16

16

“தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயப்படுங்கள். இதனால் மட்டுமே நாம் எதிர்த்து போரிட முடியும்.” – கொரோனா விதிமுறைகளை மீறி குவிந்த மக்களை கண்டித்து அஷ்வின் ட்வீட் !

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஷ்வின். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னையில் நடைபெற்ற போட்டிக்குப் பின், அணியில் இருந்து விலகினார். அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவதற்கான விலகினார்.
300 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து: சென்னையில் மக்கள் சாலை மறியல்| Dinamalar
நேற்று ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதற்கான சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, ஒன்றாக கூடி ஒருவருக்கொரும் இடித்துக் கொண்டு நின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறத்தியுள்ளார்.
முன்னாள் சவுராஷ்டிரா வேகப்பந்து வீச்சார்கள் மற்றும் பிசிசிஐ நடுவரான ராஜேந்திரசின் ஜடேஜா கொரோனா தொற்றால் உயிரழந்தார். மேலும், தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை அஷ்வின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கை இல்லாதது குறித்து டுவிட் செய்திருந்தார்.
இந்த நிலையில் மக்கள் முண்டியடித்த படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அஷ்வின் ‘‘பயமாக இருக்கிறது. பயங்கரமான விஷயங்களை பரப்ப வேண்டாம் என அனைவரும் சொல்கிறார்கள். தயவு செய்து பயப்படுங்கள். மிகவும் பயப்படுங்கள். இதனால் மட்டுமே நாம் இந்த தொற்றை எதிர்த்து போரிட முடியும். இந்த வைரஸை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்வது அவசியம்.
உங்களுடைய பயத்தை நான் புரிந்து கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, நான் அருகில் இருந்து கவனித்துள்ளேன். உங்களுக்கும், எனக்கும் சூழ்நிலை பற்றி நன்றாக தெரிந்துள்ளது. அனைத்து முன்நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆனால், ஏராளமானோர் இந்த கொடிய நோயின் ஆபத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

ரம்ழான் பண்டிகையில் காபூலில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு – 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழப்பு !

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனிடையே ரம்ழான் பண்டிகையையொட்டி அங்கு 3 நாட்களுக்கு தலீபான்கள் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.சண்டை நிறுத்தம் அமுலுக்கு வந்த முதல் நாளான வியாழக்கிழமை அன்று குண்டூஸ் மற்றும் காந்தஹார் மாகாணங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவி மக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர்.

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு || Tamil News  Afghanistan: At least 12 dead, 20 injured in Kabul mosque

காபூலின் ஷகர்தரா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் அந்த மசூதியின் இமாம் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் தலீபான் பயங்கரவாதிகள் தாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் காபூலில் உள்ள மகளிர் பள்ளிக்கூடம் அருகே நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமான மாணவிகள் உள்பட 90 பேர் கொல்லப்பட்டதும், 160-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

“அமைதியை கடைப்பிடியுங்கள்.” – இஸ்ரேல் – பலஸ்தீன தலைவர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி அமைதிக்கான பேச்சுவார்த்தை !

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியாக மேற்கு கரை உள்ளது. இப்பகுதியின் அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 07வது நாளாகவும் தொடரும் போர் அப்பகுதியில் அமைதயின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காசா பகுதியில் நடைபெற்று வரும் மோதல் மேற்கு கரை பகுதிக்கும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பதற்றத்தைத் தணிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜோ பைடன் இருதரப்பும் அமைதியை கடைபிடிக்கும் படி கூறினார்.

காசா முனை பகுதியில் அசோசியேட் பிரஸ், அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

அமைதியை ஏற்படுத்த இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் ஜோ பைடன் பேசுவது இதுவே முதல்முறையாகும்.

“காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்” – அமெரிக்காவிலுள்ள இஸ்ரேல் தூதரகங்களின் முன்னால் மக்கள் போராட்டம் !

காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்துகின்றனர். 7-வது நாளாக இன்றும் தாக்குதல் நீடிக்கிறது.
இதுஒருபுறமிருக்க இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
இந்த விவகாரம் அமெரிக்க நகரங்களிலும் எதிரொலித்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், போஸ்டன், பிலடெல்பியா உள்ளிட்ட சில நகரங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். சுதந்திர பாலஸ்தீன் முழக்கத்தையும் எழுப்பினர்.

விஸ்வரூபம் எடுக்கும் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பிரச்சினை – 12 மாடி கோபுர கட்டிடடத்தை கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமாக்கிய இஸ்ரேல் ஏவுகணைகள் !

காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமாகியுள்ளது. கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரேபியர்கள், யூதர்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடும் புனித தலத்தில் இருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை எச்சரித்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசத்தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து இஸ்ரேலும், பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை குறிவைத்து வான்தாக்குதல்களை தொடங்கியது.

ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு நடத்தினாலும், அந்த ராக்கெட்டுகளை நடுவானில் மறித்து அழித்து விடும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறார்கள். காசாமுனைப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்துகிற வான்தாக்குதல் மிகக்கொடூரமானதாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினருடன் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாகி இருப்பதும், இந்தப் பலி தொடர்வதும் சர்வதேச சமூகத்தை அதிர வைத்துள்ளது.

காசாவில் ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் இடிந்து தரை  மட்டம் || Tamil News Israeli airstrike destroys Gaza 12-storey building  that houses mediaஇந்தநிலையில் நேற்று காசாநகரில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், அங்கு அமைந்திருந்த 12 மாடிகளைக்கொண்ட கோபுர கட்டிடம் தீப்பிடித்து எரிந்து, இடிந்து தரை மட்டமானது.

