13

13

“நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்துக்கும் இராணுவத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.” – இராணுவம் ஊடக பேச்சாளர்.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவிக்கையில்,

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குறித்த நினைவு தூபி அந்த இடத்தில் காணப்பட்ட போதிலும், இராணுவம் அந்த நினைவு தூபியை உடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பின்னணியில், தற்போது அந்த நினைவுத் தூபியை உடைக்க வேண்டிய தேவை தமக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.

“இனப்படுகொலையாளிகள் என்ற பெயரை சூடிநின்ற இலங்கை இராணுவம் திருடர்கள் என்கின்ற பெயரை புதிதாக வாங்கியுள்ளார்கள்.”  – சட்டத்தரணி க.சுகாஸ்

“நினைவுத்தூபியை உடைத்ததால் இனப்படுகொலையாளிகள் என்ற பெயரை சூடிநின்ற இலங்கை இராணுவம் திருடர்கள் என்கின்ற பெயரை புதிதாக வாங்கியுள்ளார்கள்.”  என சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் குறித்த இடத்துக்கு இன்று காலை வருகைதந்து நிலைமைகளை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்தெரிவிக்கையில்.,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அமைதியான முறையில் நினைவிற்கொள்ள ஈழத்தமிழினம் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் அரச அதிகாரத்தின் பக்கத்துணையுடன் இனப்படுகொலையின் சாட்சியாக அமைதியாக உறங்கிக்கொண்டிருப்பவர்களின் அடையாளமாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியின் பாகங்கள் அகற்றப்பட்டு தமிழ்மக்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

May be an image of outdoors

நேற்றையநாள் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டு கொரோனாவை தடுக்கின்றோம் என்ற போர்வையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் படையினரை தவிர வேறு எவரும் இந்த அநாகரிகமான செயலினை மனித குலத்திற்கு ஒவ்வாத செயலை செய்திருக்கமுடியாது.

இது சட்டத்தின் பிரகாரம் களவு,இதனை இலங்கை இராணுவத்தினர் செய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். இனப்படுகொலையாளிகள் என்ற பெயரை சூடிநின்ற இலங்கை இராணுவம் திருடர்கள் என்கின்ற பெயரை புதிதாக வாங்கியுள்ளார்கள். இந்த சம்பத்திற்கு எதிராக இலங்கை இராணுவத்தளபதி,ஜனாதிபதி , காவல்துறை மா அதிபர் ஆகியோர் பதிலளிக்கவேண்டும்.

இங்கு நடைபெற்றது ஈழத்தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு அங்கம்,பல்கலையில் தூபியினை உடைத்தீர்கள் தூபி புதிதாக மலர்ந்தது வரலாறு தெரியாதவர்களுக்கும் வரலாறு பாச்சப்பட்டது.

ஒருபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வெளிச்சியினையோ விடுதலைஉணர்வினையோ கட்டுப்படுத்தமுடியாது மாறாக விடுதலைதீயினை வரலாறு தெரியாத சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிர்கால சந்ததிக்கும் கடத்துவதற்கும் இப்படியான விடயங்கள் வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதுடன் இவற்றுக்கு எல்லாம் முடிவு காணவேண்டுமாக இருந்தால் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரித்த கொரோனா தாக்கத்தால் முள்ளிவாய்க்கால் பகுதியில் 16ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை  எந்த நிகழ்வும் நடத்தத்தடை !

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை  எந்ததொரு நிகழ்வும் நடத்தக்கூடாது,  மக்கள் ஒன்றுக்கூடக் கூடாது, பொது இடங்களில் நினைவுக் கூர கூடாது என தடை உத்தரவினை பிறப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது, முல்லைத்தீவு பொலிஸ் பிரிவினை சேர்ந்த து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக நேற்று (புதன்கிழமை) பொது நினைவுக்கல் ஒன்று கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த செயற்பாட்டினை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழைய இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு இது இரண்டு தேசங்களை கொண்ட நாடு என்பதை தெளிவாக காட்டுகின்றது.” – செல்வம் அடைக்கலநாதன்

“முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு இது இரண்டு தேசங்களை கொண்ட நாடு என்பதை தெளிவாக காட்டுகின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் முள்ளிவாய்க்கால் தூபி அமைந்திருந்த இடத்துக்கு இன்று காலை சென்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்கள் பங்குத்தந்தையர்கள் நேற்று ஆரம்பித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் நினைவுச் சின்னத்தினை நாட்டுவதற்காக வந்தபோது படையினர் குவிக்கப்பட்டு அதனை செய்யவேண்டாம் என பொலிசார் அறிவித்துள்ளார்கள். அதன் பின்னர் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது. ஆகவே படையினரே அந்த நினைவுத்தூபியினை உடைத்துள்ளார்கள் என்பதை வெளிப்படையாக சொல்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி எங்கள் மக்கள் துன்பங்களை நினைவு கூருகின்ற நினைவுத்தூபியாக புனித இடமாக பார்க்கப்பட்டுள்ளது. படையினரின் அடாவடித்தனங்கள் பொலிசாரின் மேற்பார்வையுடன் அரங்கேறியுள்ளது என்பதை வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கின்றது. எங்கள் பங்குத்தந்தையர்கள் நேற்று ஆரம்பிக்கின்ற நாளாக நினைவுச் சின்னத்தினை நாட்டுவதற்காக வந்தபோது படையினர் குவிக்கப்பட்டு அதனை செய்யவேண்டாம் என பொலிசார் அறிவித்துள்ளார்கள்.

அதன் பின்னர் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது. ஆகவே படையினர் அந்த நினைவுத்தூபியினை உடைத்துள்ளார்கள் என்பதை வெளிப்படையாக சொல்கின்றேன். இதில் இருந்து தெரிகின்றது இந்த தேசம் இரண்டாக உள்ளது. சிங்களதேசம், தமிழ்தேசம் என இரண்டாக இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. குருந்தூர்மலையில் புத்தபிக்குகள், படையினர் புடைசூழ பிரித் ஓதப்பட்டு விழாக்கோலம் போட்டது போல் காட்சியளித்தது.

இராணுவத்தளபதி நினைவேந்தலை வீடுகளில் செய்யவேண்டும் என்று சொல்கின்றார். இன்றில் இருந்து 17 ஆம் திகதி வரை கொரோனா வைரஸினை நிறுத்துவதற்காக நாடு முடக்கப்படுகின்றது. புத்த பிக்குகள் தமிழர் பிரதேசத்தில் வந்து பெரியளவில் பிரித் ஓதுகின்றார்கள் படையினர் குவிக்கப்பட்டு சுகாதார முறைப்படி அவர்கள் எப்படி செயற்பட்டிருக்கமுடியும் அங்கு சட்டம் வேறாக இருக்கின்றது.

எங்கள் பங்குத்தந்தைகள் இங்கு வந்து நினைவுத்தூபியினை செப்பனிடவரும் போது தடுக்கப்படுகின்றார்கள். காரணம் வைரஸ்தொற்றுக்கான நடவடிக்கை என்று. இதிலிருந்து தெரிகின்றது இந்த நாடு புத்த பிக்குகளின் இராச்சியமாக மாறி இருக்கின்றது. இதனை விட இரண்டு நாடுகளாக இலங்கை இருக்கின்றது. தமிழர்களின் பிரதேசத்தில் எதுவும் நடக்கலாம் சிங்கள பிரதேசங்களில் மிகவும் நேர்த்தியான முறையில் அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றது.

ஆகவே புத்த பிக்குகள், இராணுவம், பொலிசார் தமிழ் பிரதேசங்களில் எதுவும் செய்யலாம் சட்டம் ஒழுங்கு என்பது இங்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழர்கள் பூர்வீகம் உடைக்கப்படுகின்ற சிதைக்கப்படுகின்ற ஒரு நிலையினை இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றது என்பதை உறுதியாக இந்த நேரத்தில் உணர்த்த முடியும்.

