல்ல முள்ளிவாய்க்கால் நினைவுதினம் கடந்த காலம் தொடர்பானது மட்டுமல்ல, எதிர்கால அடக்குமுறைக்கெதிரான இயங்கியல் தொடர்பானது. கொத்துக் கொத்தாய் இறுதிப்போரில் கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை, அவர்களது கனவுகளைச் சுமந்து கனத்து நிற்கின்றது முள்ளிவாய்க்கால் மண்.
மே 18 நினைவேந்தல் தமிழ் இனப்படுகொலை நீதிக்கான ஒரு தசாப்தத்தைக் கடந்திருந்தாலும், இலக்கினை எட்டும் வரைக்கும் தொடர்ந்து பயணிப்போம் என்ற வாஞ்சை ஈழத்தமிழர்களை ஒருங்கிணைக்கின்றது. எமது வளங்களை ஒன்றிணைத்து , கடந்த கால பட்டறிவிலிருந்து பாடங்களைக் கற்று கொண்டு புதிய உத்திகளைக் கையாண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அழைப்புவிடுக்கின்றது.
சிங்கள-பௌத்த அரசு முள்ளிவாய்க்கால், இனப்படுகொலையை நிராகரித்து, இறுதிப்போரை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக சித்தரித்து வந்துள்ளது. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக சித்தரிப்பதன் மூலம் பாரிய இனப்படுகொலையை நியாயப்படுத்தி வந்துள்ளது.
இறுதிப் போரை சிங்கள பௌத்ததிற்கு கிடைத்த வெற்றியாக பிரதிபலித்து மகாவம்ச வரலாற்றியலில் சிங்கள வரலாற்றியலில், சிங்கள பௌத்த தேச அரச கட்டுமானத்தை இன்னும் இறுக்கமாக முன்னெடுத்து வருகின்றது. ஒற்றையாட்சிக்குள் மையத்தை வலுப்படுத்துவதன் ஊடாக, அதிகாரப் பரவலாக்கத்தை நீர்த்துபோகச் செய்து தமிழர்களின் அரசியல் கோரிக்கையை வலுவிழக்கச் செய்து வருகின்றது. தமிழரகளின் தாயகமான வடக்கு கிழக்கை துண்டாடி, ஆட்புல கட்டுறுதியை உடைப்பதன் வழியாக தாயகக் கோரிக்கையை கேள்விக்குட்படுத்தி வருகின்றது. இராணுவமயமாக்கலை வடக்கு கிழக்கில் செறிவாக்கி அரசிற்கெதிரான எதிர்ப்பை அடக்கிவருகின்றது.
இந்நினைவுகூரலுக்கு முஸ்லிம், பெரும்பான்மை முற்போக்கு அமைப்புக்களுக்கு அழைப்பு விடுப்பதோடு தொடர்ந்து குரல் கொடுத்து நீதிப் பயணத்தில் இணைய அழைக்கப்படுகின்றார்கள். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.