இந்த கட்டிடத்தில்தான் அசோசியேட்டட் பிரஸ், அல்ஜசீரா உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் அமைந்திருந்தன.

இந்த கட்டிடம் இடிந்தபோது அந்தப் பகுதியே புழுதி மண்டலமாக மாறியது. இந்த தாக்குதலை அல்ஜசீரா டி.வி. நேரடியாக ஒளிபரப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த 12 மாடி கோபுர கட்டிடத்தை வீழ்த்தியதின் பின்னணி குறித்து இஸ்ரேல் வாய் திறக்கவில்லை. இந்த கட்டிடத்தை குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அதில் இயங்கிய ஊடக அலுவலகங்களை சேர்ந்தவர்களையும், குடியிருப்புகளில் வசித்து வந்த மக்களையும் வெளியேறுமாறு இராணுவம் உத்தரவிட்ட பின்னர் இந்த தாக்குதலை நடத்தியதால் உயிர்ச்சசேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இருப்பினும் கண்மூடி திறப்பதற்குள் இந்த 12 மாடி கட்டிடம் தரை மட்டமானது நேரில் கண்டவர்களை பதைபதைக்க வைத்தது.

Israel destroys Gaza tower housing AP and Al Jazeera offices | Reutersஇந்த தாக்குதல் குறித்து அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் தலைவர் கேரி புரூட் கூறுகையில், “இது எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், திகிலுக்கும் ஆளாக்கி உள்ளது. இந்த கட்டிடத்தில் எங்கள் நிறுவனம் இயங்கியதையும், அதில் பத்திரிகையாளர்கள் இருந்ததையும் அவர்கள் (இஸ்ரேல்) அறிவார்கள். இந்த கட்டிடம் தாக்கப்படும் என்பது குறித்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது” என குறிப்பிட்டார்.

காசாநகரில் மக்கள் அடர்த்தி நிறைந்த அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி குறைந்தது 10 பாலஸ்தீனியர்களை கொன்றதைத் தொடர்ந்து இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளது. இதனால் காசாமுனைப் பகுதி பதற்றத்தின் பிடியில் சிக்கி உள்ளது.

“20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத தொழிலாளர்களை கம்பனிகள் அச்சறுத்துகின்றன.” – மயில்வாகனம் உதயகுமார் குற்றச்சாட்டு !

“ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை இன்னும் தீரவில்லை எனவும் தொழிலாளர்கள் கம்பனிகளின் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

சந்தாவை நிறுத்தி தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்க நினைக்கும் கம்பனிகளின் திட்டம் நிறைவேறாது எனவும் சந்தா இல்லாவிட்டாலும் தொழிலாளர்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது.

20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத தொழிலாளர்களை கம்பனிகள் அச்சறுத்தும் வகையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கம்பனிகளின் இந்த தொழிங்சங்க மற்றும் தொழிலாளர் மீதான அடக்குமுறைக்கு ஒருபோதும் துணைபோக முடியாது எனவும் இதற்கு எதிராக முன்னின்று செயற்படுவோம் என்றும் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

“கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது பயனற்றது.” – சுதத் சமரவீர

கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்ததாமல் இருப்பது சிறந்தது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது பயனற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.”- யாழில் நடந்த சம்பவம் தொடர்பில் ஜெனரல் சவேந்திர சில்வா அதிருப்தி !

பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வருபவர்களிடம் மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதியும், கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச மருத்துவமனை ஒன்றுக்கு பிசிஆர் பரிசோதனைக்குச் சென்ற ஒருவரை அங்கு வெளிநோயாளர் பிரிவில் கடமையிலிருந்த மருத்துவர் திருப்பி அனுப்ப முயன்றுள்ளார். தொற்றாளர்களுடன் முதல்நிலை தொடர்பில்லாதவர்கள் பிசிஆர் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்றும் காரணம் கூறியுள்ளார்.

ஆனால் – தனக்கு அறிகுறிகள் தென்படுவதால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூற, வேறு வழியில்லாமல் மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது,

பிசிஆர் பரிசோதனைக்கு வருபவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.

பிசிஆர் பரிசோதனைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும். நாடு முழுவதும் பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெறும் அதேவேளை, கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன என்றார்.

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொங்கோ அரசாங்கத்துக்கு கடிதம் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொங்கோ அரசாங்கத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொங்கோ அரசின் கொழும்பிலுள்ள தூதரகம் மூலமாக இந்தக் கடிதப்பரிமாற்றம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடிதத்தை வழங்க ஜனாதிபதியே தூதரகத்திற்கு நேரடியாக சென்றதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கோ அரசின் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, மேலதிகமாக உள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.

“அனுமதியின்றி ட்ரோன் கெமராக்களை பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவர் – தெஹிவளையில் ஒருவர் கைது” – அஜித் ரோஹண

தெஹிவளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கெமராவை உபயோகித்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தெஹிவளை – ரொபட் பிரதேசத்தில் நேற்று மாலை 6 மணியளவில் சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கெமராவை உபயோகித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ட்ரோன் கெமராக்களை அருகில் வைத்திருக்கவும், அவற்றை உபயோகிப்பது தொடர்பிலும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனுமதிப்பத்திரமின்றி ட்ரோன் கெமராக்களை வைத்திருப்பவர்கள் மட்டுமன்றி அனுமதியின்றி அதனை பயன்படுத்துபவர்களும் கைது செய்யப்படுவர் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

குறித்த இளைஞன் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.