ஆகவே எங்கள் மக்கள் , எங்கள் கட்சிகள் ஒன்றிணையவேண்டும் இதற்காக போராடவேண்டும் எங்கள் தேசத்தினை நிலத்தினை காப்பாற்ற நாங்கள் முனைப்புடன் செயற்படவேண்டும் என்று படுகொலைசெய்யப்பட்ட மக்களின் அவல ஓலங்கள் ஐ.நாவினை தட்டியது எங்கள் கட்சிகளின் மனங்களையும் தட்டவேண்டும் பொதுமக்களின் மனங்களையும் தட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“கோட்டா அரசாங்கத்துக்கு துணைநின்றவர்கள் நினைவுதூபி உடைப்புக்கு பொறுப்பு கூற வேண்டும்.” – செ.கஜேந்திரன் காட்டம் !

“கோட்டா அரசாங்கம் செய்த படுகொலைகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்து துணைநின்றவர்கள் நினைவுதூபி உடைப்புக்கு பொறுப்பு கூற வேண்டும்.”என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் குறித்த இடத்துக்கு இன்று காலை வருகை தந்து பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்தெரிவிக்கையில்.,

காவற்துறையினரும் இராணுவத்தினரும் உள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த நினைவுக்கல்லிற்கு பொறுப்புகாவற்துறையினரும் இராணுவத்தினரும்தான் இவர்களுக்கு தெரியாமல் நினைவுக்கல் அகற்றப்பட்டிருக்கமுடியாது.

கோட்டபாய அரசாங்கம் தான் 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்றபோது பாதுகாப்பு செயலாளராகவும்,மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாகவும் இருந்தார்கள். அவர்களால் மேற்கொள்ளப்பட்டது தான் திட்டமிட்ட இனப்படுகொலை இந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை தமிழர்கள் கோரியிருந்தார்கள்.

இந்த நிலையில் நினைவேந்தலை செய்ய முடியாமல் நினைவுக்கல்லினை கூட நாட்டமுடியாமல் இராணுவத்தினராலும் காவற்துறையினராலும் நெருக்கடிகள் கொடுப்பது என்பது கண்டிக்கத்தக்க விடயம் .குறித்த நினைவுக்கல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த தெருவெங்கும் தமிழர்கள் மீது இனவழிப்பு செய்த இராணுவத்தினருக்கு நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த மண்ணுக்கு சொந்தகாரார்களான தமிழர்களுக்கு அவர்கள் மண்ணில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற இடத்தில் உறவினர்காளால் வணக்கம் செய்யமுடியாதளவிற்கு ஒரு நெருக்கடி நிலமை இருக்கின்றது என்று சொன்னால் அதற்கு காரணம். இலங்கை அரசு தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைக்கு ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணை நடைபெறாமல் உள்ளகவிசாரணைக்கு பத்து ஆண்டுகளாக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வந்ததன் மூலமாக அவர்கள் தப்பித்து வந்தன் விளைவாக தாங்கள் எதை செய்தாலும் அதற்கு பொறுப்புக்கூற தேவை இல்லை என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்ற நிலமையில் தான் இந்த காடைத்தனத்தினை செய்கின்றார்கள்.

குறிப்பாக கோட்டபாஜஅரசாங்கம் பதவியில் இருக்கின்ற பொழுகூட கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் 46.1 தீர்மானம் என்கின்ற உள்ளக விசாரணை தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் எதிரொலியாகத்தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம்.

படையினரும்,காவற்துறையினரும் பதவியில் இருக்கின்ற கோட்டா அரசாங்கம் மட்டுமல்ல அரசாங்கம் செய்த படுகொலைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்து உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு கொடுத்து சர்வதேச சக்திகளுக்கு தேவையாக தமிழர்களின் விவகாரம் பயன்படுத்தப்படுவதற்கு துணைநின்றவர்களும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் நிறைவடைந்து ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்து விட்டது” – இரா.சாணக்கியன் காட்டம் !

“நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்து விட்டது.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதப்படுத்தப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,

“இந்த அரசாங்கம் தமிழர்களுடைய வரலாறுகளை அழிப்பதுடன் தமிழர்களுக்கு நினைவு கூறும் வாய்ப்பினை கூட இல்லாமல் செய்யும் செயற்பாட்டினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதப்படுத்தப்பட்டுள்ளமையானது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர், யாழ்.பல்கலைக்கழகத்திலும் இத்தகையதொரு சம்பவம் அரங்கேறியிருந்தது. ஆனால் அதனை பல்கலைக்கழக உபவேந்தரே மீண்டும் கட்டுவதற்கு உதவினார். இதேவேளை தமிழர்களின் உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக இல்லாமல் செய்ய முடியாது. இவ்வாறு அழிக்கப்படும் ஒவ்வொரு நினைவுச் சின்னமும், தமிழர்களுடைய மனங்களில் ஒரு புதிய உணர்வை மேலும் வலுப்படுத்தும்.

தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த அநீதியை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். ஆகவே தமிழர்களுடைய உணர்வுகளை அழிக்க, புதிய வழிகளையே இனி தேட வேண்டும். எங்களுடைய உணர்வுகளை எவராலும் அழிக்க முடியாது. இதேவேளை அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற தமிழ் பிரதிநிதிகளும் கூட இவ்விடயத்தில் கண்டனம் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மேலும் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருதல் மற்றும் நினைவு தூபிகளை இடிக்காமல் பாதுகாத்தல் ஆகியன தமிழ் பிரதிநிதிகளின் முழுப் பொறுப்பாகும். நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்து விட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாடிய பினான்ஸ் கம்பனி ஊழியர்கள் 14 பேர் கைது – மட்டக்களப்பில் சம்பவம் !

மட்டுக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பினான்ஸ் கம்பனி ஒன்றின் முகாமையாளரின் பிறந்த தினத்தை பினான்ஸ் கம்பனியில் நேற்று (12.05.2021) கொண்டாடிய அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட 14 பேரை கைது செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கும் பொதுசுகாதார அதிகாரிகளுக்கும் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பினாஸ் கம்பனியை பொலிஸாரும் சுகாதாரதுறையினரும் சம்பவதினமான இன்று காலையில் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு முகாமையாளருக்கு இன்று பிறந்த தினத்தையிட்டு அவருக்கு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றினைந்து கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தபோது பொலிஸார் முற்றுகையிட்டு அங்கு அரச சுகாதார அமைச்சின் கொரோனா சட்டத்தை மீறி ஒன்று கூடிய 14 பேரை கைது செய்து அவர்களை பொதுசுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.

அதேவேளை குறித்த பினான்ஸ் கம்பனியின் முகாமையாளருக்கு எதிராக னொரோனா சட்டத்தை மீறி ஒன்று கூடிய மற்றும் அரசாங்கத்தின் சட்டத்தை மீறிய குற்றங்களுக்கு எதிராக சட்டசடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு மட்டக்களப்பு நகர் கோட்டமுனை பகுதியில் பிறந்தநாளை கொண்டாடிய 20 பேரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க !

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

20க்கு 20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்ற நிலையில் இலங்கையின் யோர்க்கர் நாயகன் லசித் மாலிங்கவை மீண்டும் அணிக்குள் இணைத்துக்கொள்ள இலங்கை அணியின் தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு பெற்றார். எனினும், ரி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த அவர் இறுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி 20 போட்டியில் விளையாடினார். அதன்பிறகு எந்தவொரு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில், இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தேர்வில் லசித் மாலிங்க இருப்பதாக தேர்வுக் குழுவின் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மோர்னிங் ஸ்போட்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கருத்து வெளியிடுகையில்,

மாலிங்கவை இவ்வருடம் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணத்தில் விளையாட வைக்க எதிர்பார்த்துள்ளோம். அவர் எமது அணித் தேர்வில் உள்ளார். இதற்காக அவரிடம் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படும் வடக்கின் பாடசாலைகள் !

வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது

இதற்கமைய  வவுனியா மாவட்டத்தில் மூன்று முறிப்பிலுள்ள தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகள், ஓமந்தைப் பாடசாலை ஆகியவற்றுடன் யாழ். மாவட்டத்தில் நாரந்தனை றோ.க. பாடசாலை என்பன முதல் கட்டமாக கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படுகின்றன.

இதேவேளை, வடக்கில்  மேலும் பல பாடசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.